இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0351



பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:351)

பொழிப்பு (மு வரதராசன்): மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும்.

மணக்குடவர் உரை: பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு.
இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு.
(அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப்பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று கருதும் மயக்கத்தாலே சிறப்பில்லாத பிறப்பு உளதாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளான் ஆம் மாணாப் பிறப்பு.

பதவுரை: பொருள்-மெய்ப்பொருள்; அல்லவற்றை-அல்லாதவைகளை; பொருள்-பொருள்; என்று-என்பதாக; உணரும்-அறியும்; மருளான்-மயக்கத்தால்; ஆம்ஆகும்; மாணா-மாட்சிமையற்ற; பிறப்பு-பிறந்து வாழும் வாழ்க்கை, பிறப்பு.


பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்;
பரிப்பெருமாள்: பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்;
பரிதி: உபதேச நிலையல்லாதவற்றைப் பொருள் என்று பிடித்த அஞ்ஞானம்;
காலிங்கர்: கீழ்ச் சொன்னபடியே மெய்ப்பொருளினைப் பொய்ப் பொருளாகவும் பொய்ப்பொருளினை மெய்ப்பொருளாகவும் மயங்குகின்ற மயக்கத்தினால் வந்துளதாம்;
பரிமேலழகர்: மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்;
பரிமேலழகர் குறிப்புரை: அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப்பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. [குற்றி-மரக்கட்டை; இப்பி-முத்துச்சிப்பி]

'பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பொருள் என்பதற்குக் காலிங்கரும் பரிமேலழகரும் மெய்ப்பொருள் எனக் கொள்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொய்ப்பொருள்களை மெய்ப்பொருள் என்று மயங்குவதால்', 'மெய்ப்பொருள் அல்லாத பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று பிறழ அறிகின்ற மயக்க உணர்வினாலே', '(நித்தியமான பொருள் எதுவென்று ஆராயாமல்) சத்தியம் அல்லாதவற்றைப் பகவான் என்று உணர்ந்துவிட்டால்', 'மெய்ப்பொருள்கள் அல்லாதனவற்றை மெய்ப்பொருள்கள் என்று அறியும் மயக்கத்தால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள்கள் அல்லாதனவற்றை பொருள்கள் என்று அறியும் மயக்கத்தினால் உளதாம் என்பது இப்பகுதியின் பொருள்.

மாணாப் பிறப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாட்சிமையில்லாத பிறப்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.
பரிப்பெருமாள்: மாட்சிமையில்லாத பிறப்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.
பரிதி: செனனம் உண்டாக்கும்.
காலிங்கர்: யாதோ எனில் ஒருவகையாலும் மாட்சிமை இல்லாத பிறவியாவது என்றவாறு.
பரிமேலழகர்: இன்பம் இல்லாத பிறப்பு.
பரிமேலழகர் குறிப்புரை: நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.

மாட்சிமையில்லாத பிறப்பு என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி வாளா செனனம் என்றார். காலிங்கர் மாட்சிமை இல்லாத பிறவியாகாது என்கிறர். பரிமேலழகர் இன்பம் இல்லாத பிறப்பு எனக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறப்புத் தோன்றும்', 'கீழான பிறப்பு உண்டாகும்', 'கீழான பிறவி வந்துவிடும்', 'மாட்சிமையற்ற பிறப்பு உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாட்சிமையற்ற வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள்கள் அல்லாதனவற்றை பொருள்கள் என்று அறியும் மயக்கத்தினால் உளதாம் மாணாப் பிறப்பு என்பது பாடலின் பொருள்.
'மாணாப் பிறப்பு' என்றால் என்ன?

உலகப் பொருட்களை உள்ளவாறு சரியாகப் புரிந்து கொள்ளாமல் வாழ்வது என்ன வாழ்க்கையோ?

