இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0212



தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:212 )

பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

மணக்குடவர் உரை: ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம்.
இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.

பரிமேலழகர் உரை: தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம்.
(பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)

தமிழண்ணல் உரை: செல்வம் சேர்ந்தால் ஒப்புரவு செய்யவேண்டும். தான் முயற்சி செய்து ஈட்டிய செல்வமனைத்தும் தகுதியுடையவர்க்கு ஒப்புரவாகிய உதவிகள் செய்தற்பொருட்டேயாம். தாளாற்றித்தந்தது என்பதால் தான் ஈட்டியது; தக்கார்க்கு என்பதால், வீணே அள்ளிவிடாமல் பயன்தருமாறு செய்வது. குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், கல்வி நிலையம் போல்வன உதவி செய்தற்குத் தகுந்தவையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.

பதவுரை:
தாள்-முயற்சி; ஆற்றி-செய்து; தந்த-ஈட்டிய; பொருள்-சொத்து; எல்லாம்-அனைத்தும்; தக்கார்க்கு-தகுதியுடையவர்க்கு; வேளாண்மை-உதவி; செய்தற்பொருட்டு-செய்வதற்காக.


தாளாற்றித் தந்த பொருளெல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம்; [ஈட்டிய-தொகுத்த அல்லது சேர்த்த]
பரிதி: தான் தேடியன உடைமை ஏதுக்காம் என்னில்; [உடைமை-செல்வம்]
பரிமேலழகர்: முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும்; [முயறலைச்செய்து-முயன்று என்பதன் சொற்பொருள் விரித்துக் கூறப்பட்டது]

'முயன்று ஈட்டிய பொருளெல்லாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிக முயன்று சேர்த்த பொருளெல்லாம்', 'முயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம்', 'பாடுபட்டுச் சம்பாதித்த செல்வமெல்லாம்', 'முயற்சிசெய்து பெற்ற பொருள் முழுவதும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முயற்சி செய்து கிடைத்த பொருளெல்லாம் என்பது இப்பகுதியின் பொருள்.

தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். [உபசரித்தல் -உதவுதல்]
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.
பரிதி: நல்லோர்க்கு ஒப்புரவு செய்யத் தேடியது என்றவாறு.
பரிமேலழகர்: தகுதி உடையார்க்கு ஆயின் ஒப்புரவு செய்தற் பயத்தவாம். [செய்தற் பயத்தவாம்-செய்தலாகிய பயன் உடையனவாம்]
பரிமேலழகர் குறிப்புரை: பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.

'தகுதியுடையார்க்கு/நல்லோர்க்கு உதவுவதற்கு' என்று மணக்குடவரும் பரிதியும் கூறினர். மாறுபாடாக, பரிமேலழகர் 'தகுதி உடையார்க்கு ஆயின் ஒப்புரவு செய்தற் பயத்தவாம்' என்று உரை பகர்ந்தார். இவருரை ஒருவன் முயன்று பொருளீட்டுவது அதனை ஒப்புரவு செய்வதற்காகவே என்னும் பொருள்தருவதாகிறது. ஏனையோர் உரைகள் 'ஈட்டிய பொருளைத் தகுந்தவர்களுக்கு வழங்குக' என்னுங் கருத்தினது.

இன்றைய ஆசிரியர்கள் 'தக்கவர்க்கு உதவிசெய்தற்கே', 'ஏற்கும் தகுதியுடையவர்க்கு உதவுதற் பொருட்டேயாம்', 'தகுதியுள்ளவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான்', 'தக்கவர்களிடத்து இருக்குமாயின், பிறருக்கு உதவி செய்தற் பொருட்டே, அது பயன்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தக்கவர்க்கு உதவி செய்வதற்காகத்தான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவர் தன் முயற்சி செய்து கிடைத்த பொருளெல்லாம் தக்கார்க்கு உதவி செய்வதற்கு என்பது பாடலின் பொருள்.
'தக்கார்க்கு' குறிப்பது என்ன?

தேடிக் குவித்த செல்வத்தை ஒப்புரவுக்குப் பயன் கொள்க.

ஒருவன் முயற்சி செய்து சேர்க்கும் பொருள்கள் எல்லாம் தகுதியுடையவர்களுக்கு உதவி செய்வதற்காகத் தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.
தாள் என்ற சொல் முயற்சி குறித்தது. பொருள் என்ற சொல் இங்கு பொருட்செல்வத்தைக் குறிக்கும். தாளாற்றித் தந்த பொருள் என்றதால் வழி வழி வந்த செல்வமும் ஆகூழால் பெற்ற செல்வமும், பிறர் செல்வத்தைக் கவர்ந்து கொண்ட பொருளும் முறைதவறிய வழிகளில் வந்த செல்வமும் இதில் அடங்கா. வேளாண்மை என்ற சொல் குறளில் 'உதவி' என்ற பொருளில்தான் ஆளப்பட்டுள்ளது. இங்கும் அச்சொல் ஒப்புரவு செய்தலாகிய பயன் உடையதைக் குறிப்பதாய் உள்ளது.
முறையாக ஒருவன் சேர்த்த செல்வம் எல்லாம் தாமே துய்த்து அல்லது வைத்து இழப்பது என்றில்லாமல் சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்படச் செய்ய வேண்டும் என்று ஒப்புரவை ஒரு வாழ்வியல் அறமாகவே சொல்கிறார் வள்ளுவர்.

