இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0293



தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:293)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

மணக்குடவர் உரை: தன் நெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக; பொய்ப்பனாயின், தன் நெஞ்சுதானே தன்னை ஒறுக்கும் என்றவாறு.
சுடுதலாவது அதனால் பிறர்க்கு உளதாகும் தீமையைக் கண்டு 'என் செய்தோம் யாம்' என்று வருந்துவித்தல்.

பரிமேலழகர் உரை: தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.
(நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தன் நெஞ்சு உண்மை என்று அறிவதைப் பிறர் அறிந்திலர் என்று பொய்த்துக் கூறாதே; அங்ஙனம் பொய்த்துக் கூறிய பின் தன் நெஞ்சே தன்னை வருத்தும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

பதவுரை:
தன்-தனது; நெஞ்சு-மனம்; அறிவது-தெரிவது; பொய்யற்க-பொய்யாது சொல்லுக; பொய்த்தபின்-பொய் கூறிய பிறகு; தன்-தன்; நெஞ்சே-உள்ளமே (மனச்சான்றே; தன்னை-தன்னை; சுடும்-வாட்டும்.


தன்னெஞ்சு அறிவது பொய்யற்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன் நெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக;
பரிப்பெருமாள்: தன் நெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக;
பரிதி: மனமறிந்த பொய்யைச் சொல்லவேண்டாம்;
காலிங்கர்: வாய்மையானது இத்துணைப் பெருமையாதலான் தான் சொல்லுவது ஒன்றினைப் பிறர் அறியாது வாய்மையாகக் கருதினரேனும் மற்றிது பெரிதும் குற்றமாதலால் தனது நெஞ்சு அறிவதாக எஞ்ஞான்றும் பொய்யற்க;
பரிமேலழகர்: ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,

'தன் நெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உன்நெஞ்சறியப் பொய் கூறாதே', 'தன் மனம் அறிந்த ஒன்றைப் பிறர் அறியவில்லை என்றெண்ணிப் பொய் சொல்லக்கூடாது', 'ஒருவன் தன்னுடைய மனச்சாட்சி சத்தியமென்று அறிந்ததைப் பொய்யாக்கும்படி எதையும் சொல்லிவிடக் கூடாது', 'ஒருவன் தனது மனதிற்பட்டதை மறைத்துப் பொய் சொல்லுதல் கூடாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் மனம் அறிந்ததைப் பொய்யாது சொல்லுக என்பது இப்பகுதியின் பொருள்.

பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொய்ப்பனாயின், தன் நெஞ்சுதானே தன்னை ஒறுக்கும் என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: சுடுதலாவது அதனால் பிறர்க்கு உளதாகும் தீமையைக் கண்டு 'என் செய்தோம் யாம்' என்று வருந்துவித்தல்.
பரிப்பெருமாள்: பொய்ப்பனாயின், தன் நெஞ்சுதானே தன்னை ஒறுக்கும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: சுடுதலாவது அதனால் பிறர்க்கு உளதாகும் தீமையைக் கண்டு 'என் செய்தோம் யாம்' என்று வருந்துவித்தல். இது பொய்யாமை வேண்டு மென்றது.
பரிதி: சொன்னானாகில், ஆத்மா விதனப்படும்; அது எது எனில் 'வாக்கு என்கிற புலன் பொய் சொல்ல நாம் நரகத்துக்கு ஏதுவாகிறோம்' என்று, நின்ற புலன்கள் விதனப்படும்.
காலிங்கர்: என்னை எனில், அவ்வாறு பொய்த்தபின் உள்ளறிகருவியாகிய தன் நெஞ்சு தானே தன்னைச் சுடும் என்றவாறு.
பரிமேலழகர்: பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.

பொய்ப்பனாயின், தன் நெஞ்சுதானே தன்னை ஒறுக்கும்/ஆத்மா விதனப்படும்/நெஞ்சு தானே தன்னைச் சுடும்/தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூறின் உன் நெஞ்சைச் சுடாதா?', 'பொய் கூறின் அதனை அறிந்த மனச்சான்றே தன்னைத் தண்டிக்கும்', 'அப்படிச் சொன்னால் அவனுடைய மனச்சாட்சியே அவனை இடித்து வருத்தப்படுத்தும்', 'அங்ஙனம் பொய் சொன்னால், தன் மனமே தனக்குத் துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொய் கூறின் தன் மனச்சான்றே தன்னை ஒறுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன் மனம் அறிந்ததைப் பொய்யாது சொல்லுக; பொய் கூறின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பது பாடலின் பொருள்.
'தன்நெஞ்சே தன்னைச் சுடும்' என்ற பகுதி குறிப்பதென்ன?

பொய் சொல்லுகிறோம் என்று உணர்ந்தே ஒருவன் மெய் அல்லாததைக் கூறினால் அவன் மனச்சான்று உறுத்திக் கொண்டே இருக்கும்.

