மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
(அதிகாரம்:கூடாவொழுக்கம்
குறள் எண்:280)
பொழிப்பு (மு வரதராசன்): உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால், மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக் கோலங்களும் வேண்டா.
|
மணக்குடவர் உரை:
தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின்.
இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது
ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின்.
(பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு
வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி: உரை:
துறவிகள் உலகம் பழித்துக் கூறும் குற்றத்தை விலக்கி விட்டால், அவர்கட்குத் தலையை மொட்டை அடித்துக் கொள்ளுதலும் சடையை நீட்டி வளர்த்தலும் வேண்டா.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகம் பழித்தது ஒழித்து விடின், மழித்தலும் நீட்டலும் வேண்டா.
பதவுரை: மழித்தலும்-மொட்டையடித்தலும்; நீட்டலும்-நீளவளர்த்தலும்; வேண்டா-வேண்டுவதில்லை; உலகம்-உலகத்தார்; பழித்தது-குற்றம் எனக் கூறியதை; ஒழித்து-நீக்கி; விடின்-விட்டால்.
|
மழித்தலும் நீட்டலும் வேண்டா:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; [மழித்தல்--மொட்டையடித்தல், முண்டிதம்; நீட்டல்--சடை வளர்த்தல்]
பரிப்பெருமாள்: தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா;
பரிதி: முண்டிதமும் சடையும் வேண்டாம்;
காலிங்கர்: நெஞ்சினால் துறவறம் பேணக் கருதுவார் வெறுந்தலை முண்டித்தலும் சடைவளர்த்தலும் மற்று உம்மையால் தண்டு தரித்தலும் துவராடையுடுத்தலும் பிறவுமாகிய புறக்கோலம் புனைய வேண்டுவது இல்லை;
பரிமேலழகர்: தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா;
பரிமேலழகர் குறிப்புரை: பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். [பறித்தல் --தலைமயிரை ஒன்றொன்றாகப் பிடுங்கிக் களைதல்]
'தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தலை மழித்தலும் சடை நீட்டலும் வேண்டாம்', 'அவர்கட்குத் தலையை மொட்டை அடித்துக் கொள்ளுதலும் சடையை நீட்டி வளர்த்தலும் வேண்டா', 'மொட்டையடித்துக் கொள்ளுவதும் தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளர விடுவதும் முதலான சின்னங்கள் வேண்டியதில்லை', 'தலை மயிரைச் சிரைத்தலும், சடையாக வளர்த்தலும் ஆகிய வேடம் கொள்ளுதல் வேண்டாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மொட்டையடித்தலும் தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளர விடுவதும் வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.
உலகம் பழித்தது ஒழித்து விடின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.
பரிதி: மூன்று வகை ஆசையை விடுவானாகில் என்றவாறு.
காலிங்கர்: உலகத்து உயர்ந்தோராகிய தமது உணர்வினாலும் தாங்கற்றுணர்ந்த நூலினாலும் இவைஇவை தகா என்று ஒரீஇயவற்றைத் தாமும் அவ்வாறு ஒழித்துவிடின் என்றவாறு. [ஓரீஇயற்றை--நீக்கியவற்றை]
பரிமேலழகர்: உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின்.
பரிமேலழகர் குறிப்புரை: இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.
'உலகத்தார்/உலகத்து உயர்ந்தோர்/உயர்ந்தோர் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலகம் தூற்றும் கெட்ட நடத்தையை விடின்', 'துறவிகள் உலகம் பழித்துக் கூறும் குற்றத்தை விலக்கி விட்டால்', 'பழிகள் என்று விலக்கப்பட்ட குற்றங்களைச் செய்யாதிருந்தால்', 'உலகம் பழிக்கின்ற செயலைவிட்டு விட்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உலகத்தார் குற்றம் என்று சொன்னவற்றை விலக்கிவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
உலகம் பழித்தது விலக்கிவிட்டால் மொட்டையடித்தலும் தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளர விடுவதும் வேண்டாம் என்பது பாடலின் பொருள்.
