இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0219



நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:219)

பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

மணக்குடவர் உரை: நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம்.
இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.

பரிமேலழகர் உரை: நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம்.
(தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: செய்யவேண்டியன செய்ய இயலாமையே நல்ல அன்பனுக்கு வறுமையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.

பதவுரை:
நயன் -நன்மை; உடையான்-உடையவன்; நல்கூர்ந்தான்-வறுமையுற்றவன்; ஆதல்-ஆகுதல்; செயும்-செய்யும்; நீர-தன்மையுடையவை; செய்யாது-செய்யாமல்; அமைகலாவாறு-அமையமாட்டாதவழி; .


நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது;
பரிதி: ஒப்புரவாளன் பிடித்தாலும் அற்பமாகிலும் ஒப்புரவு செய்வான்; [பிடித்தாலும்-வறுமையுற்றாலும்; அற்பமாகிலும் - சிறிதாயினும்]
காலிங்கர்: இல் ஒழுக்கம் உடையோன் தான்பிறர்க்குச் செய்யத்தகும் ஒப்புரவுகளைச் செய்யாது நல்கூர்ந்தானாவது எப்போது எனில்; [இல்ஒழுக்கம் - இல்லற ஒழுக்கம்]
பரிமேலழகர்: ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது;

'ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒப்புரவு செய்பவனுக்கு வறுமையாவது', 'ஒப்புரவு அறிந்த இரக்கமுள்ளவன் தான் ஏழை என்று உணர்வது', 'ஒப்புரவு செய்யும் நற்குணமுடையான் வறுமைப்படுதல் என்பது யாதெனில்', 'பிறர்க்கு உதவும் நன்மையை உடையான் வறியன் ஆதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒப்புரவு செய்யும் நன்மையை உடையான் வறியன் ஆதல் என்பது இப்பகுதியின் பொருள்.

செயும்நீர செய்யாது அமைகலா வாறு.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ('செயனீர்மை' -பாடம்) செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.
பரிதி: ('செயுநீர்மை' - பாடம்) அது எது போலும் எனில், பெருகாறு விளைவித்து வற்றினதறுவாய்க்கு ஊற்றுநீர் கொடுப்பது போல என்றவாறு. [வற்றினதறுவாய்க்கு - சுருங்கிய காலத்து]
காலிங்கர்: எப்போது எனில், தமது யாக்கை முடியுமிடத்து அல்லது ஒப்புரவுக்கு ஒல்கான் ஆதலால் ஒப்புரவு ஒழியும் காலத்து உயிர்வாழான் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அது எங்ஙனம் எனில், பால் புளித்தலும் பகல் இருளாதலும் இல்லையாதலால் நயனுடையான் ஒப்புரவுக்கு இளையான் என்பது கருத்து. [இளையான் - சுருங்கான்]
பரிமேலழகர்: தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம்.
பரிமேலழகர் குறிப்புரை: தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.

'செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பு' என்றும் 'செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பு' என்றும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவிராது செய்யத்தக்க பொதுநலப் பணிகளைச் செய்ய இயலாது வருந்தும் இயல்பே', 'செய்ய வேண்டிய உபகாரத்தைச் செய்ய முடியாமல் வருத்தப்படுகிற சமயத்தில்தான்', 'செயற் பாலனவாகிய கடமைகளைச் செய்யப் பெறாது வருந்துகின்ற நிலைமையை அடைதலேயாம்', 'செய்யக் கூடிய உதவிகளைச் செய்ய முடியாமல் வருந்துதலே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செய்யத்தக்க பொதுநலப் பணிகளைச் செய்ய இயலாமை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயும்நீர செய்யாது உள்ள நிலையில், ஒப்புரவு செய்யும் நன்மையை உடையான் வறியன் ஆகிறான் என்பது பாடலின் பொருள்.
'செயும்நீர செய்யாது' என்றதன் பொருள் என்ன?

செய்யவேண்டியதைச் செய்யமுடியவில்லையே என்று வருந்தும் தன்மைதான் பொதுப்பணி ஆற்றுபவனின் வறிய நிலையாகும்.
மாந்தர் தாம் வேண்டிய பொருள் துய்ப்பதற்குக் கிடைக்காதபோது அதனால் வறுமையுற்றவராகவே கருதுவது இயல்பு. பொதுவாக துய்ப்பன துய்க்க முடியாத நிலை வறுமையைச் சுட்டும். ஆனால் ஒப்புரவாளன் தனக்கு ஒன்று இல்லை என வருந்தமாட்டான்; தான் விரும்பிய பொருள் தனக்குக் கிடைக்காததால் வறுமையுற்றதாக அவன் எண்ணமாட்டான்; ஆனால் அவன் செல்வம் படைத்தவனாக இருந்தாலும், தான் செய்யவேண்டிய உதவிகளைச் செய்யமுடியவில்லையாகும் கையறு நிலையை வறுமைநிலையாகக் கருதுவான். செல்வம் நிறைந்தவனும் தான் எண்ணிய ஒப்புரவுச் செயலை நிறைவேற்றாமல் போகும் சூழல் வேறு வகைகளில் - அரசியல் குறுக்கீடுகள், குடும்பத்தார் தலையீடு போன்றவற்றால் உண்டாகலாம். முடிந்ததைச் செய்யாதமையும் அவ்வேளைகளில் தான் வறியவனாகிவிட்டதாக உணர்வான். இன்னின்ன நலங்களைச் செய்ய இயலவில்லையே என்று அவன் எண்ணுவதை அன்றி அவனுக்கு வேறு வறுமை இல்லை.

