இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0244



மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:244)

பொழிப்பு (மு வரதராசன்): தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

மணக்குடவர் உரை: நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார்.
இது தீமை வாராதென்றது.

பரிமேலழகர் உரை: மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.
(உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: எல்லா உயிர்களையும் பேணும் அருளாளனுக்குத் தன்னுயிர் பற்றிய கவலை வினை இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு தன்னுயிர் அஞ்சும் வினை இல் என்ப.

பதவுரை:
மன்-மற்ற; உயிர்-உயிர்; ஓம்பி-பேணி; அருள்-அருள்; ஆள்வாற்கு-ஆள்கின்றவனுக்கு; இல்-உளவாகா; என்ப-என்று சொல்லுவர்; தன்-தனது; உயிர்-உயிர்; அஞ்சும்-நடுங்குகின்றதற்கு ஏதுவாகிய; வினை-செயல்.


மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்கு;
பரிப்பெருமாள்: நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வாற்கு;
பரிதி: தன்னுயிர்போல எல்லாரையும் பரிந்து பார்த்து நடப்பார்க்கு;
காலிங்கர்: இவ்வுலகத்து மன்னப்பட்ட உயிர்கள் அனைத்தையும் பாதுகாத்தியல்வதோர் அருளினை யுடையார்க்கு;
காலிங்கர் குறிப்புரை: மன்ன என்றது நிலைபெறுதலை.
பரிமேலழகர்: நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு;
பரிமேலழகர் குறிப்புரை: உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார்.

'நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலைபேறுடைய உயிர்களைக் காத்து அருள் செய்வானுக்கு', 'உலகத்தில் இருந்து வருகிற மற்ற உயிர்களையெல்லாம் தன்னுயிர் போலக் கருதி கருணை புரிகிறவனுக்கு', 'நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாத்து அருளை மேற்கொண்டவனுக்கு', 'நிலைபேறு உடைய உயிர்களைப் பேணி அருளைக் கொண்டுள்ளோர்க்கு', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உயிர்களையெல்லாம் காத்து அருள் செய்வானுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

இல்என்ப தன்னுயிர் அஞ்சும் வினை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார்.
மணக்குடவர் குறிப்புரை: இது தீமை வாராதென்றது.
பரிப்பெருமாள்: தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தீமை வாராதென்றது.
பரிதி: எந்தக் காலத்திலும் வினையில்லை என்றவாறு.
காலிங்கர்: என்றும் இல்லை என்று சொல்லுவர் சான்றோர்; யாதோ எனின் தனது உயிர், வீட்டின்பத்தின்கண் செல்லுமிடத்துத் தான் அஞ்சுவதோர் காரியம் என்றவாறு.
பரிமேலழகர்: தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.
பரிமேலழகர் குறிப்புரை: அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.

'தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னுயிரை ஒரு பொருட்டாக மதித்து அஞ்சும் செயல்கள் இல்', 'தன்னுடைய உயிரைப் பற்றிப் பயப்படவேண்டிய காரணமே இருக்காது', 'தன் உயிர் நடுங்குவதற்குக் காரணமாகிய தீவினைகள் உண்டாகா', 'தம் உயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய தீவினைகள் இல்லை என்று சொல்வார்கள் (அறிந்தோர்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன் உயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய தீவினைகள் இல்லை என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உயிர்களையெல்லாம் காத்து அருள் செய்வானுக்குத் தன்னுயிர் அஞ்சும் வினை இல்லை என்று சொல்வர் என்பது பாடலின் பொருள்.
'தன்னுயிர் அஞ்சும் வினை' என்ற தொடர் குறிப்பது என்ன?

எல்லா உயிர்களையும் போற்றி அருள் செலுத்துவோனுக்குத் தன் உயிர் அஞ்சத்தக்கது என்று எதுவும் இல்லை.

உலக உயிர்களையெல்லாம் காத்து அருள் செய்வானுக்குத் தன் உயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய தீவினைகள் இல்லை என்று சொல்வர் என்கிறது இப்பாடல்.

இக்குறளிலுள்ள மன்னுயிர் என்ற சொல்லுக்குப் பெரும்பான்மை உரையாளர்கள் நிலைபெற்ற உயிர் என்ற சமயம் சார்ந்த பொருளே கூறியுள்ளனர். மன்னுயிர் என்ற தொடர்க்கு மற்ற உயிர்கள் என்றும் பொருள் கொள்ளமுடியும். குறளில் பல இடங்களில் 'மற்ற எல்லா' என்ற பொருள்படும்படி மன் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. அப்பொருளே இக்குறளுக்கும் ஏற்புடையது. மன்னுயிர் என்பது அக்காலத்துச் சொற்கிடங்கில் இருந்த இருப்புத்தொடரே எனக் கூறுவர். பாவாணரும் ' 'தன்னுயிர் போல் மன்னுயிரையும் எண்ண வேண்டும்' என்னும் பழமொழியில், மன் என்னுஞ் சொல் மற்ற என்று பொருள் படுதலால், அதை யொத்த இவ்விடத்தும் அப்பொருள் உரைக்கப்பட்டது' என்பார். எனவே மன்னுயிர் என்றது மற்ற அனைத்து உயிர்களையும் குறிக்கும் சொல்.
'மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப' என்ற முதலடி எல்லா உயிர்களையும் காக்கும் நோக்கில் அருள் செலுத்துவோர்க்கு இல்லை என்பர் என்ற பொருள் தரும். அருள் செலுத்துவோர் என்றது உலகத்தில் உள்ள மற்ற உயிர்களையெல்லாம் தன்னுயிர்போல் போற்றிப் பாதுகாக்கும் அருளாளர்களைச் சொல்வது. இவர்கள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுவோர் ஆவர்.
தனக்குமுன் வாழ்ந்த அறிஞர்கள்/புலவர்கள் கூறிய கருத்தைத் திரும்பக் கூறும்பொழுது 'என்ப' (அதாவது 'என்பர் என்ற பொருளில்') என்றும் 'என்மனார் புலவர்' போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துவர். அதைப்போல 'இது தன் கருத்தல்ல; முன்னமே பிறரால் சொல்லப்பட்ட மெய்யியலைத்தான் நான் இங்கு கூறுகிறேன்' என்று உலகியல் அறிந்த சான்றோர் சொன்னதாகக் கூற இப்பாடலில் 'என்ப' என்ற சொல் பெய்யப்பட்டது.

