இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0184கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:184)

பொழிப்பு: எதிரே நின்று இரக்கமின்றி கடுஞ்சொல் சொன்னாலும் சொல்லலாம்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க முடியாத சொல்லைச் சொல்லவேண்டாம்.மணக்குடவர் உரை: ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக.
இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

பரிமேலழகர் உரை: கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.
('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவன் நேரே எதிரே நின்று, கண்ணோட்டமின்றிச் சுடுசொற்களைக் கூறினாலும் கூறுக. அவன் இல்லாத இடத்தில் அவனைப் பற்றிய குற்றங்களைக் கூறாதொழிக. புறங்கூறலின் பின்விளைவு, துன்பமாக அமையும் என்பது கருத்து. பின்னோக்காச் சொல்-நேற்று முன் தினம் பழி சுமத்துபவரிடம் அன்பொழுகப் பேசிய சொற்களை நினையாது கூறல். புறங்கூறல் மூலம் நட்பு கெடுதலால், பின் முகம் நோக்கி வாழ முடியாமை வரம் என்பதும் கருத்து.பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்நின்று கண்ணறச் சொல்லினும், முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க.

கண்நின்று கண்ணறச் சொல்லினும்:
பதவுரை: கண்நின்று-கண்ணெதிரே நின்று; கண்-கண்ணோட்டம்(இரக்கம்); அற-நீங்க; சொல்லினும்-சொன்னாலும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்;
பரிப்பெருமாள்:ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்;
பரிதியார்: ஒருவர் முகம் பார்த்துத் தோஷம் சொல்வது நன்று;
காலிங்கர்: ஒருவனிடத்து நின்று வைத்துக் கண்ணோடங்கெடச் சில சொல்லுவானாயினும்;
பரிமேலழகர்: ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்;

'ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை 'கேட்டவர்கள் கண்ணை மூடிக்கொள்ள' என்ற பொருள் தருவது.

இன்றைய ஆசிரியர்கள் 'எதிரே கடுமையாகச் சொல்லினும் சொல்லலாம்', 'ஒருவன் கண் எதிரே நின்று கண்ணோட்டம் அறப் பேசினாலும்', 'ஒருவனுக்கு முன்னால் நின்று தாட்சண்ணியமில்லாமல் பேசிவிட்டாலும் குற்றமில்லை', 'ஒருவன் கண்முன்பு நின்று கடுஞ்சொல் சொல்லுவதில் கூடத் தவறில்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவனின் கண் எதிரே நின்று இரக்கமில்லாமல் கடுஞ்சொற்களைக் கூறினாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். :
பதவுரை: சொல்லற்க-சொல்லவேண்டாம்; முன்-எதிரில்; இன்று-இல்லாமல்; பின்-பிறகு; நோக்கா-ஆராயாத; சொல்-மொழி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.
பரிப்பெருமாள்: பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.
பரிதியார்: அவனைக் காணாதவிடத்தில் புறஞ் சொல்லவொண்ணாது என்றவாறு.
காலிங்கர்: சொல்லாது ஒழிக; யாதினை எனில் ஒருவன் தன் முன்பிலனாகக் கண்டு மற்றவனைப் பின்பு முகநோக்கத் தகாத சொல்லினை என்றவாறு.
பரிமேலழகர்: அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.
பரிமேலழகர் குறிப்புரை: 'பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.

'பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆளில்லாத போது கோள் சொல்லற்க', 'அவன் எதிரே நின்று பின் முகத்தில் விழிக்க முடியாத சொல்லைக் கூறாதொழிக', 'ஆனால் அவன் உனக்கு முன்னால் இல்லாதபோது பின்னாலுண்டாகும் தீங்குகளை நினைத்துப் பார்க்காமல் கோள் சொல்லக்கூடாது', 'அவன் இல்லா இடத்துப் பின் விளைவு கருதாது பழிப்புரை கூறுதல் தகாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பின்னர் அவன் முகத்தை நேருக்கு நேர் எதிர்நோக்கவியலாத சொற்களைப் புறங் கூற வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
நேருக்கு நேர் நின்று இரக்கமில்லாமல் இடித்துரைத்தாலும் ஒருவன் புறத்தே இருக்க அவனைப் பின்னர் முகம் நோக்க முடியாத இழிசொற்களைச் சொல்லாது விடுக.

