இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0200



சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்

(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:200)

பொழிப்பு (மு வரதராசன்): சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.

மணக்குடவர் உரை: சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக.
இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக.
('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.)

இரா இளங்குமரனார் உரை: ஒன்றைச் சொல்ல வேண்டுமிடத்துப் பயனுடைய சொல்லையே சொல்லுக. அவ்வாறு சொல்லுதலில் பயனில்லாச் சொல்லைச் சொல்லாது விடுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சொல்லின் பயனுடைய சொல்லுக; சொல்லின் பயனிலாச் சொல் சொல்லற்க.

பதவுரை: சொல்லுக-பேசுக; சொல்லின்-சொல்ல வேண்டுமிடத்து; பயனுடைய-பயனை விளைவிக்ககூடிய, பொருளுடையவை; சொல்லற்க-சொல்லாதீர்; சொல்லின்-சொற்களில்; பயனிலா- நன்மை இல்லாத, பொருளற்ற; சொல்-மொழி.


சொல்லுக சொல்லின் பயனுடைய:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக;
பரிதி: சொல்லும்போது பயனுள்ளதே சொல்லுக;
பரிமேலழகர்: சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக;

'பயனுடைய சொற்களைச் சொல்லுக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். சொல்லின் என்பதற்கு 'சொல்லுவனாயின்' என்று மணக்குடவரும் 'சொல்லும்போது' என்று பரிதியும் 'சொற்களில்' என்று பரிமேலழகரும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயனுள்ள நல்ல சொற்களையே சொல்லுக', 'பேசினால் பயன்தரும் சொற்களைப் பேசுக', 'பயனுடைய சொற்களை (ஆராய்ந்தெடுத்துப்) பேச வேண்டும்', 'சொல்லத் தொடங்கினால், பயன் உடைய சொற்களையே சொல்லுதல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பேசினால் பயனுடையவற்றையே பேசுக என்பது இப்பகுதியின் பொருள்.

சொல்லற்க சொல்லின் பயனிலாச் சொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.
பரிதி: அல்லாது, பயனில்லாத சொல் சொல்ல வேண்டாம் என்றது.
பரிமேலழகர்: சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக.
பரிமேலழகர் குறிப்புரை: 'சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.

'சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயனில்லா வீண் சொற்களைச் சொல்லாதே', 'சொற்களுள் பயனில்லாச் சொற்களைப் பேசாதொழிக', 'வீண் வார்த்தைகளை (ஆராய்ந்தெடுத்து) விலக்க வேண்டும்', 'பயன் இல்லாத சொற்களைச் சொல்லக்கூடாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சொற்களில் பயன் இல்லாத சொற்களைப் பேசாதீர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சொல்லின் பயனுடையவற்றையே சொல்லுக; சொற்களில் பயன் இல்லாத சொற்களைப் பேசாதீர் என்பது பாடலின் பொருள்.
இப்பாடலில் 'சொல்லின்' என்ற சொல் மிகைபடக் கூறப்பட்டுள்ளதா?

வெற்றுப் பேச்சையும் வேண்டாத சொற்களையும் தவிர்க்க.

பேசினால் பயனுடையவற்றை மட்டும் பேசுதல் வேண்டும். பயனற்ற சொற்களைப் சொல்லவேண்டாம்.
'சொல்லின் சொல்லுக பயனுடைய' என்கிறது பாடலின் முதற் பகுதி. பேச வேண்டுமானால் பயன் தருவனவற்றை மட்டும் பேசுக என்பது இதன் பொருள். சொல்ல வேண்டுமானால் என்றதால் தேவை ஏற்பட்டால் மட்டுமே பேசுக என்ற குறிப்பு இதில் அடங்கியுள்ளது. அதாவது தேவை இல்லாவிட்டால் ஒன்றுமே பேசாமல் இருப்பது நல்லது; இன்றியமையாமை கருதிச் சொல்ல நேர்ந்தால் பயனுடையவற்றைச் சொல்லுக என்பது தொடக்கப்பகுதி சொல்லும் செய்தி.
'சொல்லின் பயனிலாச் சொல் சொல்லற்க' என்னும் இரண்டம் பகுதி பேசும் சொற்களில் பயன்தராத சொற்களைச் சொல்லவேண்டாம் எனச் சொல்கிறது. பயன்கொடுக்காத சொற்கள் என்றால் என்ன? 'சொற்களில் ஒரு சொற் பல பொருளவாயும் பலபொருளொரு சொல்லாயும் வருவன பல. அவற்றுள் குறித்த பயனை மனத்திற் பசுமரத்தாணி போலப் பதியச் செய்வனவற்றை இடநோக்கித் தேர்ந்தெடுத்துக் கூறுக எனப் பெறக் கிடந்தது. இக்குறளால் இங்ஙனம் தெள்ளிதிற் புலப்படும் எளிய பயனும் அரிதிற் புலப்படும் பெரிய பயனும் கொள்ளவைத்தமையால் எளியார்க்கு எளிய பயனும் அரியார்க்கு அரிய பயனும் உளவாகும்படி சொற்களைத் தெரிந்தெடுத்துச் சொல்லுக என்பதும் உடம்பொடு புணர்த்தி உணர்த்தினார் ஆசிரியர் எனக் கொள்க' என்ற நாகை சொ தண்டபாணி பிள்ளையின் விளக்கம் இதை நன்கு தெளிவுபடுத்துகிறது. மேலும் இவர் பயனிலா என்றதை பயன்நில்லா என்று பிரித்து 'பயனுள்ள சொற்களையே சொல்லுக. சொற்களில் பயன் நிலை பெற்று நில்லாத சொற்களைச் சொல்லாதொழிக' எனவும் கூறியுள்ளார்.

