இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0176அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:176)

பொழிப்பு: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

மணக்குடவர் உரை: அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்,
இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.

பரிமேலழகர் உரை: அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும்.
(இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன், பிறர் பொருளை விரும்பி அதனை அடைய, பொல்லாத செயல்களை எண்ணிக் கெடுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.


அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்:
பதவுரை: அருள்-இரக்கம்; வெஃகி-விரும்பி; ஆற்றின்கண்-அறநெறிக்கண்; நின்றான்-நின்றவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும்;
பரிதி: முத்தியை விரும்பித் தன்மநெறியிலே நின்றார்;
காலிங்கர்: தமது அறிவினால 'நமக்குவரும் இன்பம் துன்பம அனைவர்க்கும் ஒக்கும்' என்று அருளுவதோர் அருளினையே விரும்பி நூல் சொல்லுகின்ற வழிநின்றவர்;
பரிமேலழகர்: அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்;
பரிமேலழகர் குறிப்புரை: இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார்.

'அருளை விரும்பி அறனெறியிலே/நூல் சொல்லுகின்ற வழி/இல்லறத்தின்கண் நின்றவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருளை நாடி உரிய வழியில் நிற்பவன்', 'அருளை விரும்பி அதற்குரிய அறத்தில் நின்றவன்', 'கருணையை விரும்பி இல்லற ஒழுக்கத்தின் நெறி கடக்காமல் இருக்கவென்றே இல்வாழ்க்கை நடத்துகிறவன்', 'அருள் ஒழுக்கத்தை விரும்பி நன்னெறியில் நிற்கின்றவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன் என்பது இப்பகுதியின் பொருள்.

பொருள்வெஃகி பொல்லாத சூழக் கெடும்:
பதவுரை: பொருள்-சொத்து; வெஃகி-அவாவி; பொல்லாத-குற்றநெறிகள்; சூழ-நினைக்க; கெடும்-அழியும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.
பரிதி: பொன்னாசையை விரும்பி, மனத்தில் அழுக்குடையராகில் கெடுவார் என்றது.
காலிங்கர்: முறைமையின்றிப் பிறனது பொருளை விரும்பி, மற்று அது காரணமாகப் பொல்லாதனவற்றை நினைப்பக் கெடுவர் என்றவாறு.
பரிமேலழகர்: பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.

'பொருளை விரும்பி குற்ற நெறிகளை எண்ணக் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் பொருளைக் கவர நினைப்பின் கெடுவான்', 'பிறர் பொருளை விரும்பித் தீய நெறிகளை எண்ணுவானாயின் கெடுவான்', 'பொருளின் மேல் வைத்த ஆசையினால கெட்ட காரியங்களைச் செய்ய நினைப்பானாயின் இல்லறம் கெட்டுப் போகும்', 'பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளைப் பற்ற எண்ணுவானாயின், அவன் கெட்டு ஒழிவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர் பொருளை விரும்பி அதைக் கவர பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருளை நாடி நன்னெறியில் நின்றவன், பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளை எண்ணக் கெட்டுப் போவான்.

அருள்வெஃகி நல்வழியின்கண் நின்றவன் பிறர் பொருளை விரும்பி அதைக் கவர பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது பாடலின் பொருள்.
அருள்வெஃகுவான் ஏன் பிறர் பொருளைக் கவர விரும்புவான்?

அருள்வெஃகி என்ற தொடர் அருளை நாடி எனப் பொருள்படும்.
ஆற்றின்கண் என்ற தொடர்க்கு நல்வழியில் என்பது பொருள்.
நின்றான் என்ற சொல்லுக்கு நின்றவன் அதாவது நின்று வாழ்பவன் என்று பொருள்.
பொருள்வெஃகி என்ற தொடர் பொருளை விரும்பி குறித்தது. இங்கு பிறர்பொருளைக் கவர விரும்புவதைச் சொல்கிறது.
பொல்லாத என்ற சொல் தீய என்ற பொருள் தரும்.
சூழ என்ற சொல் எண்ண என்ற பொருள் தருவது.
கெடும் என்ற சொல் கெட்டுப்போகும் என்ற பொருளது.

அருள் நாடி நன்னெறியில் நிற்பவன், பிறர்பொருளைக் கவர விரும்பி, தீயன எண்ணினால் அழிவான்.

