இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0295



மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:295)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால், அவன் தவத்தோடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன்.

மணக்குடவர் உரை: மனத்தோடே கூட மெய் சொல்லுவானாயின், தவத்தோடே கூடத் தானஞ் செய்வாரினும் தலையாவான்.
இஃது எல்லா நன்மையும் பயக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன்.
(மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: தவமும் தானமும் செய்வதினும் மேலானது உள்ளத்தோடு உண்மை சொல்வது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை.

பதவுரை:
மனத்தொடு-உள்ளத்தொடு; வாய்மை-மெய்ம்மை; மொழியின்-சொன்னால்; தவத்தொடு-துறவுடன்; தானம்-கொடை; செய்வாரின்-செய்வாரைக் காட்டிலும்; தலை-சிறப்பு.


மனத்தொடு வாய்மை மொழியின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தோடே கூட மெய் சொல்லுவானாயின்;
பரிப்பெருமாள்: மனத்தோடே கூட மெய் சொல்லுவானாயின்;
பரிதி: மனமும் வாக்கும் கூடிச் சத்தியமே சொல்வானாகில்;
காலிங்கர்: மற்று இங்ஙனம் மனத்தோடு கூடிய வாய்மையானது;
பரிமேலழகர்: ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல்.

'தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் மனம் பொருந்த உண்மை கூறினால்', 'மனச்சாட்சிக்கு மெய்யனாகி, வாயாலும் மெய்யே பேசக்கூடுமானால்', 'ஒருவன் தன் மனத்திற்கு மாறுபடாமல் உண்மையைச் சொல்லுவானாயின்', 'ஒருவன் தன் மனத்தோடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் உள்ளத்தோடு பொருந்த மெய் சொல்வானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

தவத்தொடு தானம்செய் வாரின் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவத்தோடே கூடத் தானஞ் செய்வாரினும் தலையாவான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லா நன்மையும் பயக்கு மென்றது.
பரிப்பெருமாள்: தவத்தோடே கூடத் தானஞ் செய்வாரினும் தலையாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லா நன்மையும் பயக்கு மென்றது.
பரிதி ('தனத்தொடு' என்பது பாடம்): தனத்தாலே தசதானம் பண்னுவாரினும் பெரியன் என்றவாறு.
காலிங்கர்: சான்றோர் செய்யும் தவத்தினும் தானத்தினும் சாலத் தலைமைப்பாடு உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன்.
பரிமேலழகர் குறிப்புரை: புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.

'அவன் தவத்தோடே கூடத் தானஞ் செய்வாரினும் சிறப்புடையன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவன் தவத்தோடு தானம் செய்வாரினும் மேலானவன்', 'அப்படிப்பட்டவன் தவத்தையும் தானத்தையும் ஒருங்கே செய்யக்கூடியவர்களுக்கும் சிறந்தவனாவான்', 'அவன் தானமுந் தவமும் ஒருங்கு செய்வாரைப் பார்க்கிலுஞ் சிறப்புடையவனே', 'அவன் தவமும் தானமும் செய்வாரை விடச் சிறந்தவன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவன் தவமுடையார் தானம்செய்வார் இவர்களை விட மேலானவன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவன் தன்உள்ளத்தோடு பொருந்த மெய் சொல்வானாயின் அவன் தவத்தொடு தானம் செய்வாரின் மேலானவன் என்பது பாடலின் பொருள்.
'தவத்தொடு தானம் செய்வார்' குறிப்பது என்ன?

உள்ளத்தால் உண்மை பேசுபவன் உடலால் தவம், தானம் செய்பவரைவிட மேலானவன்.

