இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0186



பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:186)

பொழிப்பு (மு வரதராசன்): மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

மணக்குடவர் உரை: பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.

பரிமேலழகர் உரை: பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.
('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: பிறரது குறையை நீ தேடிக் கூறின் உன் பெரிய குறையை மற்றவர் விடுவாரோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறன்பழி கூறுவான் தன் பழியுள்ளும் திறன்தெரிந்து கூறப்படும்.

பதவுரை: பிறன்-மற்றவன்; பழி-பழி; கூறுவான்-(காணாவிடத்துச்) சொல்லுவான்; தன்-தனது; பழியுள்ளும்-குற்றங்களுள்ளும், பழிக்கப்படுவதிலும்; திறன்-உளையுந்தன்மையுடைய பழி; தெரிந்து-அறிந்து; கூறப்படும்-சொல்லப்படும்..


பிறன்பழி கூறுவான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனுடைய பழியைச் சொல்லுமவன்;
பரிப்பெருமாள்: பிறனுடைய பழியைச் சொல்லுமவன்;
பரிதி: ஒருவன் குற்றத்தைப் புறம் சொல்லுவான்;
காலிங்கர்: பிறன் ஒருவனைப் பழிசொல்லக் கருதுமவன்;
பரிமேலழகர்: பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்;
பரிமேலழகர் குறிப்புரை: 'புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும்.

'பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறனது பழியைப் புறத்தே தூற்றுபவன்', 'இன்னொருவன் மேல் பழி சுமத்தக் கோள் சொல்லுகின்றவன்', 'பிறருடைய குற்றங்களைப் புறத்தே தூற்றுவானுடைய', 'பிறனொருவன் பழியை அவன் இல்லாத பொழுது ஒருவன் கூறினால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறனொருவன் பழியை அவன் புறத்தே கூறுபவன் என்பது இப்பகுதியின் பொருள்.

தன் பழியுள்ளும் திறன்தெரிந்து கூறப்படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.
பரிப்பெருமாள்: தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதுதான் பிறராற் புறஞ்சொல்லப் பெறுவன் என்கின்றது.
பரிதி: தன் குற்றத்தையும் விசாரித்துச் சொல்ல வேணும் என்றவாறு. [விசாரித்து - ஆய்ந்து அல்லது பிறரைக் கேட்டறிந்து]
காலிங்கர்: தனது பழியைப் பிறர் கருதும் திறப்பாட்டினையும் தெளிய ஆராய்ந்து கண்டு கூறப்படும் என்றவாறு. [திறப்பாட்டினை - சிறப்பினை]
பரிமேலழகர்: தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார். [திறன் -திறத்தை (வலியை) உடைய பழிச் சொற்கள்; உளையுந் திறத்தன -வருத்தும் வகையன]

'தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து கூறப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் பிறரால் சொல்லப்படுவன் என்று கூற பரிமேலழகர் அவனால் அதாவது பழி கூறப்பட்டவனால் கூறப்படும் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் பழிகளுள் வருத்தும் திறமுடையதைத் தேர்ந்து அவனாற் கூறப்படுவான்', 'தான் யாரிடத்தில் கோள் சொல்லுகிறானோ அவன் தன்மேல் கோள் சொல்லும் குற்றம் நினைப்பானே என்றதைத் தெரிந்து பேச வேண்டும்', 'பழிச் செயல்கள் யாவற்றுள்ளும் மிக இழிந்தவை பிறரால் தெரிந்தெடுத்து உரைக்கப்படும்', 'அங்ஙனம் கூறியவனைப்பற்றிக் கூறப்பட்டவன் வருந்தும் பழிகளைத் தெரிந்து கூறுவான். (புறம் கூறுவதனால் பகைமை வளர்ந்து கொண்டே போகும்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன் குற்றங்களுள் மிக இழிந்தவற்றைத் தேர்ந்து கூறப்படும் என்பதை உணரவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறனொருவன் பழியை அவன் புறத்தே கூறுபவன் தன் குற்றங்களுள் திறன்தெரிந்து கூறப்படும் என்பதை உணரவேண்டும் என்பது பாடலின் பொருள்.
'திறன்தெரிந்து' என்ற தொடரின் பொருள் என்ன?

பழிப்பவன் பெரும் பழிப்படைவான்; எங்கே அடித்தால் மிகவும் வலிக்குமோ அங்கே அடிக்கப்படுவான் புறங்கூறுபவன்.

