இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0339



உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339)

பொழிப்பு (மு வரதராசன்): இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

மணக்குடவர் உரை: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு.
இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்.
(உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: சாவு என்பது உறக்கம் வருவது போலவும், பிறப்பு என்பது உறக்கம் நீங்கி விழிப்பது போலவும் நிலையாத் தன்மை உடையவையே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சாக்காடு உறங்குவது போலும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும்.

பதவுரை: உறங்குவது- தூங்குதல்; போலும்-போன்றது; சாக்காடு-இறப்பு; உறங்கி-தூங்கி; விழிப்பது-துயில் எழுவது; போலும்-போன்று; பிறப்பு-தோற்றம்.


உறங்கு வதுபோலும் சாக்காடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு;
பரிப்பெருமாள்: உறக்கத்தோடு ஒக்கும் சாக்காடு;
பரிதி: நித்திரைபோல மரணம்;
காலிங்கர்: வாழும் யாக்கையிலே கரணங்களின் ஒடுக்கம் போலும் மற்று அவ் யாக்கையது இறந்துபாடும்;
பரிமேலழகர்: ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும்,

'உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தூங்குவது போன்றது சாவு', 'ஒருவனுக்கு வரும் சாவு தூங்குவது போன்றது', 'உயிருக்குச் சாவு என்பது தூக்கம் போன்றது', 'சாவு வருதல் உறக்கம் வருவதைப் போலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தூங்குவது போன்றது இறப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

உறங்கி விழிப்பது போலும் பிறப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
பரிப்பெருமாள்: உறங்கி விழித்ததனோடு ஒக்கும் பிறப்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், பிறந்தாலும், உறங்கலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
பரிதி: விழிப்பது போலே பிறப்பு என்று அறிக என்றவாறு.
காலிங்கர்: இனி இதன் கொள்கையுள கரணங்கள் புலப்பட்டு இமைத்து விழித்தாற் போலும் பிறப்பும் என்றவாறு.
பரிமேலழகர்: அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.

'உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தூங்கி விழிப்பது போன்றது பிறப்பு', 'பிறப்பு தூங்கி விழிப்பது போன்றது', 'தூங்கி விழிப்பது போன்றது இன்னொரு பிறப்பு', 'பிறத்தல் உறங்கி விழிப்பதைப் போலும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறத்தல் தூங்கி விழிப்பது போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தூங்குவது போன்றது இறப்பு; பிறத்தல் தூங்கி விழிப்பது போன்றது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

உயிர்கள் சாவதும் பிறப்பதும் தூங்குவது-விழிப்பது போன்று இயல்பான நிகழ்வுகள்.

இறப்பு எனப்படுவது உறங்குவது போல்வது. பிறப்பு எனப்படுவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்தல் போன்றது.
உயிர்கள் தூங்காமல் இருக்க முடிவதில்லை. உறங்கச் செல்லும் உயிர்கள் தூங்கிக்கொண்டே இருப்பதில்லை. அதுபோலவே உயிர்களுக்கு இவ்வுலகில் இறத்தலும், பிறத்தலும் இயல்பாகவே நடந்து வருகின்றன. சாக்காடு-பிறப்பு என்பது உறங்குவதும் பின் உறக்கத்தினின்றும் விழித்தலும் போலவே இருக்கின்றன.
காலிங்கர் 'வாழும் யாக்கையிலே கரணங்களின் ஒடுக்கம் போலும் மற்று அவ் யாக்கையது இறந்துபாடும்; இனி இதன் கொள்கையுள கரணங்கள் புலப்பட்டு இமைத்து விழித்தாற் போலும் பிறப்பும்' என்று விளக்குவார்.

