இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0183



புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:183)

பொழிப்பு: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

மணக்குடவர் உரை: காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

பரிமேலழகர் உரை: புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும்.
(பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.)

இரா சாரங்கபாணி உரை: பிறனைக் காணாதபோது இகழந்துரைத்துக் கண்டபோது நல்லவனாய் நடித்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் சாவது அறநூல்கள் கூறும் ஆக்கத்தைக் கொடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும்.


புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்:
பதவுரை: புறம்-காணாதவிடம்; கூறி-சொல்லி; பொய்த்து-பொய்யாகி; உயிர்-உயிர்; வாழ்தலின்-வாழ்க்கை நடத்துவதைக் காட்டிலும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின்;
பரிப்பெருமாள்: காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின்;
பரிதி: ஒருவன் குற்றத்தை அவர்க்கு வேண்டாதார் முன் கூடப் புறம் சொல்லி, அதனாலே, பிரயோசனப்பட்டு வயிறு வளர்ப்பதில் .
காலிங்கர்: ஒருவன் ஒருவனைப் பொய்த்துப் புறங்கூறி இங்ஙனம் உயிர் வாழ்தலில்;
பரிமேலழகர்: பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்;

'காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறனைக் காணாதபோது இகழந்துரைத்துக் கண்டபோது நல்லவனாய் நடித்து உயிர் வாழ்வதைக் காட்டிலும்', 'கோள் சொல்லிப் பொய்யனென்று பெயரெடுத்துப் பிழைப்பு நடத்துவதைக் காட்டிலும்', 'காணாதபோது ஒருவனை இகழ்ந்துரைத்து அவனைக் கண்டபோது பொய்யாக அவனைப் புகழ்ந்து உயிர் வாழ்வதைப் பார்க்கினும்', 'பிறரைக் காணாதவிடத்து இகழ்ந்து கூறிக் கண்ட பொழுது புகழ்ந்து கூறிப் பொய்யான முறையில் உயிர் வாழ்தலைவிட', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காணாவிடத்துப் புறம்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்த்து ஒருவன் உயிர் வாழ்வதைக் காட்டிலும் என்பது இப்பகுதியின் பொருள்.

சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும்:
பதவுரை: சாதல்-இறத்தல்; அறம்-அறநூல்கள்; கூறும்-சொல்லும்; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; தரும்-கொடுக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.
பரிப்பெருமாள்: புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறம் கூறுகின்ற ஆக்கமாவது யோகநுகர்ச்சியும் வீடு பெறுதலும் புறம் கூறுவான் சாவாது ஒழியப் பாவமும் பகையும் தேடும். சாவ அவை எல்லாம் இல்லையாம என்றதாம்.
பரிதி: சாதல் நன்று என்றவாறு.
காலிங்கர்: இறத்தலாகின்ற சாதலைத் துணிவானாயின் இவ்வுலகத்து அறநூல் சொல்லுகின்ற இம்மை மறுமையாகிய ஆக்கத்தைத் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.

சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் நல்குரவினால் சாதல் என்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சாவது அறநூல்கள் கூறும் ஆக்கத்தைக் கொடுக்கும்', 'செத்துப் போவது தர்ம நூல்களில் சொல்லப்படுகிற நன்மையைத் தரும்', 'செத்துப் போதல் அறநூலிற் கூறிய நல்வினைப் பயனை மறுமையிற் கொடுக்கும்', 'இறந்து விடுதல் அற நூல்கள் கூறும் உயர்வு தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இறந்துபடுதல் அற நூல்கள் கூறும் ஆக்கத்தைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புறம்சொல்லிப் பொய்யாக வாழ்க்கை நடத்துவதிலும் ஒருவன் இறந்துபடுவது அறநூல்கள் சொல்லும் நன்மைகள் தரும்.

காணாவிடத்துப் புறம்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்த்து ஒருவன் உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்துபடுதல் அற நூல்கள் கூறும் ஆக்கத்தைக் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
புறங்கூறலுக்கு குறள் ஏன் தற்கொலைத்தண்டனை விதிக்கிறது?

புறம்கூறிப் பொய்த்து என்ற தொடர்க்குக் காணாத இடத்து இகழ்ந்துரைத்து உண்மையற்று என்பது பொருள்.
உயிர் வாழ்தலின் என்ற தொடர் உயிர் வாழ்வதைவிட என்ற பொருள் தரும்.
சாதல் என்ற சொல்லுக்குச் செத்துப் போதல் என்று பொருள்.
அறம்கூறும் என்ற தொடர் அறநூல்கள் சொல்லும் எனப் பொருள்படும்.
ஆக்கம் தரும் என்ற தொடர் நற்பயன்களைக் கொடுக்கும் என்ற பொருளது.

