இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0294



உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:294)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

மணக்குடவர் உரை: தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்.
இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

பரிமேலழகர் உரை: உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம்.
('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: மனமறியப் பொய் சொல்லாதவன் உலகத்தார் மனத்தில் எல்லாம் இருப்பான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.

பதவுரை:
உள்ளத்தால்-மனத்தினால்; பொய்யாது-பொய்ம்மை இல்லாது; ஒழுகின்-நடந்து கொண்டால்; உலகத்தார்-உலகோர்; உள்ளத்துள்-நெஞ்சில்; எல்லாம்-முழுவதும்; உளன்-இருக்கின்றான்.


உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின்;
பரிப்பெருமாள்: தன்னெஞ்சினாற் பொய்மை நினையாது ஒழுகுவனாயின்;
பரிதி: மனம் பொருந்த மெய் சொல்லுவானாகில்;
காலிங்கர்: ஒருவன் தனது வாக்கினால் சொல்லுஞ் சொல்லானது மனத்திலும் பிழையாமையே வாய்மைக்கு இலட்சணமாகலால், மற்றங்ஙனம் உரைப்பதனை உள்ளத்தால் பிழையாது உரைத்து ஒழுகும் எனின்; .
பரிமேலழகர்: ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல்.

'தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் மனத்தால் பொய் கூறாமல் நடப்பானாயின்', 'மனச்சாட்சிக்குப் பொய்யனாகாமல் நடந்து கொள்ளுகிற ஒருவன்', 'ஒருவன் தன் உள்ளத்திற் கேற்பப் பொய் சொல்லாது நடப்பானாயின்', 'ஒருவன் தன் மனச்சான்றுக்கு ஏற்பப் பொய்யின்றி வாழ்வானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனமறியப் பொய் சொல்லாமல் வாழ்வானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.
பரிப்பெருமாள்: உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொய்யை நினையாதாரை எல்லாரும் தேறுவாரென்றது.
பரிதி: சர்வேசுரனுக்கு நிகராகையால் உலகத்தார் ஆத்துமாவில் இருப்பன் என்றவாறு.
காலிங்கர்: மற்றிவன் உலகத்துச் சான்றோராகிய உயர்ந்தோர் உள்ளத்துளெல்லாம் உளன்; எனவே, இவரது அருட் குறிப்பு எஞ்ஞான்றும் உடையது என்றவாறு.
பரிமேலழகர்: அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம்.
பரிமேலழகர் குறிப்புரை: அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.

'உலகத்தார்/உயர்ந்தோர் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவன் உலகிலுள்ள உயர்ந்தோர் மனத்தில் எல்லாம் வாழ்வான்', 'உலகிலுள்ள மற்றெல்லாராலும் மதிக்கப்படுவான்', 'உயர்ந்தோர் எல்லாருடைய உள்ளத்திலும் அவன் இருப்பன். (அவனை உயர்ந்தோர் யாவரும் தம் மனத்தில் நினைத்துப் புகழ்வ ரென்பதாம்.)', 'அவன் உலக மக்களின் உள்ளங்களில் எல்லாம் நிலை பெற்றவன் ஆவான். (எல்லோரும் அவனைக் கொண்டாடுவர்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவன் உலகோர் மனத்தில் எல்லாம் இருப்பான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனமறியப் பொய் சொல்லாமல் வாழ்வானாயின் அவன் உலகோர் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பது பாடலின் பொருள்.
'உள்ளத்துள் எல்லாம் உளன்' என்றதன் பொருள் என்ன?

பொய்சொல்ல நினையாதாரை உலகம் மறவாமல் நினைத்துக் கொண்டிருக்கும்.

