இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0279



கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:279)

பொழிப்பு (மு வரதராசன்): நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: செவ்விய கணை கொடுமையைச் செய்யும்; கோடியயாழ் செவ்வையைச் செய்யும்; அதுபோல யாவரையும் வடிவுகண்டறியாது; அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறிந்துகொள்க.

பரிமேலழகர் உரை: கணை கொடிது யாழ் கோடு செவ்விது - அம்பு வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது, யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது. ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் - அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர்செயல்பட்ட கூற்றானே அறிந்து கொள்க.
(கணைக்குச்செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறியும் ஆறு கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: அம்பு வடிவத்தால் நேரே செவ்விதாயிருப்பினும் செயலால் கொடிது; யாழினது தண்டு வடிவத்தால் வளைந்ததாயினும் செயலால் செவ்வியது. அது போல மாந்தர்களையும் புறவேடம், வடிவங்களை வைத்து மயங்காமல், அவரவர் செயல்களை வைத்துக் கொடியவர், செவ்வியர் என அறிந்து கொள்ளவேண்டும். புறவேடம் பலவற்றாலும் நல்லவர்போல் நடித்து ஏமாற்றும் அனைவரையும் இக்குறள் சாடுகிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்.

பதவுரை:
கணை-அம்பு; கொடிது-தீயது; யாழ்-வீணை போன்ற ஒரு வகை நரம்பு இசைக்கருவி; கோடு-வளைவு, கொம்பு; செவ்விது-நேரானது; ஆங்கு-அவ்வகையே; அன்ன-அதுபோன்ற; வினைபடுபாலால்-செயலின் விளைவுப் பகுதி; கொளல்-அறிக.


கணைகொடிது யாழ்கோடு செவ்விது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செவ்விய கணை கொடுமையைச் செய்யும்; கோடியயாழ் செவ்வையைச் செய்யும்;
பரிப்பெருமாள்: செவ்விய கணை கொடுமையைச் செய்யும்; கோடியயாழ் செவ்வையைச் செய்யும்;
பரிதி: அம்பு செவ்வையாயிருந்தும் கொலை விளைத்தது; யாழ் கோணியிருந்தும் இன்பம் விளைத்தது;
காலிங்கர்: உலகத்துக் கணையினது உருபு சாலச் செவ்விதாயினும், மற்று அதன் வினை சாலக் கொடிது; யாழினது உருபு சாலக் கோட்டமுடைத்தாயினும் மற்று அதன் வினைவழி சாலத் செவ்விது;
பரிமேலழகர்: அம்பு வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது, யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது.
பரிமேலழகர் குறிப்புரை: கணைக்குச்செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல்.

'செவ்விய கணை கொடுமையைச் செய்யும்; கோடியயாழ் செவ்வையைச் செய்யும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பார்வைக்கு அம்புநேர்; யாழ்வளைவு', 'அம்பு வடிவால் நேரிது. செயலால் கொடிது. யாழின்கோடு வடிவால் வளைவினது. செயலால் இனியது', 'பாணம் கோணலின்றி இருந்தாலும் அது கொலை செய்யக்கூடியது. வீணை கோணலாக இருந்தாலும் இனிமை செய்யக் கூடியது', 'அம்பானது வடிவத்தால் நேராக இருந்தபோதிலும் செயலாற் கொடியது; யாழானது வளைந்த தாயினுஞ் செயலாற் சிறந்தது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அம்பு வடிவால் நேரிதாயினும் கொடிது; யாழ் வளைவாயிருந்தாலும் செவ்விது என்பது இப்பகுதியின் பொருள்.

ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல யாவரையும் வடிவுகண்டறியாது; அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறிந்துகொள்க.
பரிப்பெருமாள்: அதுபோல யாவரையும் வடிவுகண்டறியலாகாது அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறியப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தவவரை அறியுமாறென்னை என்றார்க்குக் கூறப்பட்டது.
பரிதி: அதுபோலே தவத்தார் வேஷங்கண்டு கொள்ளவேண்டாம்; அவரவர் ஞான நெறியுறுதியை அறிந்து கொள்க என்றவாறு.
காலிங்கர்: அவ்விடத்தவ்விடத்து ஈண்டும் தன் குற்றம் தெரிந்த கூடாவொழுக்கத்தையும் மற்றதனின்றும் தெரிந்துணரும் இடத்து அத்தன்மையாகிய வினைவிடு பகுதியால் தெரிந்துகொள்க; மற்றுருபின் பகுதியால் கொள்ளற்க என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர்செயல்பட்ட கூற்றானே அறிந்து கொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறியும் ஆறு கூறப்பட்டது.

