இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0220



ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:220)

பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.

மணக்குடவர் உரை: ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து.
கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.

பரிமேலழகர் உரை: ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து.
(தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பொது நன்மையினால் கேடு வருமென்றால் அக்கேடு விலைபோகும் மதிப்புடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒப்புரவினால் கேடுவரும் எனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து.

பதவுரை:
ஒப்புரவினால்- பொதுநன்மை செய்வதால்; வரும்-வந்தடையும்; கேடு-அழிவு; எனின்-என்றால்; அஃது-அது; ஒருவன்-ஒருவன்; விற்றுக்கோள்-விலைப்படுத்திக்கொள்தல்; தக்கது-தகுதி வாய்ந்தது; உடைத்து-ஆயிற்று.


ஒப்புரவி னால்வரும் கேடெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது;
மணக்குடவர் குறிப்புரை: கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.
பரிதி: ஒப்புரவினால் மிடி வருமாகில்; [மிடி - வறுமை]
பரிமேலழகர்: ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின்;

'ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொதுநலப் பணியினால் ஒருவனுக்கு வறுமைத் துன்பம் வரும் என்றால்', 'பிறருக்கு உதவி செய்வதால் ஒருவனுக்குக் கேடு வரும் என்றாலும்', 'ஒப்புரவு செய்தலால் ஒருவனுக்குக் கேடு வருமென்றால்', 'பிறர்க்கு உதவுதலினால் கேடு வருமானால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொது நன்மைக்கு உதவுதலினால் கேடு வருமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து.
பரிதி: தன்னை விற்றாகிலும் ஒப்புரவு செய்க என்றவாறு.
பரிமேலழகர்: அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.

'ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து' என்று மணக்குடவரும் 'தன்னை விற்றாகிலும் ஒப்புரவு செய்க' என்று பரிதியும் 'தன்னை விற்றாயினும் அக்கேட்டைக் கொள்க' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அத்துன்பம் தன்னை விலைபேசி வாங்கிக் கொள்ளும் தகுதியுடையது', 'அப்படிப்பட்ட கேட்டை அவன் தன்னை விற்றாயினும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளத் தகுந்த தன்மை அதில் அடங்கியிருக்கிறது', 'அத்தகைய கேடு ஒருவன் தன்னை விற்றாயினும் கொள்ளத்தக்கது', 'அது தன்னை விற்றும் கொள்ளத்தக்க பெருமையினை உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதை ஒருவன் விலை கொடுத்தும் ஏற்றுக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொது நன்மைக்கு உதவுதலினால் கேடு வருமானால் அது விற்றுக்கோள் தக்கது என்பது பாடலின் பொருள்.
'விற்றுக்கோள் தக்கது' குறிப்பது என்ன?

பொதுப்பணி செய்வதால் கேடுற்றாலும் அக்கேட்டை முன்சென்று பெற்றுக் கொள்க; அது விலைபோகும் மதிப்புள்ளது.
ஒப்புரவைக் கடப்பாடாக மேற்கொண்டு ஒழுகுவதன் காரணமாக எந்த வகையான கெடுதி ஏற்படினும் அக்கேட்டை தன்னை விற்றும் பெற்றுக்கொள்ளலாம். 'ஒப்புரவினால் வரும் கேடு எனின்' என்றதால் ஒப்புரவினால் கேடு வருவது அரிது என அறியலாம். அப்படியே கேடு உண்டானாலும் நற்பண்பு ஓம்புதற்காக எதையும் பலி கொடுக்கலாம். பொதுநன்மை கருதி உதவுதலால் பொருட்கேடு மட்டுமன்றி நேரம், பிற ஆற்றல்கள் இவற்றிலும் அழிவு உண்டாகலாம். ஒப்புரவினால் செல்வம் சுருங்குவதன்றி உறவுகளை இழக்க நேரிடலாம்; உடற்கேடும் ஏற்படலாம். இப்படியான கேடுகளை ஈடுசெய்ய ஒப்புரவாளன் தன்னை விற்பதுகூட, ஏற்புடைய செயல்தான் என்கிறார் வள்ளுவர், குறள் நடை ஒப்புரவினால் கேடு வராது என்றே சொல்கிறது. வந்தால் அக்கேட்டைக் கேடாக எண்ணவேண்டாம்; அதை ஒப்புரவின் நன்மை நோக்கி ஏற்றுக் கொள்க என ஒப்புரவாளனை ஊக்கப்படுத்துகிறது இப்பாடல்.

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு (நடுவுநிலைமை 117 பொருள்: நடு நிலையாக அற வழியில் நின்றவனது தாழ்வை உலகம் குறைவாகக் கருதாது) என்ற குறளில் நடுநிலையில் நின்றவனது தாழ்வை உலகம் கேடாக எண்ணாது என்று சொன்னதுபோல, ஒப்புரவினால் உண்டாவதை கேடாக உலகம் கருதாது; அக்கேட்டை ஒருவரும் பழியார். எனவே ஒப்புரவினால் வருங்கேடு கேடன்று என்பது கருத்து.

'விற்றுக்கோள் தக்கது' குறிப்பது என்ன?

