இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0306



சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்

(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:306)

பொழிப்பு (மு வரதராசன்): சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

மணக்குடவர் உரை: சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்.
சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.

பரிமேலழகர் உரை: சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் - தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும்.
('சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்: 'தான்சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே , இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை .உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம்' என்னும் ஏமப்புணை என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: சினம் என்னும் நெருப்பு, தன்னையேயன்றித் தனக்குத் துணையாய் உள்ளாரையும் அழிக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும் .

பதவுரை:
சினம்-வெகுளி; என்னும்-என்கின்ற; சேர்ந்தாரை-அடைந்தாரை; கொல்லி-கொல்லுதலையுடையது; இனம்-குழு; என்னும்-என்கின்ற; ஏம-காப்பு; புணையை-தெப்பத்தை; சுடும்-சுடும்.


சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு;
மணக்குடவர் குறிப்புரை: சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.
பரிப்பெருமாள்: சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு;
பரிப்பெருமாள் குறிப்புரை: சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.
பரிதி: தன்னைச் சேர்ந்தபேரை அகலப்பண்ணுகின்ற கோபம் என்னும் நெருப்பு;
காலிங்கர்: உலகத்துச் சான்றோரால் கொடியவற்றுள் மிகவுங் கொடியது இது என்று (எடுத்துச்) சொல்லப்பட்ட அடைந்தாரைக் கொல்லியாகிய கொடுந் தீயானது;
பரிமேலழகர்: சினம் என்னும் நெருப்பு;
பரிமேலழகர் குறிப்புரை: 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்: 'தான்சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே, இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது.

'சினம் என்னும் நெருப்பு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சினத்தீ சினங்கொண்டானையும் கொல்லும்', 'சினமென்னும் கொடும்தீ', 'சேர்ந்தவர்களைக் கொன்றுவிடக்கூடிய கோபம்', 'தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லுஞ் சினமென்னும் நெருப்பானது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அடைந்தாரைக் கொல்லும் சினமென்னும் நெருப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்.
பரிப்பெருமாள்: துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்.
பரிதி: தனக்கு உறவானாரைக் கொல்லும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இத்துறவோர்க்குத் துணையாகிய அருளும் பொறையும் ஆசாரமும் முதலிய சேமமாகிய தெப்பத்தைச் சுட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும். [இடமானவரை- தான் பற்றுதற்கு இடமாக இருப்பவரை]
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை .உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம்' என்னும் ஏமப்புணை என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.

'துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'உறவானாரைக் கொல்லும்' என்றார். காலிங்கர் 'துறவோர்க்குரியதாகக் கொண்டு அவர்க்கு துணையாக நிற்கும் அருளும் பொறையும் ஆசாரமும் முதலியவற்ரிச் சுட்டுவிடும்' எனப் பொருள் கூறுவார். பரிமேலழகர் 'இனமாகிய ஏமப்புணையையும் சுடும்' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இனமாகிய துணையையும் எரிக்கும்', 'தன்னுடையவனேயன்றி அவனுக்குத் துணையாகும் நல்லோராகிய இன்பத் தெப்பத்தையும் சுட்டொழிக்கும்', ',ஒருவனுக்கு அபாய காலத்தில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய துணைவர்களையும் கடிந்து புண்படுத்தி விலக்கிவிடும்', 'சினங் கொண்டவர்க்குச் சுற்றத்தாராய் நின்று அவரைத் துன்பக்கடலினின்று பாதுகாக்கும் தெப்பம் போன்றவரையும் அவரிடமிருந்து விலக்கிவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காப்புத் தெப்பமாக இருக்கும் இனமாகிய துணையையும் அவரிடமிருந்து விலக்கிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அடைந்தாரைக் கொல்லும் சினமென்னும் நெருப்பு, காப்புத் தெப்பமாக இருக்கும் இனமாகிய துணையையும் அவரிடமிருந்து விலக்கிவிடும் என்பது பாடலின் பொருள்.
'இனம்என்னும் ஏமப் புணை' என்ற தொடர் குறிப்பது என்ன?

வெகுள்வான் தன் சினத்தால் தான் அழிவுக்குள்ளாவதோடு தன் சுற்றத்தாரையும் தன்னிடமிருந்து தள்ளி இருக்க வைப்பான்.

தான் சென்று அடைந்தவரை அழிக்கும் குணமுடைய சினமாகிய நெருப்பு, அவருக்குக் காப்புத் தெப்பமாக உள்ளோரையும் அகலப்பண்ணிவிடும்.
நெருப்பு எந்த இடத்தைச் சென்று சேர்கிறதோ அந்த இடத்தையே அழிக்கும் இயல்புடையது. அதுபோல சினம் என்பது யாரிடம் எழுகிறதோ அவர் அழிவுக்குள்ளாவார். அது மட்டும் அல்லாமல், சினம் கொண்டவனுக்கு காப்பாக அமையும் சுற்றத்தையும் தன் வெம்மையான உணர்வுகளால் சுட்டு அவர்களையும் அவனிடமிருந்து விலக வைத்துவிடும். 'சினம் என்பது சேர்ந்தவரை அழித்து, இனத்தாரைப் பகைத்து, இன்ப வாழ்வைக் கெடுக்கும் ஒரு கொடிய நெருப்பு. ஆதலின் அதனைக் கொள்ளாது தன்னைத்தான் காத்துக்கொள்ள வேண்டும்.