ஒருவனின் கண் எதிரே நின்று இரக்கமில்லாமல் கடுஞ்சொற்களைக் கூறினாலும், பின்னர் அவன் முகத்தை நேருக்கு நேர் எதிர்நோக்கவியலாத சொற்களைப் புறங் கூற வேண்டாம் என்பது பாடலின் பொருள்.
'முன்இன்று பின்நோக்காச் சொல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

கண்நின்று என்றதற்குக் 'கண்ணுக்கு கண் நேரே நின்று' என்பது பொருள்.
கண்ணறச் சொல்லினும் என்பது 'கண் அறச் சொன்னாலும்' அதாவது 'கண்ணோட்டம் இன்றிச் சொன்னாலும்' என்ற பொருள் தரும்; கண்ணோட்டம் என்பது இரக்கம், கருணை குறித்தது.
சொல்லற்க என்றது சொல்ல வேண்டாம் என்ற பொருள் தருவது.

கடுஞ்சொற்களே ஆனாலும் ஒருவன் முகத்துக்கு எதிரே சொல்லுக; ஆனால் பின்னர் அவனை முகம் நோக்கமுடியாத வண்ணம் அவன் இல்லாத இடத்து இகழ்ந்து கூறுதல் வேண்டாம்.

ஒருவரது நலம் கருதுவோர் அவரைப் பற்றி எதைச் சொல்ல எண்ணுகிறார்களோ, அவற்றை இரக்கமின்றி நேருக்கு நேர் கடிய சொற்களால் உரக்கவும் சொன்னாலும் குற்றமில்லை; ஆனால், பின்னர் அவரை முகத்துக்கு முகம் பார்க்கமுடியாதபடி, அவர் இல்லாதபோது, அவரை இகழ்ந்துரைக்க வேண்டாம் என்கிறது பாடல்.
வன்சொல் கூறக்கூடாது என்பதே வள்ளுவரின் அறமொழி. ஒருவர் முன்னே அவர் மனம் புண்படும்படி கடுஞ்சொல் கூறுதல் பண்பாடற்ற செயல்தான். ஆனாலும் அவருடைய குறைபாடுகளை அல்லது தீமைகளை அவரது நலம் கருதி அவரிடமே அச்சமின்றி நேரிற்சென்று அவரைத் திருத்தும் முகத்தான் கடுஞ்சொல் கூறலாம்; இவ்விதம் குற்றம் கண்டு பொங்கி நேரடியாகவே குறைகளைச் சுட்டிக் காட்டுவது அச்சமற்ற வீரம். ஆனால் அவனைத் திருத்தும் நன்னோக்கம் இன்றி, பின்னாளில் அவன் முன்சென்று எதிர் முகம் நோக்க முடியாத இழிசொல்லை அவன் இல்லாதபோது பிறரிடம் சொல்லக் கூடாது. அது கோழைத்தனம்.

‘கண்ணறச் சொல்லினும்’ என்பதற்குக் கண்பார்த்தல் ஒழிய, அதாவது கண்ணை மூடிக்கொள்ளுமாறு, சொல்லினும் என்று உரை தருவார் மணக்குடவர்.