'அதுபோல யாவரையும் வடிவுகண்டறியாது; அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறிந்துகொள்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆயினும் செயலைக் கண்டு உண்மை அறிக', 'ஆதலால், நல்லவர் தீயவர் என்பதை வடிவால் கொள்ளாமல் அவரவர் செயலால் அறிந்து கொள்க', 'அப்படிப் போல மக்களை அவரவர்கள் செய்யும் காரியங்களின் தன்மையை அறிந்து அவர்களை மதிப்பிட வேண்டும்', 'அப்படியே தவஞ் செய்வாருள் கெட்டவர் நல்லவர் என்பதை உருவத்தாற் றுணியாது அவர்களுடைய செயல் வகையின் வைத்து அறிந்து கொள்ளல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆதலால் செயல்வகையால் அறிந்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அம்பு வடிவால் நேரிதாயினும் கொடிது; யாழ் வளைவாயிருந்தாலும் செவ்விது ஆதலால் செயல்வகையால் அறிந்து கொள்க என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

நேராகத் தோன்றும் அம்பு கொடிய செயல் புரிகிறது; வளைவான யாழ் இனிய இசையை நல்குகிறது. ஒருவரை வெளித் தோற்றங்களால் அல்ல, அவரது செயல்வகைகளால் மதிப்பிடுக.

அம்பானது பார்ப்பதற்கு அழகாகத் தோன்றினாலும் அதன் தொழில் கொடியது; கொல்வது. யாழினது கொம்பு வளைந்து தோன்றினாலும் இனிய இசை தருவதில் சிறந்ததாக இருக்கிறது. அவ்விதமே மக்களுள்ளும் வெளிக்கோலங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் மதித்தற்கு உரியவர்களா அல்லரா என்று தீர்மானித்தல் வேண்டும்.

ஒருவர் எப்பொழுதும் தான் உடுத்தும் ஆடைகளிலும், அணிமணிகளிலும் தனிக் கவனம் செலுத்தி சீரான தோற்றப் பொலிவுடன் இருக்கிறார். ஆளும் காண்பதற்கு எடுப்பாய், வசீகரமாய் அழகுநலத்துடன் விளங்குகிறார். ஆனால் அவரது நடவடிக்கைகள் எல்லாம் மறைவாக, கோணல்மாணலாக இருக்கின்றன. இன்னொருவர் அழகுநலம் இன்றி, அவரது நடை உடைகளில் ஆர்வம் செலுத்தாமல் காட்சிக்குக் கரடுமுரடாகத் தோன்றுகிறார். ஆனால் குணத்தில் தங்கமானவர். இவர்கள் இருவரில் விரும்பத்தக்கவர் யார் என்பது சொல்லாமலே தெரியும். இரண்டாமவர்தாம் அவர்.
இக்கருத்தை விளக்க வள்ளுவர் அம்பையும் யாழையும் ஒப்பிடுகிறார். அம்பு நேரான வடிவம் உடையதானாலும் செயலிலோ கொடியது; இசைக்கருவியான யாழ் தன் வடிவத்தில் வளைவுடையது. ஆனால் செயலிலோ செவ்வியது-இனிய இசை தரவல்லது; அது போலத் தோற்றப் பொலிவுடைய வஞ்சகர்கள் கொடியராய் இருப்பர். வளைந்திருந்தாலும், யாழின்கோடு நன்மை பயப்பது போலத் தோற்றப் பொலிவற்றவர்கள் உண்மையானவராய் இருப்பர் என விளக்கமும் தருகிறார்.
பொருள்களின் வடிவும் செயலும் எப்படி ஒத்திசைந்து செல்ல வேண்டியதில்லையோ அதுபோன்று மனிதர்களின் உருவமும் அவர்களது குணமும் ஒன்றுபட்டிருக்க வேண்டியதில்லை. அவர்களின் செயற்பாடுகளிலிருந்து அவர்களது ஒழுக்கம் பற்றி அறியவேண்டும்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

