இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0292



பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:292)

பொழிப்பு (மு வரதராசன்): குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானால் பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம்.



மணக்குடவர் உரை: பொய்யும் மெய்யோ டொக்கும், குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.

பரிமேலழகர் உரை: புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம்.
(குற்றம் தீர்ந்த நன்மை : அறம். அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: குற்றமற்ற நன்மையைத் தரும் எனின் பொய்ம்மையும் வாய்மையேயாகும். குற்றமற்ற நன்மை என்பது ஒருவர்க்கு நன்மையும் பிறிதொருவர்க்குத் தீமையும் செய்யாத நன்மை. 'பொய்ய்ம்மையும் வாய்மையிடத்து' என்றால் பொய்தான். ஆனால் வாய்மையென்று கருதலாம் என்பது கருத்து. இந்தக் குறளால் உயிர்களின் வாழ்க்கையில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக நெகிழ்ந்து கொடுக்கும் சால்பை அறிய முடிகிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின், பொய்ம்மையும் வாய்மை இடத்த.

பதவுரை:
பொய்ம்மையும்-பொய்யும்; வாய்மை-மெய்ம்மை; இடத்த-தன்மையுடைய; புரை-குற்றம்; தீர்ந்த-நீங்கிய; நன்மை-நன்மை; பயக்கும்-பயன்தரும்; எனின்-என்றால்.


பொய்ம்மையும் வாய்மை இடத்த:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொய்யும் மெய்யோ டொக்கும்;
பரிப்பெருமாள்: பொய்யும் மெய்யோ டொக்கும்;
பரிதி: பொய்யும் மெய் சொல்லுதற்கு ஒக்கும்;
பரிமேலழகர்: பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம்.

'பொய்யும் மெய்யோ டொக்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அப்பொய்யையும் மெய்யாகக் கொள்ளலாம்', 'பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் இடத்தைப் பெறும்', 'ஒரு பொய்யைச் சொன்னாலும் அது வாய்மையாகக் கொள்ளப்படும்', 'பொய்ம்மைச் சொற்களும் மெய்மைச் சொற்களாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொய்யாகச் சொல்லப்படுவதும் மெய்ம்மையாக வைத்து எண்ணப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.
பரிப்பெருமாள்: குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்றன்னெஞ்சறிவது பொய்யற்க வென்றார். அதனைப் பொய்யாது சொல்லுங்கால் தீமைபயப் பனவுமுள; அதனைப் பட்டாங்குக் கூறாது மறைத்துச் சொல்ல நன்மை பயக்குமாயின் அப்பொய்மெய்யோடொக்கு மென்றது.
பரிதி: நன்மையைக் கொடுக்குமாகில் என்றவாறு.
பரிமேலழகர்: பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: குற்றம் தீர்ந்த நன்மை: அறம். அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.

'குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொய்யினால் பிறர்க்குத் தூயநன்மை வரின்', 'பிறர்க்குக் குற்றம் தவிர்ந்த நன்மை தருமாயின்', 'குற்றமற்ற ஒரு நன்மை உண்டாக்கும் நோக்கத்துடன்', 'குற்றத்தினின்றும் நீங்கிய நன்மையைத் தருமாயின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

குற்றம் நீங்கிய நன்மை தரும் என்றால் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
குற்றம் நீங்கிய நன்மை தரும் என்றால் பொய்யாகச் சொல்லப்படுவதும் மெய்ம்மையாக வைத்து எண்ணப்படும் என்பது பாடலின் பொருள்.
பொய் எப்படி மெய்யாக முடியும்?

பொய்யால் பிறர்க்கு நன்மை கிடைக்குனால் அதுவும் மெய்ம்மை இடத்தில் வைக்கப்படும்.

குற்றம் இல்லாத நன்மையினைத் தருமானால் பொய்யான சொற்களும் மெய்ம்மையாக எண்ணப்படும்.
'மெய்' எப்பொழுதும் மெய்தான். பொய்ம்மை எப்பொழுதும் எக்காரணத்தாலும் மெய்யாகாது. ஆனால் பயனையே கருதாமல் எப்பொழுதும் பொய் பேசாதிருக்கும் அறவொழுக்கம் அறிவுக்குப் பொருந்துமா? உண்மை என்பது பொய்யும் மெய்யும் சேர்ந்த திரிபுடைய அறமா? இவை நமக்குள் அடிக்கடி எழும் கேள்விகள். உலகியற் பொருள்களும் நிகழ்ச்சிகளும் கணந்தோறும் மாறும் இயல்புடையவை. இத்தகையவற்றை மற்றவரிடம் சொல்லும்போது பொருளும் நிகழ்ச்சிகளும் மாறிப் பொய்ப்படும் வாய்ப்புகளும் உண்டு. பொருள்களையும் அவற்றின் வினைநிகழ்ச்சிகளையும் கண்டுரைக்கும் கண் காது முதலிய உறுப்புகள் குறைப்படும் தன்மையனவாயும் உள்ளன. நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே கூறினால் பிறர்க்குப் பெரும் தீங்கு நேரலாம். இதனால் உள்ளதை உள்ளவாறே கூறுதல் எல்லாக் காலங்களிலும் இயலாது போகிறது. எனவே பொய்சொல்பவர் குற்ற உணர்வு கொள்ளவேண்டாம் என்ற நோக்கில், பொய்ம்மையும் புரைதீர்ந்த, அதாவது குற்றமற்ற, நன்மை பயப்பதாயின் வாய்மையின் இடத்தில் வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர்.

