இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0237



புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

(அதிகாரம்:புகழ் குறள் எண்:237)

பொழிப்பு (மு வரதராசன்): தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்துக்கொள்ளக் காரணம் என்ன?

மணக்குடவர் உரை: புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு?
இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.

பரிமேலழகர் உரை: புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி?
(புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.)

சி இலக்குவனார் உரை: தமக்குப் புகழ் உண்டாக வாழமாட்டாதார் தம்மை நொந்து கொள்ளாதவராய்த் தம்மை இகழ்கின்றவர்களை நோவது எதற்கு?


பொருள்கோள் வரிஅமைப்பு:
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.

பதவுரை:
புகழ்பட-புகழ் உண்டாக; வாழாதார்-வாழ மாட்டாதவர்; தம்-தம்மை; நோவார்-நொந்து கொள்ளாதவராய்; தம்மை-தங்களை; இகழ்வாரை-பழிப்பவரை; நோவது-வருந்துதல்; எவன்-என்னத்துக்கு?


புகழ்பட வாழாதார் தம்நோவார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது;
பரிதி: புகழ்பெற வாழவேணும் என்று விரதங்களை நோற்காதவர்கள்;
காலிங்கர்: மற்று இவ்வுலகத்துத் தம்புகழை நிறுத்தி வாழுகை கல்லாதார் தம்மையே நொந்துகொள்ளுமல்லது;
பரிமேலழகர்: தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே;

'புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புகழில்லார் தம்மேல் வருத்தப்படாது', 'புகழ் தோன்ற வாழ முடியாதவர் அக்குற்றத்திற்காகத் தம்மை நொந்து கொள்ளாமல்', 'புகழ் அடையும்படி நடந்து கொள்ளாதவர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொள்ள வேண்டுமேயன்றி', 'புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள் அக்குறைக்காகத் தம்மை நொந்து கொள்ளாது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள் தம்மையே நொந்து கொள்ளாதவர்களாகி என்பது இப்பகுதியின் பொருள்.

தம்மை இகழ்வாரை நோவது எவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு?
மணக்குடவர் குறிப்புரை: இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.
பரிதி: தம்மை இகழ்வாரை ஏன் தான் விதனப்படுவார்கள் என்றவாறு.
காலிங்கர்: மற்றொருவர்க்கு ஈயாத பாவியர் என்று இங்ஙனம் தம்மை இகழந்து உரைப்பாரை நோகின்றது எது கருதியோ என்றவாறு.
பரிமேலழகர்: தம்மை இகழ்வாரை நோவது என் கருதி?
பரிமேலழகர் குறிப்புரை: புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.

'தம்மை இகழ்வாரை நோவது என் கருதி?' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம்மை இகழ்வார்மேல் வருத்தப்படுவது ஏன்?', 'அதுபற்றி இகழ்ந்து கூறுவாரை நொந்து கொள்வது எதற்காக?', 'தம்மை இகழ்வாரை நொந்து கொள்வது எதற்காக?', 'தம்மை இகழ்பவரை நொந்து கொள்வதால் பயன் என்ன?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்மை இகழ்வார்மேல் வருத்தம் கொள்வது எதனால்? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள் தம்மையே நொந்து கொள்ளாதவர்களாகி, தம்மை இகழ்வார்மேல் வருத்தம் கொள்வது எதனால்? என்பது பாடலின் பொருள்.
புகழ் இல்லாதவர்கள் இகழப்படுவது ஏன்?

புகழ் எய்தத் தவறியவர்கள், தம்மை இகழ்வாரைக் குறை கூறுவது என்னத்துக்கு? தம்மைத்தான் நொந்துகொள்ள வேண்டும்.