தன் மனத்திற்குப் பொருந்த ஒருவன் மெய் பேசுவானேயானால் தவமுடையார் தானம்செய்வார் இவர்களை விட அவன் சிறப்புடையவன்.
மனத்துக்கண் மாசிலானாகி வாய்மையை மனமொப்பக் கடைப்பிடித்தல் மிகஉயர்ந்த அறம் என்கிறது இப்பாடல். இதை வலியுறுத்த, உளமார வாய்மை மொழிபவர் அல்லது மனச்சான்றுப்படி உண்மை பேசுபவர், புறமாகிய உடம்பால் தவமும் தானமும், செய்வோரைவிட மேலானவர் எனச் சொல்கிறது இது. தவமும் தானமும் வெளிச்செயல்கள். வாய்மையோ, ஒருவனது நெஞ்சில் இருந்து அவனை வழிநடத்தும் அகச்செயல். மனத்துக்குள்ளிருந்து உண்மைச்சொல் வெளிவருவதுதான் முக்கியம். மனத்தால் அமைந்து சொல்லும் மொழியில் பொய் இராது. உள்ளம் பொருந்தாமல் வெளிவரும் சொற்கள் பொய்யாகவே இருக்கும். ஆகவே மனத்தொடு வாய்மை மொழிபவன் தானம், தவம் செய்தவர்களைவிட மேலானவனாகிறான் என உயர்ந்தேத்திக் குறள் கூறுகிறது.

மனிதன் பிறப்பால் அறிவும், நினைவாற்றலும் கொண்டவன்; அவனுக்கு மொழிஆற்றலும் கூடுதலாக வாய்த்துள்ளது. இவற்றைத் திறம்படக் கையாளத் தெரிந்தவன் உயர்ந்தவனாகிறான். பொதுவாக ஒருவரது நெஞ்சு மெய்ம்மையே பேசும். அதனால் பெரிதும் நன்மையே அடைவர். வாய்மையால் தமக்குத் தீமை வருமெனக் கருதினாலோ, பொய்ம்மையால் நன்மை கிடைக்குமென்றாலோ, மனச்சான்றினை மீறிப் பொய் பேசுவர். வள்ளுவர் உள்ளத்தால் பொய்யாது- மனமொழி நேரடித் தொடர்பு கொண்டு- ஒழுக வேண்டும் என்று சொல்பவர். மனச்சான்றின்படி பேசுவதே வாய்மை எனப்படும், அகமாகிய மனம் மொழிகளால் வாய்மை மொழிபவர்களானால் அவர்கள் தவமும் தானமும் செய்பவர்களை விட, சிறந்தவர்களாகின்றனர்.

பரிதி 'மனத்தொடு' என்றதற்கு 'தனத்தொடு' எனப் பாடம் கொண்டு 'தனத்தாலே தசதானம் பண்ணுவாரிலும் பெரியவன்' எனத் தானம் செய்வார் பற்றி மட்டும் குறிக்கிறார். தசதானம் என்பது பத்துத் தானமாகும். தசதானம் என்பதற்கு உப்பு, எள்ளு, நெய், நெல், பசு, பூமி, பொன், ஆடை, வெல்லம், வெள்ளி கொடுத்தல் எனப் பொருளுரைப்பார் தண்டபாணி தேசிகர். எல்லாச் செயல்களின் வெற்றிக்கும் ஏதுவான பொருள், தானம் செய்வார்க்கு, இன்றியமையாது வேண்டும். ஆதலால் 'தனத்தொடு தானம் செய்வாரின் தலை' என்பதே நயமுடைய பாடம் என்பது மு சண்முகம் பிள்ளையின் கருத்தாகும்.
ஆனால் 'தனத்தொடு என்னும் பாடம் ‘மனத்தொடு’ என்பதற்கேற்ப எதுகை நயம் வாய்த்திருப்பினும் சிறந்ததாகத் தெரியவில்லை. ‘தனம்’ என்ற வடசொல் சங்க இலக்கியத்திலும் குறளிலும் ஆட்சியில்லை; தனமும் தானமும் எங்கும் சேர்த்துக் கூறப்படவில்லை. ஆகவே, ‘தவத்தொடு’ என்ற பிறர் கொண்ட பாடமே சிறப்புடையது' எனச் சொல்லி இரா சாரங்கபாணி பரிதியின் உரையை ஏற்பதில்லை.

