இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0260



கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:260)

பொழிப்பு (மு வரதராசன்): ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

மணக்குடவர் உரை: கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும்.
மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென்றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.

பரிமேலழகர் உரை: கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.
(இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.)

சி இலக்குவனார்: உரை: ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைகூப்பி தொழும்.

பதவுரை:
கொல்லான்-பிற உயிர்களைக் கொல்லாதவன்; புலாலை-இறைச்சியை; மறுத்தானை-நீக்கியவனை; கை-கை; கூப்பி-கும்பிட்டு; எல்லா-அனைத்து; உயிரும்-உயிரும்; தொழும்-வணங்கும்.


கொல்லான் புலாலை மறுத்தானை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனை;
பரிப்பெருமாள்: கொல்லானுமாய்ப் புலாலுண்பதனைத் தவிர்த்தவனை;
பரிதி: கொல்லாமையும் புலால் மறுத்தலும் உள்ளானை;
காலிங்கர்: தனக்குச் சுவை கருதி ஒன்றினைக் கொல்லானுமாய்ப் புலாலினைத் தின்ன மறுப்பது செய்வானுமாய் இருந்தானை;
பரிமேலழகர்: ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை;
பரிமேலழகர் குறிப்புரை: இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார்.

'கொல்லானுமாய் புலாலையும் உண்ணாதவனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொல்லாதவனையும் புலால் உண்ணாதவனையும்', 'ஓருயிரையும் கொல்லாதவனாய், கொல்லப்பட்ட புலாலைத் தின்னாதவனாய் உள்ள அருளாளனை', 'புலால் உண்பதற்காகப் பிறிதொரு பிராணியைத் தானும் கொல்லான் பிறர் கொன்று விற்கும் புலாலையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்', 'ஓர் உயிரையுங் கொல்லாது ஊனையும் உண்ணாது இருப்பவனை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை என்பது இப்பகுதியின் பொருள்.

கைகூப்பி எல்லா உயிரும் தொழும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கை குவித்து எல்லாவுயிருந் தொழும்.
மணக்குடவர் குறிப்புரை: மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென்றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.
பரிப்பெருமாள்: கை குவித்து எல்லாவுயிருந் தொழும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, மேல் எல்லாப்புண்ணியத்திலும் நன்றென்றார்; அது யாதினைத் தருமென்றார்க்குக் எல்லாத் தேவர்க்கும் மேலாவனென்று கூறப்பட்டது.
பரிதி: எல்லா உயிரும் தொழும் என்றவாறு.
காலிங்கர்: அனைத்து உயிரும் கைகூப்பித் தொழும் என்றவாறு.
பரிமேலழகர்: எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.
பரிமேலழகர் குறிப்புரை: இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.

'கை குவித்து எல்லாவுயிருந் தொழும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கைகூப்பி எல்லா உயிர்களும் வணங்கும்', 'எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்', 'அப்படிப்பட்டவனை எல்லா உயிர்களும் கை குவித்து வணங்கும்', 'எல்லா உயிரும் கைகுவித்து வணங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எல்லா உயிரும் கை குவித்து வணங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

உணவிற்காக எந்த உயிரையும் கொல்லாதவனாய் புலால் உண்ணுதலை நீக்கி வாழுகின்ற அருளாளனை எல்லா உயிர்களும் வணங்கும்.

ஓருயிரையும் கொலை செய்யாதவனுமாகி, புலாலுண்பதையும் விலக்கியிருப்பவன் எல்லாவுயிர்களும் கைகுவித்துத் தொழக்கூடிய சிறப்பைப் பெறுவான் என்கிறது பாடல். கொல்லாதவன் புலால் உண்பவனாக இருக்கலாம். புலால் உண்ணாதவன் கொல்பவனாகவும் இருக்கலாம் என்பதால் இவ்விரு அறங்களையும் மேற்கொள்பவன் பேரருளாளனாக மதிக்கப்படுவான் என்பது உணர்த்தப்பட்டது.
தனக்கோ அல்லது பிறர் உண்ணுதலுக்காகவோ உயிர்களைக் கொல்லாதவனாய், தானும் புலால் உண்ணலை மறுப்பவனாய் உள்ளவனை, இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களுமே, கை கூப்பி வாழ்த்தும் என்று ஊக்க வழியில் புலால் உண்ணாமையை வலியுறுத்துகின்றார்.
அனைத்து உயிர்களும் கைகூப்பித் தொழும் என்று சொல்லப்பட்டதால் தொல்லாசிரியர்கள் அவன் தேவர்க்கும் மேலாவன் என்று பொருள் கூறினர்.
எல்லா உயிர்களும் கைகுவித்து வணங்கும் என்பது உயர்வுநவிற்சி அணிபட அமைந்தது.

