இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0274



தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:274)

பொழிப்பு (மு வரதராசன்): தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தவம் அல்லாத தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

மணக்குடவர் உரை: தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும்.
அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.

பரிமேலழகர் உரை: தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும்.
( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.)

குன்றக்குடி அடிகளார் உரை: தவத்தின் கோலம் கொண்டு தவத்திற்குரியன அல்லாத கொடிய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து நின்று பறவைகளை வீழ்த்தும் வேடனின் செயலை ஒக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தவம்மறைந்து அல்லவை செய்தல் வேட்டுவன் புதல்மறைந்து புள்சிமிழ்த்து அற்று.

பதவுரை:
தவம்-தவவேடம்; மறைந்து-மறைந்து; அல்லவை-தீய செயல்கள்; செய்தல்-இயற்றல்; புதல்-புதர்; மறைந்து-ஒளிந்து; வேட்டுவன்-வேடன்; புள்-பறவை; சிமிழ்த்து-பிணித்து; அற்று-அத்தன்மைத்து.


தவம்மறைந்து அல்லவை செய்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல்;
பரிப்பெருமாள்: தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல்;
பரிதி: தவவேடத்திலே மறைந்து அவநெறி செய்வாரும்;
காலிங்கர்: ஒருவன் தவத்தின் மறைந்து நின்று அல்லனவற்றைச் செய்தொழுகுதல் எத்தன்மைத்தோ எனில்;
பரிமேலழகர்: அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல்;
பரிமேலழகர் குறிப்புரை: 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.

'தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேடத்தில் மறைந்து வேண்டாதன செய்தல்', 'தவக் கோலத்தில் மறைந்திருந்து ஒருவன் தவத்திற்குப் புறம்பான தீய செயல்களைச் செய்தல்', 'தவக்கோலத்தில் மறைந்துநின்று தவறானவற்றைச் செய்தல்', 'பிறரால் மதிக்கத் தகும் தவ வேடத்தின்கண் மறைந்து கொண்டு தீயனவற்றைச் செய்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தவ வேடத்தின்கண் மறைந்து கொண்டு நல்லதல்லாதவற்றைச் செய்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும்.
மணக்குடவர் குறிப்புரை: அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.
பரிப்பெருமாள்: வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தவவேடம் கொண்டாற்றான் கருதின பொருளெய்துமோ என்றார்க்கு, அவர் ஐயப்படாராதலின், எய்துமென்று அதற்குக் காரணம் காட்டிற்று. அர்ச்சுனன் (தவமறைந்தல்லவை செய்தான்).
பரிதி: செடியில் மறைந்து புள்ளை வதைப்பாருஞ் சரி என்றவாறு.
காலிங்கர்: வேட்டுவனானவன் புதலினுள் மறைந்து நின்று பேடை சேவல் என்னும் புள் விரும்பி வாய்மேல் விரலால் எற்றிப்பயில விளித்த அத்தன்மைத்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: புதல் என்றது சிறு செடி. சிமிழ்த்தல் என்றது, அவன் வாய்மேல் விரலெற்றி அதுபட விளித்தல்.
பரிமேலழகர்: வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும்.

'வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். சிமிழ்த்து என்றதற்குக் காலிங்கர் 'வாய்மேல் விரலெற்றி அதுபட விளித்தல்' என உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'புதரில் மறைந்து பறவை பிடிப்பது போலாம்', 'வேட்டுவன் புதரில் மறைந்திருந்து பறவைகளைப் போல ஒலித்து அவற்றைப் பிடித்தாற் போலும். (சிமிழ்த்தல்-ஒலித்தல்)', 'வேடன் ஒருவன் ஒரு புதரிலே மறைந்து நின்று பறவைகளை வலையில் பிணித்தாற் போலாகும்', 'வேடன் புதரின் கண்ணே மறைந்து நின்று பறவைகளைப் பிடித்தலை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வேடன் புதரில் மறைந்து நின்று பறவைகளைப் பிடித்தலை ஒக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தவ வேடத்தின்கண் மறைந்து கொண்டு நல்லதல்லாதவற்றைச் செய்தல், வேடன் புதரில் மறைந்து நின்று பறவைகளைப் பிடித்தலை ஒக்கும் என்பது பாடலின் பொருள்.
'புள்சிமிழ்த்து' என்பதன் பொருள் என்ன?

புதரிலே மறைந்து நின்று பறவைகளை வேட்டையாடுதல் போன்றது தவக்கோலத்தில் தீயஒழுக்கம் மேற்கொள்வது.

தீயஎண்ணங்களுடன் ஒருவன் தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தீச்செயல்கள் புரிவது, வேடன் ஒருவன் ஒரு புதரிலே மறைந்து நின்று பறவைகளைப் பிடித்தலுக்குச் சமம் ஆகும்.
தனக்குற்ற தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதலும் பிற உயிர்களின் நலம் கருதலுமே தவத்திற்கு உரு என்பது வள்ளுவம். துறவு மேற்கொள்ளும் சிலர் புற அடையாளங்களாக சிலவற்றை அணிந்து கொள்வர். இது துறவுக்கோலம் அல்லது தவவேடம் எனப்படும். வேடம் கொண்டார் எல்லோருமே துறவு மேற்கொண்டோர் அல்லர். அவருள் பல தீயரும் உளர். அவர்கள் வஞ்ச மனத்தினர். தவ வேடத்தில் ஆகாத செயல்களை மேற்கொள்ளுவர். மற்றவர் தம் மீது கொண்ட நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு தவம் என்றதில் தங்கள் உண்மை உருவை மறைத்துக் கொண்டு வாழ்பவர்கள் இவர்கள். பிறரை வஞ்சித்து வாழும் இவர்கள் புதரிலே மறைந்து நின்றுகொண்டு பறவைகளை வேட்டையாடுபவர்களை ஒத்தவர்கள் என்கிறார் வள்ளுவர். இவர்கள் செய்வது திட்டமிட்ட குற்றமாம்.

