இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0235



நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது

(அதிகாரம்:புகழ் குறள் எண்:235)

பொழிப்பு (மு வரதராசன்): புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.



மணக்குடவர் உரை: ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது.
இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.

பரிமேலழகர் உரை: நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை.
('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: புகழ்வளர்ச்சிக்கு ஏதுவாய் பொருட் கேடு உறுதலும், புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு இறக்கப் பெறுதலும் நிலையானவற்றை எய்தவல்ல அறிவாற்றலுடையவர்க்கு அன்றி மற்றவர்களுக்கு அரியனவாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது.

பதவுரை:
நத்தம்-ஆக்கம். சங்கு என்றும் பொருள் கொள்வர்; போல்-போன்ற; கேடும்-அழிவும்; உளது-உள்ளது; ஆகும்-ஆகின்ற; சாக்காடும்-இறப்பும்; வித்தகர்க்கு-பேராற்றல் மிக்கோர்க்கு; அல்லால்-அன்றி; அரிது-அருமையானது.


நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும்;
பரிதி: சங்கு ஆயிரம் சூழ்ந்த வலம்புரிபோலே கிளையானது தன்னைச் சூழ வாழ்வது;
காலிங்கர்: வலம்புரிச்சங்கானது தன்னிலை குலைந்து பிறர் கைப்படினும் தன் பெருமை குன்றாததுபோல இல்லமியற்றும் நல்லறிவாளர் தாம் வாழுமிடத்தும் கெடுமிடத்தும் தம் புகழ் விளங்கக் கெடுவதோர் கேடும் அதுவே அன்றி மற்றிறந்துபடினும்;
பரிமேலழகர்: புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், புகழுடம்பு உளதாகும் சாக்காடும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல்.

இப்பகுதிக்கு 'ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும்' என்று மணக்குடவரும் 'சங்கு ஆயிரம் சூழ்ந்த வலம்புரிபோலே கிளையானது தன்னைச் சூழ வாழ்வது கீர்த்திமானுக்குக் கைவரும்' என்று பரிதியும் 'சங்கு சுட்டாலும் நிறம் கருக்காமல் வெண்ணிறப் பொலிவே விளங்கித் தோன்றுதல் போல், தன் தன்மை கெடாது, அரிய செயல் புரிபவர்கள் மிகச் சிலரே, சாவாதவர்போல உலகவரால் போற்றப்படுகின்றனர்; இவர்கள் என்றும் இறவாது புகழால் நிலைத்து நிற்பவர்கள்' என்று காலிங்கரும் உரை கூறியுள்ளனர். பரிமேலழகர் 'புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும் புகழுடம்பு உளதாகும் சாக்காடும்' என்று பொழிப்புரை தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'புகழின் பொருட்டு அழிதலும் சாதலும்', 'சங்கு தன் உடம்பை அழித்துக் கொள்வது போலக் கொடைக்காகத் தன் உடம்பை ஈகம் (தியாகம்)செய்யும் கேடும் அதனால் வரக்கூடிய புகழுக்குரிய சாவும்', 'சங்கு போல உயிர் போன பின்பும் உருவம் இருக்கக்கூடிய அழிவும், உயிரும் உடலும் போன பின்பும் உலகத்தில் பேசப்படும்புகழ் தரக்கூடிய மரணமும்', 'புகழைத்தரும் அழிவும் சாவும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

(புகழ்)ஆக்கத்திற்காகக் கேடுறுதலும் புகழ் நிலைக்கச் செய்து சாதலும் என்பது இப்பகுதியின் பொருள்.

வித்தகர்க்கு அல்லால் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வல்லவற்கல்லது அரிது.
மணக்குடவர் குறிப்புரை: இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.
பரிதி: கீர்த்திமானுக்குக் கைவரும் என்றவாறு.
காலிங்கர்: விரிபுகழ் விளைக்கும் அல்லது மற்றுளோர்க்கு என்றும் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: நிலையாதனவற்றான் நிலையின எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.

'வல்லவற்கு/கீர்த்திமானுக்கு/நல்லறிவாளர்க்கு/சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடையவர்க்கே இயலும்', 'கொடைத்திறம் மிக்க வள்ளலுக்கல்லது இல்லை. (இக்குறள் வள்ளலுக்கன்றிப் புகழ்நாட்டி மாயும் மறவர்க்கும் பொருந்தும்)', 'நல்லறிவு உள்ளவர்களுக்கன்றி மற்றவர்களுக்குக் கிடைக்காது', 'திறமை உடையார்க்கு அல்லது இல்லை. (புகழின் பொருட்டு வாழ்க்கையில் துன்பம் அடைதலும் இறத்தலும் யாவர்க்கும் உரியன அல்ல.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேராற்றல் மிக்கவர்க்கன்றி மற்றவர்க்கு இயலாது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
(புகழ்)ஆக்கத்திற்காகக் கேடுறுதலும் புகழ் நிலைக்கச் செய்து சாதலும் வித்தகர்க்கன்றி மற்றவர்க்கு இயலாது என்பது பாடலின் பொருள்.
'வித்தகர்' என்ற சொல்லின் பொருள் என்ன?

