இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0309



உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்

(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:309)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

மணக்குடவர் உரை: தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்,

பரிமேலழகர் உரை: உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும்.
('உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் சினத்தைத் தன்னுடைய நெஞ்சில் ஒருகாலும் நினையாதவனாயின், அவன் நினைத்த எல்லாம் ஒருங்கே கைகூடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின்.

பதவுரை:
உள்ளியது-நினைத்தது; எல்லாம்-அனைத்தும்; உடன்-ஒருங்கே; எய்தும்-கைகூடும்; உள்ளத்தால்-நெஞ்சத்தால்; உள்ளான்-நினைக்கமாட்டான்; வெகுளி-சினம்; எனின்-என்றால்.


உள்ளியது எல்லாம் உடன்எய்தும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('உள்ளியவெல்லாம்' என்பது பாடம்): தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்;
பரிப்பெருமாள் ('உள்ளியவெல்லாம்' என்பது பாடம்): தானினைந்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்;
பரிதி: நினைத்த காரியம் எல்லாம் கைகூடும்;
காலிங்கர்: மற்று அவன் கருதிய எல்லாம் ஒக்க எய்துவன்;
பரிமேலழகர்: தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும்.

'தான் நினைத்தனவெல்லாம் ஒருங்கே கூடப்பெறுவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். எல்லாம் என்னும் பன்மைக்கு உள்ளியது என்னும் ஒருமை ஏலாமை யாதலால் ‘உள்ளிய வெல்லாம்’ என மணக்குடவர்/பரிப்பெருமாள் கொண்ட பாடம் ஏற்புடையது.

இன்றைய ஆசிரியர்கள் 'நினைத்த எல்லாம் உடனே கிடைக்கும்', 'தான் வேண்டும் என்று நினைத்தது முழுவதும் ஒருங்கே பெறுவான்', 'விரும்பினதையெல்லாம் உடனே அடைவான்', 'அவன் தான் நினைத்த செல்வங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நினைத்த எல்லாம் உடனே அடைவான் என்பது இப்பகுதியின் பொருள்.

உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில்,
பரிப்பெருமாள்: தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, நினைத்தன பெறுமென்றது.
பரிதி: மனத்திலும் கோபம் விடுவானாகில் என்றவாறு.
காலிங்கர்: இவ்வெகுளியைத் தனது நெஞ்சத்தானும் கருதாது எஞ்ஞான்றும் ஒடுங்கிய உள்ளத்தானாமாயின்.
காலிங்கர் குறிப்புரை: எனவே ஈண்டுத் தன் துணையாகக் கீழ்ச்சொல்லிய அருள் முதலியவற்றாலும் குறைபாடு இன்றி அளவில்லாத இன்பம் எய்துவன என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.

'தன் மனத்தால் வெகுளியை நினையானாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனத்தாலும் வெகுளியை மறந்துவிடின்', 'மனத்தால் ஒருவன் சீற்றம் கொள்ளாவிட்டால்', 'மனதில் கோபத்துக்கு இடங்கொடுக்காதவன்', 'ஒருவன் தன் மனத்தால் வெகுளியை நினையாமல் இருப்பானானால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உள்ளத்தால் வெகுளியை நினையாமல் இருப்பானானால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளத்தால் வெகுளியை நினையாமல் இருப்பானானால் உள்ளியது எல்லாம் உடனே அடைவான் என்பது பாடலின் பொருள்.
'உள்ளியது' எப்படி எய்த இயலும்?

உள்ளத்தாலும் சினத்தை எண்ணாதவன் நினைத்தது கைகூடும்.

