இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0207



எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:207)

பொழிப்பு (மு வரதராசன்): எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும்.

மணக்குடவர் உரை: எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும்.
அஃதாமாறு பின் கூறப்படும்.

பரிமேலழகர் உரை: எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்.
('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: எவ்வளவு பெரிய பகையுடையாரும் அப்பகையுள் நின்று தப்பிப் பிழைத்துக் கொள்ளலாம். தீவினைப் பகையோ ஒருவனை நீங்காது தொடர்ந்து கொல்லும். (வருத்தும் என்பது பொருத்தமே.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.

பதவுரை:
எனை-எவ்வளவு பெரிய; பகை-பகை; உற்றாரும்-உடையாரும்; உய்வர்-தப்புவர்; வினைப்பகை-தீச்செயல்பகை; வீயாது-நீங்காமல்; பின்சென்று-தொடர்ந்து போய்; அடும்-கொல்லும்.


எனைப்பகை உற்றாரும் உய்வர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்;
பரிதி: யாருடன் பகைகொண்டாலும் நற்குணத்தினாலே உறவு பண்ணிக் கொள்ளலாம்;
பரிமேலழகர்: எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்;

'எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'யாருடன் பகைகொண்டாலும் தம் நற்குணங்களினாலே உறவு பண்ணிக் கொள்ளலாம்' என்று புதுமையாகப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எனைப் பெரிய பகையிலிருந்தும் தப்பிக்கலாம்', 'எவ்வளவு பெரிய பகையுடையாரும் தப்பிப் பிழைக்க வழியுண்டு, 'எவ்வளவு வலிமை பொருந்திய பகைவர்கள் இருந்தாலும் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்', 'எவ்வளவு பெரிய யுடையாரும் தப்பிப் பிழைப்பர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எவ்வளவு பெரிய பகையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வழியுண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

வினைப்பகை வீயாது பின்சென்று அடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும்.
மணக்குடவர் குறிப்புரை: அஃதாமாறு பின் கூறப்படும்.
பரிதி: தீவினைப்பகை விடாமல் நின்று கெடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.

'தீவினைப்பகை விடாமல் நின்று கெடுக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடுமைப் பகையோ விடாது கொல்லும்', 'ஆனால் தீவினையாகிய பகை செய்தவனை விட்டு விலகாது தொடர்ந்து சென்று வருத்தும்', 'ஆனால் தீவினைப் பயன் என்ற பகை தாம் எங்கே போய் ஒளிந்தாலும் நம்மை விடாமல் பின் தொடரும்', 'ஆனால் தீய செயல் என்ற பகை நீங்காது செல்லும் இடம் எல்லாம் சென்று வருத்தும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தீச்செயலாகிய பகை விலகாது தொடர்ந்து சென்று கொல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எவ்வளவு பெரிய பகையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வழியுண்டு; தீச்செயலாகிய பகை வீயாது தொடர்ந்து சென்று கொல்லும் என்பது பாடலின் பொருள்.
'வீயாது' என்பதன் பொருள் என்ன?

தீமைகளைப் புரிந்தவனைத் தீவினைப்பகை கொல்லும் வரை நில்லாது துரத்தும்.
ஒருவன் பிறர்க்குச் செய்யும் தீயவினைகள் பகையாக மாறிச் செய்தவனைக் கொல்லும். தீவினைப் பயனுக்குத் தப்ப முடியாதென்பதாம்.
வினை என்பது 'நல்வினை' 'தீவினை' என்ற இரண்டுக்கும் பொருந்துவதாகும். வினைப்பகை என்று சொல்லப்பட்டதால் அது தீவினையை மட்டும்தான் குறிக்கும்.
‘அடும்’ என்பதற்கு ஈண்டுக் கொல்லும் என்னும் பொருளினும் வருத்தும் என்பது சிறப்புடையது என்பார் இரா சாரங்கபாணி.

புறத்தில் தோன்றும் பகை எவ்வளவு பெரும்பகையாக இருந்தாலும் ஒருவாறு தப்பித்துக் கொள்ள வழி உண்டு. பரிதி 'தம் நல்லகுணத்தால் தப்பலாம்; பகைமையைப் போக்கி உறவாக்கிக் கொள்ளலாம்' என உய்வதற்கான வழி ஒன்று கூறுவார். ஆனால் ஒருவர் பிறருக்குச் செய்யும் தீவினையினால் ஏற்படுகிற பகையானது அவரைத் தப்பிக்க விடாது, நீங்காமல் பின் .தொடர்ந்துசென்று, வருத்தியே தீரும். தீவினை தான்செய்தது ஆதலால் அது தன்னிடத்தேயே நின்று பயன் விளைவித்தே தீரும். வினைப்பகை அதாவது பகைமையை உண்டுபண்ணும் வினை என்பது தான் செய்த தீச்செயல். அது தனக்கே பகைவனாய் உட்பகையாய் இருந்து அழித்துவிடும் என்கிறது பாடல்.

'வீயாது' என்பதன் பொருள் என்ன?

'வீயாது' என்ற சொல்லுக்கு நீங்காது, விடாமல், நீங்காமை, விடாது, விலகாது தொடர்ந்து என உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஓருயிர் பல பாவங்களைச் செய்திருப்பின் அதன்பயனை அவ்வுயிர் எங்கேனும் யாதாய்ப் பிறந்திடினும் ஊட்டாது கழியாது என்று மறுபிறவிக் கொள்கையைக் கொணர்ந்து ஒரு சில உரையாளர்கள் 'வீயாது' என்பதனை விளக்கினர்.
கு ச ஆனந்தன் 'தீய செயல்களைச் செய்வாரை அவற்றின் விளைவுகள் தாமாகவே தொடர்ந்து பின் சென்று வருத்தும், என்று 'வினை-விளைவு' முறை (Cause and Effect) யடிப்படையில் திருவள்ளுவர் விளக்குகிறார். காரணத்தையும்-காரியத்தையும் பிணைத்து மொழிகிறார்' என உரை தந்தார். மேலும் அவர் 'இதில் விதியோ, தெய்வமோ, கூட்டுவிப்பானோ மறைநிலையில் கூடக் காட்டப்படவில்லை. மாறாகக் காரணத்தையும்-காரியத்தையும் பிணைத்து மொழிகிறார்' எனவும் கூறினார் தமிழண்ணல் 'தீவினைப் பயன் ஒருவனை விட்டுப் போகாது அதாவது தீமைக்குக் கழுவாய்-செய்தவனைக் காப்பாற்றும் சடங்கு, மந்திர தந்திரம் எதுவுமில்லை' எனக் கருத்துரைப்பார்.

எவ்வளவு பெரிய பகையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வழியுண்டு; தீச்செயலாகிய பகை விலகாது தொடர்ந்து சென்று கொல்லும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வினைப்பகையிலிருந்து உய்யமுடியாதாதலால் தீவினையச்சம் கொள்க.

பொழிப்பு

எவ்வளவு பெரிய பகையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வழியுண்டு; தீச்செயலாகிய பகை, தீமை செய்தவனை விடாது தொடர்ந்து சென்று கொல்லும்.