இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0327



தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை

(அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:327)

பொழிப்பு (மு வரதராசன்): தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

மணக்குடவர் உரை: தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை.
உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்: தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க.
('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.)

இரா சாரங்கபாணி உரை: தன்னுயிர் போனாலும் பிறிதோர் இன்னுயிரைப் போக்கும் கொலை செய்யக்கூடாது. (தன் உயிர் பிழைக்க மருந்துக்காகவோ தெய்வத்தின் வேண்டுதலுக்காகவோ உயிர்க் கொலை கூடாது.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்னுயிர் நீப்பினும், தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை செய்யற்க.

பதவுரை: தன்னுயிர்-தனது உயிர்; நீப்பினும்-நீங்கினாலும்; செய்யற்க-செய்யாதொழிக; தான்-தான்; பிறிது-மற்றதன்; இன்னுயிர்-இனிய உயிர்; நீக்கும்-போக்கும்; வினை-செயல்.


தன்னுயிர் நீப்பினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுயிர் நீங்கினும்;
பரிப்பெருமாள்: தன்னுயிர் நீங்கினும்;
பரிதி: தன்னுயிர் துறக்கும் காலமாகினும்;
காலிங்கர்: பிறிதொன்று வந்து தன்னுயிரை விடுவிப்பதாயினும்;
பரிமேலழகர்: அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்:

'தன்னுயிர் நீங்கினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்னொருவன் உன்னுயிரை எடுக்கும் போதும்', 'தன்னுடைய உயிர் போவதாயிருந்தாலும்', 'எதிர்த்த ஒன்றைக் கொல்லாத இடத்துத் தன் உயிர்போகக் கூடியதாயிருந்தாலும்', 'தன்னுயிரை விட நேரிட்டாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன்னுயிர் போவதாயினும் என்பது இப்பகுதியின் பொருள்.

செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்யாதொழிக தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை.
மணக்குடவர் குறிப்புரை: உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை.
பரிப்பெருமாள் குறிப்புரை: தன் உயிர் நீப்பினும் என்றது, உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய் மருந்தாக்கக் கொல்லுதல் குற்றமன்று என்பாரைப் பற்றி இது கொல்லாதொழிக என்றது.
பரிதி: இது பிழைக்கும் என்று, ஆடு கோழி பன்றியினைப் பிரார்த்தனை செய்வான் அல்லன்; அது எது எனில், அந்தப் பிராணனாலே, தன் பிராணன் பிழைப்பதாவது தனக்குள்ள வாணாள் தப்பாதே தான் வீண் பாவம் எய்தவேண்டாம் என்றவாறு:
காலிங்கர்: தான் மற்று அதன் பொருட்டாக வெகுண்டு இனிய அவ்வுயிரின் காரணம் கொலைவினை அஞ்சும் பண்பின்றாகிய வினையினைச் செய்யற்க எனறவாறு.
பரிமேலழகர்: தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க.
பரிமேலழகர் குறிப்புரை: 'தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக. [சாந்தியாக-குற்ற நீக்கத்திற்காக]

'தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினைச் செய்யாதொழிக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவனது இன்னுயிரை எடுக்காதே', 'தான் இன்னொரு உடலிலுள்ள அதற்கினிய உயிரைப் போக்குகிற கொலைச் செயலைச் செய்யக்கூடாது', 'தான் அதன் இனிய உயிரை அதனுடம்பினின்று நீக்குந் தொழிலைத் தவமுடையோன் செய்யக்கூடாது', 'தான் வேறு ஒன்றின் இனிய உயிரைப் போக்கும் தொழிலைச் செய்தல் கூடாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தான் பிறிதோர் இனிய உயிரை நீக்கும் தொழிலைச் செய்தல் கூடாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்னுயிர் போவதாயினும், தான் பிறிதோர் இனிய உயிரை நீக்கும் தொழிலைச் செய்தல் கூடாது என்பது பாடலின் பொருள்.
'தன்னுயிர் நீப்பினும்' குறிப்பது என்ன?

தன் உயிரைக் காப்பதற்காகக்கூட பிற உயிரைக் கொல்லுதல் கூடாது.

