இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0209தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:209)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

மணக்குடவர் உரை: தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக.
இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: தன்னைத்தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
(நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் தன்னிடத்தில் அன்புடையன் ஆயின் தீவினைப் பகுதியாகிய செய்கைகளுள் எவ்வளவு சிறியதொன்றையுங் பிறர்பால் செய்தல் கூடாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்னைத்தான் காதலன் ஆயின் தீவினைப் பால் எனைத்தொன்றும் துன்னற்க.

பதவுரை:
தன்னைத்தான்-தன்னைத்தான்; காதலன்-காதல் உடையவன்; ஆயின்-ஆனால்; எனைத்தொன்றும்-எவ்வளவு சிறிதாயினும்; துன்னற்க-செய்யாதொழிக; தீ-கொடிய; வினை-செயல்; பால்-பகுதி.


தன்னைத்தான் காதலன் ஆயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குத் தான் நல்லவனாயின்;
பரிதி: தன்னைத்தான் பிரியமுள்ளவன் ஆகில்;
பரிமேலழகர்: ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின்;

'தனக்குத் தான் நல்லவனாயின்/பிரியமுள்ளவன்/காதல் செய்தல் உடையவன் ஆயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தான்வாழ ஆசை இருக்குமானால்', 'ஒருவன் தன்னுடைய நலன்களை விரும்புவானாயின்', 'ஒருவன் தனக்குத்தானே அன்பு செய்கிறவனாயின்', 'ஒருவன் தன்னை விரும்புகின்றவனாயிருப்பின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் நலத்துக்காக என்றாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.
பரிதி: பாவமான காரியத்தைச் செய்வான் அல்லன். பரிதி குறிப்புரை: அது எப்படி என்றால், தான் செய்த பாவம் தன் ஆத்மாவை வருத்தும் என்றவாறு.
பரிமேலழகர்: தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
பரிமேலழகர் குறிப்புரை: நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.

'யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைச் சிறிது ஒன்றாயினும் பிறர்க்குச் செய்யாதொழிக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறுதும் தீவினைப் பக்கம் செல்லாதே', 'தீய செயல்களின் பக்கத்தே ஒரு சிறுதும் தலைகாட்டக்கூடாது', 'தீங்கு செய்யும் காரியங்களின் பக்கத்தில் கொஞ்சங்கூட நெருங்கப்படாது', 'அவன் தீய செயல் சிறிதேனும் பிறர்க்குச் செய்யாது இருத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒரு சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்னைத்தான் காதலன் என்றாலும் ஒரு சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதே என்பது பாடலின் பொருள்.
'தன்னைத்தான் காதலன்' யார்?

தன் உயிர் பேணுவதற்காகவும் தீய செயல்கள் பக்கம் நெருங்கவேண்டாம் என அறிவுரை பகரும் பாடல்.
உயிர்வாழ ஒருவன் தன்னைத் தான் காதலிக்கிறான். ஆனால், அது நிலைபெறுவதற்காகவென்றாலும் ஒரு சிறிய அளவினாலும் தீவினை செய்வதன் பால் ஒன்றிச் சார்ந்து நிற்கக் கூடாது. தன்னைத்தான் விரும்பிக் காத்துக் கொள்ள வேண்டுமானாலும், தீய செயல் சிறிதளவும் ஈடுபடாதே என்கிறது பாடல்.

