இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0234



நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

(அதிகாரம்:புகழ் குறள் எண்:234)

பொழிப்பு (மு வரதராசன்): நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

மணக்குடவர் உரை: ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும்.
புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.

பரிமேலழகர் உரை: நிலவரை நீள் புகழ் ஆற்றின் - ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது.
(புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: நில எல்லைக்கண்ணே அழியாது நிற்கும் புகழைச் செய்வார் ஆனால் அவரையன்றிப் பிறர்க்குப் பயன்படாத அறிஞரைத் தேவர் உலகம் போற்றாது (பிறர்க்குப் பயன்படும் வாழ்வு உடையோரையே யாவரும் போற்றுவர் என்பதாம்).


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது.

பதவுரை:
நில-நிலத்தினது; வரை-எல்லை; நீள்-நீண்ட; புகழ்-புகழ்; ஆற்றின்-செய்தால்; புலவரை-தேவரை; போற்றாது-போற்றாது; புத்தேள் உலகு--வானுலகம்.


நிலவரை நீள்புகழ் ஆற்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின்;
பரிதி: பூமியிலே பிறந்தார் புகழுடனே வாழ்வாராயின்;
காலிங்கர்: வையத்து வாழும், இல்வாழ்க்கைப் பண்பினர் யாவரும் கீழ்ச்சொல்லிப் புகழ்ந்த இல்லறத்தினாகிய நெடும்புகழை இடைவிடாது நடத்துவராயின்;
பரிமேலழகர்: ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின்;

'ஒருவன்நில எல்லைக் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகில் நெடும்புகழ் ஈட்டிய மக்களையே', 'நில எல்லை சுருங்கும்படி நீண்டு விரிந்த புகழினை ஒருவன் நிலைநிறுத்துவானாயின்', 'உலகத்தில் இருக்கிற வரையிலும் ஒருவன் நெடு நாளைக்குப் புகழ் நிலைத்திருக்கக்கூடிய நற்செய்கைகளைச் செய்வானாகில்', 'நிலவுலகத்தின் எல்லைவரை பரவிநிற்கும் புகழை ஒருவன் தனக்கு நாட்ட வல்லவனாயின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகின் எல்லைவரை நீண்ட புகழை ஒருவன் செய்வானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

புலவரைப் போற்றாது புத்தேள் உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும்.
மணக்குடவர் குறிப்புரை: புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.
பரிதி: தேவர்களைத் தெய்வலோகத்தார் போற்றார், பூமியில் உள்ளாரைப் போற்றுவர் என்றவாறு.
காலிங்கர்: இவரைப் போற்றுவதல்லது துறவறத்தின்கண் நின்ற புலவராகிய அறிவுடையோரைத் தேவருலகு போற்றாது என்றவாறு.
பரிமேலழகர்: புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது.
பரிமேலழகர் குறிப்புரை: புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.

தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வானுலகம் போற்றும்; தேவரைப் போற்றாது', 'தேவருலகம் அவனைப் போற்றுவதல்லது தன்னிடத்துள்ள தேவர்களைப் போற்றாது', 'அறிவு எட்டுகின்ற வரையில் அது தேவலோகத்தைப் புகழ்ந்து விரும்பாது', 'விண்ணுலகத்தார் அங்கே யுள்ள தேவர்களைப் போற்றாது அவனையே போற்றுவர். (நிலமுள்ளவரை அழியாது நிற்கும் புகழ் என்றலும் பொருத்தமே.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வானுலகம் தேவரைப் போற்றாது, (பிறர்க்குப் பயன்படும் புகழ் வாழ்வுடையவரையே போற்றும்) என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகின் எல்லைவரை நீண்ட புகழை ஒருவன் செய்வானாயின் வானுலகம் தேவரைப் போற்றாது, (பிறர்க்குப் பயன்படும் புகழ் வாழ்வுடையவரையே போற்றும்) என்பது பாடலின் பொருள்.
புலவர் என்பவர் யார்?

உலக அளவு புகழ் பெற்றவரை வானுலகமும் போற்றும்.

