இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0348



தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

(அதிகாரம்:துறவு குறள் எண்:348)

பொழிப்பு (மு வரதராசன்): முற்றத் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர். அவ்வாறு துறக்காத மற்றவர், அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

மணக்குடவர் உரை: பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்: அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார்.
இது மறுமைப் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார், மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார்.
(முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றற விடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் தலைப்பட்டார் என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.)

சி இலக்குவனார் உரை: முழுதும் பற்றினை விட்டவர் பேரின்பத்தை அடைந்தவராவார்; பற்றினை விடாதவர் மயங்கித் துன்ப வலையுள் பட்டவராவார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தீரத் துறந்தார் தலைப்பட்டார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார்.

பதவுரை: தலைப்பட்டார்-கைகூடினார்; எய்தினார்; தீர-முற்ற, முற்றும்அற; துறந்தார்-பற்றினை விட்டவர்; மயங்கி-அறிவிழந்து; வலைப்பட்டார்-வலையுட்பட்டார்; மற்றையவர்-பிறர்.


தலைப்பட்டார் தீரத் துறந்தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்;
பரிப்பெருமாள்: பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்;
பரிதி: ஞானத்திலே மேற்பட்டவர் மூன்றுவகை ஆசையும் துறந்தார்;
காலிங்கர்: (முன்னம் சொன்ன) முத்தியின்கண் தலைப்பட்டோர் ஆவார் யாதொன்றின் மாட்டும் யாதும் ஒரு பற்றில்லாதவாறு திருந்தத் துறந்தவரே;
பரிமேலழகர்: முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்,
பரிமேலழகர் குறிப்புரை: முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றற விடுதல்.

'பற்றறத் துறந்தார் முத்தியை/வீட்டினைத் தலைப்பட்டார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முற்றத் துறந்தவரே வீடடைவார்', 'இருவகைப் பற்றையும் முற்றத் துறந்தவர் வீட்டின்பம் பெற்றார்', 'பற்றுகளையெல்லாம் மிச்சமின்றி அடியோடு விட்டவர்களே துறவு நிலை கைகூடினவர்கள்', 'முற்றத் துறந்தவர் வீட்டினை யடைந்தவராவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பற்றினை முழுதும் விட்டவரே துறவு கைகூடியவராவர் என்பது இப்பகுதியின் பொருள்.

மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார்.
மணக்குடவர் குறிப்புரை: இது மறுமைப் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மறுமைப் பயன் கூறிற்று. இவை இரண்டினானும் புறத் துறவின் பயன் கூறப்பட்டது,
பரிதி: ஞானமில்லாதார் மயங்கி ஆசை வலைப்பட்டார் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்றையாரெல்லாம் அங்ஙனம் பற்றமாட்டாது அறிவு மயங்கிப் பிறவியாகிய பெருவலையுட் பட்டுச் செல்கின்றார் என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார்.
பரிமேலழகர் குறிப்புரை: அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் தலைப்பட்டார் என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.

'அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் துறவாதவர் பிறப்புவலையில் மயங்கி வீழ்வார்', 'அங்ஙனம் துறவாதவர் அறியாமையால் மயங்கிப் பிறப்பாகிற வலையுட் சிக்கினார்', 'மற்றவர்கள் ஆசைகளில் மயங்கி பிறவித் துன்ப வலைக்குள் சிக்கிக் கொண்டவர்களாவார்கள்', 'மற்றவர்கள் அறியாமை உடையவராய்ப் பிறப்பாகிய வலையுள் அகப்பட்டவராவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மற்றவர்கள் அறியாமையால் துன்பவலையுள் அகப்பட்டவராவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பற்றினை முழுதும் விட்டவரே துறவு கைகூடியவராவர்; மற்றவர்கள் மயங்கி வலைப்பட்டார் என்பது பாடலின் பொருள்.
'மயங்கி வலைப்பட்டார்' யார்?

இரண்டுங்கெட்டானாகத் துறவு மேற்கொண்டோர் துன்பமேயுறுவர்.

பற்றுக்களை முற்றிலும் நீக்கியவர்க்குத் துறவு கைகூடும். மற்றவர்கள் அறியாமையால் துன்ப வலையிலே சிக்கித் துன்புறுவர்.
இல்லறவாழ்வின் இறுதியில் தம் மக்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு இறையொளி தேடுவதற்காகத் துறவு மேற்கொள்பவர்கள் பற்றித் 'துறவு' அதிகாரம் பேசுகிறது. துறவுவாழ்க்கை மேற்கொள்பவர் எல்லாப் பற்றுக்களையும் முற்றிலுமாக விட்டு முழுமனதுடன் துறவைத் தொடங்கிச் செல்லவேண்டும். அங்ஙனம் நீத்தார்க்கே துறவு கைவரப்பெறும். அவ்வாறன்றி அகத்திலும் புறத்திலும் பற்றுக்களை முற்ற விலக்காமல், பட்டும்படாமலும், துறவை ஏற்பவர்கள் வலையில் அகப்பட்ட உயிர்கள் போல் உள்ளேயும் துயருற்று வெளியேயும் வர முடியாமல் சிக்கித் திணறுவர். முற்றத் துறந்தவர்களே துறவுக்குத் தலைப்படுவர். முழுவதும் துறவாது தடுமாறுகிறவர்கள் துன்ப வலைக்குள் சிக்கியவர்கள் ஆவர்.