பொருளற்றவற்றைப் பொருள் என்று மயங்க உணர்ந்து வாழும் வாழ்வில் சிறப்பு இல்லை.
மெய்யுணர்தல் என்ற அதிகாரப் பெயர் நோக்கி இதிலுள்ள பாடல்களில் 'பொருள்' என்ற சொல்லாட்சி மெய்யியல்களையும்-மெய்யியல் வழிகாட்டல்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெளியிலிருந்து வந்து கலக்கும் பலவகையான சமய, சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகளை மாந்தர் வரித்துக் கொள்கின்றனர். அறிவியல் மட்டுமே சார்ந்த கொள்கைகள், வேறுவேறான வழிமுறைகள் கூறும் சமயக் கருத்துக்கள், குடியரசு, பொதுவுடைமை, மதக்கோட்பாடு அடிப்படையில் உண்டான அரசியல் கோட்பாடுகள் இவை போன்றவையே இங்கு பொருட்கள் எனக் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் பொய்தீர்ந்தவை எவை, போலியானவை எவை என்பதை அறிந்து வாழ வேண்டும் என்கிறது இக்குறள். அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் மெய்யியல் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் எனப் பல கோணங்களில் அவற்றைத் தெளிந்துணர வேண்டும். நன்றைத் தீதென்றும், தீயதை நன்றென்றும், இன்பத்தைத் துன்பமென்றும், துன்பத்தை இன்பமென்றும் மயங்கி மாறுபட உணர்வதால் வாழ்க்கையில் சலிப்புதான் உண்டாகும். பொருள்களை மயக்கத்துடன் அதாவது ஐயம் திரிபுற அறியாவிடின் பொல்லாக் காட்சிகளே கிடைக்கும். ஐயம் திரிபுகளைக் களைவது மெய்யுணர்விற்கு வழிகாட்டும்.
மயக்கம் தரக்கூடியனவாகத் தோன்றுபவற்றில் உள்ள அறியாமை நீங்கித் தெளிவான சிந்தனையுடன் ஒழுகுவதே மாட்சிமையான வாழ்க்கையாம். மற்றவை மருள் வாழ்க்கை. பொய்யான பொருளை மெய்ப்பொருள் என மயங்கினால், வாழ்வு சிறப்பாக அமையாது. மெய்யுணர்வினால் பொல்லாக் காட்சிகளுக்கு ஆட்படாமல் நம் உள்ளத்தைக் காத்துக் கொள்ளலாம்.
உலகில் எது மெய், எது பொய் எனப் பகுத்தறிதலை, நாம் எளிதில் பெறாவிடினும், அதற்காக முயலுதல் வேண்டும்.

பலர் மெய்ப்பொருள் என்பதற்கு வீடு, மறுபிறப்பு, இருவினைப்பயன் இவை போன்றவற்றின் அடியாக விளக்கம் தந்துள்ளனர்.
பௌத்த மெய்யியலின் மையமாக விளங்கும் பன்னிரு சார்புக் கோட்பாட்டில் முதலில் உள்ளது அறியாமை; இறுதியானது பிறப்பு; தொடக்கப் புள்ளியான அறியாமையையும், முற்றுப் புள்ளியான துன்பத்தை விளைவிக்கும் பிறப்பையும் இக்குறள் குறிப்பிட்டுள்ளது; மெய்ப்பொருள் கண்டார்க்குப் பிறப்புக்கான மூலகாரணமான அறியாமை நீங்கும் என்றவாறு விளக்கினர் அச்சமயம் சார்ந்தோர்.
ஆடை, அணி, நிலம் போன்ற நிலையற்ற பொருள்களை நிலையானவை என மயங்கவேண்டாம் என உரை செய்தனர் சிலர்.
அழியும் பொருள் இவை, அழியாப் பொருள் இவை என்று அறிதலைச் சிலர் சொல்கின்றனர்.
இவ்விளக்கங்கள் யாவும் பொருத்தமற்றவை.

'மாணாப் பிறப்பு' என்றால் என்ன?

'மாணாப் பிறப்பு' என்றதற்கு மாட்சிமையில்லாத பிறப்பு, செனனம், மாட்சிமை இல்லாத பிறவி, இன்பம் இல்லாத பிறப்பு, பிறப்புத் தோன்றும், கீழான பிறப்பு, பெருமையில்லாப் பிறப்பினன், சிறப்பில்லாத பிறப்பு, சிறப்பில்லாத துன்பப் பிறப்பு, மாண்பில்லாத பிறப்பினன், மாட்சிமையற்ற மனிதப் பிறப்பு, இழிந்த பிறவி, இழிபிறப்பு என உரையாளர்கள் பொருள் கூறியுள்ளனர்.

பிறவிப் பெருங் கடல் நீந்துவர்.... (கடவுள் வாழ்த்து 10 பொருள்: வாழ்க்கையாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்.....) என்ற குறளில் உள்ளது போல இக்குறளிலும் பிறப்பு என்ற சொல் வாழ்க்கை என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. மாணா என்ற சொல்லுக்கு மாட்சிமை இல்லாத அல்லது சிறப்பற்ற என்பது பொருள். மாணாப் பிறப்பு என்பது மாட்சிமை இல்லாத வாழ்க்கை என்ற பொருள் தரும்.
மெய்யுணர்வு இல்லாத வாழ்க்கை, ஒருவரை மனச்சோர்வுக்கும் மனக்கவலைக்குமே இட்டுச் செல்வதால் அவ்வாழ்க்கையை சிறப்பில்லாத வாழ்க்கை என்கிறார் வள்ளுவர்.

பிறழ அறிகின்ற மயக்க உணர்வினாலே கீழான பிறப்பு உண்டாகும், பொய்ப்பொருள்களை மெய்ப்பொருள் என்று மயங்குவதால் பிறப்புத் தோன்றும், என்பன போன்ற பிறவிச்சுழற்சி தொடர்பான உரைகள் பொருந்தா.

பொருள்கள் அல்லாதனவற்றை பொருள்கள் என்று அறியும் மயக்கத்தினால் உளதாம் மாட்சிமையற்ற வாழ்க்கை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மெய்யுணர்தல் ஒருவர் வாழ்க்கைக்குச் சிறப்புச் சேர்க்கும்.

பொழிப்பு

பொருள் அல்லாதவற்றை பொருள் என்று மயங்குவதால் வாழ்க்கை மாட்சிமை பெறாததாய் இருக்கும்.