இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0208



தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:208)

பொழிப்பு (மு வரதராசன்): தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

மணக்குடவர் உரை: தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும்.
மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.

பரிமேலழகர் உரை: தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து.
(இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.)

சி இலக்குவனார் உரை: பிறர்க்குத் தீமைகளைச் செய்தார் கெடுதல், தம் நிழல் தம்மை விட்டு நீங்காது தம் அடியில் தங்கிய தன்மையை ஒக்கும். (நிழல் தம்மைவிட்டு நீங்காதது போல, தாம் செய்த தீய செயல்களும் தம்மைவிட்டு நீங்காமல் கெடுக்கும்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று.

பதவுரை:
தீயவை-கொடிய செயல்கள்; செய்தார்-இயற்றியவர்; கெடுதல்-அழிதல்; நிழல்-சாயை; தன்னை-தன்னை; வீயாது-நீங்காமல்; அடி-தாள்; உறைந்துஅற்று-தங்கினாற் போன்ற தன்மைத்து.


தீயவை செய்தார் கெடுதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல்;
பரிதி: பாவம் செய்தாரை, அந்தப் பாவம் சுற்றி நிற்கும்;
காலிங்கர்: பாவமான தீவினைகளைச் செய்தவர் நசித்தல் எத்தன்மைத்தோ எனின்; [நசித்தல் - கெடுதல்]
பரிமேலழகர்: பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்;

'தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடுமை செய்தார் கெடுவது உறுதி', 'பிறர்க்குத் தீமை செய்தவர் கேடு எய்துதல் உறுதி', 'தீமை செய்கிறவன் தீமையே அடைவான் என்பது', 'பிறருக்குத் தீவினைகளைச் செய்தவர்கள் கெடுதல் எவ்வாறு திண்ண மெனில்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தீயசெயல்கள் செய்தவர் கேடுறுவர் என்றல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும். [ஒதுங்கினால் -மறைந்தால்]
மணக்குடவர் குறிப்புரை: மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.
பரிதி: நிழல் தன்னை விட்டு நீங்காத முறைமை போல என்றவாறு.
காலிங்கர்: ஓர் உருவின்கண் தோன்றிய நிழலானது பின்னும் அவ்வுருவினை விட்டு நீங்காது தான்தோன்றிய விடத்தே வந்து கூட்டிக்கொண்டு நின்ற தன்மைத்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: ஒருவன் தான்செய்த தீவினைப்பயன் தன்னையே வந்துறும் இத்துணையல்லது வேறுபகுத்து, கோடற்குரியாரில்லை என்பது போலேயே நிழலும் தன்னைவிட்டு நீங்காது என்பதாம். [வந்துறும் - வந்து அடையும்; கோடற்கு - கொள்ளுதற்கு]
பரிமேலழகர்: ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.

'நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிழல் ஒருவன் அடியைவிட்டு நீங்குமா?', 'அஃது ஒருவனது நிழல் அவனை விட்டு நீங்காது காலடிகளிலே வந்து தங்குவது போன்றது', 'ஒருவனுடைய நிழல் அவனை விட்டு விலகுதல் முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை தீமை செய்தவன் தீமை அடைவதை விட்டு விலகிக் கொள்ள முடியாது என்பதாம்', 'ஒருவனுடைய நிழல் அவனை விடாது அவனது அடிக்கீழ்த் தங்குவது போலாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒருவனுடைய நிழல் விடாது அவனது அடிக்கீழ்த் தங்குவது போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தீயசெயல்கள் செய்தவர் கேடுறுவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது அடிக்கீழ்த் தங்குவது போன்றது என்பது பாடலின் பொருள்.
இக்குறளிலுள்ள உவமை தரும் செய்தி என்ன?

ஒருவனுடைய நிழல் விடாது அவனது அடிக்கீழ்த் தங்குவது போல தீச்செயல்கள் செய்தவர் கேடுற்று துன்பம் அனுபவிப்பது திண்ணம் என்று உறுதிபடச் சொல்கிறது இப்பாடல்.
தீமைச் செயல்கள் செய்தால் அவை செய்தவனுக்குத் தீமை பயக்கும் என்று சொல்லக் கேட்கிறோம்; நூல்களில் படிக்கிறோம். ஆனால் நடைமுறையில் தீமை செய்தவன் துன்பம் அனுபவிப்பதைக் காணமுடிவதில்லையே என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் தோன்றும். அவ்விதமான ஐயத்தைத் தெளிவிக்கும் வகையில் வள்ளுவர் 'சென்ற பாடலில் (குறள் 207)ஒருவன் செய்த வினைப்பகை தொடந்து சென்று அழிக்கும் என்று கூறினேன்; மறுபடியும் சொல்கிறேன்: ஒருவன் செய்த தீவினை நிழல்போல் அடியுறைந்து அவனுக்குக் கேடு பயந்தே தீரும்' என்று ஓர் உவமையுடன் தம் கருத்தை அழுந்த உரைக்கிறார்.
ஓரோ வழி செல்வம், செல்வாக்குகள் போன்ற காரணங்களால் தீயவினைகளின் பயனாகிய துன்பம், அவற்றைச் செய்தவனைத் தாக்கப்படாமல் இருப்பது போலத் தோன்றும். ஆனால் முடிவில் தீமைபுரிபவன் கேடு அவனை விட்டு நீங்காமல் தீவினைப்பயன் தந்தே தீரும். தீவினை செய்தவர் எந்நிலையிலுள்ளவரேயாயினும் எத்தன்மை வாய்ந்தவரேயாயினும் தாம் செய்த வினையின் பயனினின்றும் தப்பிப் பிழைப்பது அரிதாகும்.

