இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0189



அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:189)

பொழிப்பு: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

மணக்குடவர் உரை: பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும்.
இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்!
(எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: போனது பார்த்துப் புறங்கூறுபவனை உலகம் சுமக்கிறது. அதுவும் ஓர் அறமோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை வையம் அறன்நோக்கி ஆற்றுங்கொல்.


அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம்:
பதவுரை: அறன்-நல்வினை; நோக்கி-கருதி; ஆற்றும்-தாங்கும்; கொல்-(ஐயம்); வையம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும்.
பரிதி: பூமி தன்மத்தைப் பார்த்துப் பாதுகாக்கும் அல்லது பூமி அவனைத் தாங்காது என்றவாறு.
காலிங்கர்: அகழ்வாரைத் தாங்கும் பூமியானது தன் தன் தருமத்தை நேர் நோக்கி ஆற்றுகின்றது கொல்லோ;
பரிமேலழகர்: நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்!
பரிமேலழகர் குறிப்புரை: எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.'

'நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் ''கொடியது தாங்குவதே அறம்' என்று கருதி இந்நிலம் சுமக்கின்றது போலும்', 'பூமியானது தன்னுடைய கடமை என்று கருதிச் சுமந்து கொண்டிருக்கிறதோ?', 'நிலமானது பொறுத்திருப்பது, இக்கொடியோனைப் பொறுப்பதே அறமென்று கருதிப் போலும்!', 'உலகம் அறநெறி கருதிச் சுமக்கின்றது போலும். (தீமை செய்வார்க்கும் நன்மை செய்யவேண்டும் என்பது அறநெறி.)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறம் கருதி இவ்வுலகம் சுமக்கின்றது போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

புறன்நோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை:
பதவுரை: புறன்-நீங்கின அளவு; நோக்கி-பார்த்து; புன்சொல்-பழித்துரை; உரைப்பான்-சொல்லுபவன்; பொறை-சுமை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை.
மணக்குடவர் குறிப்புரை: இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.
பரிதி: ஒருவன் குற்றத்தைப் புறஞ்சொல்பவனை.
காலிங்கர்: ஒருவனது குற்றஞ் சொல்லுகைக்கு இடம் என்ற குறிக்கொண்டு புல்லிய சொல்லினைக் கூறுவானாயின் அவனது பாரத்தை என்றவாறு. [புல்லிய சொல்லினை - இழிந்தனவும் உண்மையல்லாதனவும் ஆகிய சொல்லை]
பரிமேலழகர்: பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை;
பரிமேலழகர் குறிப்புரை: இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.

'பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் நீங்குதல் கண்டு புறங்கூறிப் பழித்துரைப்பானது உடற்சுமையை', 'ஒருவன் இல்லாத சமயம் பார்த்து அவனைப் பற்றிக் கோள் சொல்லுகிறவனை', 'பிறர் நீங்குஞ் சமயம் பார்த்து, அவர் புறத்தே அவரை இகழ்ந்துரைப்பானது உடற்பாரத்தை', 'பிறர் நீங்கின சமயம் பார்த்து அவரைப்பற்றிப் பழித்துரைப்பார் உடல் பாரத்தை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

யாரும் இல்லாதவாறு பார்த்து ஒருவரைப் பற்றி இகழ்ந்துரைப்பானது உடல் சுமையை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எவரும் இல்லாதவாறு புறத்தே பார்த்து மற்றவரைப் பற்றி பழிச்சொல் சொல்பவனையும் தனக்கு அறமென்று கருதித்தான் இவ்வுலகம் பொறுத்துக் கொள்கிறது போலும்.

யாரும் இல்லாதவாறு பார்த்து ஒருவரைப் பற்றி இகழ்ந்துரைப்பானது உடல் சுமையை அறன் நோக்கி இவ்வுலகம் சுமக்கின்றது போலும் என்பது பாடலின் பொருள்.
'அறன்நோக்கி' என்ற தொடர் குறிப்பது என்ன?

ஆற்றுங்கொல் என்ற தொடர் பொறுத்துக் கொண்டிருக்கிறதோ? என்பது பொருள்.
வையம் என்ற சொல் உலகம் என்ற பொருள் தரும்.
புறன்நோக்கி என்ற தொடர்க்கு அக்கம்பக்கம் பார்த்து என்று பொருள்.
புன்சொல் உரைப்பான் என்ற தொடர் இழிந்த சொல்லைக் கூறுவான் எனப்பொருள்படும்.
பொறை என்ற சொல் சுமை என்ற பொருளது. இங்கு உடற்சுமை என்று கொள்வர்.