இதற்கு முந்தைய குறளில் வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் குறள் எண்:291 - வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்- என வாய்மை விளக்கப்பட்டது. பரிமேலழகர் 'பொய்ம்மையும் வாய்மை இடத்த' என்ற இந்தக் குறளையும் 'வாய்மை எனப்படுவது யாதெனின்' என்ற முந்தைய பாடலையும் ஒருசேர வாசித்து வாய்மைக்கும் பொய்மைக்கும் உண்டான வள்ளுவரின் இலக்கணங்களைத் தொகுத்து இவ்வாறு கூறுகிறார்:
வாய்மை:
தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறல் (291)
நன்மை பயக்கும் நிகழாதது கூறல் (292)
பொய்ம்மை:
நன்மை பயவாத நிகழாதது கூறல் (292)
தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறல் (291)
இரண்டு குறள்களிலும் 'தீமை' 'நன்மை' என்பவை 'பிறர்க்குத் தீமை', 'பிறர்க்கு நன்மை' என்ற பொருளைக் கொண்டவை.
கு ச ஆனந்தன் இக்குறள் பற்றிச் சொல்லும்போது 'சுருங்கக் கூறின் ஒருவருடைய உரை (கூற்று) பொது நன்மையை விளைவித்தால் அது வாய்மை. பொதுத் தீங்கை விளைவித்தால் அது பொய்ம்மை. வாய்மையில் பொய்ம்மை அடங்கும்; ஆனால் பொய்ம்மையில் வாய்மை அடங்காது' எனச் சொல்லி, 'மெய்ம்மை வேறு வாய்மை வேறு. மெய்ம்மை என்பது ஒருவன் கூற்றில் (உரையில்) அடங்கியுள்ள பொருள், உண்மையானது எனக் குறிப்பது. மெய்ம்மை ஒருவர் உரையில் அடங்கும் தன்மையைக் காட்டும். வாய்மை ஒன்றை உரைப்பவரின் அகத்தூய்மையையும் ஒழுக்கத்தையும் குறிக்கும். மெய்ம்மை உரையின் தன்மையை மட்டும் குறிக்கும். ஆகவே ஒழுக்கம் என்பது யாதொன்றும் தீமை இலாத -புரை தீர்ந்த நன்மை பற்றி வருவதாகும். அஃதாவது பொதுத்தீமை பயவாமல் இருக்கும் சொல்லால் ஒழுக்கம் தொடங்குகிறது' என விளக்குகிறார், சண்முகசுப்பிரமணியனார்.' என்ற மேற்கோள் உரையும் தருகிறார்.

குறளிலேயே காணப்படும் தூய பொய்யிடங்கள் என்று வ சுப மாணிக்கம் சுட்டிக் காட்டுவன:
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர் (வெருவந்த செய்யாமை 562 பொருள்: ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.)
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. (புல்லறிவாண்மை 585 பொருள்: ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன்.)
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. (ஒற்றாடல் 586 பொருள்: துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவார்.)
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். (படைமாட்சி 768 பொருள்: போர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை பெறும்.

பொய் எப்படி மெய்யாக முடியும்?

வள்ளுவர் மிகத் தூய்மையான உயர் ஒழுக்கம் போதிப்பவர்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பவர்; விதிவிலக்காகக் கூறுபவை அரிதாக இருக்கும். எப்படி இக்குறளில் அவர் பொய் சொல்வதைத் தனக்கு உடன்பாடாக்கிக் கொண்டார்? இது குறளின் பெருமையைக் குன்றச் செய்வதாகிறதே என்ற எண்ணங்கள் உடன் தோன்றும்.
உள்ளதை உள்ளவாறு கூறுவதில் என்ன தடை இருக்க முடியும்? சில வேளைகளில் உண்மை கூறினால் மற்றவர்க்கு ஏதாவது ஒருவகையில் தீங்கு நேரலாம், அத்தீமையைத் தடுப்பதற்காகத்தான் பொய்யையும் வாய்மையாகக் கொள்ள முடியும் எனச் சொல்லப்படுகிறது. ஆனாலும் அப்படிப் பொய் சொல்பவர்க்கும் வள்ளுவர் பொதுவான இசைவு கொடுக்கவில்லை; புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற தகுதியையும் வரையறுக்கிறார்; அதாவது அது குற்றம் நீங்கிய நன்மையைப் பிறர்க்கு ஆக்குவதாக இருக்க வேண்டும் என்கிறார்.

