இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0179



அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:179)

பொழிப்பு: அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

மணக்குடவர் உரை: அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும்.
அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும்.
(அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: வெஃகாமை நல்ல அறம் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரிடம் திருமகள் அவரை அடைதற்குரிய இயைபினை அறிந்து சென்று அடைவள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்அறிந்து வெஃகா அறிவுடையார் திரு திறனறிந்து ஆங்கே சேரும்.


அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்:
பதவுரை: அறன்-நல்வினை; அறிந்து-தெரிந்து; வெஃகா-விரும்பாத; அறிவுடையார்-உணர்வு உடையவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை;
மணக்குடவர் குறிப்புரை: அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல்.
பரிதி: தன்மத்தின் நெறியை அறிந்து பிறர் செல்வத்தை விரும்பானாகில்;
காலிங்கர்: நன்னெறியின் வந்த பொருளைக் கொண்டு வாழ்வதே நமக்கு அறமாவது என்றறிந்து, நெறியல்லாதனவற்றை விரும்பா அறிவுடையாளரை;
பரிமேலழகர்: இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை;

'இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முறையறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிஞரை', 'பிறர் பொருளை விரும்பாமையே அறம் என்பதறிந்து அப்பொருளை விரும்பாத அறிவுடையவர்களை', 'தர்ம உணர்ச்சியோடு பிறருடைய உடைமையை அபகரிக்க ஆசையற்ற மனமுடையவர்களுடைய தகுதியை அறிந்து', 'அறநெறியை அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறர் பொருளைக் கவர விரும்பாமை அறம் என்ற உணர்வுடையாரை என்பது இப்பகுதியின் பொருள்.

சேரும் திறனறிந்து ஆங்கே திரு:
பதவுரை: சேரும்-சென்றடையும்; திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; ஆங்கே-அவ்வகையாலே; திரு-செல்வம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வமுண்டாமென்றது.
பரிதி: திருமாது வீற்றிருக்கும் என்றவாறு.
காலிங்கர்: சென்று சேரும், செல்வமானது என்றவாறு.
பரிமேலழகர்: திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும்.
பரிமேலழகர் குறிப்புரை: அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.

'திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தெரிந்து திருமகள் அடைவாள்', 'திருமகள் தான் அடைவதற்குரிய திறன் அறிந்து அம்முறைப்படி சேர்வாள்', 'அந்த அளவுக்குத் திருமகள் அவர்களிடம் தானாகவே வந்து சேர்வாள்', 'திருமகள் (செல்வக் கடவுள்) அடையும் சமயம் அறிந்து அடைவாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தகுதி அறிந்து செல்வம் சென்றடையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறர் உடைமையைக் கவர விரும்பாமையை அறம் என்று உணர்ந்தவரிடம் அவர் தகுதி அறிந்து செல்வம் தேடிச் சேரும்.

பிறர் பொருளைக் கவர விரும்பாமை அறம் என்ற உணர்வுடையாரைத் திறனறிந்து செல்வம் சென்றடையும் என்பது பாடலின் பொருள்.
'திறனறிந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

அறன்அறிந்து என்ற தொடர்க்கு இது அறம் என்று உணர்ந்து என்பது பொருள்.
வெஃகா என்ற சொல் கவர விரும்பாத என்ற பொருள் தரும்.
அறிவுடையார் என்ற சொல்லுக்கு உணர்ந்தவர் என்று பொருள்.
சேரும் என்ற சொல் சென்று அடையும் என்ற பொருள் தருவது.
ஆங்கே என்ற சொல் அவ்வகையால் எனப்பொருள்படும்.
திரு என்ற சொல் செல்வம் குறித்தது.

பிறர்பொருளைக் கைப்பற்ற எண்ணாமை ஓர் நல்லறம் என உணர்ந்திருப்பவரிடம் செல்வம் தேடிச் சென்றடையும்.

மற்றவர் பொருளை விரும்பாமை ஓர் அறம் என்று உணர்ந்தவரிடம் திரு உரிய நேரத்தில் தானாகச் சென்றடையும் என்கிறது இக்குறள். நல்லது செய்தால் அல்லது அறமல்லாதவற்றைச் செய்யாமல் இருந்தால் நன்மைகள் தானாக வந்தடையும் என்பதை வள்ளுவர் நம்புகிறவர். செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். (அடக்கமுடைமை குறள்:123 பொருள்: அறிவன அறிந்து முறையோடு அடங்கி நடப்பானாயின் அதன் தன்மை உணரப்பட்டுச் சீர்மை பயக்கும்) கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (அடக்கமுடைமை குறள்:130 பொருள்: சினம் காக்கப் பழகி ஒழுகுபவனைக் காண அறமே காத்துக் கிடக்கும்) ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை (ஊக்கமுடைமை குறள்:594 பொருள்: அசைவிலா ஊக்கத்தை உடையானிடம் செல்வம் தானே வழி வினாவிக்கொண்டு செல்லும்) போன்ற குறள்கள் இதற்கு சான்று பயக்கும்.

