இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0332



கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:332)

பொழிப்பு (மு வரதராசன்): பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது; அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

மணக்குடவர் உரை: கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்.

பரிமேலழகர் உரை: பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும்.
(பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.)

சி இலக்குவனார் உரை: ஒருவனிடம் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண், காண்போர் கூட்டம் வந்ததை ஒக்கும். அதனது மறைவும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்கூட்டம் போனதை ஒக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே; போக்கும் அது விளிந்து அற்று.

பதவுரை: கூத்துஆட்டுஅவை-கூத்துக்கள் ஆடும் நாடகஅரங்கம்; குழாத்து-கூட்டம்; அற்றே-அத்தன்மைத்தே; பெருஞ்செல்வம்-மிக்கசெல்வம்; போக்கும்-(கலைந்து) போவதும்; அது-அது; விளிந்து-ஒழிந்தது; அற்று-போலும்.


கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்;
பரிப்பெருமாள்: கூத்தாட்டுக் காண்டற்கு அவை திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளுமாறு;
பரிதி: சந்தையிந் கூட்டம் நாலுபேரும் ஆறுபேரும் வந்து காரியங்கண்டு மீண்டும் போவார்கள்; அப்படி யல்ல செல்வம். எப்படி என்றால், கூத்தாடல் பார்க்க நாலுபேரும் ஆறுபேரும் வந்து கூத்துக்கண்டு;
காலிங்கர்: கூத்து என்பதோர் காரணமாக மக்கள் ஈட்டம் வந்து கூடினாற்போலச் சிறிது நல்வினை என்பதோர் காரணமாகப் பொருளீட்டம் வந்துளதாய்;
காலிங்கர் குறிப்புரை: குழாம் என்பது கூட்டம்.
பரிமேலழகர்: ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும்;
பரிமேலழகர் குறிப்புரை: பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று.

'கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருஞ்செல்வம் வந்துபோவது', 'ஒருவனுக்குப் பெருஞ்செல்வம் குவிதலும் அழிதலும்', 'பெருஞ்செல்வம் வந்து சேர்வது, கூத்தாட்டம் பார்க்கச் சேருகின்ற கூட்டத்தைப் போன்றது', 'பெருஞ்செல்வம் வருதல் நாடகசாலைக்குக் காண்பார் கூட்டம் வந்தாற் போலும்!' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெருஞ்செல்வம் வருவது கூத்தாடும் அரங்கத்தில் சேருகின்ற கூட்டத்தைப் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

போக்கும் அதுவிளிந் தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்.
பரிப்பெருமாள்: அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்செல்வ நிலையாதென்றார். அது நிலையாதாயின் அறஞ்செய்யுமா றென்னை என்றார்க்கும கூத்தாட்டின்கட் பன் மக்கள் எல்லாம் தாமே வந்து திரண்டு அது முடிந்தால் தாம் வேண்டிய நெறியே போவர்; அது போலப் புண்ணிய முள்ளளவும் நின்று அஃதற்றாற் போமென்று கூறிற்று. இவையிரண்டும் செல்வ நிலையாமை கூறிற்றன. பரிதி: கூத்துக் குலைந்தபோது ஒருக்காலே பிரிந்து ஓடுவார்கள். அதற்கு ஒக்குமே செல்வத்தின் கூட்டம்; எப்படி என்றால், இவன் செய்த புண்ணியத்திற்குத் தக்கதாக இலட்சுமி இருப்பாள்; இவன் தவசு மாறி, இலட்சுமி போனபின்பு அக்கினி, கள்ளர், இராசா, ஆறு இவையிற்றினாலே செல்வம்போம்; இஃது அறிந்து உள்ளபொழுதே தன்மஞ் செய்வான் என்றவாறு.
காலிங்கர்: மற்றும் கூத்து ஒழிவின் பின்னரே மக்கட்கூட்டம் பிரிந்தாற்போலச் செய்த (நல்வினை இறுதிப்) பின்னரே மற்று அப்பொருள் அழிந்து ஒழிதலும் அத்தன்மைத்து என்றவாறு,
காலிங்கர் குறிப்புரை: விளிதல் என்பது ஒழிதல்.
பரிமேலழகர்: அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.

'அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாடகத்துக்கு மக்கள் வருவது போவது போன்றது', 'கூத்தாடும் அரங்கத்தில் மக்கள் கூட்டம் கூத்துக் காணக் கூடுதலும் அது முடிந்ததும் கலைந்து செல்லுதலும் போலும்', 'அது தொலைந்து போவதும் அந்தக் கூட்டம் கலைந்து போவதைப் போன்றது', 'அச் செல்வத்தின் போக்கும் கூத்து முடிந்தவுடனே அக்கூட்டம் போயினாற் போலும்!' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அச்செல்வம் போவதும் கூத்து முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து செல்வதைப் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெருஞ்செல்வம் வருவது கூத்தாடும் அரங்கத்தில் சேருகின்ற கூட்டத்தைப் போன்றது; அச்செல்வம் போவதும் கூத்து முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து செல்வதைப் போலும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பெருஞ்செல்வம் வந்தது என்று தலைகால் புரியாமல் ஆடவேண்டாம். அது நிலை நில்லாதது.

பெரும்செல்வம் திரள்வது கூத்தாடும் இடத்தில் மக்கள் ஒன்றாகக் கூடுவது போன்றது ஆகும்; கூத்து முடிந்ததும் அக்கூட்டம் ஒருசேரக் கலைந்து போவது போன்றது வந்த செல்வம் நீங்கிப் போவதும்.
நிலையில்லாதவைகளை நிலைத்து நிற்கக்கூடியவை என எண்ணுவது அறிவுடையவர்க்கு இழிவு என்று முந்தைய குறளில் கூறிய வள்ளுவர், இங்கு நிலைத்து நில்லாதவைகளில் செல்வமும் ஒன்று என்று சொல்கிறார். பெருஞ்செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் மெல்ல மெல்லக் கூட்டம் வந்து சேர்வதைப் போன்றது. அதுபோல் கூத்து முடிந்ததும் காண வந்த கூட்டம் வெளியேறிவிடுவதைப் போன்று அவன் செல்வமும் நில்லாமல் குறுகிய காலத்தில் கலைந்து போய்விடும்.
மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியிருக்கக்கூடிய இடங்கள் ஊரில் பலவுண்டு (எடுத்துக்காட்டு: நாள்தோறும் கூடும் சந்தை). இங்கு, நாடகத்தைக் கண்டு மகிழக்கூடியிருக்கும் கூட்டம் பெருஞ்செல்வத்திற்கு உவமையாகக் காட்டப்படுகிறது. நாடக அரங்கிற்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து பின் எப்படிப் பெருங்கூட்டமாகக் காணப்படுகிறார்களோ, அப்படியே ஒருவனது திரண்ட செல்வம் காட்சியளிக்கும். கூத்து முடிந்தபின் கூட்டம் எப்படிக் கலையுமோ அதுபோல் பெருஞ்செல்வமும் விரைந்து மறைந்து போகும். நாடக அரங்கிற்குப் போகிறவர்களும் சிறிதுகாலம் நாடகத்தைப் பார்த்துவிட்டு திரும்பிச் செல்லுகிறார்களேயொழிய அவ்விடத்தில் தங்கி நிற்பதில்லை. அதுபோல் செல்வமும் ஓரிடத்தில் நிலைத்திருப்பதில்லை என்கிறது பாடல்.

'சேர்க்கக்கூடிய உடைமைகள் அழியக் கூடியன' என்னும் செல்வநிலையாமைத் தன்மை சொல்லப்பட்டது. 'குறைந்த செல்வம் ஒருவேளை தொலையலாம்; ஆனால் பெருகிய செல்வம் எப்படி அழியும்?' என்ற வினா எழலாம். 'எவ்வளவு பெரிய செல்வமாயினும் அழிந்து விடும்' என்பதை வலியுறுத்தவே 'பெருஞ்செல்வம்' என்ற சொல் ஆளப்பட்டது. எல்லாச் செல்வமும் நிலையற்றதுதான் என்றாலும் இக்குறள் பேசுவது பெருஞ்செல்வம் பற்றித்தான்.
நாடகத்திற்கு வரும்போது தனித்தனியாக வந்து சேரும் மக்கள் நாடகம் முடிந்தபிறகு ஒன்றாக வெளியேறுவதைப் போல, வரும்பொழுது கொஞ்சங் கொஞ்சமாய் வந்த செல்வம், போகுங்காலத்தில் ஒரேயடியாய்ப் போய்விடும் என்பதாகவும் இக்குறட் பொருளை விளக்குவர்.