வாழும்போது கேடுற்றபோதிலும் மேலும் உழைத்துப் புகழ் ஈட்டி, தாம் எய்திய புகழால் சாவை வென்று இறவாது வாழும் ஆற்றலுடையோர் பற்றிய பாடல்.

நல்ல செயல்களுக்காக கேட்டையும் சாக்காட்டையும் எதிர்கொள்ளத் துணிபவர்கள் என்றும் அழிவதில்லை. பேராற்றலுடன் அவர்கள் உலக முழுவதும் புகழ்க்கொடி நட்டுவர். வாழும் காலத்தில் கேடுற்றாலும் புகழ் வாழ்வைத் தொடர்ந்து நடத்தி ஒளி வீசித் திகழ்வர். சாவிலும் அவர்களது பூத உடம்புதான் உலகிலிருந்து நீங்கும்; இறந்தபின்பு அவர்கள் ஈட்டிய புகழ் சாவாது நிலைத்து நிற்பதால் அப்புகழுடம்பினால் வாழ்கின்றனராவர். புகழின் பொருட்டு வாழ்க்கையில் துன்பம் அடைதலும் இறத்தலும் யாவர்க்கும் உரியன அல்ல; அழிவில் வாழ்வும் சாவில் உயிர்ப்பும் துலங்கும் உயர்வான வாழ்க்கை அவர்களுடையது. இத்தகைய புகழ் வாழ்க்கையைச் செலுத்த வித்தகத்தன்மை வேண்டும் .
புகழ் என்பது எளிதில் கிடைப்பதல்ல. அது ஒருவனது அன்புள்ளத்தாலும் அறச்செயல்களாலுமே பெற முடிவது; அவனது செல்வத்தையும் அவனையும் அழிக்கும் இயற்கையிடமிருந்து போராடி அடைய வேண்டியது. புகழ்வாழ்வு மேற்கொண்டோர் பிறர் பொருட்டுப் பொருட் கேடு/உடற்கேடு உற்றாலும் அதைக் கேடாகக் கொள்ளார்; புகழெனின் உயிரையும் கொடுப்பர்.

இப்பாடலிலுள்ள முதல் வரியில் நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும் என இரண்டு சொற்றொடர்களில் 'உளதாகும் சாக்காடும்' என்ற இரண்டாம் சொற்றொடர்க்கு இறந்தபின்பும் வாழ்பவர்கள் என்ற பொருளில் கூறப்படும் கருத்தில் மிகுந்த வேறுபாடு காணப்படவில்லை. ஆனால் 'நத்தம்போல் கேடும்' என்ற முதல் சொற்றொடரை விளக்குவதில் இடர்ப்பாடு உண்டானதால் மாறுபாடான உரைகள் தோன்றின.
நத்தம் என்ற சொல்லுக்கு ஆக்கம் என்றும் சங்கு என்றும் இரு வேறுவகையாகப் பொருள் கண்டனர்.
ஆக்கம் எனப் பொருள் கொண்டவர்கள், பொருந்தல், திருந்தல் என்பன பொருத்தம், திருத்தம் என நின்றது போல நந்தல் என்னும் சொல் நத்தம் என நின்றது எனச்சொல்லி நத்தம் என்பதற்கு ஆக்கம் எனப் பொருள் கூறினர். இதனால் 'நத்தம் போல் கேடு' என்ற தொடர்க்குக் கெடுவதுபோல் தோன்றினாலும் உண்மையில் சிறப்புறுவது அதாவது அழிவதுபோல் தோன்றினும் ஆக்கமாவது; புகழுக்கு ஆக்கமாகுங் கேடு என விளக்கம் செய்தனர். 'புகழ் வளர்தல் ஆக்கம்; இதுவளரவளரப் செல்வக்கேடு உண்டாகும். ஆதலால் இது ஆக்கம்போல அதாவது ஆக்க உருவிலே அழிவாயிற்று. அங்ஙனமே புகழுடம்புதோன்ற அதற்குக் காரணமான செயல்கள் ஆற்றிய பூத உடல் அழிந்து 'உளது ஆகுவது போலும் சாக்காடு' ஆயிற்று.
'நத்தம்-சங்கு' எனப் பொருள் கண்டவர்கள், நத்தை தனது உழைப்பையும் உடலையும் தந்து சங்கு என்னும் உறையை ஆக்கித் தான் அழிந்தபின்னும் ஒளிரும் சங்கை விட்டுச்செல்லும் என்றனர். அதுபோல ஈவார் கெட்டாலும் புகழ் விளங்கக் கெடுதலும், செத்தாலும் புகழ் விளங்கச் சாதலும் உடையராவர் எனப் பொருள் கூறினர்.
இவற்றுள் ஆக்கம் என்ற பொருளில் அமைந்த உரைகள் பொருந்துகின்றன.

எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை இக்குறளுக்கு அளிக்கும் விளக்க உரை சுவை மிகுந்ததாக உள்ளது. அது 'நத்தை சங்கு வாழை என்ற பொருள்களை அமைத்து உரைவரையின் பொருள் எளிது விளங்குகின்றது. ‘நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறுங் காலமது கொண்ட கருவழிக்கும்’ என்றனர் ஆன்றோரும். இவற்றிற்கு அழிவு நேரிடும் பொழுது இவை கருக்கொள்ளும்; கரு வளர வளர இவை கேடுறும்; முடிவில் அழியும். அது போன்று சதுரப் பாடுடைய, திறமைவாய்ந்த அறிவாளிகள், வீரர்கள் அன்னாருக்குப் புகழ்க் காதல் உண்டாகும் பொழுது புகழாகிய கருத்து மனத்தில் உண்டாகும் பொழுது, உடற் சுகம் நாடாமல் நாட்பட நாட்பட அதற்குக் கேடு வருவதையும் உன்னாமல் புகழ் வெஃகி மாய்கின்றனர், உயிர் துறக்கின்றனர்' என்பது.

இக்குறளுக்குக் கேடும் சாக்காடும் என்னும் இரண்டு உம்மைகள் சேர்ந்துள்ளதால் அவை 'அரிய' என்று பன்மையில் முற்றுப் பெற வேண்டும். ஆனால் குறளில் 'அரிது' என ஒருமையாக உள்ளது. ஆதலால் பரிமேலழகர் 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டியுரைக்க என்றார். 'நத்தம்போல் கேடும் அரிது; உளதாகும் சாக்காடும் அரிது' எனப் பொருள் பட்டுப் பன்மை-ஒருமை வழு களையப்படும் வழி கண்டார் அவர்.

'வித்தகர்' என்ற சொல்லின் பொருள் என்ன?

வித்தகர் என்ற சொல்லுக்கு வல்லவர், கீர்த்திமான், நல்லறிவாளர், சதுரப்பாடுடையார், அறிவில் சிறந்தவர், அறிஞர், பெரியோர், சாதுரியம் மிக்கவர், திறப்பாடுடையவர், அறிவுடையவர், கொடைத்திறம் மிக்க வள்ளல், நல்லறிவு உள்ளவர், திறம் மிக்கோர், அறிவாற்றலுடையவர், திறமை உடையார், அறிவுடையோர், அறிவாற்றல் நிறைந்தவர், சாமர்த்தியம் உடையவர், திறம்பாடுடையவர், ஆற்றல் மிக்கவர், அறிவாளிகள், வீரர்கள் என உரையாசிரியர்கள் பொருள் கண்டுள்ளனர்.

பிறப்பு, வாழ்வு, இறப்பு இவற்றின் இயல்புகளை அறிந்தவர்கள் புகழ் விரும்பிச் செயல் ஆற்றுவர். இவர்கள் வாழ்க்கையில் கேடுற நேர்ந்தாலும் புகழுக்காக ஆக்கத்தைக் கைவிடமாட்டார்கள். அவர்கள் சாவிலும் புகழ் தொடர்ந்து நிற்கும். திறப்பாடுடையவர்களால் மட்டுமே இத்தகைய வாழ்வு மேற்கொள்ள முடியும். அவ்வாற்றல் கொண்டவர்களை வித்தகர் என்ற சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர். வித்தகரானவர் அறிவு, திறமை, தன்னலமறுப்பு இவை கொண்டு உயர்ந்த புகழ் நிலையை எய்தும் பெரும்ஆற்றல் கொண்டவராய் இருப்பர்.

'வித்தகர்' என்ற சொல்லுக்குப் பேராற்றல் மிக்கவர் என்பது பொருள்.

ஆக்கத்திற்காகக் கேடுறுதலும் புகழ் நிலைக்கச் செய்து சாதலும் பேராற்றல் மிக்கவர்க்கன்றி மற்றவர்க்கு இயலாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இறந்தும் இறவாத புகழ் படைத்தோரைப் பாடுவது.

பொழிப்பு

ஆக்கத்திற்காகக் கேடுறுதலும் புகழ் நிலைக்கச் செய்து சாதலும் பேராற்றல் மிக்கவர்க்கன்றி மற்றவர்க்கு இயலாது.