இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0198அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:198)

பொழிப்பு: அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

மணக்குடவர் உரை: அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை.
இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

பரிமேலழகர் உரை: அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.
(அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: அரிய பயனை அடைய முயலும் அறிஞர் பெரியபயன் இல்லாதவற்றைச் சொல்லார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அரும்பயன் ஆயும் அறிவினார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார்.


அரும்பயன் ஆயும் அறிவினார்:
பதவுரை: அரும்-அருமையான; பயன்-நன்மை; ஆயும்-ஆராய்ந்து அறியும்; அறிவினார்-அறிவுடையார்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார்;
பரிதி: அரிய நூல் பல ஆராய்ந்த அறிவுடைமையுள்ளார்;
காலிங்கர்: பெறுதற்கு அருமையுடைய மறுமைப்பயனைத் தாம் பெறுதற்குத் தக்க நெறியினை ஆராயும் அறிவினையுடையோர்;
பரிமேலழகர்: அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார்;
பரிமேலழகர் குறிப்புரை: அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின.

'அரிய பொருளை/அரிய நூல் பல/ பெறுதற்கு அருமையுடைய மறுமைப்பயனைத் தாம் பெறுதற்குத் தக்க நெறியினை/அறிதற்கு அரிய பயன்களை ஆராயும் அறிவினையுடையார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மெய்ப்பொருளை ஆராயும் அறிஞர்கள்', 'வாழ்க்கையினால் அடையக்கூடிய மேலான பயன்களை நாடி ஆராயக்கூடிய அறிவுள்ளவர்கள்', 'அறிதற்கு அரிய வீடுபேறு முதலிய பயன்மிகு பொருள்களை ஆராயும் அறிவுடையார்', 'அறிதற்கு அரிய பயன்களை ஆராயும் அறிவினார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அரிய பயன்களை ஆராய்ந்து அடைய முயலும் அறிவுடையார் என்பது இப்பகுதியின் பொருள்.

சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்:
பதவுரை: சொல்லார்-சொல்லமாட்டார்; பெரும்-பெரியதாகிய மிக்க; பயன்-நன்மை; இல்லாத-இல்லாத; சொல்-மொழி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லார் பெரிய பயனில்லாத சொற்களை.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.
பரிதி: பயனில்லாத சொல் சொல்லார்கள் என்றவாறு.
காலிங்கர்: எஞ்ஞான்றும் சொல்லார், யாதினை எனில், தன்பால் கேட்பார்க்குப் பெரிதும் பயனில்லாத சொல்லினை என்றவாறு.
பரிமேலழகர்: மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.

'மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரும்பயன் விளைக்காத சொற்களைக் கூறமாட்டார்கள்', 'பெரிய நன்மைகளைக் கருத முடியாத பேச்சைப் பேச மாட்டார்கள்', 'மிக்க பயன் இல்லாத சொற்களைச் சொல்லமாட்டார்கள்', 'மிக்க பயனைத் தராத சொற்களைச் சொல்லமாட்டார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அரும்பயன் ஆயும் அறிவினார், பெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார் என்பது பாடலின் பொருள்.
'அரும்பயன் ஆயும் அறிவினார்' யார்?

சொல்லார் என்ற சொல்லுக்குச் சொல்லமாட்டார் என்பது பொருள்.
பெரும்பயன் இல்லாத என்ற தொடர் மிகுந்த பயனைத் தராத என்ற பொருள் தரும்.
சொல் என்றது சொற்கள் குறித்தது.

அரும்பயனளிக்கக் கூடியனவற்றை அடைய முயலும் பெரியோர், பெரும்பயனில்லாத, ஆழ்ந்த பொருளில்லாத சொல்லை வழங்க மாட்டார்கள்.
பெரும்போக்கான மாந்தர் மிகுந்த பயன் அளிக்கும் சொற்களையே பேசுவர். அவர்கள் பெரும் சாதனைபுரிபவர்கள்; எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவுடையோர். அவர்கள் பயனில சொல்லாமையைப் பழகுபவர்கள்; பொருளற்ற பேச்சுப் பேசார்.
செயற்கரிய செயல் செய்த பெரியோர்கள் பலரும் பயனுடைய சொற்களே சொல் என அறிந்தவர்கள்; சில சொற்கள் சொல்வதிலேயே பயன் கண்டவர்கள். எனவே பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.

