இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0217



மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:217)

பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

மணக்குடவர் உரை: பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின்.
தப்புதலென்றது ஒளித்தலை.

பரிமேலழகர் உரை: செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று - அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும்.
(தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் நின்றாதல், மறைந்து நின்றாதால், காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: பிறர்க்கு உதவும் பெருமைக் குணம் உடையானிடம் செல்வம் உண்டாகுமானால், எல்லோர்க்கும் பயன்படுகின்ற மருந்து மரத்துக்கு ஒப்பாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்வம் பெருந்தகை யான்கண் படின், மருந்தாகித் தப்பா மரத்தற்றால்.

பதவுரை:
மருந்து-மருந்து; ஆகி-ஆய்; தப்பா-தவறாத; மரத்துஅற்று-மரம் போன்றது; ஆல்-(அசை); செல்வம்-பொருள் மிகுதி; பெரும்-பெரியதாகிய; தகையான்கண்-தன்மையுடையவனிடத்தில்; படின்-உண்டானால்.


மருந்தாகித் தப்பா மரத்தற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும்;
மணக்குடவர் குறிப்புரை: தப்புதலென்றது ஒளித்தலை.
பரிப்பெருமாள்: பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தப்புதலென்றது ஒளித்தலை.
பரிதி: பிரதியக்ஷமான மருந்துமரம், நடுவூர்க்குள்ளே ஒருவர் சுதந்திரமற நின்றதற்கு ஒக்கும்; [பிரதியக்ஷமான - காட்சிக்குரிய; ஒருவர் சுதந்திரமற-ஒருவருக்குச் சொந்தமாயில்லாமல் அதாவது ஊர்ப் பொதுவாக உள்ள]
பரிமேலழகர்: அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் நின்றாதல், மறைந்து நின்றாதால் , காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம்.

'பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யார்க்கும் கிடைக்கும் மருந்துமரம்போலும்', 'எல்லா உறுப்புகளையும் மருந்தாய்த் தந்துதவும் வேம்பு முதலிய மரம் போலத் தன்னிடமுள்ள எல்லா வகைப் பொருளையும் பல்லுயிர்க்கும் ஈந்துதவுதலான்', 'அது மருந்து செய்வதற்கு உதவியாக இருந்து அதற்காகவே மடிந்துகூடப் போகிற மூலிகை மரத்தைப் போன்றது', 'அது தன் இலை, பூ, காய் முதலிய எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படும் மரத்தை ஒக்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லோர்க்கும் கிடைக்கக்கூடிய மருந்து மரத்துக்கு ஒப்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

செல்வம் பெருந்தகை யான்கண் படின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின்.
பரிப்பெருமாள்: செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவன் கரவான் ஆதலின் செல்வம் உலகத்தார்க்குப் பசிமருந்தாம் என்றது. இவற்றுள் ஊருணிநீர் நிறைந்தாற்போலும் என்றும், பயன்மரமுள்ளூர்ப் பழுத்தற்றால் என்றும், மருந்துமரம்போலும் என்றும் கூறினமையின் பெருஞ்செல்வம், இன்மை இரண்டும் கொள்க. [கரவான் - மறைக்கமாட்டான்]
பரிதி: நல்லோர் பெற்ற செல்வம் என்றவாறு.
பரிமேலழகர்: செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின்,
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.

'செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே உண்டாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேரருளாளன் இடத்துச் செல்வம் இருப்பது', 'செல்வம் அருளாளனிடத்தில் இருக்குமாயின்', 'பெருந்தன்மையுள்ளவனிடத்தில் செல்வமிருந்தால்', 'செல்வமானது உதவி செய்யும் பெருந் தன்மை யுடையவனிடத்துப் பொருந்துமாயின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செல்வமானது பெருந்தன்மை யுடையவனிடத்து உண்டாகுமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செல்வமானது பெருந்தகையான் இடத்து உண்டாகுமானால், அது எல்லோர்க்கும் கிடைக்கக்கூடிய மருந்து மரத்துக்கு ஒப்பாகும் என்பது பாடலின் பொருள்.
'பெருந்தகையான்' யார்?

பெருங்குணம் கொண்டவனிடத்து செல்வம் உண்டாயின், அது எல்லா நோய்க்கும் எளிதிற் கிடைக்கும் மருந்து மரத்துக்கு ஒப்பாகும்.
ஒப்புரவாளனது செல்வம் துன்பம் உற்றோரின் துயர் துடைக்கப் பயன்படும். ஒப்புரவின் எல்லை கண்ட பெருந்தகையாளன் அருள் வடிவாக நிற்பான். ஊருணி தன்னிடம் சேர்ந்ததைக் கொடுக்கும்; பழமரம் தன்னில் ஒரு பகுதியான பழத்தைக் கொடுக்கும்; பெருந்தகையாளனிடம் செல்வம் சேர்ந்தால், அது எல்லா உறுப்புக்களும் மருந்தாகி நின்று தவறாமல் மக்களுக்குப் பயன்படும் மரம் போன்றதாகும் அருள் மிக்க பெருந்தகையாளன் தன்னிடம் சேர்ந்ததையும் தன்னில் ஒரு பகுதியையும் கொடுப்பதோடு தன்னையே முழுவதுமாகப் பிறர்க்குக் கொடுக்கவும் செய்வான். நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் மரம், வேர், பட்டை, இலை, பூ காய் பழம் முதலிய எல்லாவற்றையும் கொடுத்துப் பல்லாற்றானும் நமக்கு உதவும். மருந்து மரத்துக்கு எளிய எடுத்துக்காட்டு வேப்பமரம். வேப்ப இலையை அரைத்துப் பூசினால் தோல் தொடர்பான நோய்கள் நீங்கி விடும். வேப்பம் பூவை உட்கொள்வோமேயானால் வயிற்றிலுள்ள புழுக்கள் சாகின்றன. வேப்பம் பட்டையை எடுத்து அதில் சாறு இறுக்குப் பக்குவப்படுதிக் குடித்தால் தொற்றுக் காய்ச்சல் அடியோடு நீங்கி விடுகிறது. இவ்வாறு பலவித நோய்களுக்கும் பலவகையாக வேப்பமரம் பயன்படுகிறது. இதைப்போலவே ஒப்புரவு செய்யும் பேரருளாளனிடம் செல்வமானது இருக்குமானால், தனக்கு வரும் இடர்களையும் ஏற்றுக் கொண்டு, சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் துன்பங்களுக்கு ஏற்றவாறு மருந்தாக ஆகித் துன்பங்களைப் போக்குவான்.