தன்மனம் அறிந்து பொய் சொல்லாதீர்; கூறின் தன்நெஞ்சே தன்னை வாட்டும்.
ஒருவன் ஒன்றை அறிகின்றான். அவனுக்கு மட்டும்தான் அது தெரியும். மற்றவர்கள் அது தெரியாது என்பதையும் அறிந்துகொண்டான். ஆனால் அவனுக்கு ஏதோ நன்மை கிடைக்கிறது என்பதால், அப்பொருளை அறிந்தவாறே கூறாமல் மறைத்தோ திரித்தோ, கூட்டியோ குறைத்தோ வெளியில் சொல்கிறான்; இல்லாததையும் புனைந்து சொல்கிறான். இவன் பொய் உரைக்கிறான். அவன் கருதிய நன்மை கிடைக்கிறதோ இல்லையோ, அவன் உண்மையை மறைத்ததால் குற்ற உணர்ச்சி உள்ளத்தே குடிகொண்டு இறுதிவரை அவனை வருத்திக் கொண்டே இருக்கும்.
வாய்மைக்குப் பிறப்பிடம் மனம்தான். மனத்தூய்மை அழியாதும் மாறாதும் இருக்க வேண்டும். பொய் சொன்ன பிறகு, ஊரும் உலகும் அறியாததனால் தப்பினாலும், தன் மனச்சான்றிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. அது உள்ளிருந்து தப்பாமல் 'நீ செய்தது அறமன்று' எனச் சொல்லி அவனை வாட்டிக்கொண்டே இருக்கும். எனவே பிறர்க்கு அஞ்சி வாய்மையைக் கடைப்பிடிப்பதைவிட, தன் உள்ளத்தின் உணர்வுக்குப் பொருந்தி வாய்மையைப் போற்றவேண்டும்.

'தன்நெஞ்சே தன்னைச் சுடும்' என்ற பகுதி குறிப்பதென்ன?

'தன்நெஞ்சே தன்னைச் சுடும்' என்றதற்குத் தன் நெஞ்சுதானே தன்னை ஒறுக்கும், ஆத்மா விதனப்படும், உள்ளறிகருவியாகிய தன் நெஞ்சு தானே தன்னைச் சுடும், அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும், அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும், அப்பொய்யை நன்கறிந்த தனது நெஞ்சே தன்னைச் சுட்டு வருத்தும், அவன்தன் நெஞ்சே உறுத்தும்; சுடும், உன் நெஞ்சைச் சுடாதா?, அதனை அறிந்த மனச்சான்றே தன்னைத் தண்டிக்கும், அவனுடைய மனச்சாட்சியே அவனை இடித்து வருத்தப்படுத்தும், அவன் நெஞ்சே அவனை வருத்தும், தன் மனமே தனக்குத் துன்பத்தைக் கொடுக்கும், தன் நெஞ்சே தன்னை வருத்தும், அவன் மனமே அவனை வருத்திக் கொண்டிருக்கும், தன் நெஞ்சமே நெருப்பாகி வருத்தம் தரும், அவன் மனமே அக்குற்றத்துக்குச் சான்றாய் நின்று அவனை வருத்தும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒருவன் தன் நெஞ்சு அறியாமல் எதனையும் செய்ய முடியாது. தீயது செய்யும் போது அவனை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து தடுப்பது மனச்சாட்சியே.எனவேதான் பொதுவாக 'இவருக்கு மனச்சான்றே இல்லையா? மனச்சான்று இல்லாமல் இத்தீய செயல்களையெல்லாம் செய்கிறாரே'? என்று நாம் சொல்கிறோம்.
இக்குறள் ஒருவன் பொய்சொல்ல எண்ணும்போது அந்தக் குற்ற உணர்வே அவனைப் பின்னர் வருத்திக்கொண்டே இருக்கும் என்பதால் தம் மனச்சான்றை எண்ணிக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறது. 'நெஞ்சு சுடும்' என்று ஒருவர்க்கு உள்ளே இருக்கும் அறவுணர்வை வள்ளுவர் சுட்டுகிறார். பொய் சொல்லத் துணியும் போதெல்லாம் நம் நெஞ்சு நம்மை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தால் ஒருவன் உண்மைக்கு மாறாகப்பேசத் துணியமாட்டான். அதையும் மீறி, மனசாட்சியைப் புறக்கணித்து ஒருவன் பொய் கூறினால், அவன் மனசாட்சியே அவனை ஒறுக்கும் என்கிறது இப்பாடல்.

நெஞ்சு போன்ற வேறு சான்று இல்லை என்பதைக் கலித்தொகை சொல்வதைப் பரிமேலழகர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்:
'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,'
(கலித்தொகை 125 பொருள்: அறியாதவர்கள் தம்மனம் இது செயலாகாது என்று மீளாதே வேறு விலக்குவாரும் இன்றி உலகத்திற் கண்டவர்களும் இல்லை என்று கருதித் தாம் செய்யும் தீவினைகளுள் தாம் நெஞ்சறியவே செய்த கொடிய தீவினைகளைப் பின்பு அறியாமல் மறைத்தார்களாயினும், அவை மறைய மாட்டாவாம். நெஞ்சைக் காட்டிலும் அணுகிய சாட்சி வேறில்லையாகையால்.)

தன் மனம் அறிந்ததைப் பொய்யாது சொல்லுக; பொய் கூறின் தன் மனச்சான்றே தன்னை ஒறுக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாய்மை தவறினால் மனச்சான்று வாளா இருக்காது.

பொழிப்பு

தன் மனம் அறியப் பொய் கூறக்கூடாது; பொய் சொன்னால் தன் மனச்சான்றே தன்னைச் சுட்டுக் கொண்டிருக்கும்.