தலைப்பட்டார் என்ற சொல்லை தலை+பட்டார் என இரண்டாகப் பிரித்து உயர்நிலை எய்தினார் என்றும் கடவுளை அடைந்தார் என்றும் பொருள்கொள்வதைவிட ஒரு சொன்னீர்மைத்தாகக் கொண்டு பொருள் கொள்வது சிறக்கும் என்பார் இரா சாரங்கபாணி. .....நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு (தவம் 269 பொருள்: தவத்தின் ஆற்றல் கைவரப் பெற்றவர்க்கு...), .......சிலர் அதன் செவ்வி தலைப்படுவார் (புணர்ச்சி விதும்பல் 1289 பொருள்: .....பக்குவம் அறிந்து அதனை மேற்கொள்பவர்கள் ஒரு சிலரே ) என வரும் குறள் வழக்குகள் போன்று தலைப்பட்டார் என்பதற்குப் பொருள் கொள்வதே பொருந்தும் என்பார் அவர்.
'தலைப்படுவார்' என எதிர்காலத்தில் கூறாது தலைப்பட்டார் என்று இறந்த காலத்தாற் கூறியது துணிபு (தெளிவு) பற்றி வந்த கால வழுவமைதி என்பர்.

'மயங்கி வலைப்பட்டார்' யார்?

'மயங்கி வலைப்பட்டார்' என்றதற்கு மயங்கிப் பிறப்பாகிய வலையிலே அகப்பட்டார், மயங்கி ஆசை வலைப்பட்டார், அறிவு மயங்கிப் பிறவியாகிய பெருவலையுட் பட்டுச் செல்கின்றார், மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார், அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர், மயங்கித் துன்பங்களென்ற வலையுள் மீண்டும் அகப்படுவர், பிறப்புவலையில் மயங்கி வீழ்வார், மயங்கிப் பிறப்பாகிற வலையுட் சிக்கினார், மயங்கி பிறவித் துன்ப வலைக்குள் சிக்கிக் கொண்டவர்களாவார்கள், அறியாமைக்கு ஆளாகித் துன்பம் என்னும் வலைக்குள் அகப்பட்டவர், அறியாமை உடையவராய்ப் பிறப்பாகிய வலையுள் அகப்பட்டவராவர், மயங்கித் துன்ப வலையுள் பட்டவராவார், மயங்கித் துன்ப வலையில் வீழ்ந்தவர் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

முழுவதுமாக ஆசைகளை விட்டொழிக்காமல் அலைபாயும் மனம் கொண்டு துறவை ஏற்றவர் துன்ப வலையில் அகப்பட்டவராவர் என்பது குறளின் இறுதிப் பகுதியின் பொருள். வலையில் மாட்டிக்கொண்ட மீன், பறவை, விலங்கு போன்ற உயிர்ப்பொருள்களை எண்ணிக்கொள்ளலாம்.
'வலை’ என்பதற்குப் பிறப்பாகிய வலை. ஆசைவலை, அறியாமையாகிய வலை, துன்பவலை என உரை கூறியுள்ளனர். இவற்றுள் துன்பவலை பொருத்தம். முற்றும் துறக்காதவர்க்கு, ஏதேனும் ஒன்றன் மேல் பற்றிருக்க, இங்கும் அங்குமாகச் சென்று துன்பமே அடைவர். இவர்களே பற்றற்றேம் என்று படிற்றொழுக்கம் செய்பவர்களாகின்றனர்.

'மயங்கி வலைப்பட்டார்' என்பது என்ன செய்கின்றோம் என்று அறியாமல் துன்ப வலையுள் பட்டவர் என்ற பொருள் தரும்.

பற்றினை முழுதும் விட்டவரே துறவு கைகூடியவராவர்; மற்றவர்கள் அறியாமையால் துன்பவலையுள் அகப்பட்டவராவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

முற்றப் பற்று நீக்கலே துறவு ஆகும்.

பொழிப்பு

பற்றினை முழுதும் விட்டவர் துறவு கைவரப்பெறுவர்; அல்லாதவர்கள் மயங்கித் துன்ப வலையுள் அகப்பட்டவராவார்.