இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0199



பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:199)

பொழிப்பு: மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

மணக்குடவர் உரை: பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்.
இது தெளிவுடையார் கூறாரென்றது.

பரிமேலழகர் உரை: பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார்.
('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது)

இரா சாரங்கபாணி உரை: மயக்கம் தீர்ந்த குற்றமற்ற அறிவினை உடையவர்கள் பொருளற்ற சொற்களை மறந்தும் பேச மாட்டார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மருள்தீர்ந்த மாசறு காட்சியவர் பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்.


பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்:
பதவுரை: பொருள்-பொருள்; தீர்ந்த-நீங்கியவை; பொச்சாந்தும்-மறந்தும்; சொல்லார்-சொல்லமாட்டார்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்;
பரிதி: விளையாட்டிலும் பயனில்லாத வார்த்தை சொல்லார்;
காலிங்கர்: இகழ்ச்சியுற்ற விடத்தும் பயனில சொற்களைச் சொல்லார்;
பரிமேலழகர்: பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்;

'பயனில சொற்களைச் சொல்லார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பொச்சாந்தும் என்றதற்கு மணக்குடவரும் பரிமேலழகரும் 'மறந்தும்' என்றும் பரிதி 'விளையாட்டிலும்' என்றும் காலிங்கர் 'இகழ்ச்சியுற்ற விடத்தும்' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறந்தும் பொருளற்ற சொற்களைச் சொல்லார்', 'மறந்தாற்போல்கூட வீண் வார்த்தைகளைப் பேசிவிடமாட்டார்கள்', 'மறந்தும் பொருள் இல்லாத சொற்களைச் சொல்லமாட்டார்', 'பயனற்ற சொற்களை மறந்தும் சொல்லார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருளல்லவற்றை மறந்தும் சொல்லமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

மருள்தீரந்த மாசறு காட்சி யவர்:
பதவுரை: மருள்-மயக்கம்; தீரந்த-நீங்கிய; மாசறு-குற்றமற்ற; காட்சியவர்-தெளிவினையுடையவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது தெளிவுடையார் கூறாரென்றது.
பரிதி: தெளிந்த மனத்தினர் என்றவாறு.
காலிங்கர்: தாம் ஒரு பொருளை அறிந்தவர் மற்றதனை நிலைமையிற் காண்கின்ற குற்றமற்ற அறிவினையுடையார்.
பரிமேலழகர்: மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது.

'மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மயக்கம் இல்லாத நல்லறிஞர்', 'மயக்கம் நீங்கிக் குற்றமற்ற அறிவுடையவர்கள்', 'மயக்கம் இல்லாத குற்றமற்ற அறிவினையுடையவர்', 'மயக்கம் நீங்கிய குற்றம் அற்ற அறிவினையுடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மயக்கம் நீங்கிய குற்றமற்ற தெளிவினையுடையவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மயக்கம் நீங்கிய குற்றமற்ற தெளிவினையுடையவர், பொருளல்லவற்றை மறந்தும் சொல்லமாட்டார் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பொருள்தீர்ந்த என்ற தொடர்க்கு பொருளற்ற அல்லது பயனற்ற என்பது பொருள்.
பொச்சாந்தும் என்ற சொல் மறந்தும் என்ற பொருள் தருவது.
சொல்லார் என்ற சொல் சொல்லமாட்டார் என்ற பொருள் தரும்.
மருள்தீர்ந்த என்ற தொடர்க்கு மயக்கம் நீங்கிய என்று பொருள்.
மாசறு என்ற சொல் குற்றமற்ற எனப்பொருள்படும்.
காட்சியவர் என்ற சொல்லுக்கு தெளிவினையுடையவர், அறிவுடையவர் எனப் பொருள் கூறுவர்.