'உலகம் பழித்தது' என்ற தொடர் குறிப்பது என்ன?
உள்ளத்துறவு அமைந்துவிட்டால் புறக்கோலங்கள் எதுவும் தேவையில்லை.
உலகத்தாரால் விலக்கப்பட்ட தீய ஒழுக்கங்களை ஒருவன் முற்றிலும் நீக்கிவிட்டால் தலைமயிரை அறவே நீக்கி மொட்டை அடித்துக்கொள்ளுதலும், சடையை நீட்டி வளர்த்துக் கொள்ளுதலும் ஆகிய வெளி வேடங்கள் அவனுக்கு வேண்டியதில்லை.
துறவறம் பேணக்கருதுவாரில் சிலர், வலிய வேடம் கருதி, முயற்சிமேற்கொண்டு புறக்கோலங்களான தலைமயிரை மழித்தல்/பறித்தல், சடையாகவும், தாடியாகவும் நீட்டல் இவற்றைக் குறியீடாகக் கொள்வர். நெஞ்சத்தால் துறவாமல் இவ்விதம் புறக்கோலங்களுடன் திரிவதை புறத்துறவு என்பர். புறத்துறவு எளிதில் கை கூடக் கூடிய ஒன்று. மழித்தல், நீட்டல் தவிர்த்து, கற்றைச் சடை கொள்ளல், உச்சிக்குடுமி வைத்தல், காவி/வெள்ளை இன்னபிற நிறங்களில் துணி அணிவது, உடை நீக்கல் போன்றவை புறக்கோலத்தில் அடங்கும். இவ்வாறு ஏற்கும் புறப்புனைவுகள் அகத்தூய்மைக்கு அடிகோலுவதும் உண்டு. புறச்சின்னமாகவே தங்கிவிடுவதும் உண்டு. ஆனால் துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்கள் புறக்கோலம் புனைய வேண்டிய தேவை இல்லை; நல்லொழுக்கம் கொண்டு வாழ்ந்தாலே போதும் என்கிறார் வள்ளுவர். உள்ளத்துறவு கொண்டஒருவர், புறத்தேயும் அதனைக்காட்டுமாறு ஏதேனும் கோலம் கொள்வாராயின் குற்றமில்லை. ஆனால் நெஞ்சில் தவவுணர்வு சிறுதும் இல்லாத ஒருவன் புறத்தே மட்டும் கோலம் காட்டித் திரிவது வஞ்சக ஒழுக்கமாகும். வள்ளுவர் முன்வைக்கும் துறவு வாழ்க்கையில் நெகிழ்ச்சி பிறழ்ச்சிகட்கு இடமில்லை. புற வேடமே தவத்தின் உரு என நம்புவதைக் கடிகிறார் அவர். சமயச் சார்புடையவர்களே மிகையாக புறச்சின்னங்களை நம்புகிறார்கள். வெளிப்பார்வைக்கு மாண்பு கொண்ட தோற்றமும், அகத்திலே மாசு கொண்ட எண்ணமும் கொண்டோர் சமயத் துறவிகள் போன்று பொய்க்கோலம் கொண்டு வஞ்சித்து வாழ்வு நடத்துகின்றனர்.
துறவு என்பது ஒழுக்கத்தைப் பொறுத்துதான் அமைய வேண்டும்; வெளி வேடத்தைப் பொறுத்து அல்ல. என்று புறப்புனைவுகளை மட்டும் கொண்ட போலித் துறவை வள்ளுவர் கடிந்துரைக்கிறார். இக்கருத்தை ஒட்டியுள்ள மற்றொரு குறள்: அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. (புல்லறிவாண்மை குறள் எண்:846 பொருள்: தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.) என்பது.