மற்றவர்கள் புகழ்ந்து போற்றும்படியான நற்குணநற்செயல்களால் வாழமாட்டாதவர்கள் தம்வாழ்வை வீணாக்கிக் கொள்வதற்குத், தம்மை இகழ்வோரை நொந்து கொள்ளாது, தாமேதாம் காரணம் என்று உணரவேண்டும்.
புகழ் என்பது ஒருவருடைய வாழும் முறையால் பெறுவது. ஒருவர் புகழ் விளங்க வாழமாட்டாதவராக இருப்பதற்கு அவரிடம் அதற்கு உரிய நல்ல பண்பும் நல்ல செயலும் இல்லை என்பதைவிட அவர் புகழ்பட வாழ முயற்சி செய்யவில்லை அல்லது அவ்வாறு வாழத் தம் தகுதியினை வளர்த்துக்கொள்ளவில்லை என்பனவே முதன்மைக் காரணங்களாகும். ஒருவருடைய புகழுக்கும் இகழுக்கும் அவரே பொறுப்பு. தங்களைத் தாங்களே முன்னேற்றி புகழ்பட வாழ முயலுதல் வேண்டும். அங்ஙனம் வாழ முயற்சி செய்யாதவர்கள் மற்றவர் இகழும்பொழுது வருந்திப் பயனில்லை. தாம் புகழத்தக்க செயல் ஒன்றும் செய்யாமை அல்லது புகழோடு வாழ்வதற்குண்டான தகுதியினை பெற்றுக்கொள்ளாமை ஆகியவற்றிற்குத் தம்மைத்தான் நொந்துகொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர். பெயர்பெற்று வாழாமைக்கு மற்றவர்கள் இகழ்கிறார்களே என்று இகழ்பவர்களை நொந்துகொள்வதால் பயனில்லை எனவும் அவர் கூறுவார்.
இப்பொழுதாவது அதை உணர்ந்து புகழுண்டாகும்படி வாழ முயற்சி செய் என்று வள்ளுவர் குறிப்பால் அறிவுறுத்துகிறார்.

புகழ் இல்லாதவர்கள் இகழப்படுவது ஏன்?

ஒருவன் புகழடைவதற்கு அவனது நல்லஉள்ளம், முயற்சி, அறிவு, ஆற்றல் போன்றவையே துணை செய்கின்றன. புகழ் பெறுவதற்குரிய செயல்களைச் செய்து வாழ இயலாதவர்களைச் சிலர் எள்ளி நகையாடலாம். ஏன் அவ்விதம் இகழ்ந்து பேசுகின்றார்கள்?
புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவர் என்று தனது விளக்கவுரையில் கூறுகின்றார் மணக்குடவர். புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலை(உறுதி) என்கிறார் பரிமேலழகர். எல்லாரும் புகழை விரும்புவர்; ஆயினும் புகழ்பட வாழ விரும்பார் என்பது உலகியல் என்பர். புகழ்பட வாழாமல் இருப்பது இகழ்ச்சிக்குரியதா? புகழ் பற்றியே நினைக்காதவர்களும் உண்டு; புகழில்லையென்று வருத்தப்படாதவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் ஏன் இகழப்படவேண்டும்?
தன் உழைப்பை மறந்து தன் முன்னேற்றத்துக்கு எந்த முயற்சியும் எடுக்காதவன் இகழப்பட வேண்டியவனே. தனக்கென ஒரு கூண்டு கட்டி தனக்காக மட்டுமே வாழ்ந்து, யாருக்கும் எந்த விதமான உதவியோ நன்மையோ செய்யாமல், புகழ் மறந்து, வாழ்பவன் இகழ்ச்சிக்குரியவனே.
ஒருவன் செய்யும் செயலில் புகழ்பெறும் நோக்கில் திறமை காட்டப்படாவிட்டாலும் இகழப்படவே செய்வான்.
'மற்றொருவர்க்கு ஈயாத பாவியர் என்று இங்ஙனம் தம்மை இகழந்து உரைப்பார்' எனக் காலிங்கர் ஈகை செய்யாதவர் இகழப்படுவர் என்கிறார். ஈயார் இகழப்படவேண்டியவரே (புகழ் என்பது ஈவதால் மட்டுமே பெறப்படுவதல்ல என்பதும் அறியத்தக்கது).

புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள் தம்மையே நொந்து கொள்ளாதவர்களாகி, தம்மை இகழ்வார்மேல் வருத்தம் கொள்வது எதனால்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புகழ்பட வாழாதார் இகழ்ச்சிக்குரியவரே.

பொழிப்பு

புகழ் தோன்ற வாழ முடியாதவர் தம்மை நோவாது தம்மை இகழ்வார்மேல் வருத்தப்படுவது எதனால்?