இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0174



இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:174 )

பொழிப்பு (மு வரதராசன்): ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், `யாம் வறுமை அடைந்தோம்’ என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.



மணக்குடவர் உரை: வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார்.
இது தெளிவுடையார் செய்யா ரென்றது.

பரிமேலழகர் உரை: இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார்.
(வெல்லுதல்-பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)

குன்றக்குடி அடிகளார் உரை: ஐம்புலன்களையும் வென்று குற்றமற்றவராக விளங்குபவர், வறுமையைக் கருதிப் பிறர் பொருளை விரும்பமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புலம் வென்ற புன்மை இல் காட்சியவர், இலம்என்று வெஃகுதல் செய்யார்.

பதவுரை: இலம்-இல்லாதவராக இருக்கின்றோம், நாம் வறியோம்; என்று-என்பதாகக் கருதி; வெஃகுதல்-பிறர் பொருளை விரும்புதல்-வெளவக் கருதுதல்; செய்யார்-செய்யமாட்டார்கள்; புலம்-ஐம்புலன்கள்; வென்ற-வெற்றி கொண்ட, ஆளத்தெரிந்த; புன்மையில்-குற்றம் இல்லாத; காட்சியவர்-உணர்வுடையவர்.


இலம்என்று வெஃகுதல் செய்யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்;
பரிதி: வறியம் என்று பாவத்தைச் செய்யார்;
காலிங்கர்: யாம் கைப்பொருள் இலம் என்று கருதி இழிவாகப் பிறர்மாட்டுச் சென்று விரும்புதலை எஞ்ஞான்றும் செய்யார்;
பரிமேலழகர்: 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்;

'வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை நாடார்', 'தாம் ஏழை என்று பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்', 'செல்வம் இல்லையே என்பதற்காகப் பிறருடைய பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட மாட்டார்கள்', 'பொருளற்றோம் என்று கருதிப் பிறர் பொருளைக் கவர விரும்பார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தாம் வறுமையுற்றுள்ளோம் என்று எண்ணி வருந்துகின்ற நிலையுலும்கூடப் பிறருடைய பொருளை விரும்பமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். [புன்மையிலாத- உள்ளவாறுணரும் மெய்யறிவுடைய]
மணக்குடவர் குறிப்புரை: இது தெளிவுடையார் செய்யா ரென்றது.
பரிதி: மறுமைக்கு வறுமையாம் என்று வெஃகாமை யுடையவர் என்றவாறு.
காலிங்கர்: யாரோ எனில், தமது ஒழுக்க நெறிக்கு மிகைப்படும் பொறிகண்மேல் செல்லாதவாறு ஐம்புலன்களை வென்ற புல்லிமையற்ற நல்லறிவினை உடையோர் என்றவாறு.[புல்லிமையற்ற- உள்ளவாறுணரும் மெய்யறிவுடைய]
பரிமேலழகர்: ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல். [திரிபின்றி உணர்தல்-மாறுபாடு இன்றி உள்ளவாறே அறிதல்]

'ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆசைகளை அடக்கிய உயர்ந்த அறிஞர்', 'ஐம்புலன்களையும் வென்ற குற்றமற்ற அறிவினையுடையவர்கள்', 'ஐம்புல ஆசைகளையும் அடக்கி ஆளக்கூடிய குற்றமற்ற அறிவுடையவர்கள்', 'ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவினையுடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

புலன்களை வென்று அடக்கிய குற்றமற்ற தெளிந்த உணர்வுடையவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புலன்களை வென்று அடக்கிய புன்மையில் காட்சியவர், தாம் வறுமையுற்றுள்ளோம் என்று எண்ணி வருந்துகின்ற நிலையுலும்கூடப் பிறருடைய பொருளை விரும்பமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.
'புன்மையில் காட்சியவர்' யார்?

உன்னுடைய வறுமை அடுத்தவர் பொருளைப் பறிக்க உரிமை தராது.

ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் தெளிவான சிந்தனை உள்ளவர்கள், வறுமை காரணம் என்று சொல்லிப் பிறர்பொருளை விரும்பமாட்டார்கள்.
இலன், இலர், இல்லார் என்ற சொற்களைப் பிற இடங்களில் வறியவரைக் குறிக்கவே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். எனவே 'இலம்என்று' என்ற தொடர் (யாம்‌) வறுமையுடையேம்‌ என்று கருதி எனப்பொருள்படும். வெஃகுதல் என்ற சொல் விரும்ப நினைத்தல் என்ற பொருளது. இது மனஒழுக்கம் சார்ந்தது. வெஃகுதல் செய்யார் என்பது (பிறர்பொருளை) விரும்பமாட்டார்கள் அதாவது அதைக் கவர விரும்ப நினையாதவர்கள் என்ற பொருள் தரும்.
இல்லாதவர்கள் (வறுமையுற்றவர்கள்) தம்மிடம் பொருள் இல்லையே என்பதற்காக பிறருடைய உடைமைகளைக் கவர்ந்து கொள்ள நினைக்கக் கூடாது என்பதைச் சொல்ல வருகிறது இக்குறள். யாதொன்றும் இல்லாநிலையில் ஒருவன் வெஃகிப் பொருள் தேட விழைகின்றான். 'என்னிடம் பொருள் இல்லை; பொருள்களை மிகுதியாகச் சேர்த்தவனிடமிருந்து வவ்விக்கொள்ள எண்ணுகிறேன். இதில் என்ன தவறு?' என்று கேட்போருக்கு விடை பகருமாறு இது அமைந்துள்ளது. வறுமையைக் காரணம் காட்டித் தவறான செயல்களில் ஈடுபடுவது அறமாகாது; புலன்களை அடக்கத் தெரிந்தவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்பது வள்ளுவர் பதில். புலன்இன்பங்கள் பெறவே பொருள்தேவை உண்டாகிறது; ஐந்தடக்கல் ஆற்றின் பிறன்பொருள் வெஃகும் நிலை வராது என்பது இதன் கருத்து.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து (தீவினையச்சம் குறள்:205 பொருள்: 'யான் வறியவன்’ என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி அல்லலுறுவான்) எனப் பிறிதோரிடத்திலும் வறுமையைக் காரணம் காட்டி தீச்செயலைச் செய்வாரைத் தடுக்கும் வகையில் குறள் அறவுரை பகரும்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களை அடக்கக் கற்றுக்கொண்டவர்கள் என்றது தமது தேவைகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதைச் சொல்வது. தேவைகள் குறைந்துவிட்டால் பொருளாசையும் இல்லாமல் போய்விடும், அதன்பிறகு அவர்கள் தம்மிடம் 'இல்லை' என்பதற்காக, பிறர்பொருளைக் கவர எண்ணமாட்டார்கள்.