'முன்இன்று பின்நோக்காச் சொல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

இப்பகுதிக்கு உரையாசிரியர்கள்

 • பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்கவொண்ணாத சொல்
 • அவனைக் காணாதவிடத்தில் புறஞ் சொல்லல்
 • ஒருவன் தன் முன்பிலனாகக் கண்டு மற்றவனைப் பின்பு முகநோக்கத் தகாத சொல்
 • அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்
 • முன்னே நின்று நல்லவார்த்தை சொல்லி அவன்போன பின்பு இகழ்ச்சி சொல்லல்
 • அவன் காணாத இடத்திலே அவன் பேரிலே பின்னுக்கு வரும் குற்றத்தை நோக்காத பேச்சு
 • அவன் எதிரில் இல்லாதபொழுது பின்னர் அவன் முகத்தை எதிர்நோக்கவியலாத சொற்கள்
 • அவன் இல்லாத இடத்தில் அவனைப் பற்றிய குற்றங்களைக் கூறுதல் - நேற்று முன் தினம் பழி சுமத்துபவரிடம் அன்பொழுகப் பேசிய சொற்களை நினையாது கூறல்
 • ஆளில்லாத போது கோள் சொல்லல்
 • அவன் எதிரே நின்று பின் முகத்தில் விழிக்க முடியாத சொல்லைக் கூறாதொழிக
 • அவன் முன்னால் இல்லாதபோது பின்னால் வரும் தீமைகளை நினைத்துப் பார்க்காத வார்த்தைகள்
 • ஒருவன் முன்னே இல்லாமல் பின்விளைவு கருதாது சொல்லும் புறங்கூறுதல்
 • அவனுக்கு முன்பு இல்லாமல் புறத்தேபோய் அவன் அறியாத பழிச்சொற்கள்
 • ஒருவன் இல்லாத பொழுது அவனைப்பற்றி இழித்துரைத்துப் பின் அவனைப் பார்க்க முடியாத நிலையை உண்டு பண்ணும் சொற்கள்
 • அவன் இல்லா இடத்துப் பின் விளைவு க்ருதாது பழிப்புரை கூறுதல்
 • ஒருவனைக் காணாதவிடத்து பின்பு அவனைப் பார்க்க முடியாத பழிச் சொற்கள்
 • அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்கள்
 • முன்னே புகழ்ந்து பேசிப் பின்னால் இகழ்ந்து பேசும் புறங்கூறல்
 • நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்
 • ஒருவர் தனக்கு முன்பாக இல்லாத நேரத்தில், (அவருக்கு புறமாக) பின்விளவுகளை ஆராயாமல் சொல்லுகின்ற புறங்கூறலை, பின் தூற்றிப் பேசுவது
 • முன்னால் இல்லாத போது (முதுகுக்குப்பின்னால்), பின்விளைவு பற்றிய எண்ணமில்லாமல் பழி பேசல்
 • ஒருவர் முன்னே நின்று புறத்தே [கண்ணால்] பார்க்காததைச் சொல்லும் சொல்
எனப் பொருள் கூறினர்.

'முன்நின்று', 'முன்இன்று' என்று இரண்டு வகையான பாடங்கள் காணப்படுகின்றன. 'பிற்காலத்து அவன் முன்னே நின்று' என்று மணக்குடவர் இத்தொடர்க்கு உரை கூறினார். ஆனால் காலிங்கர் 'தன் முன்பு இலனாகக் கண்டு', என்று பொருளுரைத்தார். அதுபோலவே பரிமேலழகரும் 'அவன் எதிரின்றி' என்று அதாவது முன்இன்று என்ற பொருளிலேயே உரை வழங்கினார். முன்நின்று என்பது முதலடியில் சொல்லப்பட்ட கண்நின்று என்ற பொருளே தருவதால் முன்இன்று என்று கொள்வது சிறந்தது.
'பின்நோக்கா' என்பதற்கு 'எதிர் முகம் நோக்கவொண்ணாத' என்று மணக்குடவரும் 'மற்று அவனைப் பின்பு முகநோக்கத் தகாத' என்று காலிங்கரும் உரை தருவர். இவர்கள் 'புறங்கூறியவன் பின்னர் யாரைப்பற்றிச் புறம் சொன்னானோ அவன் முன்னே நின்று முகம் நோக்காத அளவு நாணிக்கொள்ள வேண்டிவரும்' என்று பொருள் கொள்கின்றனர். பரிமேலழகரோ 'பின்வரும் குற்றத்தை நோக்காத' அதாவது 'பின்விளைவுகளை ஆராயாது' என்ற பொருளில் உரை அமைத்தார்.
'பின் ஒரு காலத்து எப்படி அவன் முகநோக்கத் தகாத சொல்' என்று ஒரு சாராரும் 'பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்' என்றவாறு மற்றொரு சாராரும் இப்பகுதிக்கு உரை கூறினர். ‘நாளைக்கு அவன் முகத்தில் விழிக்கவேண்டாமா?’ என்பது வழக்கு. அது கருதி முன்னது பொருத்தமானதாகிறது.

பின்பு அவனைப் பார்க்க முடியாத நிலையை உண்டு பண்ணும் சொற்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவனின் கண் எதிரே நின்று இரக்கமில்லாமல் கடுஞ்சொற்களைக் கூறினாலும், பின்னர் அவன் முகத்தை நேருக்கு நேர் எதிர்நோக்கவியலாத சொற்களைப் புறங் கூற வேண்டாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எதுவாயிருந்தாலும் நேருக்கு நேர் பேசிவிடுக என அறிவுறுத்தும் புறங்கூறாமை பாடல்.

பொழிப்பு

ஒருவன் கண் எதிரே நின்று இரக்கமற்று இழித்துப் பேசினாலும் அவன் எதிரே நின்று பின்னர் முகத்தில் விழிக்க முடியாத சொல்லைப் புறத்தே கூறவேண்டாம்.