இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0206



தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:206)

பொழிப்பு (மு வரதராசன்): துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறர்க்குச் செய்யாமலிருக்கவேண்டும்.

மணக்குடவர் உரை: தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக.
இது நோயுண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
(செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: துன்பங்கள் தன்னைத் தொடரவிரும்பாதவன் பிறர்க்குத் தீமைகள் செய்யாது இருப்பானாக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான், தீப்பால தான்பிறர்கண் செய்யற்க .

பதவுரை:
தீப்பால-தீமையான பகுதிகள்; தான்-தான்; பிறர்கண்-மற்றவரிடத்து; செய்யற்க-செய்யாதொழிக; நோய்ப்பால-துன்பம் செய்யும் பகுதிகள்; தன்னை-தன்னை; அடல்-வருத்துதல், நெருங்குதல்; வேண்டாதான்-விரும்பாதவன்.


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக.
பரிதி: வேறொரு ஆத்மாவை வருத்தம் செய்யாது ஒழிக.
காலிங்கர்: பெரிதும் இடருறுத்துவனவாகிய தீவினைக்கூற்று யாவை, அவற்றைத் தான் பிறர்மாட்டு என்றும் செய்யாது ஒழிக;
பரிமேலழகர்: தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. [தீமைக்கூற்ற-தீமை என்னும் பகுதியிற்பட்டவை]

'தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீமை தரும் செயல்களைப் பிறரிடம் செய்யக்கூடாது', 'தான் இப்போது பிறருக்குத் தீங்கு செய்யாமலிருக்க வேண்டும்', 'தீய இயல்புடைய செயல்களைத் தான் பிறருக்குச் செய்தல் கூடாது', 'தீமை தரும் செயல்களைப் பிறர்க்குச் செய்யாது ஒழிக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தீமையானவற்றைத் தான் பிறருக்குச் செய்யாது ஒழிக என்பது இப்பகுதியின் பொருள்.

நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன். [துன்பப் பகுதியானவை-துன்பம் செய்யும் பகுதியானவாகிய பாவங்கள்]
மணக்குடவர் குறிப்புரை: இது நோயுண்டாமென்றது.
பரிதி: தன் ஆத்மா சுகசீவியாக இருக்க வேணுமாகில்.
காலிங்கர்: யாவன் எனின் மற்று இடருறுங் கூற்றனவாகிய கொடியவை தன்னை வந்து ஒறுத்தல் வேண்டாதவன் என்றவாறு.
பரிமேலழகர்: துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், [கூற்ற-பகுதியுடையன]
பரிமேலழகர் குறிப்புரை: செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.

'தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பக் கூறுகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன்', 'நோய் தரக்கூடிய தீவினைப் பயன்கள் பின்பு வந்து தன்னை வருத்தப்படாமலிருக்க விரும்புகிறவன்', 'துன்பஞ் செய்யும் தன்மையுடைய பாவங்கள் தன்னைப் பின்வந்து வருத்துதலை வேண்டாதவன்', 'துன்பம் தரும் செயல்கள் தன்னை வருத்துதல் விரும்பாதான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பப் பகுதிகள் தன்னை நெருங்குதலை விரும்பாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நோய்ப்பால தன்னை நெருங்குதலை விரும்பாதவன் தீமையானவற்றைத் தான் பிறருக்குச் செய்யாது ஒழிக என்பது பாடலின் பொருள்.
'நோய்ப்பால' என்பதன் பொருள் என்ன?

தனக்குத் துன்பங்கள் நேராதிருக்க விரும்புகின்றவன் தீப்பயன் தருவனவற்றைத் தான் பிறர்க்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவர். ஒருவன் தனக்குத் துன்பங்கள் வந்து சேராமல் இருக்க வேண்டுமானால் பிறர்க்குத் தீங்கு இழையாதே எனத் தற்காப்பு நடையில் தீயவை செய்யாமலிருக்க இக்குறள் அறிவுரை தருகிறது. பிறர்க்குத் துன்பம் செய்யின் பின்பு அது தனக்கே துன்பமாகும் என்பது கருத்து.
தீதும் நன்றும் பிறர் தர வாரா (புறம்: 192 பொருள்: கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது பிறர் தர வாரா;) என்று சங்கப்பாடல் கூறியதைப் போல, அவரவர் துன்பங்களுக்கு அவரவர்களே காரணம். எனவே துன்பத்தைத் தரும் தீயசெயல்கள் தன்னை வருத்துதலை விரும்பாதவன் தான் பிறர்க்குத் தீமையான செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும்.

'நோய்ப்பால' என்பதன் பொருள் என்ன?

'நோய்ப்பால' என்றதற்குத் துன்பப்பகுதியானவை, இடருறுத்துவன, துன்பம் செய்யும் கூற்ற, துன்பம் செய்யும் தீவினைகள், துன்பம் தருவன, துன்புறுத்துவன, துன்பங்கள், துன்பக் கூறுகள், துன்பம் தரும் தீவினைப் பயன்கள், துன்புறுத்தக் கூடிய குற்றங்கள், துன்பஞ் செய்யும் தன்மையுடைய பாவங்கள், துன்பம் தரும் செயல்கள், துயரங்கள், துன்பத்தின் வகைகள், துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள், துன்பப் பகுதிகள், பிணிப் பகுதியன, வியாதியின் பகுதியினாலாந் துன்பங்கள் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
குழந்தை நோய்ப்பால என்பதற்குத் துன்பத்தின் வகைகள் எனக் கூறி பல துன்பங்கள் என்று பொருள் கூறினார்.

'நோய்ப்பால' என்பது துன்பக் கூறுகளான தீய செயல்கள் என்ற பொருள் தரும்.

துன்பப் பகுதிகள் தன்னை நெருங்குதலை விரும்பாதவன் தீமையானவற்றைத் தான் பிறருக்குச் செய்யாது ஒழிக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தனக்குத் துயர் வேண்டாதவன் தீவினையச்சம் கொள்ள வேண்டும்.

பொழிப்பு

துன்பக் கூறுகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன் பிறர்க்குத் தீமைகள் செய்யாது இருப்பானாக.