இன்மையு ளின்மை விருந்தோரல்... (பொறையுடைமை 153 பொருள்: வறுமையிலும் கொடிய வறுமையாவது வந்த விருந்தினரைப் பேணாமை ) என்பது போல, இங்கு ஒப்புரவு செய்ய இயலாமை ஒப்புரவாளனுக்கு வறுமையாகும் எனச் சொல்லப்பட்டது.
காலிங்கர் உரை 'இல்லறத்தான் ஒப்புரவு செய்யாமல் வறியனாவது உயிர்துறந்த பின்புதான். உயிர் இருக்கும் வரையில் எத்துணை வறியனாயினும் செய்வன செய்யாதிரான். செய்யவே முடியவில்லையாயின் உயிரைத் துறப்பன்' என்னுங்கருத்தினது. மேலும் இவர் 'பகல் இருளாதலும் இல்லையாதலால் நயனுடையான் ஒப்புரவுக்குச் சுருங்கான்' எனவும் உரைப்பார். ஒப்புரவாளன் தான் உதவி செய்ய முடியாத விடத்து உயிர் வாழான் என்னும் கருத்து நன்றானாலும், அது குறளுக்கு நேரடியான பொருளாகாது.
'‘செய்ய அமைகலா வாறு’ என்பதே கருதிய பொருளைத் தருதலானும், ‘செய்யா தமைகலா வாறு’ என்பது பொருத்தமான பொருளைத் தாராமை யானும் ‘செய்ய அமைகலா’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க' என்பார் வ உ சிதம்பரம் பிள்ளை.
ஒப்புரவறிதல் அதிகாரத்தில் இக்குறள் தவிர்த்து குறள் 216லிலும் 'நயனுடையான்' என்னும் சொல்லாட்சி காணப்படுகிறது. குறளில் ஒப்புரவாளன் மட்டுமே நயனுடையான் என அழைக்கப்படுகிறான்.

'செயும்நீர செய்யாது' என்றதன் பொருள் என்ன?

'செயும்நீர செய்யாது' என்றதற்கு செய்ய வேண்டுவன செய்யாதே, தான்பிறர்க்குச் செய்யத்தகும் ஒப்புரவுகளைச் செய்யாது, தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது, செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல், தவிர்க்காமல் செய்யவேண்டிய உதவிகளைச் செய்யப்பெறாது, தாம் தவறாது செய்யும் வேளாண்மையைச் செயல்களைச் செய்ய இயலாது, செய்யவேண்டியன செய்ய இயலாமை, தவிராது செய்யத்தக்க பொதுநலப் பணிகளைச் செய்ய இயலாது, செய்ய வேண்டிய உதவியைச் செய்ய முடியாமல், செய்ய விரும்பிய உதவிகளைச் செய்ய முடியாமல், செயற் பாலனவாகிய கடமைகளைச் செய்யப் பெறாது, செய்யக் கூடிய உதவிகளைச் செய்ய முடியாமல், செய்யும் உதவிகளை ஒப்புரவாளன் எப்போது செய்ய முடியாது, செய்யத்தக்கவற்றைச் செய்யாது முடியாத, தவிராது செய்யும் தன்மையவான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது, தான் செய்ய விரும்பும் நல்லறங்களைப் பிறர்க்குச் செய்ய முடியவில்லையே, செய்யும் நீர்மையனவாகிய ஒப்புரவுகளைச் செய்ய முடியாத என்றவாறு பொருள் கூறினர்.

பரிதியார் 'ஆறு செயுநீர செய்கலாது அமையா' எனக் கூட்டிப் பொருள் காண்பர். இவ்வுரைக்குத் தண்டபாணி தேசிகர் 'ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும், ஊற்றுப் பெருக்கால் உலகூட்டுவது போல ஒப்புரவு பேணுவார். வறியனாவது ஆம் எனின் வறியனான காலத்தும் ஒப்புரவு செய்வான் என்பதாம். ஆறு-நதியென்னும் பொருளில் ஆட்சியில் உண்மையை 'ஆற்றயல் எழுந்த வெண்கோட்டதவத்து' என்னும் (குறுந்தொகை, 243-4) பகுதியாலும், 'ஆறுகிடந்தன்ன அகனெடுந்தெரு' என்னும் (நெடுநல். 30) பகுதியானும் பிற இடங்களானும் அறியலாம்' என விளக்கினார். 'பரிதியின் உரைக்கருத்து சிறப்பின தேனும், மூலத்தோடு இயையவில்லை. மேலும், ஈண்டு ‘ஆறு’ என்பது நதி என்னும் பொருளில் வருதல் அருகிய வழக்காகும்' என்பார் இரா சாரங்கபாணி..

'செயும்நீர செய்யாது' என்ற தொடர்க்குப் 'தவிராது செய்யத்தக்க ஒப்புரவுகளைச் செய்யாது' என்பது பொருள்.

செய்யத்தக்க பொதுநலப் பணிகளைச் செய்ய இயலாதநிலையில், ஒப்புரவு செய்யும் நன்மையை உடையான் வறியன் ஆகிறான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒப்புரவறிதல் உடையான் உதவிசெய்யமுடியாத நிலையை மிக வருந்துவான்.

பொழிப்பு

பிறர்க்கு உதவும் நன்மையை உடையான் வறியன் ஆதல், செய்யத்தக்கவற்றைச் செய்யாது இருக்கும் இடத்து.