உள்ளதை உள்ளவாறே எவ்விடத்தும் எப்பொழுதும் கூறிவிட முடியாது. எந்தச் சூழலில் பொய் வாய்மையாகிறது என்பதற்கு இரண்டு இன்றியமையாக் கூறுகளை இங்கு சொல்கிறார் வள்ளுவர். ஒன்று அப்பொய்ம்மை குற்றமற்று இருக்க வேண்டும்; மற்றது நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். இந்த இரண்டு வரையறைகளும் நிறைவேறினால் அது வாய்மையின் இடத்தில் வைத்துக் கருதப்படும். சொல்லால் விளையும் பயனை வைத்தே ஒருவரது உரை வாய்மையா அன்றி பொய்ம்மையா எனக் காணவேண்டும். பொய்யும் வாய்மையின் இடத்தில் வைக்கப்படும் என்றதனால் இப்பொய் உள்ளார்ந்த தூண்டுதலாகவும் மிக உயர்ந்த நன்மையைத் தருவதாகவும் இருக்கவேண்டும்; வழிமுறையிலும் முடிவிலும் குற்றமற்றதாகவும் இருக்கவேண்டும்; அது சொல்பவர்க்கு நன்மை தருவதாக இருப்பது அல்ல; பிறர்க்கும் உலகிற்கும் நன்மை தருவதாக இருக்கவேண்டும்; ஒருவர்க்கு நன்மையும் பிறிதொருவர்க்குத் தீமையும் செய்யாத நன்மை இங்கு பேசப்படுகிறது. எந்நிலையிலும் யாருக்கும் தீமை பயக்காத நன்மையே, புரை தீர்ந்த நன்மை. இத்தகைய சூழலில் கூறப்பட்ட பொய் ஒழுக்கத்திற்கு இழுக்கில்லாதிருக்கும்; அறத்துடன் பிணக்கு இல்லாமலிருக்கும். எனவே அது உடன்படத் தக்கது.
மத, இனக் கலவர இடத்தில் இருந்து தப்பி ஒருவன் நம் வீட்டில் அடைக்கலம் வரும்வேளை அவனைத் தேடி வரும் கொலையாளிகளிடம் அவன் 'இங்கு இல்லை' என்று சொன்னால் அது குற்றம் நீங்கிய சொல் ஆகும், என்பது புரை தீர்ந்த நன்மைக்கு ஒரு காட்டாகும்.

'புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்று சொல்லப்பட்டது. வள்ளுவரின் பொருள் நோக்கத்தையும் குறளின் சொற்போக்கையும் எண்ணிப்பார்க்கலாம். நன்மை தரும் சொல்லானால், அது பொய்யாக இருந்தாலும், வாய்மை என்று கொள்ளத் தகும் என மேம்போக்காகக் கருதலாகாது என்பதற்காக புரைதீர்ந்த நன்மை எனக் குறிப்பிடப்பட்டது. பொய்யும் மெய்யாகுமே என்றதால் எடுத்ததற்கெல்லாம் பொய் பகரலாம் என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 'நன்மை பயக்கும் எனின் பொய்ம்மையும் வாய்மை யிடத்த' என்று மட்டும் சொல்லப்பட்டு இருக்குமேயானால், ''பயனே முக்கியம்; வழிமுறை அன்று' என்றாகி விடும். வள்ளுவர் அப்படிக் கூறாமல் மிகக் கருத்தோடு, 'புரை தீர்ந்த நன்மை' என்கிறார். தவறான வழியில் பெறப்படும் நன்மை புரை தீர்ந்தது அல்ல என்பது பொருள்.
''புரை தீர்' என்ற அடைமொழியைப் படைத்து வள்ளுவர் மொழிதலால் குற்றமாகுமா என ஐயுற்றவிடத்து 'அஃது அங்ஙனமன்று, நன்மை பயத்தலின் ஏற்புடையதே' என எதிர் மறுத்து தொல்காப்பியர் மொழிவதை நினைவூட்டுகிறது. அவர் சுட்டும் சொல்லானும் மொழி நடையானுமே வள்ளுவர் எடுத்தாள்வது இவற்றிடையேயுள்ள உணர்வியைபினை நன்கு எடுத்துக்காட்டுகின்றதன்றோ?' (தமிழண்ணல்).
'எனின்' எனும் சொல்லாட்சியால், பொய்ம்மை பல இடங்களில் நன்மை பயவாது என்பதை உணரவைக்கிறார்.
'பொய்ம்மையும் வாய்மையிடத்து' என்றால் பொய் பொய்தான். அது வாய்மை ஆகாது; ஆனால் வாய்மையின் இடத்தில் வைத்து எண்ணத்தக்கது என்பது கருத்து.

குற்றம் நீங்கிய நன்மை தரும் என்றால் பொய்யாகச் சொல்லப்படுவதும் மெய்ம்மையாக வைத்து எண்ணப்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாய்மை அறம் காலந்தோறும் இடந்தோறும் மாறத்தக்கதே.

பொழிப்பு

பொய்யினால் தூயநன்மை பெறப்படுமானால் அப்பொய்யையும் மெய்யாகக் கொள்ளலாம்.