'தவத்தொடு தானம்' குறிப்பது என்ன?

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான் என்று தவத்தையும் தானத்தையும் சேர்த்துக் கூறுகிறது இக்குறள்.
தவம் செய்வாரும் தானம் செய்வாரும் மிகவும் போற்றப்படுபவர்கள். தவம் பெரியது. .தவம் செய்பவர் மனம் பொறிகளின் வழியே செல்லாது நிற்கும் பொருட்டு, துறவறத்திற்குச் சிறப்பாக உரிய நோன்புகள் ஏற்பவர். தானம் செய்பவர் அறவழியால் ஈட்டிய பொருளை இல்லறத்திற்குச் சிறப்பாக உரிய வறியார்க்கு ஈயும் பண்புடையர். இவை இரண்டையும் செய்பவர்களைவிடத் தலைசிறந்தவர் அகமாகிய மனமும் மொழியும் ஒத்து வாய்மை மொழிபவர் என்கிறது இப்பாடல். உளமார மெய்யையே பேசுபவன் இல்லறத்தார் யாவரினும் துறவறத்தார் யாவரினும் சிறந்தவன் என்பது கருத்து.
தவம் செய்வதைவிடவும் வாய்மையோடு வாழ்வது எளிமையில்லை என்பதும் தானம் செய்வதைவிடவும் மெய்ம்மை வாழ்வு இன்பம் பயப்பது என்பதும் பெறப்படும்.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் (வான் சிறப்பு 19 பொருள்: வானம் மழையைக் கொடுக்காவிட்டால் தானம் கொடுத்தலும் தவம் செய்தலும் இவ்வகன்ற நிலவுலகின்கண் நிலைபெறா) என்று தானம் தவம் இரண்டையும் சேர்த்து மற்றொரு குறள் கூறிற்று.
மேலும் துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோக்கிற் பவர்(பொறையுடைமை 159 பொருள்: நெறிகடந்தவர் வாயில் பிறக்கும் வெஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ளுகிறவர்கள் துறந்தவர்களைவிடத் தூய்மையுடையார்) என இன்னாச்சொல் பொறுத்தலையும்
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை (கொல்லாமை 325 பொருள்: வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்) எனக் கொல்லாமையையும்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை (உழவு 1036 பொருள்: உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை) என உழவுத் தொழிலையும்
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து (இல்வாழ்க்கை 48 பொருள்: பிறரை நெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை, நோற்பார்க்கு உண்டாவதைவிட மிகையான வலி கொண்டது) என இல்வாழ்வையும்
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் (ஈகை 225 பொருள்: ஆற்றலுடையவர் வலிமையில் பெரிது பசி பொறுத்தல்; அவர் ஆற்றலும் பிறர் பசியைப் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான்) என ஈகையையும் துறவு/தவம் இவற்றினும் மேலானவை என்று பிற இடங்களில் குறள் கூறும்.

வள்ளுவர் துறவறவியலில் அகத்துறவு அல்லது இல்லறத் தவம் அதாவது இல்லிலிருந்தே துறவு மேற்கொள்வது பற்றியே சொல்கிறார் என்பதற்கு இக்குறள் சான்று என்பர்.

ஒருவன் தன்உள்ளத்தோடு பொருந்த மெய் சொல்வானாயின் அவன் தவமுடையார் தானம்செய்வார் இவர்களை விட மேலானவன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாய்மை என்ற அறத்தின் உயர் நிலையைப் புகழ்ந்தேத்தும் பாடல்.

பொழிப்பு

உள்ளத்தோடு மெய் பேசுவானாயின் அவன் தவமும் தானமும் செய்வாரினும் மேலானவன்.