இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0289



அளவல்ல செய்துஆங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:289)

பொழிப்பு (மு வரதராசன்): களவு செய்தல் தவிர மற்ற நல்லவழிகளை நம்பித் தெளியாதவர், அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

மணக்குடவர் உரை: நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே கெடுவார்; களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர்.
இது கள்வாரை அரசர் கொல்வரென்றது.

பரிமேலழகர் உரை: அளவு அல்ல செய்தாங்கே வீவர் - அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர், களவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவு அல்லாத பிறவற்றை அறியாதவர்.
(தீய நினைவுகளாவன : பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின் ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி ,கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி: உரை: களவல்லாத பிறவற்றை அறியாதவர் தம் அளவுக்கு மீறிய செயல்களைச் செய்து அப்பொழுதே கெடுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அளவுஅல்ல செய்துஆங்கே வீவர் களவுஅல்ல மற்றைய தேற்றாதவர் .

பதவுரை: அளவுஅல்ல-நேர்மை ஆகாதவைகள்; செய்து-செய்து; ஆங்கே-அப்பொழுதே; வீவர்-கெடுவர்; களவு-திருட்டு; அல்ல-அல்லாத; மற்றைய-பிற; தேற்றாதவர்-தெளியாதவர், அறியாதவர்.


அளவல்ல செய்துஆங்கே வீவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே கெடுவார்;
பரிப்பெருமாள்: நேர் அல்லாதன செய்து அவ்விடத்தே கெடுவர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: அளவெனினும் நேரெனினும் ஒக்கும்; நாற்சீர் நாலடியை அளவடியென்றும் நேரடியென்றும் வழங்குபவவாதலின்.
பரிதி: தவத்திற்கு ஏலாத காரியஞ்செய்து நரகத்திலே வீழ்வர்;
காலிங்கர்: செய்யத்தகும் தகவுகேடாகிய மிகை நடைகளைச் செய்து அப்பொழுதே கெடுவர்; [தகவு கேடு -தகுதியின் அழிவு; மிகைநடை—குற்றம் பொருந்திய ஒழுக்கம் தீயவொழுக்கம்]
பரிமேலழகர்: அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர்;
பரிமேலழகர் குறிப்புரை: தீய நினைவுகளாவன : பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின் ஆங்கே வீவர்' என்றும் கூறினார். இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது. [கரந்த--வஞ்சனையான]

அளவல்ல செய்துஆங்கே என்றதற்கு 'நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் பொருள் கூறினர். பரிதி 'தவத்திற்கு ஏலாத காரியஞ்செய்து' என்றும் காலிங்கர் 'செய்யத்தகும் தகவுகேடாகிய மிகை நடைகளைச் செய்து அப்பொழுதே' என்றும் பரிமேலழகர் 'அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே' என்றும் உரை செய்தனர். வீவர் என்றதற்கு மற்ற எல்லோரும் கெடுவர் என்று பொருள் கூற பரிதி மட்டும் நரகத்திலே வீழ்வர் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீமைகள் செய்து விரைவில் அழிவர்', 'அளவுக்கு மீறிய காரியங்களைச் செய்து கொண்டே கெட்டுப் போவார்கள்', 'வரம்பு கடந்த தீமைகளைச் செய்து செய்த அப்போதே கெட்டொழிவர்', 'அறம் அல்லாதவற்றைச் செய்து உடனேயே அழிவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நேர்மையற்றன செய்து எந்தநேரமும் அழிவர் என்பது இப்பகுதியின் பொருள்.

களவல்ல மற்றைய தேற்றா தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது கள்வாரை அரசர் கொல்வரென்றது.
பரிப்பெருமாள்: களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கள்வாரை அரசர் கொல்வரென்றது.
பரிதி: கபடபுத்தி யல்லது ஞானவழியை அறியாதார் என்றவாறு.
காலிங்கர்: யாவரோ எனில் களவல்லனவாகிய தன்மரபுகளைத் தெளியாதவர் என்றவாறு.
பரிமேலழகர்: களவு அல்லாத பிறவற்றை அறியாதவர்.
பரிமேலழகர் குறிப்புரை: மற்றையாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி ,கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. [அவற்றையே - காய், கனி, கிழங்கு, சருகு முதலியனவற்றையே]

'களவு அல்லாத பிறவற்றை அறியாதவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'களவு தவிர வேறொன்றும் அறியாதவர்கள்', 'களவு ஆசை வந்துவிட்டவர்கள் திருடுவதைத் தவிர வேறு எதிலும் மனந்தேறாதவர்களாகி', 'களவைத் தவிர வேறொன்றையும் பயின்றறியாதவர்கள்', 'திருட்டுத் தொழில்களைத் தவிர வேறொன்றையும் நினையாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கள்ளத்தனம் தவிர வேறொன்றும் பயின்றறியாதவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கள்ளத்தனம் தவிர வேறொன்றும் பயின்றறியாதவர்கள் அளவல்ல செய்து எந்தநேரமும் அழிவர் என்பது பாடலின் பொருள்.
'அளவல்ல செய்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

களவாடிக் களவாடி அதில் சுவை கண்டவன் அதைச் செய்துகொண்டே விரைவில் கெட்டழிவான்.