தொழுது என்பது வணங்கு என்பதற்கு இணையாக வந்துள்ளது. தொழுத கையுள்ளும் படையொடுங்கும்... (கூடாநட்பு 828 பொருள்: வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்....) என்ற பாடலிலும் இதே பொருளில் வந்துள்ளது.
மதிப்புக்குரியவரைக் காணும்போது கை கூப்பி வணக்கம் தெரிவிப்பது வழக்கம். ஓருயிரைக் கொல்லானுமாய்ப் புலால் தின்ன மறுப்பவனுமாய் இருப்பவன் அத்தகைய வணக்கத்துக்கு உரியவன் என்கிறது பாடல்.
உயிர்கள் பேணிக் காக்கப் பெறுதலால் காக்கப் பெற்ற உயிர்கள் காத்த மக்களைத் தொழுது வாழ்கின்றன; அவை ஏன் தொழும் என்பதற்கு இவனால் தம் உயிருக்கும் கேடில்லை யென்பது கருதி என்றும் தமது கைகளைத் தலைக்குமேல் தூக்கி என்னை விட்டுவிடுங்கள் என்று பிற உயிர்களைக் கொல்லாதவனை எல்லா உயிர்களும் போற்றி நன்றி செலுத்தும் என்றும் விளக்கம் கூறினர்.

எல்லா உயிரும் என்பதில் புழு, பூச்சி, பறவை, ஆடு, மாடு அடங்கும். இவைகளுக்குக் கை உண்டா? கூப்பத் தெரியுமா? பின்னங்கால்களில் நின்று கொண்டு, முன்னக்கால்களை உயர்த்தி, கைகூப்பி உயிரினங்கள் வணங்கும் என்று பொருள் கொள்ளலாமா? என வினாக்களை எழுப்பினர். கைகூப்பி என்ற சொல் வந்ததனால் கையுள்ள மனிதர்கள் அனைவரும் அவனைத் தொழுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது எனச் சிலர் விளக்கினர்.
கை கூப்பலும் தொழுதலும் மக்களல்லாத உயிர்களுக்கு இயலாதென்றாலும், எல்லா உயிர்களும் என்றது அனைத்து உயிர்களையும் கருத்தில் கொண்டுதான் பாடலில் சொல்லப்பட்டது. சொல்லுக்குச் சொல் நேரடிப் பொருள் கொள்வது, சில வேளைகளில் தவறான பொருள் கொள்வதற்கு வழி வகுக்கும். இலக்கிய நயம் தோன்றச் சொல்லும்போது சிறப்பு குறித்து மிகைப்படுத்தல் மரபு. இப்பாடலை அதுபோன்ற மரபு நடையாகக் கொள்ளவேண்டுமேயல்லாமல் கொள்கை காட்டும் கருத்து நடையாக அல்ல.