'தப்பா மரத்தற்று' என்ற தொடர் பயன்படுதலில் தவறாத மரம் போன்றது என்ற பொருள் தரும். அம்மரத்தினது எல்லா உறுப்புக்களும் பிணிபோக்கும் மருந்தாகப் பயன்பட்டு நோயைத் தவறாமல் தீர்க்கும்.
பரிமேலழகர் தப்புதல் என்பதற்குக் 'கோடற்கு அரிய இடங்களில் நின்றாதல் (சென்று கொள்ளுவதற்கு அருமையான செங்குத்தான மலை முதலிய இடத்தில் இருத்தல்), மறைந்து நின்றாதால் [சென்று கொள்ளுவதற்கு அருமையில்லாத புழைக்கடை முதலிய இடத்திலிருந்தும் வேறுபொருள்கள் மறைக்க மறைந்து நிற்றல்], காலத்தான் வேறுபட்டாதல் [ஒருகாலத்திலிருந்து மற்றொரு காலத்திராமை], பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம்' என விளக்கம் தந்தார்.
நாகை செ தண்டபாணிப் பிள்ளை 'மருந்து மரம் வேண்டுவோர்க்கு எளிதிற் கிடைத்துத் தன்னுடைய உறுப்புகளை அவர் சிதைத்துக் கொள்ளவும் தன் கேட்டைக் கருதாது தனக்கு உயிரே யனைய வேரை அவர் வெட்டிக் கொள்ளினும் வருந்தாது கொடுத்துப் பிணியுற்றார் பிணியைத் தீர்த்தற்குப் பயன்படுதல் போல, பெருந்தகைமை யுடையானும் தன் உதவியை நாடுவார்க்கு எளிதிற்கிடைப்பனாய், தன் செல்வம் அவர் கொள்வதாற் குறைபடுவதைச் சிறிதும் கருதாது, பிறர் வருத்தம் நீங்கத் தனது உயிரையே கொடுக்க வேண்டினும் வருந்தாது கொடுத்து வறுமைப் பிணியுற்றார் வறுமையைத் தீர்த்துப் பயன்படுதலைக் கருதுவான் என்பதாகிறது' என் இவ்வுவமையை விளக்குவார்.

உலக வாழ்க்கையை மறுக்கிற இந்தியத் தத்துவங்களுக்கிடையில் உலக வாழ்வை வற்புறுத்துகிற திருக்குறட் கோட்பாட்டின் வேறுபாட்டை வியந்து சொன்னவர் ஆல்பர்ட் சுவெட்சர் (Albert Schweitzer). தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று அங்குள்ள பழங்குடி மக்களுக்கு மருந்து மரம் போல மருத்துவப் பணி செய்து அவர்கள் கல்வி அறிவும் பெறச் செய்தார் இவர். அவர்கள் முன்னேற்றத்துக்கு பெரும்பாடு பட்டவரை அவர்தம் பணியின் அருமை அறியாது, அங்குள்ள மக்கள் அவரை எதிர்த்து அவருக்குப் பல துன்பங்களை விளைவித்தனர். அவற்றையும் பொறுத்துக்கொண்டு, அவர் பணியைத் தொடர்ந்ததை 'மருந்தாகித் தப்பா மரம்போல' உதவியதாக ஒப்பிட்டுச் சொல்லலாம். குறள் கூறும் ஒப்புரவாளன் என்ற சொல்லுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் இவர்.

'பெருந்தகையான்' யார்? ?

'பெருந்தகையான்' என்ற தொடர்க்கு நல்லோர், ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான், ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவன், பெருங் கொடைக்குணம் உடையவன், ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளன், பேரருளாளன், அருளாளன், பெருந்தன்மை உள்ளவன், உதவி செய்யும் பெருந்தன்மையுடையவன், பிறர்க்கு உதவும் பெருமைக் குணம் உடையான், பெரும் பண்பாளன், ஒப்புரவுப் பெருந்தகுதியுடையான் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.

ஒப்புரவுப் பணி செய்யும் அருளாளனைப் பெருந்தகையான் என இக்குறளில் குறிக்கிறார் வள்ளுவர்.

செல்வமானது பெருந்தன்மை யுடையவனிடத்து உண்டாகுமானால், அது எல்லோர்க்கும் கிடைக்கக்கூடிய மருந்து மரத்துக்கு ஒப்பாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒப்புரவறிதல் உடையான் செல்வம், துன்ப நோய் தீர்க்கும் மருந்தாம்.

பொழிப்பு

பெருந்தன்மை யுடையவனிடத்து செல்வம் உண்டாகுமானால், அது எல்லோர்க்கும் கிடைக்கக்கூடிய மருந்து மரத்துக்கு ஒப்பாகும்