உலக இயக்கத்திற்குப் பேச்சு தேவை. ஆனால் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும் என்ன பேசினாலும் பயனுள்ளதாகவே பேசுக என்றும் பயனுள்ள சொற்களில் பேசுக எனவும் வள்ளுவர் அறிவுரை தருகிறார்.

இப்பாடலில் 'சொல்லின்' என்ற சொல் மிகைபடக் கூறப்பட்டுள்ளதா?

இக்குறளில் 'சொல்லின்' என்ற சொல் இருமுறை பயின்று வந்துள்ளதால் அது மிகைபடக் கூறப்பட்டுள்ளது என உரைத்தனர் சிலர்.
பரிமேலழகர் இக்குறளுக்கான உரையில் 'சொல்லின்' என்று வந்த இரு இடங்களிலும் 'சொற்களில்' என்ற ஒரே பொருளையே கொண்டு இச்சொல் மிகை எனக் கருதுரைத்தார். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (குறள் 12) என்ற குறளிலும் துப்பார்க்கு என்ற சொல் வந்த இரு இடங்களிலும் 'உண்பார்க்கு' என்ற ஒரு பொருளையே கொண்டு உரை வரைந்திருந்தார். இதுபோன்று ஒரு பாடலில் ஒரே பொருளில் பல இடங்களில் ஆளப்படுவதை சொற்பொருட் பின் வருநிலையணி பெற அமைந்ததாகக் கொள்வர். சொற்பொருட்பின்வருநிலை அணி என்பது முன் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பலவிடத்தும் வருதல். இதைச் சொல்லி அவர் நாலடியார்ப் பாடல் ஒன்றையும் மேற்கோள் காட்டினார். அப்பாடல்:
வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைசுற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்
(நாலடியார் அறன் வலியுறுத்தல் 39)
இதில் வைகல் (பொருள்: நாள்தோறும்) என்னும் சொல், பொருள் வேற்றுமையின்றி, பலமுறை வந்துள்ளது.

ஆனால் வேறு சிலர் இதனை ஒப்ப மனமில்லாமல் 'சொல்லின்' என்ற சொல்லுக்கு வேறுவேறு பொருள் கூறப்பட்டது என விளக்குவர். இவர்கள் முதலில் வந்த 'சொல்லின்' என்ற சொல்லுக்கு சொல்லுவனாயின், சொல்லும்போது, பேசினால், சொல்ல வேண்டுமிடத்து, சொல்லக் கருதின், சொல்லத் தொடங்கினால், பேச நேரிடுமானால் எனவும் இரண்டாவது உள்ள 'சொல்லின்' என்றதற்கு சொற்களில், சொற்களுள், சொற்களுக்குள், சொல்லுதலில் எனவும் பொருள் கண்டு உரைத்தனர். உரையாசிரியர்களில் பலர் இரண்டாவதான 'சொல்லின்' என்பதற்குப் பொருள் ஒன்றுமே கூறாதும் விட்டுவிட்டனர்.
மணக்குடவர் உரையில் கண்டபடி முதலில் உள்ள' சொல்லின்' என்பதற்கு 'சொல்லுவானாயின்' என்றும் இரண்டாவதான 'சொல்லின்' என்பதற்குச் 'சொற்களில்' என்றும் பொருள் கொள்வது சிறக்கும். 'சொல்லின்' என்ற சொல் இரண்டிடங்களில் வேறுவேறு பொருளில் வந்ததாதலால் அது மிகைபடக்கூறல் இல்லை என்றாயிற்று.

பேசினால் பயனுடையவற்றையே பேசுக; சொற்களில் பயன் இல்லாத சொற்களைப் பேசாதீர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சொல்வதிலும் சொற்களிலும் பயனில சொல்லாமை வேண்டும்.,

பொழிப்பு

பேசும்போது பயனுள்ள சொற்களைப் பேசுக; சொற்களுள் வீண் சொற்களைப் பேசாதீர்.