அரும்பயன்களை ஆராய்வோர் அனைவரும் குறைகுடம்போலத் ததும்ப மாட்டார்கள்-அவர்கள் வெட்டிப்பேச்சு பேசமாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான காலமும் கிடையாது. அவர்களது ஆற்றலை பெரிய அளவில் பயன் தராத சொற்களைப் பேசச் செலவு செய்யவும் மாட்டர்கள். சிறிதே பயன் தரும் சொற்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. செயலிலேயே குறியாய் இருந்து அதன் வெற்றியை நோக்கி இருப்பவர்கள் ஆதலால் மிகையாகப் பேசமாட்டர்கள்; பயனில்லாத சொற்கள் அவர்கள் வாயிலிருந்து வரவே வராது.

'அரும்பயன் ஆயும் அறிவினார்' யார்?

இத்தொடர்க்கு அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார், அரிய நூல் பல ஆராய்ந்த அறிவுடைமையுள்ளார், பெறுதற்கு அருமையுடைய மறுமைப்பயனைத் தாம் பெறுதற்குத் தக்க நெறியினை ஆராயும் அறிவினையுடையோர், அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், அரிய பயனையே ஆராய்ந்து தேடும் கூர்த்த அறிவுடைய பெருமக்கள், அரிய பயனை அடைய முயலும் அறிஞர், மெய்ப்பொருளை ஆராயும் அறிஞர்கள், வாழ்க்கையினால் அடையக்கூடிய மேலான பயன்களை நாடி ஆராயக்கூடிய அறிவுள்ளவர்கள், அரிய பயன்களை ஆராயும் அறிவினர், அறிதற்கு அரிய வீடுபேறு முதலிய பயன்மிகு பொருள்களை ஆராயும் அறிவுடையார், அறிதற்கு அரிய பயன்களை ஆராயும் அறிவினார், வாழ்வில் அரிய விளைவுகளை உருவாக்கும் வழிகளை ஆராயும் கூர்மதியாளர்கள், சொல்லினால் வரும் அருமையான நற்பயனை ஆராய்ந்து பேசும் அறிவுடைப் பெரியோர் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

'அரும்பயன் ஆயும் அறிவினார்' என்றதற்கு 'கிடைப்பதற்கு அரிய பயன்களை ஆராய்ந்து தெளியும் அறிவினை உடையவர்கள்' என்பது பொருள். இது சாதனை படைக்கத்தக்கவர்களைக் குறிக்கும்.
அரும்பயன் என்பதற்கு பெரும்பான்மை உரையாளர்கள் மறுமைப் பயன், வீடுபேறு, மேற்கதிச் செலவு, முத்திபெறுதல், துறக்கம் (சுவர்க்கம்) முதலியவற்றின் கண் செல்லுதல், மெய்ப் பொருளியல், மிக உச்சமான பேரின்பம் போன்ற ஆன்மீகப்பயன்களைக் குறிக்கின்றனர். வள்ளுவர் கருத்து ஆன்மீகப் பயன் மட்டுமாக இருக்கமுடியாது. அவை தவிர்த்த எத்துணையோ பயன்கள் உலகில் உண்டு. அப்பயன்களை ஆய்வோரைப் பற்றிய பாடல் இது.
இக்குறள் சொல் அருமை தெரிந்த சொற்செல்வர் பற்றிய பாடலும் அல்ல. அரிய நூல் பல ஆராய்ந்த அறிவுடையார் பற்றியதும் அன்று.

'அரும்பயன் ஆயும் அறிவினார்' என்ற தொடர் தம்தம் துறையில் சாதனைபுரியத் துடிப்பவர்களைக் குறிக்கும்.

அரிய பயன்களை ஆராய்ந்து அடைய முயலும் அறிவுடையார், பெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெருநோக்குக் கொண்டோர் பயனில சொல்லாமை பழகுவர்.

பொழிப்பு

அரிய பயன்களை ஆராய்ந்து அடைய முயலும் அறிவுடையார், பெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார்.