உலகிலே வாழ்கின்ற மற்ற உயிர்களைப் பாதுகாத்து, அருள் உள்ளவராய் வாழ்கின்றவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. இவர்கள் ஏனையோர் நலம் கருதித் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உழைப்பவர்கள். தங்கள் உயிர்க்குத் தீங்கு வருமோ என்று எண்ணமே இவர்களுக்கு எழாது. உயிர்க்கொல்லி நோய் பரவிய இடத்திற்கும் சென்று வாழ்ந்து அருட்பணி செய்யும்போதும் தம்முயிர்க்கு என்ன நேரும் என்பதைக் குறித்து சிறுதும் கவலைப்படாமல் இரக்கம் காட்டுவர். உயிர்களிடம் அன்பு காட்டும் இத்தகைய அருளாளர்கள் மற்ற உயிர்களுக்கு வந்த துன்பத்தை தமதெனக் கருதுவர். அவற்றிற்குச் செய்யும் நன்மையே தனக்கு இன்பம் என்றுணர்பவர்கள். அவர்கள் என்றும் அருளுணர்விலேயே வாழ்கிறவர்கள்.

'தன்னுயிர் அஞ்சும் வினை' என்ற தொடர் குறிப்பது என்ன?

'தன்னுயிர் அஞ்சும் வினை' என்ற தொடர்க்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை, வினை, தனது உயிர், வீட்டின்பத்தின்கண் செல்லுமிடத்துத் தான் அஞ்சுவதோர் காரியம், தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள், தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, தனது உயிர் 'எக் கதியிற் புகுமோ' என அஞ்சுவதற்குக் காரணமான தீவினைகள், தன் உயிருக்காக அஞ்சும் தீவினை, தன்னுயிர் பற்றிய கவலை வினை, தன்னுயிரை ஒரு பொருட்டாக மதித்து அஞ்சும் செயல்கள், தன்னுடைய உயிரைப் பற்றிப் பயப்படவேண்டிய காரணம், தன் உயிர் குறித்து அஞ்சுவதற்குரிய தீய செயல்கள், தன் உயிர் நடுங்குவதற்குக் காரணமாகிய தீவினைகள், தம் உயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய தீவினைகள், தம் உயிர் அஞ்சக்கூடிய செயல், தன்னுயிர் அஞ்சுவதற் கேதுவான தீவினைகள் என்றபடி உரையாசிரியகள் பொருள் கூறினர்.

வீட்டின்பத்தின்கண் செல்லுமிடத்து அஞ்சுவதோர் காரியம் என்றும்
தீவினையால் தனக்கு உண்டாகும் துன்பத்தைக் கருதித் தீவினை செய்யப் பயப்படுதல் என்றும்
தீவினைகள் அதாவது பாவங்கள் உளவாகா; நரகம் புகாமைக்கு ஏது கூறியது என்றும்
தன்னுயிர்க்கு இறுதி பயக்கும் செயல் உண்டாகா என்றும்
உயர்ந்த அருளறம் பூண்டோன் தீவினை செய்யான் என்றும்
பிற உயிர்க்கு இடையூற்றை நீக்கக் கருதும் அருளாளன் தன் உயிர்க்கு வரும் துன்பத்தைக் கருதான் என்றும் இத்தொடர்க்கு பலவேறு வகையில் விளக்கம் கூறினர்.

முருகரத்னம் 'அனைத்துயிர் மாட்டும் அன்பு பூண்டொழுகுவார்க்குத் தம்முயிர் ஒருபொருட்டல்ல. அது தம்மை மறந்த நிலை மட்டும் அல்ல; தம்மை இழந்த நிலையும் ஆகும்' என்று இக்குறட்குப் பொருள் கூறினார். அருளாளர் தமது உயிரை ஒருபொருட்டாகக் கருதாமல் அஞ்சாது அதனை இழக்கவும் முற்படுவார் என்ற இக்கருத்து ......... அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (அன்புடைமை குறள் எண்: 72 பொருள்:....அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர்) என்ற குறளை எண்ணச்செய்கிறது.

உயிர்களையெல்லாம் காத்து அருள் செய்வானுக்குத் தன் உயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய தீவினைகள் இல்லை என்று சொல்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அருளுடைமை உயிரச்சம் இல்லாத நிலையில் செயல்படுவது.

பொழிப்பு

எல்லா உயிர்களையும் காத்து அருள் செய்பவனுக்குத் தன்னுயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய தீவினைகள் இல்லை என்று சொல்வர்.