இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0285



அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:0285)

பொழிப்பு (மு வரதராசன்): அருளைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

மணக்குடவர் உரை: அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளை குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை.
இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.

பரிமேலழகர் உரை: அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது.
(தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: பிறர் ஏமாந்த நிலையைப் பார்த்திருப்பவனிடம் அருளும் அன்பும் இரா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

பதவுரை:
அருள்-அருள்; கருதி-அறிந்து; அன்பு-அன்பு; உடையர்-பெற்றுள்ளவர்; ஆதல்-ஆகுதல்; பொருள்-உடைமை; கருதி-நினைத்து; பொச்சாப்பு-சோர்வு; பார்ப்பார்கண்-காணுபவரிடத்தில்; இல்-இல்லை.


அருள்கருதி அன்புடையர் ஆதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல்;
பரிப்பெருமாள்: அருளைக் குறித்து உயிர்கள் மாட்டு அன்புடையரா யொழுகுதல்;
பரிதி: பிறவாநெறி வேண்டி அன்புபெறுங் கருத்தை;
காலிங்கர்: அனைத்துயிர்க்கும் ஒப்ப நிகழ்வதோர் அருளினைக் கருதி அவ்வுயிர்கண்மாட்டு அன்பு பெரிதுடையராவோம் என்பது;
பரிமேலழகர்: அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல்;

'அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருளின் மேன்மை அறிந்து உயிர்களிடத்து அன்புடையவராய் ஒழுகுதல்', 'அருளைக் கருதி அன்பு செய்யும் குணம் இருக்க முடியாது', 'அருளின் பெருமையை உணர்ந்து அதன்கண் நின்று வழுவாது ஒழுகும் ஆர்வமுடைமை காணப்படாது', 'அருளினது நன்மையைக் கருதி பிறரிடம் அன்புடையராய் நடத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருளை எண்ணி அன்புடையவராய் ஒழுகுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளை குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.
பரிப்பெருமாள்: பொருளைக் குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.
பரிதி: அறியார் மூன்றுவகை ஆசை மிகுத்துப் பொய்ந் நெறியிலே நிற்பார் என்றவாறு.
காலிங்கர்: பிறன் பொருளை முழுதும் வவ்வக் கருதிற் காவற் குறிக்கோள் முறைமையை இகழ்ந்து, அதனால் மகிழ்ச்சியுடையார்க்கு ஒரு நாளும் இல்லை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பொச்சாப்பு என்பது இகழ்ச்சி. பரிமேலழகர்: பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது.
பரிமேலழகர் குறிப்புரை: தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.

'பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் பொருளைக் கவரக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்து உண்டாகாது', 'ஒரு பொருளைத் திருட நினைத்து அந்தப் பொருளுக்குச் சொந்தக்காரன் ஏமாறும் சமயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம்', 'பிறர் பொருளைக் கவரக் கருதி அவரது சோர்வினை எதிர்பார்த்திருப்பாரிடத்தே', 'பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைத்து அவர் சோர்வை எதிர்பார்ப்பாரிடம் உண்டாகாது', என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர் பொருளைக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்து இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருளை எண்ணி அன்புடையவராய் ஒழுகுதல் பிறர் பொருளைக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்து இல்லை என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பிறர் பொருளைப் பறிப்பதில் குறியாய் இருப்பவரிடம் அன்பு இராது.

அருள் நோக்கி உயிர்களிடத்து அன்புடையோராயிருக்கும் குணம், பொருளுடையவர் ஏமாந்து இருக்கும் நேரத்தை எதிர்பார்த்து அவர் உடைமையைக் கவர நினைப்பவரிடம் தோன்றாது.
பிறருடைய பொருளை விரும்பி அதை வஞ்சித்துக் கொள்வதற்காக, அவர்களின் தந்நிலை மறந்த நிலைக்காகக் காத்திருப்போரிடம், உலக அன்பைக் குறிக்கொண்டு தொடர்புடையாரிடத்து நெகிழ்ச்சியைப் பெறுதல் இயலாது.
அன்பு இல்லாதவர்களிடம்தான் எப்பொருளைக் கண்டாலும் பொருளுடையவர் எப்பொழுது சோர்வடைவார் அப்பொழுது அப்பொருளை நாம் கவர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இக்கூற்றைப் 'பிற உயிர்கள் மேல் அன்பும் அருளும் உடையவர்களுக்குக் களவு எண்ணம் தோன்றாது' என மாற்றி வாசிக்கலாம். அன்பும் அருளும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுபவையே. அருளென்னும் அன்பீன் குழவி..... (757) என்று குறளும் சொல்லும். பொருள் இழப்பவர் துன்புறுவர் என்று உணர்ந்து, அருள் நெஞ்சம் கொண்டோர் பிறர் பொருளை மறைவாக எடுத்துக் கொள்ள நினைக்கமாட்டார்.
களவுச் செயலில் ஈடுபடுபவன் வஞ்சக எண்ணம் மட்டுமே கொண்டு அன்பகத்தில்லாதவனாகி வற்றல் மரம் போலத் தனித்து நின்று சமுதாயத்திற்குத் தீங்கிழைப்பவனாக உயிர் வாழ்கிறான். அவனை அன்பு வாழ்க்கைக்கு மாறச் சொல்லி அறவுரை தருவதாக அமைகிறது இப்பாடல்.