இவ்வுலகின் நிலப்பரப்பு முழுதும் புகழ் பரப்பியவரைத் தேவருலகமும் போற்றும். இச்செய்தியைச் சொல்ல வந்த வள்ளுவர் புகழ் ஆற்றியவரின் மேன்மையைப் புலப்படுத்த வானுலகில் உள்ளோர் தன்னிடத்துள்ள தேவரைப் போற்றாது உலகப்புகழ் கொண்டவரையே போற்றுவர் எனக் கூறிச் செல்கிறார். மண்ணின் மேல் வான்புகழ் நடுவது என்பது அருமையுடையது; நிலஎல்லைவரை நீளும் புகழ் எய்தற்கரியது. உலகநலன்களுக்காக உயர்ந்த செயல்களைச் செய்பவர்கள் நிலவுலகின் அளவு நீண்டு விரிந்த புகழ் பெறுவர். அவரையே தேவருலகமும் போற்றிப் பாராட்டும். பிறர்க்குப் பயன்படாதிருப்பவரை அது பாராட்டாது.
பரிமேலழகர் புகழ் பெற்றோர் இவ்வுலகிலும் வானுலகிலும் போற்றப்படுவர் என்பதைச் சொல்ல புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி, எய்துப என்ப........ (புறநானூறு 27 பொருள்: புலவராற் பாடப்படும் புகழையுடையோர் ஆகாயத்தின்கண் பாகனாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவாரென்று சொல்லுவார் அறிவுடையோர்) என்ற சங்கப் பாடலை மேற்கோள் காட்டுவார். புகழுடையாரை விண்ணுலகித்திற்கு வானவூர்தி வந்து அழைத்துச் செல்லும் என்கிறது இப்புறப்பாடல்.
புலவர் குழந்தை 'நிலம் முழுவதும் நெடிய புகழைச் செய்வானாயின் வானுலகம் தேவர்களைப் போற்றாது இவனையே போற்றும். புகழுடையோரை வெளியுலகமும் புகழும் என்பது கருத்து. புத்தேள் உலகு-வெளியுலகு என உரை கூறி' விளக்கத்திற்காக 'மாவலியின் புகழை வானவர் போற்றியதால் இந்திரன் பொறாமை கொண்டான் என்னும் கதையை நினைவு கூர்க' எனவும் சொல்வார். வ உ சி 'ஒருவன் புகழுடையனாயின் தேவருலகு அவனைப் புகழ்ந்து பாடிய புலவர்களைப் போற்றாது. புகழுடைய வள்ளலையே போற்றும்' என்றார். இவ்வுலகில் புகழில் சிறந்தால், புத்தேள் உலகிலுள்ள தேவரையும் இங்குள்ளார் போற்றமாட்டார்கள் எனவும் உரை கூறப்பட்டுள்ளது.

புலவர் என்பவர் யார்?

'புலவர்' என்ற சொல்லுக்குப் புலவர்(தேவர்), தேவர்கள், புலவராகிய அறிவுடையோர், ஞானிகள், அறிவால் சிறந்தவர், அறிவு எட்டுகின்ற வரை(புலம்வரை), புலமையாளர்கள், பிறர்க்குப் பயன்படாத அறிஞர், அறிவால் மட்டுஞ் சிறந்தவர், புலவரை(ப் போற்றாமல் அவர் பாடிய பாட்டுடைத் தலைவரையே தேவர் போற்றுவர்), யதி என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

'ஞானிகளும் துறவிகளும் வீடுபேற்றிற்குரியவரேயன்றிப் புத்தேளுலக இன்பத்திற்குரியவ ரல்லர். ஆதலின் ‘புலவரைப் போற்றாது புத்தேளுலகு’ என்ற விடத்துப் புலவர்க்கு ஞானிகள், துறவிகள் என்று கூறும் பொருள்கள் பொருந்தா' எனக் கூறி ஞானி, துறவி ஆகியோர் புலவர் என்னும் சொல்லுக்குப் பொருத்தமற்றவர் எனக் கருத்துரைப்பார் இரா சாரங்கபாணி. மேலும் அவர் '‘புலவரை’ என்ற சொல்லைப் புலம், வரை என இரு சொல்லாகக் கருதிப் பிரித்துப் பொருள் செய்வது தகுவதன்று. அங்ஙனம் கொண்டால் இயல்பாக அமைந்த புலவரை என்னும் செயப்படு பொருள் கெடுகின்றது. எழுவாயாக அமைந்த புத்தேளுலகு செயப்படு பொருளாகிறது. இம்முறைப் பிறழ்ச்சியால் அவ்வுரை சிறப்பில்லை. புத்தேளுலகு’ என்று ஒருலகு கூறும் போது புலவர் என்னும் சொல்லுக்குத் தேவர் என்னும் பொருள் மாறு அன்று. ஆதலால், மக்களாய்ப் பிறந்து ஈகை முதலிய அறம் புரிந்து பெரும் புகழெய்தினாரைப் போற்றுவதல்லது தன்னிடத்திலுள்ள தேவர்களைப் புத்தேளுலகு போற்றாது என்னும் கருத்து சிறப்புடையது' எனவும் கூறுவார்.

புலவர் என்ற சொல்லுக்குத் தேவர் எனப் பொருள் கொள்வர்.

உலகின் எல்லைவரை நீண்ட புகழை ஒருவன் செய்வானாயின் வானுலகம் தேவரைப் போற்றாது, (பிறர்க்குப் பயன்படும் புகழ் வாழ்வுடையவரையே போற்றும்) என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புகழ் ஈட்டியவனுக்குப் புத்தேள் உலகில் வரவேற்கத்தக்க இடமுண்டு.

பொழிப்பு

உலகின் எல்லைவரை நீண்ட புகழை ஈட்டினால் வானுலகம் தேவரைப் போற்றாது; (புகழுடையாரையே போற்றும்).