புறவேடங்களால் பெறப்படுபவை எவையுமில்லை. துறவு எண்ணம் கொண்டோர் வேடப்பற்றையும் துறக்க வேண்டுமென்று வ சுப மாணிக்கம் கூறுவார்: "வெளிக்கோலம் அமைவது நல்ல உலகியலாய் இருந்தாலும் குணங்காட்டவும், கொள்கை காட்டவும் புறவடையாளம் மேற்கொள்ளப்படுதல் வழக்காயினும், கொள்கையில்லாதார் ஒரு கோலத்துள் புகுந்து தீங்கு விளைவிப்பர். கோலங்கொள்ளாதார் ஒரு கொள்கையிலர் என விலக்கப்படுவர். "தீயோர்க்கு நொடிப் பொழுதில் புகலிடமாய், நல்லோர்க்கு அஞ்சும் பழிப்பிடமாய் நிற்றலால், புறவேடத்தை ஒரு மெய்த் தோற்றமாக வள்ளுவர் துணிந்திலர். உலகம் பழித்தது ஒழித்து விடின், மழித்தலும் நீட்டலுங்கூட இருக்கலாம் என ஒப்பிட மொழியாது, 'மழித்தலும் நீட்டலும்வேண்டா' என்று வேடப்பற்றுத் தூர உதறினார்."
உலகத்தார் கொண்டிருக்கும் கோலப்புனைவுக்கு எதிர்ப்புக் கருத்தைச் சொல்ல 'வேண்டா' என்ற சொல் ஆளப்பட்டது.
உலகப் பொதுமறை தந்த வள்ளுவரின் உருவத்தை சமணத் துறவி போலவும் திருநீறு பூசிய சைவத்துறவி போலவும் சிலர் கற்பனையாக வெளியிட்டார்கள். அவரது தோற்றம் சில வேளைகளில் 'நீட்டல்' கொண்டதாகவும் இருக்கக் காண்கிறோம். இத்தகைய வள்ளுவர் உருவங்களைக் காண்பவர்க்கு, இக்குறளை எண்ணி, அவரைத் தவறாகக் கருத இடம் கொடுத்து விடாதா என்ற வினா எழுகிறது. வள்ளுவரின் தனி வாழ்க்கையைப் பற்றி நாம் எதுவுமே அறிய இயலாதவராக இருக்கிறோம். அவரது மாறுபட்ட உருவ வடிவங்களும் நம் கற்பனைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் உண்டானவைதான். இக்குறள் ஒழுக்க நெறியற்ற போலித் துறவிகளைப் பற்றியது. குறள் படித்த எவருமே வள்ளுவர் எவ்வளவு தூய்மையான இல்லறவாழ்வு நடாத்தியிருப்பார் என்பதை எளிதில் உணர்வர். அவரை எந்த உருவிலும் கண்டு நாம் மகிழலாம்.
|
|
'உலகம் பழித்தது' என்ற தொடர் குறிப்பது என்ன?
'உலகம் பழித்தது' என்றதற்கு உலகத்தார் கடிந்தவை, மூன்று வகை ஆசையை விடுதல், உலகத்து உயர்ந்தோராகிய தமது உணர்வினாலும் தாங்கற்றுணர்ந்த நூலினாலும் இவைஇவை தகா என்று ஒரீஇயவை, உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கம், உலகம் பழிக்கும் தீயொழுக்கம், உலகம் கூடா எனப்பழித்த செயல்கள். உலகம் தூற்றும் கெட்ட நடத்தை, உலகம் பழித்துக் கூறும் குற்றம், உலகத்தில் பழிகள் என்று விலக்கப்பட்ட குற்றங்கள், உயர்ந்தோர் பழிக்கும் தீய ஒழுக்கம், உயர்ந்தோர் தவத்திற்குத் தகாதென்று கடிந்து விலக்கியவை, உலகம் பழிக்கின்ற செயல், பெரியோர்களால் வெறுக்கப்பட்ட தீய ஒழுக்கங்கள், உயர்ந்தோர் தவத்திற்காகாதென்று தள்ளிய ஒழுக்கம், உலகத்து நல்லோர் வேண்டாத தீய ஒழுக்கங்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,
துறவு என்பது ஒழுக்கத்தைப் பொறுத்ததாதலால், துறவுள்ளம் படைத்தோர்க்கு மொட்டையடித்தலும் முடி வளர்த்தலும் மிகையாகும். ஒழுக்கமாகாது என்று உலகம் தூற்றும் நடத்தையை விட்டொழித்தாலே போதும் என்கிறது இக்குறள். அக்கூடா ஒழுக்கம் எது?