பொச்சாப்பு என்ற சொல்லுக்கு மறதி, சோர்வு என்று பொருள். பொல்லாங்கு, தளர்ந்த, ஏமாந்த நிலை என்றும் பொருள் கூறுவர். பொச்சாப்பு என்பதற்குச் சொற்பொருளாகக் காலிங்கர் 'இகழ்ச்சி' என்று தனது குறளுரைகளில் கூறுவார்.
பொய்ச்சார்பு, பொய்ச்சாப்பு என்னும் பாடங்கள் கொண்டும் உரைகள் செய்யப்பட்டுள்ளன. இப்பாடங்களினும் ‘பொச்சாப்பு’ என்னும் பாடமே பொருத்தமாக உள்ளது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இப்பாடலின் நோக்கம் என்ன என்பதற்கு உரைகாரர்கள் தந்த விளக்கங்களிலிருந்து சில;

  • பொச்சாப்புப் பார்ப்பார்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெளிவு கூடாது என்பதாம்.
  • திருடுவதில் ஆசை மிகுந்துவிட்டவன் திருடுவதற்கு இடமும் தருணமும் பார்த்துக் கொண்டு அதே நினைப்பாக இருப்பான். அவனுக்கு அருளை நாடி அன்பு செய்ய மனமோ நேரமோ ஏது?
  • அவர் கவரக் கருதும் பொருளுடையார் மீது அவர்க்கு அருளோ அன்போ பிறவாது.
  • களவு செய்வார்க்கு அன்பு உண்டாகாது.
  • பொருள் கருதி பிறரின் மறதியையும் சோர்வை விரும்பும் இவர்கள் நல்லவர்கள் இல்லை என்கிறார் வள்ளுவர்.
  • களவாடி, தானம் செய்து வள்ளல் ஆகிவிடமுடியும் என்று நினைப்பவர்கள் கூடச் சமுதாயத்தில் இல்லாமலில்லை. அப்படிப்பட்ட நிலையில் வள்ளுவர் நமக்குச் சொல்லுகிறார், 'அருள் கருதி அன்புடையராதல் பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்' அதாவது பிறருடைய பொருள் எப்பொழுது அவர் ஏமாந்த நிலையில் கொள்ளையடிக்கலாம் என்று காத்திருக்கின்ற ஒருவன் அருளாளனாகவோ அன்புள்ளவனாகவோ மாறிவிடுவான் என்று நம்புவது அறிவுடைமை ஆகாது என்பதை அவர் தெளிவாக உணர்த்துகிறார்
  • பலர் அன்புடையராதல் உண்டு. மக்களிடத்திலும் இறைவனிடத்திலும் அன்பு காட்டுவார்கள். அருச்சனை செய்வார்கள். எனினும் இந்த அன்பு அருள் கருதிச் செய்யப்படுவது அன்று. அவர்களின் நோக்கம் பொருள் ஒன்றுதான். பொருளைக் கவர்வதற்குத் திட்டமிட்டு அன்பு காட்டுவர். அதற்குப் பெயர் அன்பன்று-நடிப்பு. பொருள் கருதி ஏற்படும் அன்பு தொடராது-நிலை பெறாது. அவர்கள் தாம் கருதியது முடிக்கக் காலத்தை எதிர்நோக்கி நிற்பர். அதாவது தம்மோடு பழகுகின்றவர்களின் மறதி, சோர்வு ஆகியவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். காலம் வாய்க்கும்போது கருதியதை முடித்துக் காற்றெனக் கடுகி விடுவர். .அத்தகையோரிடத்து ஒரு பொழுதும் அன்பு இருந்ததில்லை. ஒரு வெளிமயக்கு இருந்தது. அவ்வளவுதான். அவர்களின் நோக்கம், குறிக்கோள் பொருள் ஒன்றுதான். நேர்வழியில் உழைப்பால் பொருளீட்ட முடியாதவர்கள் இந்த மறைமுக வழியைக் கையாளுவர். அவர்களிடத்து அன்பு இல்லை. அருளும் கிடைக்காது. அவம் பெருகும்.
  • தனியுடைமைப் பொருளையே நோக்கமாகக் கொண்டு அதே குறிக்கோளோடு மற்றவர்களது விழிப்பின்மையை வாய்ப்பாக நோக்குபவர்களிடம் அருளைப் பெரிதாகக் கருதுகிற அன்புடைமை இல்லை. அஃதாவது பிறர் பங்குப் பொருளை வௌவக் கருதி அவர்களது விழிப்பின்மைக்காகக் காத்திருப்பவர்களிடம் அன்பு இல்லை. தனி உடைமைச் சமுதாயத்தில் வறுமையாளரிடமிருந்து அவர்களுடைய நியாயமான பங்குப் பொருளைச் சுரண்டிக் கொண்ட செல்வர்கள் சமத்துவ நெறி ஓம்பும் அன்புடன் இருக்கவே முடியாது.

பொருள் கருதி பிறரின் மறதியையும் சோர்வையும் நம்பி இருட்டு வாழ்க்கை நடத்துவோரிடம் அன்பு இல்லை; அன்பும் அருளும் நிறைந்த நல்லோர் வாழும் வெளிச்ச உலகத்தில் அவர்கள் கலக்கவேண்டும் என்பது இக்குறளின் செய்தி.

அருளை எண்ணி அன்புடையவராய் ஒழுகுதல் பிறர் பொருளைக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்து இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கள்ளாமை மேற்கொள்வோர் அன்பு வாழ்க்கையில் உள்ளார்.

பொழிப்பு

பிறர் பொருளைக் கொள்ள எண்ணி அவரது சோர்வு பார்ப்பாரிடத்து அருளின் மேன்மை அறிந்து அன்புடையவராய் ஒழுகுதல் இல்லை