இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0310



இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:310)

பொழிப்பு (மு வரதராசன்): சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவார்.

மணக்குடவர் உரை: சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர்,
இது வெகுளாதார் பெரியரென்றது.

பரிமேலழகர் உரை: இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர், சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர்.
(மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும் கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை 'இறந்தார் அனையர்' என்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்காடு எய்துதற்குரிய யாக்கை நின்றது ஆயினும், ஞானத்தின் வீடு பெறுதல் ஒருதலையாகலின், அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: சினத்தில் மிக்கவர் செத்தவர்க்கு ஒப்பாவர்; சினத்தை விட்டவர் துறவியர்க்கு ஒப்பாவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.

பதவுரை:
இறந்தார்(1)-மிக்கவர், அளவு கடந்தவர்; இறந்தார்(2)-செத்தவர்; அனையர்-ஒப்பர்; சினத்தை-வெகுளியை; துறந்தார்(1)-நீங்கினவர்; துறந்தார்(2)-துறந்தவர்; துணை-அளவு.


இறந்தார் இறந்தார் அனையர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர்;
பரிப்பெருமாள்: சினத்தை மிகுத்தார் செத்தாரோடு ஒப்பர்;
பரிதி: மாண்டார்க்குச் சரியான சினத்தைத் துறந்தார்க்கு நிகராவது;
பரிமேலழகர்: சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர்;

'சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சினம் மிக்கவர் உயிருடையவராயினும் செத்தாரோடு ஒப்பர்', 'கோபம் மிஞ்சினவர்கள் துறவு நெறிகெட்டவர்களுக்குச் சமானமாவார்கள்', 'அளவு கடந்த சினத்தை உடையவர் செத்தாரோடு ஒப்பர்', 'சினத்தின்கண் மிகுந்தவர் செத்தாரோடு ஒப்பர் ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சினத்தில் மிக்கவர் இறந்தவர்க்கு ஒப்பாவர் என்பது இப்பகுதியின் பொருள்.

சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர்,
மணக்குடவர் குறிப்புரை: இது வெகுளாதார் பெரியரென்றது.
பரிப்பெருமாள்: அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர்,
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வெகுளாதார் பெரியரென்றது.
பரிதி: தொண்ணூற்றாறு தத்துவத்தையும் உடலோடே இருக்கையிலே புளியம்பழமும் ஓடும்போலே துறந்தார் நிகராம் என்றவாறு. [தொண்ணூற்றாறு தத்துவம் என்பது சைவ சித்தாந்தம் கூறும் உடலியல் தத்துவம்-96ஆம்.]
பரிமேலழகர்: சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர்.
பரிமேலழகர் குறிப்புரை: மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும் கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை 'இறந்தார் அனையர்' என்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்காடு எய்துதற்குரிய யாக்கை நின்றது ஆயினும், ஞானத்தின் வீடு பெறுதல் ஒருதலையாகலின், அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.

'சினத்தை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர்' என மணக்குடவரும் பரிப்பெருமாளும் கூற 'சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர்' எனப் பரிமேலழகர் உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'சினத்தைக் கைவிட்டவர் பற்றினையெல்லாம் அகற்றிய துறவிகளொடு ஒப்பர்', 'கோபத்தை விட்டவர்களே துன்பங்களை விட்ட துறவிகளுக்குச் சமானம்', 'சினத்தை விட்டவர் எல்லாவற்றையும் துறந்த துறவிகட்கு ஒப்பாவர். (அல்லது சாவினை ஒழித்த பெரியாரோடு ஒப்பர்)', 'சினத்தை விட்டவர் இல்லறத்தில் இருப்பினும் துறந்தார்க்குள்ள பெருமையினைப் பெறுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சினத்தை ஒழித்தவர் துறவியர் அளவினர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சினத்தில் மிக்கவர் இறந்தவர்க்கு ஒப்பாவர்; சினத்தை ஒழித்தவர் துறந்தார் துணை என்பது பாடலின் பொருள்.
'துறந்தார் துணை' குறிப்பது என்ன?

சினத்தின் மிகு எல்லையில் செத்தவராகவும் மறு எல்லையில் துறவியாகவும் ஒருவர் இருப்பார்.

அளவு கடந்த வெகுளியை உடையவர் உயிரோடு இருப்பவராயினும் இறந்தவரைப் போன்றவரே ஆவார். சினத்தை முற்றிலும் நீங்கியவர் அறவே துறந்த துறவிகள் அளவானவராவர்.
இக்குறளில் முதலிலுள்ள 'இறந்தார்' என்ற சொல்லுக்கு மிக்கவர் அல்லது அளவு கடந்து சென்றவர் என்பதும் அடுத்துள்ள 'இறந்தார்' என்றதற்கு செத்தார் என்பதும் பொருள். அதுபோல் துறந்தார் என்ற சொல்லும் இருமுறை வந்துள்ளது. முதலாவதான 'துறந்தார்' என்றது நீங்கியவர் என்ற பொருளும் இரண்டாவதான 'துறந்தார்' என்ற சொல் துறவியர் என்ற பொருளும் தரும். 'துணை' என்ற சொல் தினைத்துணை-பனைத்துணை (குறள் 104) என்பதில் வந்துள்ளது போல் 'அளவு' என்று பொருளில் ஆளப்பட்டது.
சினத்தின் அளவு கடந்து சென்றவர் செத்தவர்க்கு ஒப்பாவார்; சினத்தை நீங்கியவர் துறவி அளவினர் என்ற பொருள் இக்குறளுக்குக் கிடைக்கிறது. ஒரு கோடியில் அளவுகடந்து வெகுள்வாரையும் மறு கோடியில் சினத்தை அடியோடு விட்டவரையும் வைத்து சினத்துக்கும் தாழ்வு-உயர்வு நிலைக்கும் உள்ள உறவை விளக்குகிறார் வள்ளுவர். வரம்புகடந்து சினம் மிக்காராக உள்ளவன் உயிரே அற்றவன்; சினத்தை முற்றிலும் விலக்கியவன் மிகவும் உயர்ந்தவன் என்பது இப்பாடல் கூறும் கருத்து.