களவுசெய்தலைத் தவிர பிற பொருளீட்டும் முயற்சிகளை அறிந்து தெளியாதவர், தீச்செயல்களைப் புரிந்து எந்தநேரமும் அழியக்கூடிய நிலையில் இருப்பர்.
மற்றவர் உடைமையைப் பறித்தல், கையூட்டல் பெறுவது போன்று மற்றவர் உரிமை எல்லைக்குள் புகுந்து அவர்களுக்கு இழப்புகளை உண்டாக்குவது களவாகும். எதிலும் களவு, எப்பொழுதும் களவு என்று அதில் பயன் கண்டவர் நேர் வழிகளில் பொருளீட்டுவது பற்றி சிந்தனை செய்வதில்லை, எனவே அவர்களது ஊக்கம், உழைப்பு, ஆற்றல் இவற்றால் முயற்சி செய்ய மாட்டார்கள். வேறு நல்ல வழிகளில் நாட்டமில்லாது அவற்றில் பயிற்சியில்லாமலேயே இருப்பார்கள். மீண்டும் மீண்டும் தமக்குத் தெரிந்த களவு ஒன்றையே செய்து அழிந்துபடுவர். கெடுவர் என்பதற்கு இங்கே வீவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீழ்வர் என்று இதற்குப் பொருள் கொள்வர். இச்சொல்லுக்குச் சாவர் என்றும் பொருளுரைத்தனர். வஞ்சனையால் பெற்ற செல்வத்தால் வலிமை பெற்றுவிட்டதாக எண்ணி ஒன்றன்பின் ஒன்றாக இன்னும் கொடிய குற்றங்களைச் செய்யத் துணிவர். இதனால் களவு ஒன்றுதான் அவர்களால் செய்ய இயலும்; நல்ல செயல்களைச் செய்ய அறியார் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார். களவு தவிர வேறொன்றும் அறியாதவராய் அளவுக்கு மிஞ்சிய தீச்செயல்களைச் செய்து வீழ்வர். நேரிய வழியில் பொருள்செய்வதற்கு எளிய இனிய வழிகள் நிறைய உண்டு என்பதை நினையாத இவர்கள் பழி ஏற்றுச் சட்டத்தாலும் சமுதாயத்தாலும் பின்தொடரப்பட்டு துயர்மிகு வீழ்வைக் காண்பர்.

'அளவல்ல செய்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

'அளவல்ல செய்து' என்ற தொடர்க்கு நேர் ஆகாதன செய்து, நேர் அல்லாதன செய்து, தவத்திற்கு ஏலாத காரியஞ்செய்து, செய்யத்தகும் தகவுகேடாகிய மிகை நடைகளைச் செய்து, அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்தல், அளவு அல்லாத செயல்களைச் செய்து, தருக்கமெனப்படும் அளவை நூலுக்கு ஒவ்வாத தீய செயல்களையே மேன்மேலும் செய்து, அளவற்ற களவுகளைச் செய்து, தீமைகள் செய்து, தம் அளவுக்கு மீறிய செயல்களைச் செய்து, அளவுக்கு மீறிய செயல்களைச் செய்து, வரம்பில்லாத செயலைச் செய்து, வரம்பு கடந்த தீமைகளைச் செய்து, அறம் அல்லாதவற்றைச் செய்து, நியாயம் அல்லாதவற்றைச் செய்து, நேர்மை அல்லாதவற்றைச் செய்து, வரம்பு கடந்த செயல்களைச் செய்து, (தமது) அளவுக்கு மிஞ்சிய செயல்களைச் செய்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

களவைத் தொடர்ந்து தொழிலாகச் செய்பவன் வேறுபல குற்றம் பொருந்தியவற்றை எல்லைகடந்து செய்வான் எனச் சொல்லப்படுகிறது.
மணக்குடவர் இவ்வதிகாரப்பாடல்களில் ....அளவுஇறந்து ...(283) என்ற ஓரிடம் தவிர்த்து அளவு என்ற சொல் வரும் எல்லா இடங்களிலும் நேர்மை என்ற பொருளிலேயே பொருள் கூறியுள்ளார். இக்குறளில் அப்பொருள் நன்கு பொருந்தி வருகிறது.

'அளவல்ல செய்து' என்ற தொடர்க்கு இங்கு களவு என்னும் குற்றத்தை அளவுகடந்து செய்து என்பது பொருள்.

கள்ளத்தனம் தவிர வேறொன்றும் பயின்றறியாதவர்கள் நேர்மையற்றன செய்து எந்தநேரமும் அழிவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அளவு அறிந்து வாழும் ஆற்றலை விரும்பி மேற்கொண்டால் கள்ளாமை தானே வரும்.

பொழிப்பு

களவல்லாத பிறவற்றை அறியாதவர் தீமைகள் செய்து விரைவில் அழிவர்.