திரு என்ற சொல் திருமகளைக் குறிப்பது. திருமகள் சென்ற இடமெல்லாம் செல்வ வளத்தை அள்ளிக் கொடுக்கும் தெய்வம் என்று தொன்மங்கள் கூறும். பிறன் பொருள் வேண்டாதவர் தகுதியறிந்து திருமகள் செல்வம் நல்குவாள் என்பது இக்குறட் கருத்து. சென்ற அதிகாரமான அழுக்காறாமையில் அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். (குறள்: 167 பொருள்: பொறாமைப்படுபவனைத் திருமகள் வஞ்சனை கொண்டு தன் அக்காளுக்குக் காட்டி அவனிடத்தில் வறுமை புகுமாறு செய்துவிடும்) அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். (குறள்: 168 பொருள்: பொறாமை என்னும் பெரும் பாவம் செல்வத்தை அழித்துத் தீயுழி தள்ளிவிடும்) என்ற பாடல்கள் வழி யார் யாரிடம் திருமகள் தங்கமாட்டாள் என்றும் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.

'திறனறிந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

இப்பாடலிலுள்ள 'திறனறிந்து' என்ற தொடர்க்குத் தகுதியறிந்து, அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின), நேர்மையை அறிந்து, திறமைகளின் துறைதோறும், தெரிந்து, தான் அடைவதற்குரிய திறன் அறிந்து, தகுதியை அறிந்த அளவுக்கு, தகுதியை அறிந்து, அடைதற்குரிய இயைபினை அறிந்து, அடையும் சமயம் அறிந்து, அடைதற்கான திறங்களையறிந்து (திறங்கள் காலமும் இடமும் வினையும்), ஆற்றலுக்கேற்ப, செவ்வி தெரிந்து (செவ்வி -சமயம்) என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பிறன் பொருளை விரும்பாதவர்களுள்ளும் அவரவர் நடுவு நின்ற தகுதிக்கேற்பத் திருமகள் செல்வம் தருவாள். இதுவே திறனறிதல் என்ற தொடர் குறிப்பது. பரிமேலழகர் இத்தொடர்க்கு 'அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து' எனப் பொருள் வரைந்தார். அடைதற்காம் கூறுகளாக 'காலமும் இடனும் செவ்வியும்' என்பனவற்றையும் குறிப்பிட்டார். செவ்வி என்றாலே சமயம் என்றுதான் பொருள். இவற்றுள் காலத்திற்கும் செவ்விக்கும் வேறுபாடு என்ன? 'காலம் வெஃகாதானை வந்தடைதற்குரிய காலம். அங்ஙனம் காலம் அறிந்து வரும் போதும், எதனையும், வெஃகாதான் திருமகள் வரவையும் வெஃகானாயின் தெய்வமுயற்சி வீணாகுமாதலின் அவன் மனமகிழ்ச்சியுடனும் முகமலர்ச்சியுடனும் இன்சொல் சொல்லி வருபவனை வரவேற்கும் சமயம் அறிந்து என்பதாம். ஆகவே காலம் ஊழ் உதவியாம் காலம். செவ்வி-வெஃகாதான் மனமும் முகமும் மொழியும் இனிதாயிருக்கும் நேரம் என்க' என்று பரிமேலழகர் உரையை விளக்கம் செய்வார் தண்டபாணி தேசிகர்.

'திறனறிந்து' என்ற தொடர்க்குத் தகுதியறிந்து என்பது பொருள்.

பிறர் பொருளைக் கவர விரும்பாமை அறம் என்ற உணர்வுடையாரைத் தகுதியறிந்து அறிந்து செல்வம் சென்றடையும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வெஃகாமை வேண்டும் அறிவுடையார் அறமுடையார், திறமுடையார், திருவுடையார்.

பொழிப்பு

பிறர் பொருளைக் கவர விரும்பாமை அறம் என்பதை உணர்ந்தவரைச் செல்வம் உரிய காலத்தில் சென்றடையும்.