கல்வியால். பதவியால் பெற்ற பொலிவுள்ள (வானுயர்) தோற்றம், பிறரை மிரளவைக்கும் ஆற்றல்மிக்க உருவம் (வல்லுருவம்), புறத்தே குன்றிமணி போன்று செம்மையுடையராய்த் தோற்றம் (குன்றி கண்டனையர்), சடங்குகளிற் சிறந்த மாட்சிமையுடையார் (மாண்டார்) தோற்றம் ஆகியவை இவ்வதிகாரத்தில் முன்பு பேசப்பட்டன. இங்கு பொய்யொழுக்கம் கொண்டாரது எழில்நலம் காட்டும் வெளித்தோற்றம் கூறப்படுகிறது.
கணை அதாவது அம்பு செயல்படும்போது துன்பம் நேர்கிறது; யாழ் செயல்படும்போது இன்பம் உண்டாகிறது. அதுபோல, மக்களின் பண்புகளை அவர்களது செயல்வகையால் அறியவேண்டுமேயல்லாது, புறவடிவு கொண்டு அல்ல என்கிறது பாடல். உண்மையானவர்களைக் கண்டறிய வேண்டுமானால், புறத் தோற்றம் உதவாது. ஒருவர் செய்யும் செயல்களின் தன்மைகளின் துணைகொண்டு அறிய வேண்டும்; உருவு அல்லது வடிவு வேறாகவும், செயல் வேறாகவும் இருக்கும். தோற்றத்தை மட்டும் நம்பி நாம் எடுக்கிற முடிவுகள் பிழையாகிப் போனால் அதன் விளைவுகள் ஈடுசெய்ய முடியாத இழப்புகளாக ஆகிவிடும் என்பதால் வஞ்சமனத்தார் வலையில் எவரும் அறியாமல் வீழ்ந்து விடக்கூடாது என எச்சரிக்கிறது இக்குறள்.
'வெளுத்ததெல்லாம் பாலல்ல', 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என நாம் அடிக்கடி பயன்படுத்தும் பழமொழிகள் இக்குறட்கருத்தைச் சொல்லுவனவே.

இவ்வதிகாரம் துறவற இயலில் வைக்கப்பட்டுள்ளதால், இப்பாடலும் கூடாஒழுக்கம் மேற்கொள்ளும் துறவிகள் பற்றியதுதான் எனத் துணியலாம்.
அழகாயிருக்கிறது பார்க்க நன்றாயிருக்கிறது என்று ஒரு பொருளைக் கொள்ளாதே; அது தீங்கு செய்வதாக இருக்கலாம். கோணலாயிருக்கிறது வளைவாயிருக்கிறது என்று ஒரு பொருளை வெறுக்கக்கூடாது; அதன் பயன் மிகையாக இருக்கலாம். அதுபோல் தோற்றத்தால் ஒரு துறவி எழில்நலம் மிக்கவராக இருக்கலாம். ஆனால் அவர் காமம், வெகுளி, வஞ்சம், பொய், களவு போன்ற கேடான ஒழுக்கங்களை/குணங்களைக் கொண்டிருக்கலாம். அவர் பின்சென்றால் இழப்பு அளவற்றதாக இருக்கும். உண்மையாகவே துறவு மேற்கொண்டவர்கள் பார்ப்பதற்கு அவ்வளவு மிடுக்காக இல்லாதவராக இருக்கலாம். ஆனால் அவர்கள் உயிர்களுக்கு நன்மை செய்யும் அருளாளர்களாக இருப்பர். ஆகையால் துறவியரின் நன்னடத்தைகளை ஆராய்ந்து அவரைச் சேர்க. துறவியரின் ஒழுகல்முறை தீச்செயல்களுக்குக் காரணமாயிருப்பின் தகாதவர் என்றும் அறத்திற்குக் காரணமாயிருப்பின் தக்கவர் என்றும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும். அவரவர் செய்யும் செயல்களின் பகுதியாலே அறிந்துகொள்க; உருபின் பகுதியால் கொள்ளற்க என்பது செய்தி.

அம்பு வடிவால் நேரிதாயினும் கொடிது; யாழ் வளைவாயிருந்தாலும் செவ்விது ஆதலால் செயல்வகையால் அறிந்து கொள்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கூடாஒழுக்கம் உடையவனது வெளித்தோற்றம் சீராகவும் இருக்கும்.

பொழிப்பு

அம்பு வடிவால் நேர்; செயலால் கொடிது. யாழின்கோடு வளைவானது; செயலால் இனியது. ஆதலால், செயலால் அறிந்து கொள்க