'விற்றுக்கோள் தக்கது' என்ற தொடர்க்கு ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதி, தன்னை விற்றாகிலும் ஒப்புரவு செய்க, தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதி, தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி, தன்னை விற்றாவது கொள்ளும் தகுதி, விலைபோகும் மதிப்பு, தன்னை விலைபேசி வாங்கிக் கொள்ளும் தகுதி, தன்னை விற்றாயினும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளத் தகுந்த தன்மை, தன்னை விற்றுக் கூட வாங்கிக் கொள்ளும் தகுதி, தன்னை விற்றாயினும் கொள்ளத்தக்கது, தன்னை விற்றும் கொள்ளத்தக்க பெருமை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் 'தன்னையே விற்று புகழைக் கொள்ளுக' என்று விற்று-கொள் என்ற வணிக முறை எனக் குறிப்பிட்டுச் சொல்லி பொருள் கூறினார். மற்றவர்கள் உரைகளும் வணிகமுறை எனச் சொல்லாமல் இதே கருத்தைத்தான் கூறின. கேட்டை விலைக்கு யாரும் வாங்கமாட்டார்கள். ஒப்புரவு என்ற காரணம் நோக்கில் அதனால் வரும் கேடு என்ற காரியத்தினும் சிறந்ததாதலால் ஒப்புரவு செய்து கேட்டை ஏற்கலாம் என இக்குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும். 'விற்றுக்கோள் தக்கது' என்பதை விளக்க வ சுப மாணிக்கம், 'ஒப்புரவு செய்வதால் ஒருவனுக்கு இழப்பு வரும் எனின், அவ்விழப்பு ஒருவனால் உலகத்து விலையாக்கிக் கொள்ளும் பெருமையை உடையது' என்பார். பொது நன்மையினால் கேடு வருமென்றால் அக்கேடு விலைபோகும் மதிப்புடையது என்பது இதன் கருத்து. “தன்னை விற்றுக்கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே, இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி” என்பது பரிமேலழகரின் சீரிய உரை.

எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து (கயமை 1080 பொருள்: கயவர் எதற்கு உரியவர்? ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்) என்று தன் நலத்துக்காக தன்னை விற்று அடிமையாய் வாழ நினைப்போரைக் கயவர் என மற்றொரு குறள் இழித்துக் கூறும். ஆனால் இங்கு பொதுநலத்திற்காக தன்னை விற்றுக்கொள்ளத் தகும் எனச் சொல்லப்படுகிறது. எப்படியாயினும் தன்னை விற்று அடிமையாக மாற்றுவது இழி செயல் என்பதில் ஐயமில்லை. இங்கு அந்த இழிவை ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.
தன்னை விற்றுக் கொள்ளும் முறை முன்பு இருந்ததா? 'சங்க காலத்தில் அடிமைகளே தமிழ்நாட்டில் இல்லையென்று ஒரு சாராரும் அடிமைகள் தொல்காப்பியர் காலத்திலிருந்தே இருந்தனர் என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். கிரேக்க ரோம முதலிய மேல் நாடுகளில் நிகழ்ந்தது போல் பண்டைத் தமிழகத்தில் அடிமைகள் அங்காடிகளில் விற்கப்படவில்லை. ஆயினும் அடிமைகள் சிலர் இருந்தனர் என்பதே பல வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்தாகும். தொல்காப்பிய சூத்திரத்திலும் சிலப்பதிகாரத்திலும் வரும் 'அடியோர்' என்ற சொல் அடிமைகளைக் குறிக்கும் என்பர். குறள் எண் 220, 1080, 608 இவற்றில் மக்கள் விற்கப்படுதல் அடிமை புகுதல் ஆகிய கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் அடிமைகளைக் குறித்து வள்ளுவர் நீதி எதுவும் கூறவில்லை' என்று காமாட்சி சீனிவாசன் 'குறள் கூறும் சமுதாயம்' என்ற தனது நூலில் குறித்துள்ளார்.
மனித விற்பனை ஏதோ ஒரு வடிவத்தில் முன்பு நிகழ்ந்தது எனத் தெரிகிறது. தன்னையே பிறர்க்குக் கொடுத்தல் என்னும் வழக்கு முன்னர் இருந்தது என்பதற்கு. பாரியும், பரிசிலர் இரப்பின், 'வாரேன்' என்னான், அவர் வரையன்னே (புறநானூறு 108 பொருள்: பாரியும் பரிசிலர் வேண்டுவாராயின் அவ்வழி வாரேனென்னானாய் அவ ரெல்லையின்கண்ணே நிற்பன் ) என்னும் புறநானூற்றடியை சான்று காட்டுவர்.

பொது நன்மைக்கு உதவுதலினால் கேடு வருமானால் அதை ஒருவன் விலை கொடுத்தும் ஏற்றுக் கொள்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கேடும் அடையலாம் எனத் தெரிந்தும் செய்வது ஒப்புரவறிதல் ஆகும்.

பொழிப்பு

பொதுநன்மை செய்வதால் கேடு வருமென்றால் அதை விலைகொடுத்தும் ஏற்றுக் கொள்க.