ஒப்புரவறிதலுக்கு இன்னொரு வரையறையாக அமைந்த பாடல் இது. ஒப்புரவு என்ற சொல் இக்குறளில் இடம்பெறாவிட்டாலும் அதிகாரம் நோக்கி இது ஒப்புரவு பற்றியதே எனக் கொள்வர். ஒப்புரவு என்பது தம்‌ அளவிற்கும்‌ தம்‌ வருவாய்க்கும்‌ ஏற்பத் தானாக முன்வந்து தேவைப்படும் மக்களுக்கு உதவுவதாம்.
உண்டால் அம்ம இவ்வுலகம்..... தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. (புறநானூறு 182 பொருள்: தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் ...இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற சங்கப்பாடலின் சொல்லப்படும் நல்லார் இக்குறளில் ஒப்புரவாளராகக் காட்டப்படுகிறார்.
சிலர் வேளாண்மை செய்தற்காகவே‌ பொருளீட்டல்‌ வேண்டும் என்று இக்குறள் கூறுகிறது என்ற கருத்துப்பட உரைத்தனர். ஆனால் உலகியலில், முயன்று பணம் ஈட்டுவதே ஒப்புரவிற்காக என்னும் மாந்தரைக் காண்பது அரிது.

'தக்கார்க்கு' குறிப்பது என்ன?

'தக்கார்க்கு' என்ற சொல்லுக்குத் தகுதியுடையார்க்கு, நல்லோர்க்கு, தகுதி உடையார்க்கு ஆயின், அறிவுடைய முனிவர் முதலியவர்க்கு, உதவி பெறத் தகுந்தவர்க்கு, தகுதி வாய்ந்தவர் வளர்ச்சிக்கு, தக்கவர்களிடத்து இருக்குமாயின், உதவி பெறும் தகுதியோர்க்கு, தகுதி நிறைந்த பெரியோர்க்கு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்

ஒப்புரவாளனது உழைப்பால், முறையான வழிகளில் சேர்த்த பொருள் அன்பற்றவர், குற்றம்புரிவோர், உழைக்க விருப்பமற்ற சோம்பேறிகள் முதலியோரிடம் போய்ச் சேர்ந்துவிடக்கூடாது என்பதால் 'தக்கார்க்கு உதவுதல்' எனச் சொல்லப்பட்டது. ஒப்புரவுப் பணியின் நன்மையை அடையைத் தகுதியுடையோர்களாக முதியோர், ஆதரவு அற்றோர், ஊனமுற்றோர், நோயுற்றோர், கல்விக்கு பொருள் செலவிடமுடியாதோர் போன்றோரைக் கொள்ளலாம்.
‘தக்கார்’ என்பதற்கு கல்வி கேள்வி அறிவு ஒழுக்கங்களால் உண்டாகிய யோக்கியர், அறிவுடைய முனிவர், நல்லவர், ஏழைப் பாட்டாளி என்று ஒரு சார்பினரை மட்டும் கொள்ளாமல், உதவி பெறத்தக்க நிலையிலுள்ள அனைவரையும் குறிப்பதாகக் கொள்வதே சிறப்பு.

'தக்கார்க்கு வேளாண்மை செய்தல்' என்பதற்குத் தகுதி உடையவர்க்கு உதவி செய்தல் என்பது நேர் பொருள். 'தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்பதை ஒரு தொடராக்கித் தகுதியுடையார்க்கு உதவுதற்கு என மணக்குடவர் தொடங்கி பெரும்பான்மை உரையாசிரியர்கள் உரை கண்டனர். இவர்கள் உரை 'சேர்த்த பொருளைத் தகுந்தவர்களுக்குக் கொடுக்க' எனப் பொருள்படுவது.
பரிமேலழகர் தக்கார்க்கு என்னும் சொல்லுக்கு தகுதியுடைய ஏற்பார்க்கு என்று பொருள் கொள்ளாமல், 'தக்கார்க்கு ஆயின்' எனக் கொண்டு உரை செய்தார். 'தகுதியுடையாருக்காயின்' அதாவது 'தகுதியுடையவனுக்கு செல்வம் உண்டானால்' என்ற பொருள் தருமாறு ஆயின் என்ற சொல்லை அமைத்து அதனை ஒப்புரவாளன் மேலேற்றி உரைத்தார். இது 'தகுதி உடையார்க்கு ஆயின் செய்தலாகிய பயன் உடையனவாம்' என்ற பொருள் தருவது. இவர் உரையைத் தழுவிக் கா சுப்பிரமணியம் பிள்ளை 'முயற்சிசெய்து பெற்ற பொருள் முழுவதும் தக்கவர்களிடத்து இருக்குமாயின், பிறருக்கு உதவி செய்தற் பொருட்டே, அது பயன்படும்' எனக் கூறினார்.
ஆனால் 'தக்கவர்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு எனக் கிடந்தாங்கே பொருள் கூறுவது முறையாகவும், பரிமேலழகர் தக்கார்க்கு-தக்கார்க்காயின் எனக் கொண்டு ஏற்பவராகப் பொருள் செய்யாமல் கொடுப்பவராகப் பொருள் செய்தல் இயல்பில்லை. குவ்வுருபு ஏற்றுக் கோடற் பொருளில் வருதலே தகுவது' எனச் சொல்லி பின்னிருவர் கூறிய உரையை மறுப்பார் இரா சாரங்கபாணி. எனவே மணக்குடவர் போன்றோர் கூறும் 'தொகுத்த பொருளைத் தகுந்தவர்களுக்கு வழங்குக' என்ற உரையே தகும்.

ஒப்புரவாளன் தன் முயற்சியால் கிடைத்த பொருளெல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

முயன்று தேடிய செல்வம் சமுதாயப் பணிக்காக என்னும் ஒப்புரவறிதல்.

பொழிப்பு

முயற்சி செய்து சேர்த்த பொருளெல்லாம் தக்கவர்க்கு உதவுதற்கு.