கூத்தாட்டு அவைக்குழாம் என்பது கூத்தில் பங்கேற்பவர்களது குழாத்தையும் குறிக்கும் எனவும் கூறுவர். எவ்விதம் நடிகர்களின்/கூத்தின் உடை, நடிப்பு, ஒப்பனை, கதை, காட்சி அனைத்தும் நிலையற்றவையோ-பொய்யோ எவ்விதம் கூத்து முடிந்ததும், அவை அனைத்தும் அழிந்து ஒழிந்து இல்லாமற் போய்விடுமோ, அவ்விதமே செல்வத்தின் தோற்றமும் இருப்பும் அழிவும் என்பதை உணர்த்துகிறது இக்குறள் என்பர் இவர்கள். ....விழவிற் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய (புறநானூறு 29:22-24 பொருள்: விழாவில் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம் போல; அடைவடைவே தோன்றி, இயங்கி, இறந்து போகின்ற இவ்வுலகத்தின்கண்; பொருந்திய) என்ற சங்கச் செய்யுளும் கூத்து ஆடுவோரை உவமித்து நிலையாமை பற்றிய குறிப்பை வெளிப்படுத்துகிறது,
வ உ சிதம்பரம் பிள்ளை 'அவைக் குழாத்தற்றே என்பது பொருத்தமான பொருள் தாராமையானும், பின்னர் விளிந்தற்று என வருதலானும், குழீஇயற்று என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க' என்கிறார்.

இக்குறளில் உள்ள 'போக்கும்' என்ற சொல்லில் 'ம்' ஒன்றிருந்து, 'போவதும் அப்படியே!' என்று கூறுவதால், வருவதும் அப்படியே, இருப்பதும் அப்படியே, என்பது கூறாமற் கூறப்படுகிறது.
...................பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் (ஊக்கமுடைமை 592 பொருள்:......பொருட்செல்வம் நில்லாது நீங்கி விடும்) என்று பிறிதோரிடத்திலும் செல்வ நிலையாமையை விளக்கினார் வள்ளுவர்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

பெருஞ்செல்வம் வருவதும் போவதும் கூத்தாட்டு அவைக்குழாத்தைப் போன்றது என்பது இப்பாடலின் நேர்பொருள். இங்கு உவமானம் மூலம் தெரிவிக்கப்படும் செய்தி படிப்போர் ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது. கூத்துக்கு மக்கள் வருவது போலச் செல்வம் சிறுகச் சிறுகவே சேரும். ஆனால் கூத்துக்கு வந்த மக்கள் அது முடிந்தவுடன் விரைவாகப் போவதுபோலச் சேர்ந்த பெருஞ்செல்வம் அழியும்போது விரைந்து அழியும் என்பது உய்த்துணர்ந்து கொள்ளும்படி விடப்பட்டுள்ளது.
பரிதி 'கூத்துக் குலைந்தபோது ஒருக்காலே பிரிந்து ஓடுவார்கள். அதற்கு ஒக்குமே செல்வத்தின் கூட்டம்; எப்படி என்றால், இவன் செய்த புண்ணியத்திற்குத் தக்கதாக இலட்சுமி இருப்பாள்; இவன் தவசு மாறி, இலட்சுமி போனபின்பு அக்கினி, கள்ளர், இராசா, ஆறு இவையிற்றினாலே செல்வம்போம்; இஃது அறிந்து உள்ளபொழுதே தன்மஞ் செய்வான்' என்று விளக்கினார். இவர் கூறும் பொருளாவது செல்வம் உள்ளபோதே அறம் செய்யவேண்டும் என்பது. பரிமேலழகர் 'அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று' எனப் பொருள் கூறினார். இவரும் நல்வினைக்கேற்ப செல்வம் நிற்கும்/அழியும் என்றே விளக்குகிறார்.
செல்வம் நில்லாத இயல்பை உடையது என்று அறிந்து, அதைக் கொண்டு நிலையான அறச் செயல்களைச் செல்வம் உள்ளபோதே செய்ய வேண்டும். அதைக் காக்க எண்ணி மொத்தமாக இழந்துவிட்டு வருந்தக் கூடாது. சேரும்செல்வம் என்றும் தம்மிடம் நிலைத்து நிற்கும் எனக் கருதி ஏமாற்றம் அடையவேண்டாம். கூத்து நடைபெறும் அவையில் கூடிக்கலையும் குழுவினரைப்போல் பெருஞ்செல்வமும் விரைந்து ஒழிந்து போய்விடுமாதலால் உடன் அறஞ்செய்தல் வேண்டும் என்பது இக்குறளின் திரண்டகருத்து.

நிலையற்ற செல்வத்தைக்கொண்டு நிலையான அறங்களை விரைந்து செய்யவேண்டும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

பெருஞ்செல்வம் வருவது கூத்தாடும் அரங்கத்தில் சேருகின்ற கூட்டத்தைப் போன்றது; அச்செல்வம் போவதும் கூத்து முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து செல்வதைப் போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெருஞ்செல்வம் நிலையாமை கூத்துக்காண் கூட்டத்தின் வரவும் போக்கும் போல.

பொழிப்பு

பெருஞ்செல்வம் வருவது கூத்தாடும் அரங்கத்திற்கு வருகின்ற கூட்டத்தைப் போன்றது; அச்செல்வம் நீங்குவது கூத்து முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து செல்வதைப் போலும்.