ஒருவன் தன் மனச்சான்றுக்கு மாறாகப் பொய் சொல்லாது நடப்பானேயானால் அவன் உலகோர் உள்ளங்களிலெல்லாம் உறைவான்.
பொய்மைச் சிந்தனை அறவே கூடாது என்று சொல்லும் குறள். ஒருவன் தன் மனமறிய பொய் இல்லாமல் ஒழுகினால், உலகோர் அனைவரிடமும் நற்பெயர் பெறுவான். 'உள்ளத்தால்' என்றது வாயளவில் மட்டும் அல்லாமல் உள்ளத்திலே பொய்யான எண்ணங்கள் இல்லாதிருத்தலையும் உள்ளத்தை மறைக்காமல் ஒழுகும் நடத்தையையும் குறிக்கும்.
உள்ளத்தில் தூய்மையாய் பொய் எண்ணங்கள் கருதாத ஒழுக்கமே சொல் தூய்மைக்கு அதாவது வாய்மை ஒழுக்கத்துக்கு வழிவகுக்கும் என்று வள்ளுவம் வரையறுத்துக் கூறுகிறது.
அவ்விதம் பொய்யுரைக்கும் எண்ணத்தை விலக்கி ஒழுகுபவன், உலகோரின் மனங்களில் நிலைத்து, சிறப்பான இடத்தில் இருப்பான்.

'உள்ளத்துள் எல்லாம் உளன்' என்றதன் பொருள் என்ன?

'உள்ளத்துள் எல்லாம் உளன்' என்றதற்கு நெஞ்சினுளெல்லாம் உளனாவான், ஆத்துமாவில் இருப்பன், உள்ளத்துளெல்லாம் உளன், உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம், உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான், உள்ளத்திலும் இடம்பெறும் சிறப்பைப் பெறுவான், உள்ளத்தில் எல்லாம் உளன், மனத்தில் எல்லாம் இருப்பான், மனத்தில் எல்லாம் வாழ்வான், மற்றெல்லாராலும் மதிக்கப்படுவான், உள்ளங்களி லெல்லாம் உறைவான், உள்ளத்திலும் அவன் இருப்பன், உள்ளங்களில் எல்லாம் நிலை பெற்றவன் ஆவான், உள்ளங்களிலெல்லாம் இருப்பவனாவான், இனியன் என்று உண்மையாகப் போற்றப்படுவான் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இக்குறள் உள்ளத்தால் பொய்யாது ஒழுகுபவன் உலகத்தார் மனத்திலெல்லாம் இருப்பான் என்கிறது. உலகமக்களின் உள்ளங்களிலெல்லாம் இருப்பவன் யார்? என்று கேட்டால் இறைவன் என்று எவரும் உடன் விடையிறுப்பர். இதனால்தான் பரிதி இக்குறட்குப் பொருள் கூறும்போது 'மனம் பொருந்த மெய் சொல்லுவானாகில் சர்வேசுரனுக்கு நிகராகையால்' என்று இறைவனுக்கு நேரென ஏற்றம்படக் கூறினார் போலும்.

பொய்ம்மைகள் மனிதனால் உருவாக்கப்படுபவை. உலகம் இயங்குவதற்கு மாந்தர் ஒருவருடன் ஒருவர் பேசவேண்டும். அழுக்கு மனத்தோடு ஒருவன் வெளிப்படுத்தும் சொல்லில் உண்மை இருப்பதில்லை. .உள்ளம் தூய்மை இல்லாதவன் பொய்மொழி பேசுவான்.
தன் உள்ளத்தோடு பொய்யாமல் ஒருவன் ஒழுகும்போதுதான் அவன் உண்மையுள்ளவனாகிறான். உலகில் பெரும்பாலோர் உண்மையையல்லாமல் வெறும் பொய் மொழிகளை விரும்புவதில்லை. மெய்ம்மை எல்லாவற்றையும் ஊடுருவி, தடுப்புகளை நீக்கி, உள்ளத்தின் ஆழத்தைத் தொடவல்லதாதலால் அது கேட்போர்க்கெல்லாம் விருப்பூட்டுகிறது. அப்படி வாய்மை ஒழுக்கத்தில் நிற்பவன் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் திகழ்ந்து விளங்கத்தக்கவன். எனவே உள்ளத்தால் பொய்யாது ஒழுகுபவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்; அவன் மக்களால் கொண்டாடப்படுவன்.

மனமறியப் பொய் சொல்லாமல் வாழ்வானாயின் அவன் உலகோர் உள்ளத்துள் எல்லாம் இருப்பான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாய்மை அறம் பேணுபவனை உலகம் நினைவிற் கொள்ளும்.

பொழிப்பு

மனமறியப் பொய் சொல்லாமல் நடப்பானாயின் உலகோர் உள்ளத்தில் எல்லாம் உறைவான்.