முந்தைய குறளில் நுண்ணிய அறிவுடையவர்கள் பிறர்பொருளை நாடி அலையக் கூடாது என்று கூறப்பட்டது. இங்கு அருள் வேண்டி அறநெறியில் இருப்பவர்கள் பிறன்பொருள் வெஃகுதல் செய்யக் கூடாது எனச் சொல்லப்படுகிறது.
பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை; அருளில்லார்க்கு அவ்வுலகு இல்லை. பொருள் அருள் என்னும் இரண்டும் நல்வாழ்வுக்குத் தேவையாகிறது. இவை இரண்டனுள் அருள் சிறந்தது என்று தெளிந்து அதை விரும்பி அதற்குரிய அறநெறியில் நின்றவர்கள் பிறர் பொருளை விரும்பி அதைக் கவர எண்ணக்கூடாது. ஒழுக்க நெறியினை உலகிற்குணர்த்தும் அருளாளர்களும்கூடப் பிறர் பொருளை விரும்புதல் கூடும் என்பது உலகியல். பொதுவாக நன்னெறிக்கண் செல்ல விழைபவரும் பிற அறங்களைச் செய்பவருங்கூட ஓரோவழி பிறர் பொருள்மேல் விருப்பம் கொண்டு அதை அடையும் பொருட்டு பொல்லாதன செய்யக் கருதலும் கூடும். அப்படிப்பட்டவர்களை தீய நெறியிலிருந்து விலக்குவதற்காகக் கூறப்பட்ட அறிவுரை இது. அருள் வாழ்க்கை மேற்கொண்டிருந்தாலும் பிறர்பொருளை விரும்பித் தீதான வழிமுறைகளைக் கைக் கொள்ள எண்ணுவார்களானால் அவர்களுடைய வாழ்க்கை கெடும் என்கிறது இப்பாடல்.

குறள் கூறும் அறவொழுக்கம் அன்பின் வளர்ச்சியினைப் பின்பற்றுவது; அவ்வொழுக்கங்கள் ஒன்றினொன்று பிரிந்து வளர்ந்து போகின்றன. அருள்என்னும் அன்பீன் குழவி... (குறள் 757 பொருள்; அருள் என்று சொல்லப்படும் அன்பு பெற்றெடுக்கும் குழந்தை..) அன்பு வளர்ந்து அருளாக மலரும் என்பது வள்ளுவம். இங்கு சொல்லப்பட்ட அருளாளன் அற நெறியிலே நின்றவன் ஆவன். இவன் காலிங்கர் சொல்வதுபோல இன்பமும் துன்பமும் எல்லார்க்கும் பொது என்ற அருளினை உணர்ந்தவன். கடவுளின் கருணையை விரும்பி அதனைப் பெறும் வழியாகிய அறநிலையில் நின்றவன் என்றும் அருளாளனுக்கு விளக்கம் கூறுவர். அவ்வருளாளன் பிறன் பொருளைக் கவர விரும்பி தீயன செய்ய நினைத்தால் விரும்பும் பொருள் அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கமாகுமாதலால் அவன் வாழ்க்கை கெடும் என அறவுரை தரப்படுகிறது.

அருள்வெஃகுவான் ஏன் பிறர் பொருளைக் கவர விரும்புவான்?

அருள் வெஃகுபவன் என்பதற்கு அருளை விரும்பி அறவழியில் நின்றவன் அல்லது தெய்வக் கருணையை நாடி வாழ்க்கை நடத்துகிறவன் எனப் பொருள் கூறுவர். அறவழியில் நிற்பவனும் கடவுளை நினைந்து வாழ்பவனும் ஏன் பிறன்பொருளைக் கவர விரும்பவேண்டும்?
இரப்போர்க்கு ஈவதற்கு என்று ஒரு விளக்கம் சொல்கிறது. அடுத்தவன் பொருளைக் கவர்வது பிறருக்கு உதவத்தான் என்பதால் அவர் செய்யும் தீய அறம் நன்றாகிவிடாது. ஊரார் சொத்தைத் திருடி ஏழைகளுக்கு உதவுகிறேன் என்பது நல்லறமாகாது.
அருள் நெறியில் நிற்போரது அறச் சொத்துக்களையும் காணிக்கைகளையும் கையாடல் ஆகாது என்று ஓர் உரை கூறுகிறது. 'அங்ஙனம் கொண்டால் ‘கெடும்’ என்னும் பயனிலைக்குரிய ‘நின்றான்’ என்னும் எழுவாய் குன்றும்; ஆதலால் எழுவாய் வருவித்துரைத்தல் வேண்டும்' என இரா சாரங்கபாணி இதை மறுப்பார்.
'உலகை உய்விக்க வந்த அருளாளர் ஒருபோதும் பிறர் பொருளை விரும்பார். விரும்பின் அவர்தம் அன்பு பொய்யன்பே; வாழ்வு-பொய் வாழ்வே; அவருடைய அருள் வாழ்வு-பிறரை அழிக்கும் வாழ்வே. பிறர்க்கு உதவுவாரே அருளாளர்; பிறர் பொருளை விரும்புவோர் அருளாளராக மாட்டார்கள்' என இக்குறளைச் சுட்டி விளக்குவார் இ சுந்தரமூர்த்தி.

அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன் பிறர் பொருளை விரும்பி அதைக் கவர பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அருளாளன் பிறர் பொருளைக் கவர நினைத்தாலே அழிவான் என்னும் வெஃகாமை பாடல்.

பொழிப்பு

அருளை நாடி நல்வழியில் நிற்பவன் பிறர் பொருளைக் கவர, பொல்லாத செயல்களை, எண்ணக் கெடுவான்