சென்ற நூற்றாண்டின் இடைப் பகுதி வரை (1856-1950) ஆங்கில நாடக ஆசிரியராகவும், உலகம் அறிந்த அறிஞராகவும் விளங்கியவர் அயர்லாந்து நாட்டில் பிறந்த ஜார்ஜ் பெர்னாட்சா. அவர் புலால் உண்ணா அருளாளராகவும் இருந்தார். 'ஊனில்லா உணவு முறையே சிறந்தது!' என்பதைத் தம் வாழ்க்கையின் மூலம் உலகிற்கு உணர்த்தியவர். அடிக்கடி, இக்குறளை அவர் மேற்கோள் காட்டுவார். லண்டன் நாளிதழ் ஒன்று 1948 ஆம் ஆண்டு ஒரு கருத்துப்படம் (cartoon) வெளியிட்டது. அதில் பெர்னாட்சா நாற்காலியில் அமர்ந்து இருப்பார். அவருடைய காலடியில் ஆடு, மாடு, மான், பன்றி, கோழி, புறா போன்ற விலங்கினங்களும் பறவைகளும் நன்றியுணர்வோடு அவரை நோக்கிய வண்ணம் படுத்துக் கொண்டும், நின்று கொண்டும் உள்ளன. அவரைச் சுற்றி, கொடிய விலங்குகளான புலி, கரடி, சிங்கம் போன்றவை அமைதியாக நின்று கொண்டு, அவரை ஆர்வத்தோடு நோக்குகின்றன. இந்தப் படம் இக்குறட்பாவிற்கு வரையப்பட்ட நல்லதொரு கருத்து விளக்கப்படமாக அமைந்தது. இதே படத்தை, 1949 ஆம் ஆண்டு, சனவரி மூன்றாம் வார இதழில், தில்லியிலிருந்து வெளிவந்துகொண்டு இருந்த 'ஷங்கர்ஸ் வீக்கிலி' (Shankar's Weekly) அப்படியே வெளியிட்டு, படத்தின் கீழே 'கொல்லான் புலாலை மறுத்தானை...' என்ற இப்பாடலைக் குறிப்பிட்டிருந்தது. 'புலால் உணவை உண்பதை வாழ்க்கைப் போக்காகக் கொண்டுள்ள மேற்குநாட்டு மக்கள் இடையே 'புலால் உண்ணாமை'யே சிறந்த வாழ்க்கை நெறி என்பதனைப் பெர்னார்ட்சா, திருக்குறளைச் சான்று காட்டி விளக்கிவந்தார்' என்பதனை உணர்த்தவே இந்தக் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது (க த திருநாவுக்கரசு நூலிலிருந்து).

இக்குறள் கூறும் செய்தி என்ன?

சமுதாயத்தில் நீண்ட நெடுங்காலமாக ஊறிப் போயிருக்கும் புலாலுண்ணல், கள்ளுண்ணல், சூதாடல் போன்ற தீய பழக்கவழக்கங்களைக் களைந்தெறிவது மிகக் கடினம். ஆனாலும் வள்ளுவர் போன்ற அறவாணர்கள் அவற்றை நீக்க, அவ்வக்காலங்களில் தொடர்ந்து முயன்று கொண்டுதான் இருக்கின்றனர்/இருப்பர். மனிதர்களிடம் அருளுணர்வு பெருகவேண்டும் என்ற நோக்கில் புலால் உண்ணாமையை வலுவாக மக்கள்முன் வைக்கின்றார் வள்ளுவர். ஊன் உண்பவனை நரகம்கூட ஏற்காது என்று அச்சப்படுத்தியும் பிற உயிர்களின் புண்ணையா தின்கிறாய் என்று அருவருப்பு காட்டியும் புலால் உண்ணாமையை வற்புறுத்தியவர் இப்பாடலில் கொல்லாமை, புலாலுண்ணாமை அறங்கள் பேணுபவன் உலக உயிர்களால் நன்கு மதிக்கப்படுவான் என்று சொல்லி ஊக்கவழியில் அறிவுரை பகர்கின்றார்.

இன்று நம் நாட்டிலும் பிறநாடுகளிலும், உயிர்களைக் கொல்லாமலும் புலால் நீக்கிய உணவை உண்பவர்களாகவும் மிகுதியாக உள்ளனர். அவர்களை எந்த உயிரும், அந்தக் காரணங்களுக்காக, கை கூப்பித் தொழுவதை நாம் பார்க்க முடிவதில்லை. இக்குறளில் கொல்லான் புலால் மறுத்தானின் உயர்வு சுட்டப் பெறுவதே நோக்கம் என்பதும் எல்லா உயிரும் அவனைத் தொழுதலை வலியுறுத்துவதற்காகச் சொல்லப்படவில்லை என்பதும் அறியப்படவேண்டும்.

ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புலால்மறுத்தல் வணக்கத்துக்குரியது.

பொழிப்பு

ஓருயிரையும் கொல்லாதவனாய், கொல்லப்பட்ட புலாலைத் தின்னாதவனாய் உள்ளவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும்.