தெளிந்த மனத்தினர் பொருளற்றவற்றை மறந்தும் சொல்லமாட்டார்கள்.
குற்றமில்லாத தூய சிந்தனைத் தெளிவுடையவர்கள் எப்பொழுதும் தன்நினைவோடு விழிப்பு நிலையில் இருப்பவர்கள். அவர்கள் தவறியும் பொருளில்லாத சொற்களை உதிர்க்கமாட்டார்கள்.
மாந்தர்தம் அறிவானது சில சமயங்களில் மயங்கிவிடுவது உண்டு. இவ்வறிவு மயக்கத்தினால் அதாவது பயன் -பயனின்மை நன்மை-தீமை, இன்பம்-துன்பம் இவைகளைப் பகுத்தறிய மாட்டாத நிலையில், மற்றவர்களிடம் பயனற்றவற்றைப் பேசுவிடுவர். ஆனால் ஐயம், திரிபு, குற்றம் அற்ற அறிவு பெற்ற தூயஅறிவு உடையோர் தாம் சொல்கின்ற சொல்லும், அதன் பொருளும், சொல்வதற்குண்டான காரண காரியங்களும் அறிந்தவர்களாக இருப்பர். அவர்கள் தவறியும் கூட பயனற்றவற்றைப் பேசமாட்டார்கள்.

'பொச்சாந்தும்' என்ற சொல்லுக்கு மறந்தும், இகழ்ச்சியுற்ற விடத்தும், விளையாட்டிலும், எனப் பொருள் கூறப்பட்டன. இவற்றுள் பரிதியின் 'விளையாட்டில்' என்ற பொருள் வழக்கில் இல்லாதது. அது கருத்து வாங்கி எழுதப்பட்டது என்றாலும் தெளிவாகச் சிந்திப்பவர்கள் விளையாட்டுக்குக்கூட பயனில்லாத வார்த்தை சொல்லார்' என்ற உரை சிறப்பாகவே உள்ளது. காலிங்கர் உரையில் கண்டபடி பொசாப்பு என்ற சொல் இகழ்ச்சி என்ற பொருளில் இன்றும் வழங்கி வருகிறது. இச்சொல்லுக்கு உரையாளர்களில் மிகப் பெரும்பான்மையோர் மறந்தும் என்றே பொருள் கூறினர். 'மகிழ்ச்சியில் மறவி' எனவும் பொருள் காண்பர்.
மருள் என்றது ஒன்றை மற்றொன்றாக நினைக்கும் மாறுபாடான அறிவு (விபரீத உணர்வு) குறித்தது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

தெளிவான சிந்தனை கொண்டவர் மறந்தும் பொருளற்ற சொற்களைச் சொல்லார் எனச் சொல்லப்பட்ட இப்பாடல் கூறவரும் செய்தி என்ன?
மணக்குடவர் தனது விளக்கவுரையில் 'இது தெளிவுடையார் கூறாரென்றது' என்று எழுதியுள்ளார். 'பயனில்லாத பல சொற்கள் சொல்வது பண்படாத மனத்தின் குறையாகும் என்று திருவள்ளுவர் உணர்ந்தே, அந்தக் குறையைப் போக்கி மனத்தைத் தூய்மையுறச் செய்யவேண்டும் என்று பயனில்சொல்லாமையை அறமாக எடுத்துரைத்துள்ளார்' என இக்குறளுக்கு மு வரதராசன் விளக்கம் சொல்கிறார். நாகை சொ தண்டபாணி பிள்ளை 'மாசற்ற அறிவு கலங்கிய நிலையில் உண்மை இன்மையாகவும் இன்மை உண்மையாகவும் தோன்றும். மயக்கஞ் செய்யும் அத்தகைய மயக்கம் நீங்கினார் பயனில சொல்லார்' என மருள் தோன்றற்குரிய காரணமும், நீங்கும் வழியும் உரைப்பர். இவர்கள் விளக்கங்களின்படி பயனில்லாதவற்றைச் சொல்லாமலிருக்க வேண்டுமென்றால் ஒருவர் மனதை மாசு நீக்கித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதாகிறது.
இன்னொரு வகையில் சொல்வதானால், பயனற்ற பேச்சுப் பேசித்திரிவோர் மாசோடு கூடிய மயக்கமுள்ள மனநிலையில் இருப்பவர்கள் என்று இக்குறள் கூறுகிறது.

பயனில்லாத பேச்சை நீக்க மனத்தைத் தூய்மையுறச் செய்யவேண்டும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவினையுடையவர், பொருளல்லவற்றை மறந்தும் சொல்லமாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விளையாட்டுக்காகக் கூட பயனில சொல்லாமையைப் பயிலவேண்டும்.

பொழிப்பு

மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவினை உடையவர்கள் மறந்தும் பொருளற்ற சொற்களைப் பேச மாட்டார்கள்.