தன்னுயிர் போவதாயிருந்தாலும் ஒருவன் வேறொரு இனிய உயிரை நீக்குவதைச் செய்தல் கூடாது.
பிறிது இன்னுயிர் என்ற அஃறிணைத் தொடர் சொல் இருப்பதால் இங்கு சொல்லப்பட்டுள்ளது மனிதரல்லாத பிற உயிர்கள் எனக் கொள்ளலாம் (ஆனால் தேவநேயப் பாவாணர் 'பிறிதின்னுயிர்' என்றது இருதிணைக்கும் பொதுவாம் என்கிறார்). அதனதன் உயிர் அதனதுக்கு இனிதுதான். எனவே மாந்தர் தன்னுயிர் போவதாயினும் அதாவது தன்னுயிரைக் காக்கவேண்டியதாயிருந்தாலும், பிறவுயிர்களைக் கொல்லற்க என்கிறது குறள். தனக்கு உண்டாகப்போகும் சாவை ஏற்றும் பிற உயிர்க்கு ஊறு செய்யாமை என்ற தவப்பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

சாதலின் இன்னாதது இல்லை... (ஈகை 230 பொருள்: சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை...) என்று குறள் வேறொரு இடத்தில் கூறியுள்ளது என்றாலும் கொள்கைக்காகவும் ஒழுக்கத்துக்காகவும் உயிர் துறக்கலாம் என்று புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும் (புறங்கூறாமை 183 பொருள்: காணாவிடத்துப் புறம்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்த்து ஒருவன் உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்துபடுதல் அற நூல்கள் கூறும் ஆக்கத்தைக் கொடுக்கும்), ....உயிர்நீப்பர் மானம் வரின் (மானம் 969 பொருள்:..மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்) போன்ற இடங்களில் வள்ளுவர் கூறியுள்ளார். இங்கு தன்உயிர் நீங்குநிலையை விரும்புவார் யாரும் இருக்கமாட்டார் என்றாலும் தன்னுயிர்க்குத் தரும் மதிப்பை மற்ற எல்லா உயிர்களுக்கும் கொடுத்து கொல்லா அறம் கடைப்பிடிக்கவேண்டும் எனக் கட்டளையிடுகிறார் அவர்.

'தன்னுயிர் நீப்பினும்' குறிப்பது என்ன?

'தன்னுயிர் நீப்பினும்' என்பதற்குத் தன்னுயிர் நீங்கினும், தன்னுயிர் துறக்கும் காலமாகினும், பிறிதொன்று வந்து தன்னுயிரை விடுவிப்பதாயினும், அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும், தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், கொலைசெய்யாவிட்டால் தன்னுயிர் நீங்கும் என்றாலும், தன்னுயிர் நீக்கத்திற்குரிய சூழலிலே, தன்னுடைய உயிர் போவதாயிருந்தாலும், இன்னொருவன் உன்னுயிரை எடுக்கும் போதும், தன்னுயிர் போனாலும், பிறிதோர் உயிரால் தன்னுயிர் இழக்கும் நிலை உண்டாயினும், எதிர்த்த ஒன்றைக் கொல்லாத இடத்துத் தன் உயிர்போகக் கூடியதாயிருந்தாலும், பிறிதோர் உயிரைக் கொல்லா விடின் தனது உயிர் உடம்பை விட்டுப் போய் விடுமாயினும், தன் உயிரையே இழக்க வேண்டிய நிலையிலும் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

பெரும்பான்மையர் உரைகள் 'பிறிதோர் உயிர் கொல்லப்படாவிட்டால் தனது உயிர் உடம்பை விட்டுப் போய் விடுமாயினும்' என்ற பொருளைத் தருகிறது.
எந்தெந்தச் சூழல்களில் பிற உயிர்களைக் கொல்ல நேரிடுகிறது என்று இக்குறள் கூறுகிறது?
தனது நோய் தீர்க்கும் மருந்தாக அவ்வுயிர் (அதன் ஊன், குருதி, எலும்பு போன்றவை) பயன்படும் என்பதற்காகவும்,
தன்னுயிர் பிழைக்கத் தெய்வத்துக்கு ஆடு கோழி பன்றியினை தானே அல்லது பிறரைக் கொண்டு பலி கொடுத்து வேண்டுதல் செய்வதற்காக(கழுவாய் தேடுதலுக்காக)வும்,
தன்னைக் கொல்லவரும் உயிரிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காகவும் என்றிவற்றுள், இக்குறளுக்கான, பிற உயிர்களைக் கொல்லும் சூழல்கள் அடங்கும்.