ஒருவன் இல்லாதவிடத்து அவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி உயிர்வாழ்கிற வாழ்க்கையைவிட ஒருவன் செத்துப்போவது மேலானது.

வாழும் வாழ்வே புறங்கூறுதலால் மட்டுமே என்ற நிலை வந்தாலும் ஒருவன் புறங்கூறக்கூடாது எனச் சொல்லி அதற்குப் பதிலாக அவன் தன்னுயிரை எடுத்துக்கொண்டு செத்துப் போகலாம் என்கிறது பாடல்.
ஒருவன் புறத்தே மறைந்து பழி பேசிப் பிறகு அவர்தம் முன்னர் இனியவன் போல் பொய்யாக ஏன் நடிக்க வேண்டும்? சிலநேரங்களில், தங்கள் வாழ்வாதாரத்துக்காக, பிறரைத் தூற்றிச்சொல்லும் தேவை சிலருக்கு உண்டாகலாம். பழித்துப் பேசும் குணமில்லாதவராக இருந்தாலும். அத்தகைய நெருக்கடியான நேரங்களில் பொய்யென்றறிந்தும் வஞ்சித்துப் புறம்பேசிப் பொய்த்து வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கலாம். இது வறுமையினின்று நீங்குவதற்காகப் புறங்கூறுகிறான் என்றாகிறது. காணாதபோது இகழ்ந்துரைத்துப் பொய்யாக நடித்துப் பயன் அடைந்து அதனால் உயிர்வாழும் நிலைமையில் உள்ள ஒருவன் பற்றி இப்பாடல் பேசுகிறதாகிறது. அப்படிப்பட்ட நிலை வ்ந்தால் அவ்வாறு உயிர்வாழ்வதைவிட, பொருள் இல்லாமல் வறுமையுற்று இறந்துவிடுவது நல்லது; அந்தச் சாவு அவனுக்கு அறநெறிப்பட்ட நன்மையைத் தருவதால் அது மேலானதாகும் என்கிறது இக்குறள்.
புறங்கூறுதலால் பலர் பாதிக்கப்படுவர். உறவுகள் கெடும். அது ஒரு அறமற்ற செயல். வயிற்றுப் பிழைப்புக்காக என்றாலும் அதைச் செய்யாதே; அப்படிச் செய்யாது இறந்துபட்டால் அறநூல்கள் கூறும் வேறு நல்ல பயன்களும் கிடைக்கும் என்பது செய்தி.

புறங்கூறிப் பொய்த்து என ஏன் சொல்லப்பட்டது? புறங்கூறுவோர் தான் கேட்ட செய்தியை மிகைப்படுத்தி பொய்மையை அதாவது இல்லாததையும், பொல்லாததையும் சேர்த்துச் சொல்வர். அதனால் புறங்கூறல் பொய்மையைத் தன்னகத்தே கொண்டதாக ஆகிவிடும். புறம்பேசுகிறவர்கள் எவரைப்பற்றி புறங்கூறினார்களோ, அவர்களிடம் பொய்யாக இன்முகம் காட்டி நடித்துப் பேச வேண்டிவரும். இதனால் 'புறங்கூறிப் பொய்த்து' எனக் கூறப்பட்டது. நாகை சொ தண்டபாணியார் 'பொய்த்து' என்பதற்கு மற்றவர்கள் போல் 'எதிரில் இனிமையாகப் பேசுதலாகிய பொய்யைச் செய்து' என்று உரை காணாமல் 'பொய்பட்டு உயிர் வாழ்தல்' என உயிர்வாழ்தலுக்கு அடையாக்கி உள்ளீடின்று வாழ்தலைக் குறிப்பார். புறங்கூறுதல் என்றாலே பொய்யாகத்திரித்து இழிவுண்டாகக் கூறுதல் என்ற கருத்துண்மையின் அதனை மீளவும் பொய்த்து என்பதாற் கூறவேண்டா எனக் கருதி, பொய்த்து என்பதனை உயிர்வாழ்தலுக்கு ஏற்றிக் கூறினார் என்பது உணர்க (தண்டபாணி தேசிகர்).
இப்பாடலிலுள்ள 'அறம்' என்னும் சொல் ஆகுபெயராய், அறத்தை உணர்த்தும் நூல்களையே குறிப்பிடுவதாக உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

புறங்கூறலுக்கு குறள் ஏன் தற்கொலைத்தண்டனை விதிக்கிறது?

