இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0211



கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு.
)
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:211)

பொழிப்பு (மு வரதராசன்): இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை..



மணக்குடவர் உரை: ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு.
இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல.
('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.)

சி இலக்குவனார் உரை: உதவுகின்ற மழைக்கு உலகம் என்ன மாற்று உதவி செய்யும்? அதுபோல உதவுவதே தன் கடமை என்று அறிந்து உதவுவோர் உதவிகள், மாற்று உதவிகளை எதிர்நோக்கா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாரிமாட்டு உலகு என் ஆற்றும்? கடப்பாடு கைம்மாறு வேண்டா,.

பதவுரை:
கைம்மாறு-எதிர்உதவி; வேண்டா-நோக்கமாட்டா; கடப்பாடு-கடமை (யாகச் செய்யவேண்டிய ஒப்புரவு); மாரிமாட்டு-மேகங்களிடத்தில்; என்-யாது; ஆற்றும்-செய்யும்; கொல்லோ-(அசைநிலை) உலகு-உலகம்.


கைம்மாறு வேண்டாக் கடப்பாடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா:
கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.
பரிதி: ஒருவன் முன்னே செய்த உதவிக்கு இவன் தானும் ஓர் உதவி செய்வோம் என்றது எத்தன்மைக்கு ஒக்கும் என்றால்;
காலிங்கர்: ஒருவன் முன்செய்த உதவிக்குப் பின்புசெய்த உதவி எதுபோல் எனில்;
பரிமேலழகர்: ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல.
பரிமேலழகர் குறிப்புரை: தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.

'ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா' என்று மணக்குடவரும் 'ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடமை கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை', 'ஆதலால் மழை போல்வார் செய்யும் உதவிகளும் மாற்றுதவியை எதிர்பார்ப்பதில்லை', 'கடமை என்றது பிறருக்கு உதவி செய்கிறவர்கள் பதில் உதவியை விரும்பமாட்டார்கள்', 'அதுபோல உதவுவதே தன் கடமை என்று அறிந்து உதவுவோர் உதவிகள், மாற்று உதவிகளை எதிர்நோக்கா', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒப்புரவுகள் மாற்றுஉதவி எதிர்பார்க்காதனவாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ வுலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ?
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.
பரிதி: பூலோகத்தை இரட்சிக்கிற மழைக்கு உதவி செய்வோம் என்பதற்கு நிகராம்.
காலிங்கர்: மழைக்கு உதவி செய்ததற்கு நிகராம் என்றவாறு.
பரிமேலழகர்: தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன,
பரிமேலழகர் குறிப்புரை: 'என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும்.

'மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ?' என்று மணக்குடவரும் 'மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகம் மழைக்கு என்ன செய்ய முடியும்?', 'தண்ணீரைத் தந்துதவும் மழையிடத்து உலகு என்ன மாற்றுதவியைச் செய்கிறது?', 'மழை பெய்வதற்காக உலகத்தார் அந்த மழைக்கு என்ன பதில் உதவி செய்ய முடியும்?', 'உதவுகின்ற மழைக்கு உலகம் என்ன மாற்று உதவி செய்யும்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மழைக்கு உலகம் (மாற்று உதவி) செய்ய முடியுமா என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
மழைக்கு உலகம் மாற்று உதவி செய்ய முடியுமா என்ன? ஒப்புரவு பதில்உதவி எதிர்பார்க்காத கடப்பாடு ஆகும் என்பது பாடலின் பொருள்.
'கடப்பாடு' குறிப்பது என்ன?

