இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0290



கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:290)

பொழிப்பு (மு வரதராசன்): களவு செய்வார்க்கு உடலில் உயிர்வாழும் வாழ்வும் தவறிப்போகும். களவு செய்யாமல் வாழ்வோர்க்குத் தேவருலகம் வாய்க்கத் தவறாது.

மணக்குடவர் உரை: பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும். கள்ளாதார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது.
இது கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமிலரென்றது.

பரிமேலழகர் உரை: கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும், கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது.
(உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள்.596) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: திருட்டுத் தொழிலை மேற்கொண்டவர்களை உயிர் வாழ்வதற்கு இடமாகிய இவ்வுலகம் நீக்கி வைக்கும். திருட்டுத் தொழிலினை மேற்கொள்ளாதவர்களை வானுலகமும் விரும்பி வரவேற்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு.

பதவுரை:
கள்வார்க்கு-களவினைப் பயில்வார்க்கு; தள்ளும்-தவறும்; உயிர்நிலை-உயிரால் நிற்கப்படுவது; கள்ளார்க்கு-களவைக் கருதாதவர்க்கு; தள்ளாது-தவறாது; புத்தேள் உலகு-மேலுலகம்.


கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும்;
பரிப்பெருமாள்: பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: தள்ளுமென்றது 'தள்ளினும் தள்ளாமை நீர்த்து' *என்றாற்போல.
பரிதி: கபடியார்க்கு அற்பாயுசுவாய்ச் சுவர்க்கமில்லை;
காலிங்கர்: அருளுடைமை முதலாக வருகின்ற அதிகாரப் புறநடைக் கருத்தாகிய துறவியற்றுவார் இடையிலே களவு இயற்றுவாராயின் முத்தியினை நீக்குவார்;
காலிங்கர் குறிப்புரை: உயிர்நிலை என்பது முத்தி.
பரிமேலழகர்: களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும்;
பரிமேலழகர் குறிப்புரை: உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது.

'பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும்/அற்பாயுசுவாய்ச் சுவர்க்கமில்லை/முத்தியினை நீக்குவார்/உடம்பும் தவறும் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திருடுபவர்க்கு விரைவில் உயிர் போகும்', 'களவு செய்பவர்க்குத் தம் உயிர் நிற்றற்கு ஏதுவான உடம்பும் தவறும் (அழியும்)', 'திருட்டுத் தொழிலில் இறங்குகின்றவர்களுக்கு சீவனத்துக்கும் தடுமாற்றம் உண்டாகிவிடும்', 'களவினைப் பயில்கின்றவர்கட்கு இம்மையிலேயே அவர்கள் உடம்பும் தவறிப்போம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

களவினைச் செய்வார்களை உயிர் வாழ்தற்கு இடமாகிய இவ்வுலகம் நீக்கி வைக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கள்ளாதார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது.
மணக்குடவர் குறிப்புரை: இது கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமிலரென்றது.
பரிப்பெருமாள்: கள்ளாதார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமிலரென்றது.
பரிதி: களவில்லாதார்க்குத் தீர்க்காயுசு உண்டாய் மறுமைக்கும் சுவர்க்கம் உண்டு என்றவாறு.
காலிங்கர்: அதனால் களவு இயற்றாது இத்துறவு இயற்றுவார்க்குக் கடவுளர் யாவரும் சான்றோராதலால் அதனை நீக்கார்; தாமும் அதற்கு அருளுதவி செய்வார் என்றவாறு.
பரிமேலழகர்: அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது.
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள்.596) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.

கள்ளாதார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது/தீர்க்காயுசு உண்டாய் மறுமைக்கும் சுவர்க்கம் உண்டு/கடவுளர் யாவரும் சான்றோராதலால் அதனை நீக்கார்/புத்தேள் உலகும் தவறாது என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திருடாதவர்க்கு வானுலகமும் போகாது', 'அது செய்யாதவர்க்குத் தேவருலகமும் தவறாது (கிடைக்கும்)', 'திருடுவதை நினையாதவருக்கு தேவலோகம் கிடைப்பதும் எளிதாகும்', 'அது செய்யாதவர்க்கு இங்கே உடம்பு நிலைபெறுதலோடு மறுமையில் விண்ணோ ருலகமும் தவறாது கிடைக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கள்ளத்தனம் செய்யாதவர் வானுலகம் பெறாமலும் போகமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளத்தனம் செய்யாதவர்கள் வானுலகம் பெறாமலும் போகமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை' என்றதன் பொருள் என்ன?

கள்வர்கள் வாழ்வதற்கான இடமல்ல இவ்வுலகம்; கள்ளாதவரை விண்ணுலகம் ஒதுக்காது.

களவுத் தொழிலை செய்பவர்களை உயிர் வாழ்வதற்கு இடமாகிய இவ்வுலகம் தள்ளி வைக்கும். அத் தொழிலினை மேற்கொள்ளாதவர்களுக்கு மேலுலகமும் கிடைக்காமல் போகாது.
புத்தேள் உலகு தேடுவோர் கள்ளாமை அறம் மேற்கொள்ளலாம் என்கிறது பாடல். மெய்யியல் சார்ந்த அறமாகக் கள்ளாமை இங்கு காட்டப்படுகிறது. கள்வரை உலகோர் ஒதுக்கியே வைப்பர்; களவினின்றும் ஒதுங்கியவர்கள் நல்லோர் மட்டுமே வாழும் இன்ப இடமான புத்தேள் உலகத்தையும் பெறாமல் இருக்க மாட்டார்கள் என்று பயனையும் கூறி நல்லாற்றுப்படுத்துகிறது இப்பாடல்.

'கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை' என்றதன் பொருள் என்ன?

'கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை' என்றதற்கு உரையாசிரியர்கள் கொண்ட பொருள்களுள் சில:

  • பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும்.
  • கபடியார்க்கு அற்பாயுசுவாய்ச் சுவர்க்கமில்லை.
  • துறவியற்றுவார் இடையிலே களவு இயற்றுவாராயின் முத்தியினை நீக்குவார்.
  • களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும்.
  • களவு செய்வார்க்கு உடலில் உயிர்வாழும் வாழ்வும் தவறிப்போகும்.
  • பிறர் பொருளைத் திருடுவார்க்கு உயிர் நிலைபெறாது.
  • களவு நிலையில் வாழ்வார்க்கு உடம்பு உயிரைத் தம்மிடத்தில் வைத்துக் கொள்ளாது.
  • திருடுபவர்க்கு விரைவில் உயிர் போகும்.
  • களவு செய்பவர்க்குத் தம் உயிர் நிற்றற்கு ஏதுவான உடம்பும் தவறும் (அழியும்).
  • திருட்டுத் தொழிலில் இறங்குகின்றவர்களுக்கு சீவனத்துக்கும் தடுமாற்றம் உண்டாகிவிடும்.
  • களவு செய்வார்க்கு உயிரோடு வாழும் நிலையும் விரைவில் நீங்கிப்போகும்.
  • களவினைப் பயில்கின்றவர்கட்கு இம்மையிலேயே அவர்கள் உடம்பும் தவறிப்போம்.
  • திருட நினைப்பார்க்குத் தம் உடம்பும் கைவிடும்.
  • திருட்டுத் தொழிலை மேற்கொண்டவர்களை உயிர் வாழ்வதற்கு இடமாகிய இவ்வுலகம் நீக்கி வைக்கும்.
  • களவில் ஈடுபடுவார் நித்தநித்தம் செத்துப் பிழைப்பர்.
  • களவு செய்வார்க்குத் தம்முடனேயே யுள்ள தம் சொந்த வுடம்பும் தவறும்.
  • வஞ்சனை செய்வாரது உடம்புகூட அவரைக் கண்டு வெறுக்கும்.
  • களவு செய்யுங்கால் காணப்படின் கொல்லப் படுவன்.
  • களவு செய்வோர்க்கு உடம்புக்கு வரும் இன்பம் தவறும்.
  • களவு செய்து பழகி வருவார்த் தாம் நிற்கின்ற நிலையாய்த் தம்முடனிருக்கும் உடம்பும் இவனைச் சுமந்திருக்கின்றோமே என்று அருவருக்கும். உடம்பு அருவருத்தல் எப்படி யென்றால், மறுமையில் யமதண்டனை அடைதல் அல்லாமல் இம்மையிலும் தண்டனை அடைதலால் வரும் துன்பம் பொறுக்கமாட்டாமை என்க.

உயிர் நிற்றற்கு இடமாக இருத்தலால் உடம்பு உயிர்நிலை எனப்பெயர் பெற்றது. அன்பின் வழிய துயிர்நிலை... (அன்புடைமை 80 பொருள்: உயிர் நிலைகொண்டு இருப்பது அன்பின் வழியே) உண்ணாமை உள்ளது உயிர்நிலை... (புலால்மறுத்தல் 255 பொருள்: உயிருக்கு உறுதியான நிலை, ஊன் உண்ணாமையால் உள்ளது) எனப் பிற இரு இடங்களிலும், குறளில். உயிர்நிலை என்பது உடம்பு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. அதனால் பெரும்பான்மை உரையாசிரியர்கள் உயிர்நிலை என்பதற்கு உடம்பு எனப் பொருள் கொண்டு பிறர் பொருளைத் திருடுவார்க்கு உயிர் நிலைபெறாது என்ற பொருளில் உரை செய்தனர். மற்றவர்கள் முத்தி இல்லை, வாழ்க்கை நடத்த வகை இல்லை, உடம்பிற்கு வரும் இன்பம் இல்லை என்றவாறு பொருள் கூறினர்.
இக்குறளில் தள்ளும் உயிர்நிலை என்பது உயிர் நீக்கம் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளதாகத் தோன்றவில்லை.
மயிலைசிவமுத்து 'கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை' என்றதற்குத் 'திருட்டுத் தொழிலை மேற்கொண்டவர்களை உயிர் வாழ்வதற்கு இடமாகிய இவ்வுலகம் நீக்கி வைக்கும்' என உரை கூறினார். இது பொருத்தமாகப்படுகிறது.

கள்ளத்தனம் செய்பவர்களை உயிர் வாழ்தற்கு இடமாகிய இவ்வுலகம் நீக்கி வைக்கும்; கள்ளத்தனம் செய்யாதவர்கள் வானுலகம் பெறாமலும் போகமாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கள்ளாமை வானுலகத்திற்கும் கொண்டு சேர்க்கும்.

பொழிப்பு

களவினைச் செய்வார்களை உயிர் வாழ்தற்கு இடமாகிய இவ்வுலகம் நீக்கி வைக்கும்; களவு செய்யாதவர்கள் வானுலகம் பெறாமலும் போகமாட்டார்