சற்றேறக்குறைய ஒரே வகையான ஒலியுடைய சொற்கள் வெவ்வேறு பொருளை உணர்த்தும் நுட்பமான ஒலிநயக் கற்பனையோடு பொருந்திய சொல் விளையாட்டு இக்குளில் அழகுற அமைந்துள்ளது; சொல்லும் பொருளும் இணைந்தும், இழைந்தும் ஒலிநயக் கற்பனையைச் சிறப்புறச் செய்கின்றன (த திருநாவுக்கரசு).

'துறந்தார் துணை' குறிப்பது என்ன?

'துறந்தார் துணை' என்பதற்குத் துறந்தாரோடு ஒப்பர், இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார்; அவர்க்குத் துணை துறந்தார், சாதலை ஒழிந்தார் அளவினர், துறந்தவர்க்கு ஒப்பாவார், உண்மைத் துறவியர்க்குச் சமமாவர், முற்றத் துறந்தவர்களாவர், துறவியர்க்கு ஒப்பாவர், பற்றினையெல்லாம் அகற்றிய துறவிகளொடு ஒப்பர், துறவிகளுக்கு ஒப்பாவார்கள், பற்றற்ற துறவியர்க்கு ஒப்பானவரே, எல்லாவற்றையும் துறந்த துறவிகட்கு ஒப்பாவர். (அல்லது சாவினை ஒழித்த பெரியாரோடு ஒப்பர்), இல்லறத்தில் இருப்பினும் துறந்தார்க்குள்ள பெருமையினைப் பெறுவர், எல்லாவற்றையும் அறவே துறந்த துறவிகளுக்குச் சமமாக இருப்பர், இருவகைப் பற்றையும் முற்றத் துறந்தா ரளவினராவர், முற்றுந்துறந்த முனிவரோடு ஒப்பர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிமேலழகர் முன் தொடரிலுள்ள இறந்தாரனையரை நினைந்து ‘துறந்தார் துணை’ என்பதற்குச் சாதலைத் துறந்தார் என்றது வலிந்த பொருள் கோளாகும். தண்டபாணி தேசிகர் 'சினத்தைத் துறந்தார்க்குச் சினத்தைத் துறந்தாரே துணை. வேறொருவருமிலர் என உரை காணின், அதிகார இயைபும் உடையதாதலைக் காணலாம்' எனக் கருத்துரைத்தார். இதை ‘இறந்தார் இரந்தாரனையர்’ என்ற விடத்துள்ள ‘இறந்தார்’ இரண்டற்கும் வெவ்வேறு பொருள் கொண்டது போலத் ‘துறந்தார் துறந்தார் துணை’ என்றவிடத்தும் துறந்தார் இரண்டற்கும் வெவ்வேறு பொருள் கொள்ளலே நடைக்கு இயல்பாகும்; ஆகவே, சினத்தைத் துறந்தார்க்கும் சினத்தைத் துறந்தாரே துணை என்னும் தண்டபாணி தேசிகர் உரை இயல்பில்லை' என இரா சாரங்கபாணி மறுப்பார். இறந்தார் அனையர் என்பதற்குச் செத்தாரனையர் என்றும் துறந்தார் துணை என்றதற்குத் துறவி அளவினர் என்றும் கொள்வதே சிறப்பாகும்.
துறந்தார் என்பது மணக்குடவர் சிறப்புரையில் சொல்லப்பட்டுள்ளதுபோல் பெரியர் அல்லது உயர்ந்தவர் என்ற பொருளில் ஆளப்பட்டது எனக் கொண்டால், ஒருவன் எவ்வளவு வெகுளாமல் இருக்கின்றானோ அந்த அளவு உயர்ந்தவன் ஆகிறான் என்பது இக்குறளின் கருத்தாகிறது.

'துறந்தார் துணை' என்பதற்கு துறவியர் (பெரியர்) அளவினர் என்பது பொருள்.

சினத்தில் மிக்கவர் இறந்தவர்க்கு ஒப்பாவர்; சினத்தை ஒழித்தவர் துறவியர் அளவினர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வெகுளாமை ஒருவரை உயர்ந்தவராக்கும்.

பொழிப்பு

சினம் மிக்கவர் செத்தவர்க்கு ஒப்பாவர்; சினத்தை விட்டவர் துறவியர் அளவினர்.