சாதலின் இன்னாத தில்லை... (ஈகை குறள் எண்: 230 பொருள்: சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை...) என்று சாதல் மிகத் துன்பமானது என்று குறள் கூறும். புறங்கூறுபவன் அத்துன்பத்தை எய்துதல் ஆக்கம் தரும் என்கிறது பாடல். இங்கு சொல்லப்படும் சாதல் இயற்கைச் சாவு அல்ல (வ உ சிதம்பரம் ஒருவர் மட்டுமே 'சாதல் என்பது இயற்கைச் சாவைக் குறித்து நின்றது' என்றார்). அது ஒருவன் அவனது உயிரை அவனே எடுத்துக் கொள்வதை அதாவது தற்கொலை செய்து கொள்வதைக் குறிப்பது. புறங்கூறுபவன் தற்கொலை செய்து கொண்டு சாகலாம் என்று வள்ளுவர் ஏன் இவ்வளவு கடுமையாகப் புறம்சொல்லுதலைக் கடிகிறார்? ...உயிர் நீப்பர் மானம் வரின் (மானம் குறள் எண்:969) மானம் கெடவரின் உயிரை விட்டுவிடுவர் என்றும் தன்னுயிர் நீப்பினும் செய்யற்க.... (கொல்லாமை குறள் எண்:327) தன்னுயிரை விட நேரிட்டாலும் வேறொரு உயிரைப் போக்கும் செயலைச் செய்யக்கூடாது என்றும் செத்தும் ஒருவன் நற்பண்பு ஓம்புவானாக என்று தனியறம் கூறியிருக்கிறார் வள்ளுவர். ஆனால் வயிற்று நிலை கடக்க வழி இல்லாமல் வாடுவோர் புறங்கூறலைவிட உயிரை இழப்பது மேல் என்பதை உணர்ந்து துணிவு கொள்ளவேண்டுமா?

பரிதி 'புறம் சொல்லி, அதனாலே, பிரயோசனப்பட்டு வயிறு வளர்ப்பதில் சாதல் நன்று' என்று இக்குறளுக்கு உரை பகன்றார். இவர் வயிறு வளர்த்தல் என்று அதன் இழிவு தோன்றச் சொல்லியிருப்பது நோக்கத்தக்கது. அப்படி இழிவான வாழ்வு வாழ்வதைவிட- புறங்கூறினாலன்றி உயிர்வாழ இயலாது என்ற நிலையிருந்தாலும்- புறங்கூறாதிருந்து வறுமையால் உயிர்விடுதலே நல்லது என்கிறது இக்குறள்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்பவர் யாரிடத்தும் உண்மையாக நடந்து கொள்ள மாட்டார். ஆதலால் நல்வாழ்க்கை அமைய இயலாது.
புறங்கூறுதல் மனித உறவில் பிளவு ஏற்படுத்தும் இயல்புடையது. மனித உறவைப் பாழ்படுத்தும் தீமைகளுள் இது தலையாய இடம் வகிக்கிறது என்று கூறலாம். புறங்கூறுதல் பலரிடம் பகை உணர்வைத் தோற்றுவித்துச் சமுதாயமே சீரழிய வழிவகுக்கும். இதனாலேயே வள்ளுவர் புறங்கூறுதலைப் பெருங்குற்றமாகக் கருதுகிறார்.
புறங்கூறுவான் இறந்தால், பொய்சொல்லிப் புறங்கூறுதலும் அவனோடு ஒழியும்; அப்படிச் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும் அதாவது அறநூல்கள் கூறுகிற நன்மைகளைப் பெறலாம் என்கிறது குறள்.

'இங்கு சாகவேண்டுமென்பது கருத்தன்று. திருத்தவேண்டுமென்பதே உட்கிடை' எனத் தமிழண்ணல் கூறுவார்.

காணாவிடத்துப் புறம்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்த்து ஒருவன் உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்துபடுதல் அற நூல்கள் கூறும் ஆக்கத்தைக் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புறம்சொல்லுபவர் உயிர்வாழத் தகுதியற்றவர் என்னும் புறங்கூறாமை பாடல்.

பொழிப்பு

புறங்கூறிப் பொய்யான வாழ்வு நடத்துதலைக் காட்டிலும் இறந்துபடுவதால் அறத்தின் பயன் பெறலாம்.