தொல்லாசிரியரான காலிங்கர் “உலகம் பழித்தது” என்பதற்கு உயர்ந்தோராகிய தமதுணர்வானும், நூலறிவானும் இவை இவை தகா என ஒரீஇயவை அதாவது ஒதுக்கியன என்று விளக்குவார். தம்முடைய துன்பத்தைத் தாங்கிக் கொள்வதும் ஏனைய உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவத்திற்கு உரு என்று வரையறுத்து முன்பு சொல்லப்பட்டது; வெளி வேடங்கொண்டு மக்களை வஞ்சிக்காமல் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தாலே போதும் எனச் சொல்லப்படுகிறது இங்கு. மாளிகையிலிருந்தாலும் மலைக்குகையில் வசித்தாலும் மனத்தை அடக்கி, புறவேடங்களின்றியே, உயிர்ப்பொதுமை உணர்வுடன் இருப்பதே துறவாகும்.
உலகம் பழிக்கும் செயல்களை விலக்காமல் இருந்தால் அது துறவு ஆகாது. பற்றற்றேம் எனச் சொல்லிக்கொண்டு மறைவாக ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டு துறவி என்ற பெயரில் உலா வருபவர் பலர். இவர்கள் மறைந்திருந்து செய்யும் எல்லாமே பழிக்கப்பட வேண்டிய செயல்களாகத்தான் இருக்கும். இதைப் 'படிற்றொழுக்கம்' என்றும் குறள் குறிப்பிடுகிறது. காம இன்பங்களைத் தேடி அனுபவிப்பது - பிறன்மனைவியைச் சேர்வது, தன் அடாத செல்வாக்கினால் விருப்பமில்லா மகளிருடனும் கூடுதல், பிறர் சொத்தை மிரட்டல் வழிகளில் பறித்தல், கட்டப்பஞ்சாயத்துச் செய்து பணம் ஈட்டல், சட்டத்துக்கு எதிரான பணமாற்றங்கள் செய்தல் போன்றவை போலித்துறவிகளது உலகம் பழிக்கும் செயல்களாம்.
துறவு பூண்டுவிட்டபின், செல்வம், அரசியல், செல்வாக்கு, அவைகளால் கிடைக்கும் புகழ் போன்றவைகளின் வேட்டையில் ஈடுபட என்ன தேவை உள்ளது? வேடங்கள், சடங்குகள் போன்றவையும் வேண்டியதில்லை. களங்கமற்ற, ஒளிவு மறைவு இல்லாத வாழ்வே துறவுக்குப் போதுமானது என்பது வள்ளுவம்.
'உலகம் பழித்தது' என்பது சமுதாய ஒழுங்கமைப்பைப் போற்றும் உலகத்தார் குற்றமென்று கூறுவது குறித்தது.
|
|
உலகத்தார் குற்றம் என்று சொன்னவற்றை விலக்கிவிட்டால் மொட்டையடித்தலும் தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளர விடுவதும் வேண்டாம் என்பது இக்குறட்கருத்து.
கூடாவொழுக்கம் ஒழித்தவர்க்கு வேடம் வேண்டியதில்லை.
உலகம் பழித்துக் கூறும் குற்றத்தை நீக்கி விட்டால், தலையை மொட்டை அடித்துக் கொள்ளுதலும் முடியை நீட்டி வளர்த்தலும் வேண்டியதில்லை.
|