பிறன் குற்றத்தை அவன் இல்லாதபோது பிறரிடம் கூறுகின்றவன் தன் பழிச் செயல்களும் தெரிந்தெடுக்கப்பட்டு மிகவும் பழிக்கப்படுவான்.
பிறனைப் பற்றிய பழிகளை ஒருவன் புறத்தே சொல்லும்முன், தன் குற்றங்களும் ஆய்ந்து தேர்ந்து பழி கூறப்படும் என்பதை உணரவேண்டும் என உலகியல் சார்ந்து மொழியப்பட்டது. பிறன் பழியைப் புறங்கூறித் திரிபவனுக்கு, அவனது பழிகள் அனைத்துள்ளும் அவனுக்கு மன உளைச்சலை உண்டாக்குபவற்றை வகை அறிந்து புறங்கூறப்பட்டவனால் புறம் கூறப்படும் என்பது புரிய வேண்டும். மற்றவருக்கு என்ன தீங்கு விளைக்கிறோமோ அதே தீங்கு நமக்கு வரும். புறங்கூறும் ஒருவன் செய்யும் குற்றங்களை புறங்கூறப்பட்டவனும் மற்றவர்களும் உற்று நோக்கிக் கொண்டிருப்பர். அவன் செய்யும் குற்றங்களுள் எவைபற்றி பிறரிடத்தில் பேசினால் அவனுக்கு மிகவும் வருத்தம் தருமோ, அதைப்பற்றிப் பேசத்தான் செய்வார்கள்.
புறம்பேசுவது என்றல்லாமல் பிறன்பழி கூறுவான் என்று இக்குறளில் உள்ளது. அதிகாரம் நோக்கி இப்பழி புறத்தே சொல்லப்படுவதாகக் கொள்வர். நம்மைபற்றி யாரும் பழி பேசாதிருக்க வேண்டுமென்றால், நாமும் புறம் பேசுவதை விட்டு விடவேண்டும் என்பது கருத்து.
புறங்கூறுபவனும் கூறப்பட்டவனால் புறங்கூறப்படுவான் என உரை கொள்ளும்போது அது பழிக்குப் பழி என்பதாக அமைகிறது. இதனால் மேலும் மேலும் பகைதான் வளரும். வள்ளுவர் இதை விரும்புபவர் அல்லர். இதை உணர்ந்த தேவநேயப்பாவாணர், 'பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன் தன் சொந்தப் பழிகளுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப்பிறனால் தன் எதிரிலேயே கூறப்படுவான்' என புறங்கூறப்பட்டவன் புறங்கூறியவனை நேரில் அழைத்து அவனது கடுமையான பழிகளைக் கூறுவான் என்றார். கூறப்படும் என்பதற்கு நேரில் கூறப்படும் எனக்கொள்ளலாம் என்பது இவர் உரை. பழி கூறப்பட்டவனும் புறங்கூறாது நேரில் சொல்வான் என்று அமைந்ததால் இவ்வுரை சிறந்து காணப்படுகிறது.

'தன்பழியுள்ளும்’ என்பதிலுள்ள உள்ளும் என்பதற்கு நினைக்கும் என்று பொருள் கொண்டு 'தன் பழியினைப் பிறர் நினைக்கும்' என சிலர் உரை செய்தனர். ஆனால் அத்தொடர்க்கு ....அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து (அடக்கமுடைமை 125) என்பதில் உள்ளது போல 'தன்பழி பலவற்றுள்ளும்' எனப் பொருள் காண்பதே சிறப்பாகும்.
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து (அருளுடைமை 250 பொருள்: தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது, தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும்) என்பது போன்ற நடையில் அமைந்த குறள் இது.

'திறன்தெரிந்து' என்ற தொடரின் பொருள் என்ன?

'திறன்தெரிந்து' என்ற தொடர்க்குச் சிலவற்றை வேறுபடத் தெரிந்து, விசாரித்து, பிறர் கருதும் திறப்பாட்டினையும் தெளிய ஆராய்ந்து கண்டு, உளையும் திறம் உடையவற்றைத் தெரிந்து, மனம் உளையும் திறத்தவாகிய பழிகளைத் தேர்ந்தெடுத்து, வருத்தும் திறமுடையதைத் தேர்ந்து, (தன் மேல் குற்றம்) நினைப்பானே என்பதைத் தெரிந்து, கடுமையானவற்றைத் தெரிந்து, மிக இழிந்தவை பிறரால் தெரிந்தெடுத்து, வருந்தும் பழிகளைத் தெரிந்து, தேர்ந்தெடுத்துப் பழியுரை, வருந்துதற்குரிய கொடும் பழிகளை ஆராய்ந்தறிந்து, கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு, சொல்லக்கூடாத பெரிய குற்றத்தையும் தேர்ந்து எடுத்து என உரைகாரர்கள் பொருள் கூறினர்.

புறங்கூறுபவனது பழிகளின் அல்லது குற்றங்களின் 'திறன் தெரிந்து' என்பது பலரின் விளக்கம். திறன் என்பதற்கு வகை எனப் பொருள் கொண்டு பழிகளுள் சிறிய பழி, கொடும்பழி என்னும் வகை செய்து கூறப்படும் என்றனர். பரிமேலழகர் 'தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து' அதாவது எவை அவனை மிகவும் வருத்துமோ அத்தகைய குற்றங்களைத் தேர்ந்தெடுத்துப் புறம் கூறுவான் என உரை கூறினார். திறன் தெரிந்து கூறுபவன் புறங்கூறப்பட்டவனாகவும் இருக்கலாம் அல்லது வேறு பிறனாகவும் இருக்கலாம் என்றாலும் புறங்கூறப்பட்டவனால் சொல்லப்படும் என்பது இயல்பானது.

'திறன்தெரிந்து' என்ற தொடர்க்கு (குற்றங்களின்) வகை அறிந்து என்பது பொருள்.

பிறனொருவன் பழியை அவன் புறத்தே கூறுபவன் தன் குற்றங்களுள் மிக இழிந்தவற்றைத் தேர்ந்து கூறப்படும் என்பதை உணரவேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஏதிலார்‌ குற்றம்போல் தம் குற்றம்‌ காண்பது‌ புறங்கூறாமைக்கு வழி.

பொழிப்பு

பிறரது குறையைப் புறங்கூறுபவனது பெருங்குறை தேடிக் கூறப்படும்.