இக்குறளிலுள்ள உவமை தரும் செய்தி என்ன?

பிறருக்குத் தீமையானவற்றை செய்பவர்கள் கெட்டு அழிந்து போதல் ஒருவனுடைய நிழல் எங்குச் சென்றாலும் விடாமல் அவனது அடியின் கீழ் தங்கியிருப்பது போல் தீமையும் அதைச் செய்தவனை விடாமல் தொடர்ந்து தீங்கு செய்யாமல் விடாது என்பது உவமை.
நாம் எங்கு சென்றாலும் நமது நிழலும் நம்முடனே தொடர்ந்து வருகிறது. நாம் நின்றாலும் இருந்தாலும் நடந்தாலும் துயின்றாலும் நமது நிழல் நம்மை விட்டு ஒரு பொழுதும் பிரிவதில்லை. அதுபோல, நாம் செய்த வினை நம்மைவிட்டு ஒரு சிறுதும் விலகாமல் துன்பம் செய்யும் என்பது உவமையின் விளக்கம். தன்னால் விளைந்ததாயும் தன்னை விட்டு நீங்காததாயுமுள்ள தீவினைக்கு ஒரு பொருளின் சாயலாய் அதனையே தொடர்ந்து செல்லும் நிழல் உவமிக்கப்பட்டது.
ஒரு தீச்செயல் நிகழும்போது, தீங்கு செய்தானை ஒறுக்கும் பொறுப்பை அறக்கடவுள் எடுத்துக் கொள்ளும். அறம் ஒரு கணக்குப் போட்டு அவனைத் தண்டிக்கத் திட்டமிடும். காய்தல், உவத்தல் இல்லாமல் அது போடும் கணக்கு நாம் புரிந்துகொள்ள முடியாதது. ஆனால் அங்கு ஒரு கணக்கு இருப்பது உறுதி. அற்த்தின் ஆற்றலால் தீங்கிழைத்தவன் துன்புறுத்தப்பட்டே ஆவான். அவரவர் செய்த தீயவினையின் பயனை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும். பூசை செய்தல், கொடை, ஈதல் போன்ற எந்தக் கழுவாயும் கிடையாது.

இவ்வுவமையை 'வினை என்றும் நீங்காது பக்குவமாய் அதன் நுகர்ச்சிக்கு உரியதாம் வரை மறைந்திருந்தாற் போல்' என்றும் 'ஒருவன் நிழல் அவனைப் போலிருக்குமன்றி வேற்றுருவினதாகாது அதுபோலத் தீவினையும் தீமை வடிவாகவே இருக்கும்; தொடரும்' என்றும் 'ஒரு பொருளின் நிழலானது ஒளி வருமளவும் வெளிப்படாது, அப்பொருளைப் பற்றியிருந்து, ஒளி வந்தபோது வெளிப்பட்டுத் தோன்றுதல் போன்று ஒருவன் செய்த தீவினை தனது பயனை அவன் அனுபவித்தற்குரிய காலம் வருமளவும் வெளிப்படாது அவனைப் பற்றி மறைந்து நின்று தன் பயனை அனுபவித்தற்குரிய காலம் வந்த போது வெளிப்பட்டு அவனை வருத்தும்' என்றும் 'நிழல் உண்டாவதற்குக் காரணமாகிய ஒருவன் இறக்குமளவும் அவனை விட்டு நீங்காமல் அடியைப் பற்றியே நின்று, அவன் இறந்த பொழுதே ஒழியும் நிழலைப் போலத் தீவினைகளைச் செய்தவர் கெடுமளவும் விட்டுநீங்காமல் அவரைப் பற்றியே நின்று அவர் கெட்ட பொழுதே ஒழியும்' என்றும் 'உடம்பு நிற்கு மட்டும் நிழல் இருக்கும். அப்படிப்போல பாவம் இருக்குமட்டும் கேடு நீங்காமல் பாவியைத் தொடர்ந்து நிற்கும்' என்றும் பொருள்கூறி விளக்கினர்.
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையாதற்று (வெகுளாமை குறள்: 307 பொருள்; (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும்.) என்னும் பாடல்போல் இதுவும் தீயவை செய்தவன் கெடுதல் தப்பாது திண்ணம் என்பதைக் காட்டுவதாகும் என்பார் இரா சாரங்கபாணி. இதுவே உவமை தரும் செய்தி.

தீயசெயல்கள் செய்தவர் கேடுறுவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது அடிக்கீழ்த் தங்குவது போன்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தீவினை புரிவார் கேடுறுதல் திண்ணம் என்பதால் தீவினையச்சம் கொள்ளவேண்டும்.

பொழிப்பு

செய்தவர் கேடு எய்துவர் என்பது ஒருவனது நிழல் அவனை விட்டு நீங்காது அடிக்கீழ்த் தங்கியிருப்பது போன்றது