ஒப்புரவு என்பது மழைபோல தானாக முன்வந்து செய்வதும், செய்யாமல் செய்வதும், எதிரீடு எதிர்பாராமல் செய்வதுமான உதவியாகும். ஒப்புரவுஅறிதல் என்ற அதிகாரத் தலைப்புக்கு விளக்கமாக அமைகிறது இச்செய்யுள்.
கைம்மாறு என்பது செய்ததற்குச் செய்யும் உதவி வகைகளைக் குறிப்பது. இச்சொல் செய்த உதவி திருப்பித் தன் கைக்கு மாறுதல் என்ற பொருள் தருவது. இதற்கு ஒருவர் செய்ததற்கு ஈடாகச் செய்யும் உதவி அல்லது 'உதவிக்கு மறு உதவி' என்பது பொருள். கைம்மாறு கருதாத நல்லோர் உதவி இங்கு பேசப்படுகிறது.
ஒப்புரவு என்று சொல் இப்பாடலில் இடம் பெறவில்லை. அதிகாரம் நோக்கி ஒப்புரவு பற்றி இக்குறள் பாடுகிறது என்று உய்த்துணரப்படும். ஆனால் உரையாசிரியர்கள் கடப்பாடு என்ற சொல்லுக்கே ஒப்புரவு எனப் பொருள் கூறினர்.
திரும்பவும் கைக்கு வரும் என்று விரும்பாது, கடமைப்பாடாக உணர்ந்து செய்யப்படும் அறம் என்று ஒப்புரவு குறிக்கப்பெறுகிறது.
மேகமே ஒப்புரவிற்கான சிறந்த எடுத்துக்காட்டு. பயன் எதிர்பாராத வள்ளண்மைக்கு மழை இக்குறளில் உவமையாக்கப்பட்டது. மழை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது பொழிந்து பூமியைக் குளிரவைக்கிறது. உலகோர் மழைக்கு ஏதும் செய்யாமலே அது மண்ணுலகம் நிலைத்திருக்க, வேண்டுமிடம் இது, வேண்டாவிடம் இது என்னும் வரையறையின்றி எவ்விடத்தும் வரையாது நீர் தருகிறது. அப்படிக் கிடைத்த உதவிக்கு உலகம், கைம்மாறு எதுவும் செய்ய முடியாது. மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே (புறநானூறு 107 பொருள்: உலகைக் காப்பாற்றுவதற்கு மழையும் உண்டு.) எனக் கபிலரும் பயன்கருதா மழையை உவமித்தார்.
ஒப்புரவாளர்கள் கைம்மாறு கருதாது, தானாக உணர்ந்து, இயல்பாகவே உலக நன்மைக்காகத் தொண்டு செய்கிறார்கள். அவர்கள் பிறர் தங்கட்குத் திருப்பி என்ன நன்மை செய்வார் என்று எதிர்பார்ப்பதும் இல்லை.
ஒப்புரவானது கடமையுணர்ச்சியுடன் செய்யப்படும் உதவி என்பது கருத்து.

'கொல்', 'ஓ' இரண்டும் அசைநிலைகள் அசை நிலை என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச் சொல்லோடும் வினைச் சொல்லோடும் சேர்த்துச் சொல்லப்படுவது. பொருள் இல்லாததாக வரும் சொல் அசைச்சொல்.

'கடப்பாடு' குறிப்பது என்ன?

'கடப்பாடு' என்ற சொல்லுக்கு ஒப்புரவு, உதவி, கடமை, மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகள், மழை போன்றவர் செய்யும் உதவி, உதவுவதே தன் கடமை, வறியார்க்குதவக் கடமைப்பட்டது, உபகாரம், கடமையாகச் செய்யும் உதவிகள், இன்றியமையாது செய்யும் கடமை என்றபடி பொருள் கூறினர்.

கடப்பாடு, ஒப்புரவு, உதவி என்பன ஒருபொருட் சொற்கள் என உரையாசிரியர்கள் கருதுகின்றனர் எனத் தோன்றுகின்றது.
ஒப்புரவைப் பிறருக்கு உதவி புரிதல் எனும் கடப்பாடு எனச் சொல்லப்பட்டுள்ளது. ஒப்புரவுடையோர் தன்னலமற்ற பொதுநல வாழ்வு நடத்துகின்றவர்கள். கடப்பாடு என்பதற்கு நேர் பொருள் கடமை. கடமை என்றது கட்டாயமாகச் செய்ய வேண்டுவது எனப்படுவது. ஒப்புரவு கடமைப்பாடாக உணர்ந்து செய்யப்படுவது என்று இங்கு கூறியிருப்பதால் ஒப்புரவுகள் விலக்கத்தக்கன அல்ல என்பது பெறப்படும். 'தவிரும் தன்மைய அல்ல' என்பது பரிமேலழகரது உரை. உடன் வாழும் உயிர்களுக்கு உதவியே ஆக வேண்டும் என்பதை அழுத்தமாக அறிவுறுத்தவே கடப்பாடு எனப்பட்டது. ஒப்புரவு அறிந்தோர் இதைத் தன் சமூகக் கடன் என்று கொள்வர்.
உதவுவதே தன் கடமை என்று அறிந்து உதவுவோர் உதவிகள், மாற்று உதவிகளை எதிர்நோக்கா என சி இலக்குவனார் இக்குறட்குப் பொருள் கூறினார்.

மழைக்கு உலகம் மாற்று உதவி செய்ய முடியுமா என்ன? ஒப்புரவு பதில்உதவி எதிர்பார்க்காத கடப்பாடு ஆகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொதுநல வாழ்வு நடத்துகின்றவர் கைம்மாறு கருதார் எனக் கூறும் ஒப்புரவறிதல் பாடல் இது.

பொழிப்பு

ஒப்புரவு மாற்றுஉதவி எதிர்பார்ப்பதில்லை; உலகம் மழைக்குக் கைம்மாறு செய்ய முடியுமா என்ன?