இக்குறளுக்குப் பல வேறுவகையான விளக்கங்கள் காணக் கிடக்கின்றன.
தன்னை விரும்பாதவன் யார்? தன்னை விரும்பாமல் வாழமுடியாது. ஒருவன் உண்பதும், உடுப்பதும், துய்ப்பதும் தற்காதலால் உண்டாவனவே. தன்னைத் தான் மிக நன்றாக பேணிக் கொள்ளத்தான் வேண்டும். தன்மேல் காதல் உடையான் தன்னைப் பேணிக் காப்பான்; தன் குடிநலம் காப்பான். ஒருவன் தன்னைதானே விரும்புவனாக இருப்பதில் தவறில்லை. ஆனால் எல்லாமே தனக்கு மட்டும்தான் கிடைக்கவேண்டும் என்று நினைப்பதும் அதற்காக பிறர்க்குத் தீமை செய்துதான் தான் வாழவேண்டும் என்று எண்ணுவதும் சிறிதளவும் கூடாது. தன்னலத்தை விரும்பியேனும் பிறருக்குத் தீமையின் பகுதியில் யாதொன்றும் செய்யாமலிருக்க வேண்டும். இது ஒருவகை விளக்கம்.
இன்னொரு வகையான உரைப்பொருள்: தன்னைத்தான் காதலித்தல் என்பது தனக்கு அழிவு வராதபடி காக்க விரும்புதல் ஆகும். ஒருவன் செய்த தீச்செயல் அவன் உயிரை வருத்தும். அழிவு வேண்டாதவன் தீச்செயல் புரியாதிருக்க வேண்டும். தீவினை விடாது துரத்தித் துன்புறுத்தும் ஆகையால் அதைத் தடுக்கவே- தன்னைக் காக்கவே -தீவினைப் பக்கம் செல்லவேண்டாம். ஒருவன் தான் துன்பப்படாமல் இருக்க ஆசைப்படுவனாயின் பிறர்க்கு எத்துணையும் தீமை செய்யாமல் இருத்தல் வேண்டும்.
மற்றொரு வகை உரையானது: 'முதலில் உன்னையே நீ காதலி! பிறகு உலக உயிர்கள் மீது உன் காதல் இயல்பாக ஏற்படும். பின் பிறர்க்குத் தீமை செய்யமாட்டாய். தன்னைக் காக்க நினைப்பவன் பிறருக்குத் துன்பம் செய்யமாட்டான்' என்கிறது. தன் உடலை நலமாக வைத்துக் கொள்வது; தான் சுத்தமாக நோய் நொடியின்றியிருப்பது தன் திறமை அறிந்து ஆற்றலை வளர்த்துக் கொள்வது எல்லாம் தன்னைக் காதலிப்பதன் பயன்களாகும். நீ உன்னையே காதலிப்பது உண்மையானால், சிறியதொரு தீங்கையும் நெருங்கவிடமாட்டாய்'.
இவற்றுள் முதல் வகையான விளக்கம் பொருத்தமானது.

'தன்னைத்தான் காதலன்' யார்?

'தன்னைத்தான் காதலன்' என்றதற்குத் தனக்குத் தான் நல்லவன், தன்னைத்தான் பிரியமுள்ளவன், தன்னைத்தான் காதல் செய்தல் உடையன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவன், தனக்குத் தானே ஆசைப்படுவான், தான்வாழ ஆசை இருப்பவன், தன்னுடைய நலன்களை விரும்புவான், தனக்குத்தானே அன்பு செய்கிறவன், தனக்கு என்றும் நலமானதையே விரும்புவான், தன்னிடத்தில் அன்புடையன், தன்னை விரும்புகின்றவன், தன்னைக் காதலிப்பவன் என உரையாளர்கள் பொருள் கூறினர்.
தன்னைத்தான் காதல னாயின்’ என்பதற்குத் தனக்குந்தான் நல்லவனாயின் என மணக்குடவரும் தன்னலத்தைத்தான் விரும்புவனாயின் எனத் தண்டபாணியாரும் பொருள் காண்பர். தன்னைத்தான் காதலன் என்பதற்கு தன் நலத்தை விரும்புவன் என்பது பொருள்.

தன் நலத்துக்காக என்றாலும் ஒரு சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தன் உயிர் பேணுவதற்கு என்பதற்காகவும் தீச்செயல் கூடாது என்னும் தீவினையச்சம் பாடல்.

பொழிப்பு

தன் நலத்துக்காக என்றாலும் சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதே.