இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0335



நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:335)

பொழிப்பு (மு வரதராசன்): நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்குமுன்) நல்ல அறச்செயல் விரைந்து செய்யத்தக்கதாகும்.

மணக்குடவர் உரை: நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும்.
இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும்.
(மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.)

தமிழண்ணல் உரை: அறச்செயல்களைப் பிறகு செய்யலாம்; கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளாலாமெனத் தள்ளிப்போடுவது ஒரு மன இயல்பு. நா பேசவராது அடங்கி, விக்குள் மேலெழுந்து தோன்றுவது உயிர் பிரியும் கடைசிநேரமாகும். அதுவரை காத்திராமல் அந்நிலை வருமுன்பே நல்வினைகளை உடனே விரைந்து முயன்று செய்ய வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.

பதவுரை: நா-நாக்கு; செற்று-அடக்கி; விக்குள்-விக்கல்; மேல்வாராமுன்-எழுவதற்கு முன்னே; நல்-நல்ல; வினை-செயல்; மேற்சென்று-தானே முற்பட்டு; செய்யப்படும்-செய்யத்தகும்.


நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே;
பரிப்பெருமாள்: நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே;
பரிதி: நாக்குக் குழறி விக்கலும் வருமுன்னே;
காலிங்கர்: யாக்கையின்கண் உயிர் நிலையாமை இயல்பு ஆகலால் தமது நாவினைச் செற்றுக்கொண்டு விக்குளமனது மேற்போந்து கழிவதன் முன்னே;
பரிமேலழகர்: உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே;

'நாக்குக் குழறி விக்கலும் வருமுன்னே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாச்சுருண்டு விக்கல் வருமுன்னே', 'நாவானது குழறி, விக்கல் எழுவதற்கு முன்பே', 'பேச்சு வராதபடி நாக்குக் குளறி, மேல் மூச்சு வருவதற்கு முன்னால்', 'சாங்காலத்திற் பேசமுடியாமல் நாவை அடக்கி விக்குள் மேற்படுவதற்கு முன்னமே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாக்குக் குழறி விக்கல் எழுவதற்கு முன்பே என்பது இப்பகுதியின் பொருள்.

நல்வினை மேற்சென்று செய்யப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் இளமை நிலையாதென்றார். இஃது இளமை கழிவதன் முன்னே நல்வினை செய்யவேண்டு மென்றது. இவையிரண்டும் இளமை நிலையாமை கூறிற்றன.
பரிதி: அறம் செய்வான்; பின்னை வசமல்ல பொன்னும் பொரிவிளங்காயாம் என்றவாறு.
காலிங்கர்: மேல் நல்வினைக்கண்ணே நெஞ்சு ஒருப்பட்டு மற்று அதனைக் காயத்தினாலும் மனத்தினாலும் வாக்கினாலும் மேலாகிய துறவறத்தின்கண் நின்று ஒழுகப்படும் என்றவாறு.
பரிமேலழகர்: வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.

'நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் வீடு பற்றிப் பேசுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தைத் தானே முற்பட்டுச் செய்க', 'அறச் செயல்களை முந்திக் கொண்டு செய்ய வேண்டும்', 'புண்ணிய காரியங்களைச் செய்ய முந்திக் கொள்ள வேண்டும்', 'அறச் செய்கை விரைந்து செய்யப்படல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறச் செயல்களைத் தானே முற்பட்டுச் செய்ய வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாக்குக் குழறி விக்கல் எழுவதற்கு முன்பே, அறச் செயல்களை மேற்சென்று செய்ய வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'மேற்சென்று' என்பதன் பொருள் என்ன?

சாவு நெருங்குவதற்கு முன் நல்லவற்றைச் செய்துவிடுக.