ஏன் உயிர்கள் சாவை எதிர்கொள்கின்றன, சாக்காட்டிற்குப் பின் என்ன நடக்கிறது போன்றனபற்றி காலம் காலமாக ஆய்ந்து வருகின்றனர். தத்துவ நூல்கள் வெவ்வேறு வகையாக இவைபற்றிப் பேசுகின்றன. சமயங்கள் அவைஅவற்றின் கோட்பாடுகள் மூலமாக வேறுவிதமாக விளக்கம் செய்கின்றன. அறிவியல் உலகத்தாலும் இவற்றிற்கு இன்னும் விடை காணமுடியவில்லை. பிறப்பு போலவே சாவும் ஒரு புதிராகவே உள்ளது. வாழ்க்கையும் அதிலுள்ள இன்பதுன்பங்களும் பற்றி நமக்குத் தெரிகிறது, ஆனால் சாவிற்குப் பின் என்ன நேருகிறது என்பதை யாரும் கண்டறியவில்லை. இனியும் காணமுடியாது. பிறப்பு - இறப்பு ஏன், எதற்கு என்பது எஞ்ஞான்றும் கடவுளுக்கு மட்டுமே வெளிச்சமாக இருக்கும்.
பறவை கூட்டைவிட்டு எங்கோ செல்வதுபோல, செத்த உயிர் திரும்பிவராத இடம் ஒன்றிக்கு செல்கிறது என்று குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே ....(338) என முன்பு சொன்ன வள்ளுவர், இங்கு, அன்றாட வாழ்க்கையில் உறக்கமும் விழிப்பும் எங்ஙனம் இயல்பாக நடைபெறுகிறதோ அது போன்றே சாவும் இயல்பானதொன்று என எளிய தேற்றமுடைய விளக்கம் தருகிறார். நிலையாமையே நிலை பெற்றவாறு உறங்குதலும், விழித்தலும் உயிர்கட்கு இயல்பானது என்று கூறுகின்றார்.

காந்தியடிகள் உள்ளத்தைத் திருக்குறள் மிகவும் ஈர்த்தது என்பதை அறிவோம். இறப்பு என்பது என்ன என்பதைப் பற்றி விளக்க அவர் இக்குறளை எடுத்துக் காட்டி, 'இதைவிடத் தெளிவாக இறப்பைப் பற்றிக் கூற இயலுமா?' என வியக்கிறார். மேலும் இந்தக் குறட்பாவின் கருத்தினை, 'உறக்கமும் மறதியும் அன்றி, பிறப்பு என்பது வேறொன்றும் இல்லை' எனும் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் (William Wordworth 1770-1850) கவிதை அடியோடு ('Our birth is but a sleep and a forgetting') ஒப்பிட்டுப் பார்க்குமாறு அவர் வேண்டுகிறார் (க ந திருநாவுக்கரசு).

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இக்குறள்பற்றி உரையாசிரியர்களும் குறள் அறிஞர்களும் மொழிந்தவற்றிலிருந்து சில:

  • தூங்குவதும் விழிப்பதும் நாளும் நடக்கும் ஒரு நிகழ்ச்சியோ அது போல இறப்பதும், பிறப்பதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும் ஒரு சுழற்சியான நிகழ்ச்சி; தூங்கியதும், விழித்ததும் வேற வேற உடல். உயிர் ஒன்று தான்.
  • ஒருவன் உறங்கும் காலத்தில், அவனுடைய ஐம்பொறிகளும் அயர்ந்து, உணர்வு அற்றிருந்தாலும் மனம் அயராத நிகழ்ச்சியுடையதாய் இருத்தல் போல, இறக்கும் பொழுது உடல் ஒன்றே பொன்றி ஒழியுமன்றி, அவ்வுடம்பில் தங்கியிருந்த உயிர் அழியாது இருக்கும்.
  • குறளில் திட்டமான மறுமைக் கொள்கையுண்டு. வள்ளுவர் உயிர் இவ்வுலகில் பலமுறை பிறந்திருக்கிறது என நம்பினார். உறக்கமும் விழிப்பும் போலப் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நிகழ்கின்றன. இக்குறள் ஒவ்வொரு உயிர்க்கும் இவ்வுலகில் பல பிறவிகள் உள என்ற வள்ளுவர் கருத்தைக் காட்டும்.
  • முற்பிறப்பு மறுபிறப்பு என சொல்லப்படுவதை ஒரு மனிதனால் வாழும்போது உணரமுடியாது. எனவே அவ்வாறு பிறவியில் ஆசை கொண்டவர்கள், தூக்கத்தை மரணமாகவும் விழித்தெழுவதை பிறவியாகவும் அறிவாளிகள் கருதுவர்.
  • நாம் உறங்கும் போது நினைவை மறக்கின்றோம். செயலற்றுக் கிடக்கின்றோம். விழித்துக் கொள்ளும்போது நினைவு பெறுகின்றோம். புத்துணர்வுடன் திகழ்கின்றோம். 'மறப்பும் நினைப்பும் இறப்பும் பிறப்பாம்' என்ற திரு வி க வின் சொல் இக்குறள்களுக்கு உரையாக அமைந்து விடுகின்றது..
  • மரணம் பற்றிய அச்சத்தைப் பொருளற்றது என்று எடுத்துச் சொல்கிறார். உறக்கத்தை விரும்பி ஏற்பதைப் போன்று, மரணமும் விரும்பி ஏற்கத்தக்கதொன்றே. உயிரின் இயல்பு அறியாமையால்தான் மரணத்தைக்கண்டுபயம் தோன்றுகிறது. இப்பயத்தைப் போக்குவதே இந்த உவமையின் பயனாகும். பிறப்பு, இறப்பு என்பது ஒரு சம்பவம்தான் அதைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்பது வள்ளுவரின் ஆழந்த கருத்து.
  • இறப்பு என்பது உறக்கத்துக்கு இணையானது தான். அதற்குப்பின் உணர்வோ, வேலையோ இல்லாத நிலை. இறந்த ஆள் நல்லதோ கெட்டதோ செய்ய முடியாத, இன்பமோ துன்பமோ உணராத ஒரு ஆழ்ந்த உறக்கம் ஆக, நம்மால் செய்ய இயலும் நன்மைகளை உடனே (சாவு வருமுன்) செய்வோம்.

இரண்டு பகுதிகளைக் கொண்ட இக்குறளில் சிறப்பாக நோக்குதற்குரியது 'உறங்குவது போலும் சாக்காடு' என்பது. பிறந்தது இறக்கும் என்ற உண்மையைக் காட்டி சாவுப் பயத்தைப் போக்க முயல்கிறது பாடல். சாவு இயல்பானது; எளிதானது; அஞ்சத்தக்கதன்று என்று கூறப்படுகிறது. சாக்காடு என்றவுடன் கலக்கம் அடையவேண்டியதில்லை. அது இயல்பான உறக்கம் போன்றது என்கிறார் வள்ளுவர்.
தண்டபாணி தேசிகர் உரை 'உறக்கம்-இளைப்பாற; விழிப்பு-தொழிற்பட. அதுபோல எடுத்த பிறவியிற் பட்ட துன்ப இன்பக் களைப்பை நீங்கிச் செயற்படக் கிளர்ந்தெழுதல் பிறப்பும் இறப்பும் என்ற பொருளும் இவ்வுவமையாற் கிடைத்தல் காண்க' என்கிறது.
நிலையாமை அதிகாரத்தில் வரும் இப்பாடலில் இறப்பது என்பது தூங்குவதைப் போல இயல்பானது என்பதைச் சொல்ல வருகிறார் வள்ளுவர். அதுபோழ்து விழித்தல் போல்வது பிறப்பு என்றும் கூறுகிறார். இப்பாடலைப் பொறுத்தவரையில் உறங்குபவரே விழிக்கிறார் என்னாமல் உறக்கம்-விழிப்பு, இறப்பு-பிறப்பு என்பதைப் புரிந்து கொண்டால் பொருள் புலப்படும்.

தூங்குவது போன்றது இறப்பு; பிறத்தல் தூங்கி விழிப்பது போன்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

யாக்கை நிலையாமை இயல்பு நோக்கி சாவுபற்றிக் கவலை கொள்ளவேண்டா

பொழிப்பு

தூங்குவது போன்றது இறப்பு; பிறத்தல் தூங்கி விழிப்பது போன்றது.