அக்கம் பக்கம் பார்த்து அங்கில்லாத ஒருவரை இழிவாகப் பேசுபவனைக்கூட இந்த உலகம் பொறுத்துக் கொண்டிருக்கிறதே, அது அறம் கருதிப் போலும்!

புறங்கூறுபவனை இப்பூமி எப்படித்தான் தாங்கிக் கொண்டிருக்கிறதோ? புன்சொல் உரைப்பவனின் பாரத்தையும் பொறுத்துக் கொள்வது தனக்கு அறம் என்று பூமி கருதியதால்தான் போலும். வேறென்னவாக இருக்க முடியும்? இல்லையென்றால் இக்கொடியவர்களை எல்லாம் என்றோ அழியும்படி இவ்வுலகம் விட்டிருக்கும். புறங்கூறி உலகிற்குத் தீமை செய்தவர்க்கும் நன்மை செய்யவேண்டும் என்பது அறநெறி என்பதாலாம்.
புறம் கூறுவோர் இவ்வுலகில் வாழத்தகுதியற்றோராவர் என்பது வள்ளுவர் கருத்து. அதனால்தான் 'அவனெல்லாம் பூமிக்கு பாரம்' என்ற உலகியல் வழக்கில் உரைக்கிறார். புறம் பேசுகிறவர்கள் பூமிக்குச் சுமைபோலே என்பது இக்குறள் கூறும் செய்தி.

'பொறை என்னும் சொல் இங்குச் சுமத்தலும் பொறுத்துக்கொள்ளுதலுமாகிய இரு பொருளையும் ஒருங்கே தழுவிய தாம்' என்பார் தேவநேயப்பாவாணர்.
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை (நன்றியில் செல்வம் குறள்எண்: 1003 பொருள்: சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்) என்று பூமிக்குப் பாரமான மற்றொரு மாந்தரையும் குறள் கூறியுள்ளது.

'அறன்நோக்கி' என்ற தொடர் குறிப்பது என்ன?

'அறன்நோக்கி' என்ற தொடர்க்கு அறத்தை நோக்கி, தன்மத்தைப் பார்த்து, தருமத்தை நேர் நோக்கி, எனக்கு அறமாவது எனக் கருதி, அறம்பற்றி, அதுவும் ஓர் அறமோ?, 'கொடியது தாங்குவதே அறம்' என்று கருதி, தன் கடமை என்று கருதி, அறம் கருதி, தனக்கு அறமென்று கருதி, அறநெறி கருதி, அறநெறி கருதி, அறத்தை நோக்கி என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

எல்லாவற்றையும் பொறுத்தல் நிலமகளுக்கு இயல்பாயினும் புறங்கூறுவோரைப் பொறுத்தல் அரிது என்னும் கருத்தால் 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார் என்பது பரிமேலழகரின் விளக்கம். அதாவது மலை, கடல் முதலிய எல்லாவற்றையும் தாங்குதல் இயல்பாயினும் புறங்கூறுவானது உடற்சுமையைத் தாங்குதல், நிலத்திற்குத் தாங்குதற்கரிய சுமையாக இருத்தலின் 'அறன்நோக்கி' எனச் சொல்லப்பட்டது.
புறங்கூறுவான் மீது ஒருவித அருவெறுப்பு தோன்ற 'அறன்நோக்கி' என்று சொல்லப்பட்டது.
கடமையும் அறமாகக் கருதப்படுதலின்,’அறனோக்கி’ என்பதற்குக் கடமை கருதி என்ற பொருளும் பொருந்தும்.

'அறன்நோக்கி' என்ற தொடர்க்கு அறம் கருதி என்பது பொருள்.

யாரும் இல்லாதவாறு பார்த்து ஒருவரைப் பற்றி இகழ்ந்துரைப்பானது உடல் சுமையை அறம் கருதி இவ்வுலகம் சுமக்கின்றது போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புறங்கூறுவார் மறைவைப் பலரும் எதிர்பார்த்திருப்பர் என்னும் புறங்கூறாமை பாடல்.

பொழிப்பு

யாரும் இல்லாத நேரம் பார்த்துப் புறங்கூறுபவனது உடற்சுமையை இவ்வுலகம் அறம் கருதிப் பொறுக்கிறது போலும்.