சினத்தைத் தன்னுடைய உள்ளத்தில் நினையாதவனாயிருந்தால் அவன் உள்ளத்தில் எண்ணிய எல்லாம் உடனே அவனை வந்து அடையும்.
துன்பங்கள் பலவற்றுக்கு அடிப்படைக் காரணம் சினம் என்பதால் வள்ளுவர் 'சினம் காக்க', 'மறத்தல் வெகுளியை யார்மாட்டும்' என்றவாறு அறிவுறுத்துவார். இங்கு வெகுளவேண்டும் என்பதை மனத்தாலும் நினைக்கக் கூடாது எனச் சொல்கிறார். அவ்விதம் நினைக்காதவன் நினைத்ததெல்லாம் உடனேயே கிடைக்கப்பெறுவான் என ஊக்கப்படுத்தவும் செய்கிறார். சினத்தை அவ்வளவு எளிதில் எல்லாராலும் நீக்கிவிடமுடியாது. சினத்தை ஒழிக்கும் மனக்கட்டுப்பாட்டிற்கு உறுதியான ஆற்றல் தேவை. அந்த மனஆற்றலைப் பெற்றுவிட்டால் அதை ஆக்கவழிகளில் ஈடுபடுத்த முடியும். அப்பொழுது தான்விரும்பும் நலன்களை விரைவாக எய்த இயலும்.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் (பொச்சாவாமை 540 பொருள்: எண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே, அடைய நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின்) என எண்ணியதை எண்ணியவாறே பெறமுடியும் என்று வேறு ஒரு சூழலைக் காட்டிக் குறள் கூறும்.

உள்ளான் என்ற சொல்லே மனத்தால் உள்ளான் என்பதைத் தெரிவிக்கும்போது 'உள்ளத்தால் உள்ளான்' என்பதில் 'உள்ளத்தால்' என வேண்டாது கூறப்பட்டது. இதற்குப் பரிமேலழகர் அதனான் அருளுடையுள்ளமென்பது முடிந்தது' என விளக்கம் தருவார். இதை ஒன்றை ஒருவன் உள்ளானாதல் அதற்கு மாறாகிய பிறிதொன்றை உள்ளுதலா லன்றி ஆகாது. ஆகவே, வெகுளி உள்ளானாதல் அதற்கு மாறான அருள் முதலியாற்றை இடைவிடாது உள்ளுதலானாம் என்க என விளக்குவர்.

'உள்ளியது' எப்படி எய்த இயலும்?

மனத்தாற்கூடச் சினத்தை நினைக்காத அமைதியாளன் நினைத்ததை உடனே பெறுவான் என்பது இக்குறள் தரும் செய்தி. வெகுளாமல் இருப்பது நினைத்ததை எப்படிப் பெற்றுத்தரும்?
மனம் கட்டுப்பாடின்றி அலையும்போது கெட்ட நெறிகளில் சென்று தமக்கும் பிற உயிர்களுக்கும் கேட்டினை விளைவிக்கும். மன உளைச்சல் பிறர் மீது சினம் கொள்ளச் செய்கிறது. உள்ளத்தில் சினம் இருந்தால் உறவுகளில் பாதிப்பு உண்டாகும்; அவன் தனித்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். மேலும் சினமிருக்கும் உள்ளத்தில் புழுக்கமும் உறுத்தலும் குடிகொண்டிருப்பதால், முயற்சிகளின் முனைப்பும் மழுங்கும். அதனால் நினைத்ததை அடைதல் அரிதாகும். மனத்தில் சினத்துக்கு இடம்கொடுக்காமல் காத்துக்கொண்டால், அமைதியாகச் சிந்தித்து செயல்படலாம். வெறுப்பில்லா, கலங்கமற்ற உள்ளமாக ஆகிவிடுவதால் ஒருவனது நோக்கங்களும் சிக்கலில்லாததாகவே இருக்கும். இதனால் விருப்பங்கள் நிறைவேறுவது எளிதாகிறது. இதனையே உடனே பெறமுடியும் என்கிறது குறள்.

உள்ளத்தால் வெகுளியை நினையாமல் இருப்பானானால் நினைத்த எல்லாம் உடனே அடைவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வெகுளாமை வேண்டியதைத் தரவல்லது.

பொழிப்பு

உள்ளத்தால் ஒருவன் சினம் கொள்ளாவிட்டால் அவன் நினைத்த எல்லாம் உடனே பெறுவான்.