இவற்றுள் நோய் மருந்தாக்கத்திற்காகக் கொல்லுதலையும் பலி கொடுப்பதற்கான உயிர்க்கொலையையும் உயிர் நீத்தல் என்று குறள் சொல்கிறது என்று தொல்லாசிரியர்களான மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் கூறினர். காலிங்கரின் 'பிறிதொன்று வந்து தன்னுயிரை விடுவிப்பதாயினும் தான் மற்று அதன் பொருட்டாக வெகுண்டு இனிய அவ்வுயிரின் காரணம் கொலைவினை அஞ்சும் பண்பின்றாகிய வினையினைச் செய்யற்க' என்ற உரையிலுள்ள 'வெகுண்டு' என்ற சொல், குறிப்பால், தன்னக் காத்துக்கொள்வதற்கான கொலையை உணர்த்திற்று. பரிமேலழகர் 'தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்று தனது விரிவுரையில் கூறியபின் பிற்கால உரையாளர்கள் 'இன்னொருவன் உன்னுயிரை எடுக்கும் போதும்', 'பிறிதோர் உயிரால் தன்னுயிர் இழக்கும் நிலை உண்டாயினும்', 'எதிர்த்த ஒன்றைக் கொல்லாத இடத்துத் தன் உயிர்போகக் கூடியதாயிருந்தாலும்' என்று தற்காப்புக்காகவும் உயிர் நீக்கத்தைச் செய்யக்கூடாது என்ற பொருளில் உரை எழுதினர்.
'பிற மொழியிலுள்ள அறநூல்கள் 'தற்காப்புக்காகச் செய்யப்பெறும் கொலை முதலியன பாவம் அல்ல' என்று கூறுவதை மறுத்தற் பொருட்டுத் தற்காப்புக்காகவும் கொலை செய்தல் கூடாது' என வள்ளுவர் சொல்வதாக ஒருசாரார் விளக்கம் செய்தனர்.

தற்காப்புக்காகக் கூட உயிர்க்கொலை கூடாது என்பது உலகியலில் இயலாதது. வள்ளுவர் எந்த உயிரும் எதற்காகவும் கொல்லப்படுவதை விரும்பமாட்டார் என்றாலும் இக்குறளின் சொல்லமைப்பு தற்காப்புக்காகக் கூட அதாவது எதிர்த்த ஒன்றைக் கொல்லாத இடத்துத் தன் உயிர்போகக் கூடியதாயிருந்தாலும், உயிர்நீக்கம் செய்யக்கூடாது என்று நேரடியாகச் சொல்வதாக இல்லை.
நச்சுத்தன்மை கொண்டதாயினும், எந்த ஒரு உயிருமே, வேண்டுமென்றே மனிதனைக் கடிப்பதில்லை. நாம் எப்பொழுது அதற்கு தீங்கு செய்கிறோமோ, அப்பொழுதுதான் அது நம்மைத் தீண்டும். நாம் விலகிச் சென்றுவிட்டால் அதுவும் ஒன்றும் செய்யாமல் சென்றுவிடும். பாம்பு, பூரான் போன்ற சிறிய உயிர்களிடமிருந்து தள்ளிச்சென்று அதற்குத் தீங்களிக்காமல் போய்விடலாம். ஆனால் புலி, கரடி, காட்டுப்பன்றி போன்ற கொடிய விலங்குகள் நம்மை நெருங்கி வந்தால் என்ன செய்வது? வேறு ஒரு காரணமில்லாமல் கொடிய விலங்குகளிடம் மாந்தர் மாண்டு விழுவதை வள்ளுவர் விரும்புவார் என்பதாக எண்ணமுடியவில்லை. அவற்றிற்கு ஊறு எதுவும் செய்யாமல் நாம் தப்பிக்க முடியாது. எனவே தன்னுயிர் நீப்பினும் என்பதற்கு, உயிர்க்கொலை செய்து உண்டாக்கிய மருந்து இல்லாமலோ அல்லது தெய்வத்துக்கு உயிர்ப் பலி கொடுக்காதலாலோ தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும் என்று பொருள் கொள்ளலாம்.

இல்லறத்தோர் வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை போன்ற அறங்களை முற்றமுடியக் கடைப்பிடிக்க இயலாதவர்களாய் ஓரளவே மேற்கொள்ளினும் துறவியர் இவற்றைத் தவறாது கடைப்பிடித்தல் வேண்டும் என்பதே ஆசிரியர் கருத்தெனத் தோன்றும் என்கின்றனர் சிலர். இவர்கள் கருத்துப்படி, தற்காப்புக்காகவும் உயிர்களைக் கொல்லாதிருப்பது துறவோர்க்கே பொருந்தக்கூடியது என்பது.

தன்னுயிர் போவதாயினும், தான் பிறிதோர் இனிய உயிரை நீக்கும் தொழிலைச் செய்தல் கூடாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொல்லாமை உன்னுயிரைப் போக்கினாலும் ஏற்றுக்கொள்க.

பொழிப்பு

தன்னுயிர் நீங்குவதாயினும், தான் பிறிதோர் இனிய உயிரை நீக்கும் செயலைச் செய்தல் கூடாது.