சினத்திற்குச் சேர்ந்தாரைக் கொல்லி என்று ஒரு பெயரும் இடுகிறார் வள்ளுவர், அப்பெயரே அதன் குணத்தை நன்கு விளக்கும். அது 'தான்சேர்ந்த இடத்தைக் கொல்லும் செயல் கொண்டது' என்பது பொருள். சேர்ந்தாரைக் கொல்லி என்பது காரணப் பெயராக நெருப்பைக் குறிக்கும்.
சேர்ந்தார் என்பதற்கு அடுத்தார், சேர்ந்தபேர், அடைந்தார், இடமானவர், சேர்ந்தவர், தன்னைக் கொண்டவர், (சினங்)கொண்டான் என்றவாறு பொருள் கூறினர். இவற்றுள் அடைந்தார் என்பது பொருத்தம்.

'இனம்என்னும் ஏமப் புணை' என்ற தொடர் குறிப்பது என்ன?

ஒருவனது வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள மனிதப்பண்புகளில் சினமும் ஒன்று. பொறுத்தார் பூமியாள்வார்; பொங்கினார் காடாள்வார் என்பது பழமொழி. வெகுள்வானிடமிருந்து சுற்றமும் நீங்குவதால் அவன் தனித்து விடப்பட்டு பாதுகாப்பின்றி இருப்பான். சினம் என்னும் நெருப்புக்குணம் கொண்டவன் சினத்தாலேயே தன் வாழ்க்கையில் பெரிதும் இடர்ப்படுவான். அவனை விட்டு அவனது இனத்தாரும் விலகிப் போய்விடுவர் என்பதை இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் என்ற பகுதி அறிவிக்கின்றது.

மாந்தர் இனத்தாரோடு வாழ்வோராயிருக்கின்றனர். இனம் என்பது உற்றார் உறவினர், நண்பர் இவர்களைக் குறிப்பது. அவர்கள் ஏமப்புணை என்று இங்கு உருவகப்படுத்திக் காட்டப்படுகிறார்கள். ஏமப்புணை என்பது என்ன? புணை என்பது நீர்ப்பரப்பைக் கடக்க உதவும் ஒரு பொருள் என்ற பொருளில் குறளில் பல இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இச்சொல் சிறுபடகு அல்லது தெப்பத்தை அல்லது நீந்துவதற்கு உதவியாகப் பயன்படும் நீரில் மிதக்கும் ஒரு பொருளைக் குறிக்கும் எனக் கூறுவர். கப்பல் மூழ்கும்போது பயணியர் ஏறித்தப்பும் ஏமப் படகு (Life boat) எனவும் கொள்ளலாம். நாக, அகில், சந்தனம் ஆகிய மரங்களின் துண்டங்கள் ஆற்றில் அடித்து வரப்பட்டுத் துறையில் நீராடும் மகளிர் தோளால் அணைத்து நீந்துவதற்குரிய புணையாயின என்பதும் மகளிர் புணையைப் பிடித்தும் அதை விட்டும் நீந்துவர் என்பதுவும் சங்கப்பாடல்களில் கூறப்பட்டுள்ளன. நீரில் நீந்தி மகிழ்வதும் அதற்கு உதவியாக மிதக்கும் மரக்கட்டைகளைப் புணையாக கொள்வதும் அக்கால மக்கட்கு முக்கியமாக மகளிர்க்கு ஒரு பொழுதுபோக்கு எனக் கொள்ளலாம் என்பார் காமாட்சி சீனிவாசன். ஏமப்புணை என்பது ஒரு பாதுகாப்பு மிதவை. இனமாக இருந்து நல்லுரை பகர்வோர் ஏமப்புணைக்கு ஒப்பிடப்பட்டது.

தன் சினம் மிகுந்த செயல்களால், சொற்களால் சுட்டெரிப்பதுபோல் நடந்துகொள்ளும் ஒருவனைச் சூழ்ந்துள்ளவர்கள் - கட்டுக்காவலாகவும், உதவியாகவும், கரையேற்றக்கூடிய தெப்பமாகவும் இருப்பவர்கள் - அவனை விட்டு விலகி சென்றுவிடுவர். எந்தநேரமும் சினந்து சீறிப்பாய்வோர் அருகில் யார் இருக்க விரும்புவர்? சினமாகிய தீயின் வெப்பம் அவனுக்கு நன்மை செய்யக்கூடியவரை நெருங்கவிடாமல் தடுத்துவிடுவதால் அவர்கள் அவனைவிட்டு அகன்று விடுவர். இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும் என்ற பகுதி இதைத் தெரிவிக்கின்றது.

அடைந்தாரைக் கொல்லும் சினமென்னும் நெருப்பு, காப்புத் தெப்பமாக இருக்கும் இனமாகிய துணையையும் அவரிடமிருந்து விலக்கிவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சுற்றத்தையும் நீங்கிச் செல்லாமல் நிறுத்த வெகுளாமை வேண்டும்.

பொழிப்பு

சினம் என்ற நெருப்பு கொண்டானை ஒழிக்கல்லது; அவனுக்குத் துணையாயினாரையும் அவனிடமிருந்து விலக்கிவிடும்.