இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0283



களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:283)

பொழிப்பு (மு வரதராசன்): களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவதுபோல தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும்.

மணக்குடவர் உரை: களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும்.
இது பொருள் நிலையாதென்றது.

பரிமேலழகர் உரை: களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.
(ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: களவு செய்தலினால் வந்த செல்வம், வளர்வது போலத் தோன்றி அளவிற்கு மிஞ்சிய பொருட்கேட்டினை விளைக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
களவினால் ஆகிய ஆக்கம் ஆவது போல அளவிறந்து கெடும்.

பதவுரை:
களவினால்-திருட்டினால்; ஆகிய-ஆன; ஆக்கம்-செல்வம்; அளவு-எல்லை; இறந்து-கடந்து; ஆவது-ஆதல்; போல-ஒத்திருப்ப; கெடும்-அழியும்.


களவினால் ஆகிய ஆக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம்;
பரிப்பெருமாள்: களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம்;
பரிதி: கபடத்தினால் பெற்ற செல்வம்;
காலிங்கர்: தமது உரவினான் ஆகிய ஆக்கமன்றிப் பிறர் பொருளைக் களவினால் விரும்பிய ஆக்கம் உளதாகில்;
பரிமேலழகர்: களவினால் உளதாகிய பொருள்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது.

'களவிற் கொண்ட பொருளாலாகிய ஆக்கம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'களவினால் வந்த செல்வம்', 'களவினால் கவரும் பொருள்', 'திருட்டுத் தொழிலால் அடையக்கூடிய செல்வம்', 'ஏமாற்றித் திருடியதால் உண்டான செல்வம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

களவினால் கொண்ட செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.

அளவிறந்து ஆவது போலக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருள் நிலையாதென்றது.
பரிப்பெருமாள்: மேன் மேலும் ஆவதுபோலக் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அளவிறப்பு-மிகுதி. இது பொருள் நிலையாதென்றது.
பரிதி: ஆகிறாப் போலே அழிந்துபோம் என்றவாறு.
காலிங்கர்: அப்பொழுதைக்கு ஆவதுபோலக் காட்டிப் பின்பு விளையும் காலத்து உயிர்க்கேடும் பொருட்கேடும் உறுப்புக்கேடும் எனஇவை முதலான கேடும் வந்து பின்பு நரகத்தில் தள்ளும்.
பரிமேலழகர்: வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.

'ஆகிறாப் போலே அழிந்துபோம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகவும் பெருகுவது போலத் தோன்றிக் கெடும்', 'அளவு கடந்து வளர்வதுபோலத் தோன்றி அழிந்துவிடும்', 'அளவிட முடியாதபடி பெருகுவது போலக் காட்டி, திடீரென்று இல்லாது போகும்', 'அளவு கடந்து பெருகுவது போலத் தோன்றி அழிந்துவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆகுவதுபோலத் தோன்றி அளவுகடந்து அழியும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
களவினால் கொண்ட செல்வம் ஆகுவதுபோலத் தோன்றி அளவிறந்து அழியும் என்பது பாடலின் பொருள்.
'அளவிறந்து' என்றதன் பொருள் என்ன?

முறையற்ற வழியில் சேர்த்த செல்வம் பெருகுவது போல் காட்டிப் பெரும் அழிவைத் தரும்.

களவின்மூலம் வரும் வளர்ச்சி மிகுவதுபோல் தோன்றி அளவுகடந்த கெடுதி உண்டாக்கும்.
பிறரது பொருளை வஞ்சகமாகக் கவர்வது களவு. நேர்மை தவறி வரும் இருட்டுப் பொருள் அனைத்தும் களவின்கண் கொண்ட பொருளாகவே கருதப்பெறும். குற்றத்தை வரவழைத்துக் கொண்டு, களவினால் ஒருவன் பொருள் சேர்க்கச் சேர்க்க, புகழும் பயனும் அடைவதை, மக்கள் வியப்போடு பார்க்கிறார்கள். அப்பொழுது வள்ளுவர் சொல்லுகிறார்: 'களவினால் ஆகிய ஆக்கம் குவிகிறது போலத் தோன்றும். ஆனால் அது ஓர் நிலைக்களன் அல்ல. ஒரு கட்டத்தில் அவை எண்ண முடியாத அளவுக்கு கேட்டை உண்டாக்கி விடும்'.
சிலர் 'அளவிறந்து ஆவது போலக் கெடும்' என்பதற்குக் கிடந்தாங்கே 'மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும்' எனப் பொருள் கொள்வர் . மற்றவர்கள் 'ஆவது போல அளவிறந்து கெடும்' எனக் கொண்டுகூட்டி 'வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்' எனப் பொருள் கூறினர். இவற்றுள் பின்னது பொருத்தமாக உள்ளது.