பேச முடியாதபடி நாக்கு அடங்கி, விக்கல் மேல்எழுவதற்கு முன்னமே நற்செயல்களை விரைந்து செய்தல் வேண்டும்.
உடல் நிலையற்றது; உலகில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் சாவு என்பது உறுதி. குழந்தையாய்ப் பிறந்து வளர்ந்து, இளைஞன், தாத்தா ஆகி ஒருநாள் நாச்சாக, விக்கல் எழ, மூச்சு இழுத்து அவ்வுயிர் இறக்கிறது. உயிர் நிலையாமை உண்மை தெரிந்திருந்தும் பலர் அறச்செயல்களைப் சாகும் காலத்தில் பார்த்துக் கொள்ளாலாமெனத் தள்ளிப்போடுகின்றனர். இந்த மனநிலையை நீக்கவே வள்ளுவர் அன்றறிவாம் என்னாது அறம்செய்க...... (அறன் வலியுறுத்தல் 36 பொருள்: அன்றைக்குப் பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடாது அறம் செய்க....) என அறிவுறுத்தினார். ஒருவர்க்கு உயிர் பிரியும் கடைசிநேரத்தில் நாச்செற்று விக்குள் மேல் எழும், அந்நிலை வரும்பொழுது வாய் திறந்து பேசமுடியாது, அப்பொழுது நன்மைகள் ஏதும் செய்யாமல் வீணாக நாள் போக்கிய புன்மையை நினைந்து வருந்துவதில் பயனில்லை. அறம் செய்தலும் இயலாது. அதனால் நிலைதளர்ந்து முதுமையும் சாவும் வருவதற்கு முன்பே நற்செயல்களை முன்னெடுத்து விரைந்து செய்க என இப்பாடல் கூறுகிறது.

இக்குறளில் இயற்கையான இறப்பு ஏற்படும் நேரத்தில் உடல் உறும் துன்பங்கள் படிப்போர் உள்ளத்தில் பதியும் வண்ணம் விளக்கப்படுகிறது. நாக்குக் குழறி, விக்கல் வந்து தொண்டையிலே நின்று, மேலேயும் வராமல், கீழேயும் போகாமல் நெஞ்சுக்குழியை அடைக்கிற சாத்துன்பக் காட்சி இரங்கல் தொனியில் சொல்லப்படுகிறது. தான் நினைத்த செயலைச் செய்ய முடியாமையையும் சொல்ல இயலாத நிலையினையும் அறிவிக்கிறது இக்காட்சி.
உடல்நலம் சீராக இருக்கும்பொழுதே, நோய்நொடி இல்லாதிருக்கிற இளமைக் காலத்திலேயே நன்மைகள் செய்தல் நல்லது என்பது செய்தி.

'மேற்சென்று' என்பதன் பொருள் என்ன?

'மேற்சென்று' என்ற தொடர்க்கு மேல் விழுந்து, நெஞ்சு ஒருப்பட்டு, விரைந்து, உடனே விரைந்து முயன்று, தானே முற்பட்டு, முந்திக் கொண்டு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

சாவுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்று கூறினார் எனச் சொல்லி. மேற்சேறல் என்பதற்கு மண்டுதல் எனப் பதவுரையும் தருகிறார் பரிமேலழகர். (மண்டுதல் என்பதற்கு விரைவு படுத்தல் என்பது பொருள்). இப்பாடலில் 'மேற்சென்று' என்பது உடல் நிலையாமையினால், உந்தப்பட்டு 'விரைந்து சென்று' என்ற பொருள் தருமாறு ஆளப்பட்டது. 'மேற் சென்று என்பதற்கு சாத்துன்பம் வருவதற்கு 'முன்னால் சென்று' எனவும் பொருள் கூறுவர். "ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு" ஆதலால் நிலையாமை நோக்கி நல்வினை விரைந்து செய்யத் தூண்டியவாறு 'மேற்சென்று' என்று கூறினார் என்பது தேவநேயப்பாவாணர் தரும் விளக்கம்.. இரா சாரங்கபாணி ‘மேற்சென்று’ என்பது விழுந்தடித்துக் கொண்டு (விரைந்து) என்னும் வழக்கு நடைப் பொருளது என்பார்.

'மேற்சென்று' என்பதற்குத் 'தானே முற்பட்டு' என்ற பொருள் பொருத்தம்.

நாக்குக் குழறி விக்கல் எழுவதற்கு முன்பே, அறச் செயல்களைத் தானே முற்பட்டுச் செய்ய வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உடல் நிலையாமை உணர்ந்து உரிய காலத்தில் நல்லது செய்க.

பொழிப்பு

நாக்குக் குழறி விக்கல் வருமுன்னே அறச் செயல்களைத் தானே முற்பட்டுச் செய்ய வேண்டும்