தவம் செய்வதைப் போன்று புறவுலகுக்குப் போக்குக் காட்டி அப்போலிமைக்குள் தன்னை ஒருவன் மறைத்துக் கொண்டு அல்லாதவற்றைச் செய்தொழுகுதல் சொல்லப்பட்டது. ‘அல்லவை செய்தல்’ என்பதற்கு விளக்கமாக பிறன் மனைவியைத் தன்வயப் படுத்தலும் பிறர் பொருளைக் காணிக்கை என்ற பெயரில் பறித்துக்கொள்லுதலுமாகும் என்பர். வேடன் பறவைகளைப் போன்று போலியான ஒலி எழுப்பிப் பறவைகளை ஏமாற்றிப் பிடிக்கின்றான். தவ வேடத்தில் மறைந்து கொண்டு போலித் துறவிகள் கவர்ச்சியான பேச்சாலும் தம் போலிச் செயல்களாலும் மக்களை ஏமாற்றி ஒழுகுகின்றனர்.
புள் என்பது பறவையைக் குறிக்கும் சொல். இங்கு வஞ்சத் துறவி வேடத்தில் ஏமாந்த மாந்தரைச் சுட்டுகிறது. கவிஞர்கள் பெண்களைக் கிளி, அன்னம், மயில் என பறவைகளுக்கு உவமைப்படுத்துவது மரபு. இப்பாடலிலுள்ள புள் என்ற சொல் போலித்துறவியிடம் வீழந்த பெண்களைக் குறிப்பதாகவே உரையாளர்கள் கூறுகின்றனர்.

புதல் என்பது புதர் என்றும் அறியப்படும். இது அடி அடர்ந்த செடிகளின் தூறைக் குறிக்கும். விலங்குகள் பதுங்கும் இடமாகவும் புதர் இருக்கும். புதரில் மறைந்து இருந்து வேடர்கள் பறவைகளைத் தாக்குவர்.

'புள்சிமிழ்த்து' என்பதன் பொருள் என்ன?

'புள்சிமிழ்த்து' என்ற தொடர்க்கு புள்ளைப் பிணித்தல், புள்ளை வதைப்பார், புள் விரும்பி வாய்மேல் விரலால் எற்றிப்பயில விளித்தல், புட்களைப் பிணித்தல், பறவைகளை வலைவீசிப் பிடித்தல், பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பது, பறவைகளை வீழ்த்துதல், பறவை பிடிப்பது, பறவைகளைப் போல ஒலித்து அவற்றைப் பிடித்தல், கண்ணி வைத்துப் பறவைகளைப் பிடிப்பது, பறவைகளை வலையில் பிணித்தல், பறவைகளைப் பிடித்தல், பறவைகளை பிடிக்கத் தந்திரம் செய்வது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

புட்களின்மேல் அம்பு எய்தல். பறவைகளைப் பொறியில் வைத்துப் பிடித்தல், பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடித்தல், பறவைகளை வலைவீசிப் பிடித்தல் என வேட்டுவன் தன்னைப் பறவைகள் காணாதவாறு ஒரு புதரில் மறைந்திருந்து பறவைகளைப் பிடிக்கும் பலவகைகள் கூறப்பட்டன.
தான் செடிபோலத் தழைகளைப் புனைந்து செடிபோலநின்று கூடுவைத்து அங்குக் கூட்டுக் குள்ளே ஒரு பறவையும் வைத்து மற்றப் பறவைகளைப் பிடித்தல் என்பதும் பறவைகளைப் பிடிக்கத் தீவகமாக ஒரு பறவையைக் கட்டி வைத்தது என்பதுவும் உரையாளர்கள் தரும் சுவையான செய்திகள்.
காலிங்கரின் 'புள்விரும்பி வாய்மேல் விரலால் எற்றிப் பயில விளித்து' என்ற உரை புதுமையானது. இது புதலில் மறைந்திருந்து பறவைகள் போல் குரல் கொடுத்து அழைத்துப் பிடித்தல் என்பதைச் சொல்கிறது. '‘இமிழ்’ என்பது போலச் ‘சிமிழ்’ என்பதும் ஒலித்தலையே உணர்த்துவதாகும். இறகு சிறகு; இப்பி சிப்பி என்பன போல இமிழ் சிமிழ் ஆயிற்று. இவ்வேர்ப் பொருள் கண்டு ‘சிமிழ்த் தற்று’ என்பதற்குப் பொருள் கூறிய காளிங்கர் உரை சிறப்பினதாகும்' என்பார் இரா சாரங்கபாணி.

'புள்சிமிழ்த்து' என்றதற்குப் பறவைகளை ஒலித்து அழைத்து என்ற பொருள் பொருந்துவதாகலாம்.

தவ வேடத்தின்கண் மறைந்து கொண்டு நல்லதல்லாதவற்றைச் செய்தல், வேடன் புதரில் மறைந்து நின்று பறவைகளைப் பிடித்தலை ஒக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

களங்கமற்றோரையும் தனக்கு இரையாக்கும் கூடாஒழுக்கம் உடையான் பற்றியது.

பொழிப்பு

தவவேடத்தில் மறைந்து ஆகாதன செய்தல் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிப்பது போலாம்