களவினால் உண்டாய செல்வம் வளர்வது போலத் தோன்றி அளவற்ற அழிவுக்குக் காரணமாகும் என்கிறது பாடல். குறள் இவ்வாறு கூறுவது அறம் சார்ந்த நம்பிக்கையினால் மட்டுமல்ல. நமது அன்றாட வாழ்க்கையில் நம் கண்முன்னே காணக்கூடிய நிகழ்வுகளே அது உண்மையுமாகும் என்பதைத் தெரிவிக்கின்றன.
களவின்கண் ஆக்கம் பெற்றவன், சட்டத்தின் பிடியிலிருந்து சிலவேளைகளில், தப்பி விட்டாலும் இயற்கை தரும் தண்டைனையிலிருந்து அவனுக்கு உய்வில்லை. இயற்கை உரிய நேரத்தில், உரிய முறையில் தன் நீதியை வழங்கிவிடும். அது நாம் எதிர்பார்க்கும் நேரத்திலோ நாம் எதிர்பார்க்கும் அளவிலோ அமையாமல் போகலாம். ஆனால் களவுக் குற்றம் புரிந்தவனை இயற்கை ஒறுக்கும்போது அது எவ்வளவு மில்லை என்று சொல்லும்படி அளவிறந்ததாக இருக்கும்.
'ஆவது போலக் கெடும்' என்னும் தொடருக்குப் பரிமேலழகர் 'களவினால் பெற்ற பெருஞ்செல்வம் போகும்போது பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன் கொண்டு போகும்' எனப் பொருள் கூறுவார்.

....தீயன ஆவதே போன்று கெடும் (பழமொழி நானூறு 173 பொருள்: தீச்செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதேபோன்று தோற்றுவித்துக் கெட்டுப்போகும்) என்று சொல்கிறது பழமொழிப் பாடல்.

'அளவிறந்து' என்றதன் பொருள் என்ன?

'அளவிறந்து' என்றதற்கு மேன் மேலும், தன் எல்லையைக் கடந்து, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து, அளவு கடந்து, எல்லைகளைக் கடந்து, மிகவும், அளவிட முடியாதபடி, அளவில்லாமல், அளவிற்கு மிஞ்சிய, அளவுக்கு மீறி, என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அளவிறந்து கெடும் என்பதற்குக் காலிங்கர் 'உயிர்க்கேடும் பொருட்கேடும் உறுப்புக்கேடும் எனஇவை முதலான கேடும் வந்து பின்பு நரகத்தில் தள்ளும்' என விளக்குவார். வீரமாமுனிவர் 'தன்னுடைய எல்லை கடந்தால் போலும் அழிவு கொண்டு விடும்' என உரைத்தார். மேலும் 'வைக்கலிலே பத்தி யிருக்கிற நெருப்பு வக்க லளவிலே நில்லாமல் அதனுடைய எல்லை கடந்து கிட்ட யிருக்கிற தெல்லாத்தையுஞ் சுடும். அப்படிப் போல,களவினால் வந்த பொருளழிந்து போறது மல்லாம லழிகிறபோது தன்னுடைய அளவிலே நில்லாமல் அதைக்கடந்து களவில்லாமல் சம்பாதித்த பொருளுக்கு மழிவு கொண்டு விடும்' எனவும் 'களவினால்வந்த பிரயோசனம் தான் கொண்டிருக்கிற பாவமென்கிற கேடல்லாமல் தனக்குப் பிரத்தியேகமா யிருக்கிற புண்ணியங்களுக்குங் கூட அழிவு கொண்டு விடும்' எனவும் கருத்துக்களைத் தந்தார்.

‘அளவறந்து’ என்றும் ‘அளவறிந்து’ என்றும் பாடம் கொண்டனர். 'அளவறந் தாவது போலக் கெடும்’ என்றவர்கள் தன் செலவுக் குதவுவது போல இருந்து உதவாது கெடும் என்று உரைத்தனர். 'அளவறிந்து' எனக் கொண்டவர்கள் பொருளானது தன்னைக் களவாற் கொண்டவர் தன் பயனை அனுபவிக்குங்கால் அளவினை யறிந்து (கெடும்). அவ்வாறு அவ்வனுபவகாலத்திற்கு உதவாமல் அழியுமென்று பொருள் கூறினர்.
அளவிறந்து என்னும் பாடம் பொருட் சிறப்புடையது.

'அளவிறந்து' என்றது அளவு கடந்து எனப்பொருள்படும்.

களவினால் கொண்ட செல்வம் ஆகுவதுபோலத் தோன்றி அளவுகடந்து அழியும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கள்ளாமையே அழியாப் பொருள்வாழ்வு நல்கும்.

பொழிப்பு

களவினால் வந்த செல்வம் பெருகுவது போலத் தோன்றி அளவுகடந்து அழியும்