பொருளில்லாத வாழ்வு கொடுமைதான். ஆனாலும் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து காட்டுவதே சிறப்பு தரும். தம்மிடம் இல்லையே என்று வறுமையைக் காரணம் கூறி அடுத்தவர் உடைமையைக் கவர நினைப்பது பெருங்குற்றமாகும். தெளிந்த காட்சியுடையவர்களும், புலன்களை வெல்லும் திறனுடையவர்களும் பிறர் பொருள் மேல் விருப்பம் கொள்ளமாட்டார்கள். அறிவு தெளிவாக இருந்தால் பொருள் மட்டுமே வாழ்க்கையை நிலைப்படுத்தும் ஆதாரம் அல்ல என்பது புரியும். புலன்களை வெல்லும் திறன் இருந்தால், தன் மனத்தைச் செலுத்தும் கருவிகளை அடக்கிக் கட்டுப்படுத்த முடியும். ஐம்புலன்களை வென்றவர்கள் என்றதனால் அவர்கள் தேவைகள் குறைந்து விட்டன அல்லது பொருள்வரவுக்கு மீறிய இன்பங்களை அடைய எண்ணமாட்டார்கள்; எனவே மற்றவர் பொருளைக் கவரும் எண்ணம் எழாது. ஏழ்மையுற்ற காலத்தும் ஏற்றமான தோற்றம் கொண்ட இவர்கள் தம் மனச் சமநிலையை இழக்கமாட்டார்கள் என்பதும் கருத்து.
வள்ளுவர் ஒழுக்கத் துறவைத் தடுக்கும் முகத்தான் அறம்கூறும் போது சில நேரங்களில் அறிவுரைபோல் சொல்வார்; சில பொழுதில் அச்சம் தோன்றுமாறு பகர்வார்; மற்ற நேரங்களில் பழி காட்டுவார். இங்கே வெஃகுதல் செய்யானை மேன்மைப் படுத்தி ஊக்கமளிக்கிறார்.

'புன்மையில் காட்சியவர்' யார்?

'புன்மையில் காட்சியவர்' என்றதற்குப் புன்மையிலாத தெளிவுடையார், புல்லிமையற்ற நல்லறிவினை உடையோர், குற்றமில்லாத காட்சியினை உடையார், குற்றம் இல்லாத பெரியவர், குற்றமற்றவராக விளங்குபவர், உயர்ந்த அறிஞர், குற்றமற்ற அறிவினையுடையவர்கள், குற்றமற்ற தெளிந்த அறிவுடையவர்கள், குற்றமற்ற அறிவினர், உயர்ந்த நல்லறிவாளர், குற்றமில்லாத அறிவினையுடையார், தெளிவு மிக்க பார்வையுடையவர்கள், நல்லறிவு பெற்ற சான்றோர், புன்மை இல்லாத மெய்யறிவுடையார், குறை இல்லாத அறிவுத் தெளிவுடையோர், குற்றமில்லாத அறிவை உடையவர் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

புன்மையில் காட்சி என்பது குற்றம் நீங்கிய அறிவுடையவர் என்று பொருள் தருவதாக உள்ளது. தேவநேயப் பாவாணர் தனது கருத்தாக ''புன்மையின் காட்சி' என்பது பிறர் பொருள் மீது தமக்குரிமையில்லையென்றும், அதைக் கவரின் அது நிலையாதாகையாற் பின்னும் வறுமையுண்டாகுமென்றும் ஐயந்திரிபுறப் பொருள்களை யறிதல்' என விரிவுரையில் கூறினார். முற்குறள்களில் பயன்கருதி வெஃகினால் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடுவோமே என அஞ்சுபவர்கள், அப்பொழுதைக்கான இன்பம் கருதி பிறர்பொருளை வௌவக்கூடாது என நினைப்பவர்கள் ஆகியோர் குறிக்கப்பெற்றனர். எத்தகைய வறுமை நிலையினும் வெஃகுதல் குற்றம் செய்யக்கூடாது என எண்ணம் கொண்டு அதற்காகத் தன் தேவைகளைக் குறைத்து கொள்பவர் இங்கு சொல்லப்படுகிறார். இவர் நேர்மையான பிறவழிகள் பல உண்டு என்பதில் நம்பிக்கை கொண்டு அவற்றை முயன்று பார்ப்பார்கள் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

புன்மையில் காட்சியவர் என்றது குற்றமில்லாத அறிவுடையவரை அதாவது தெளிவான சிந்தனையுடையவரைக் குறிக்கும்.

புலன்களை வென்று அடக்கிய குற்றமற்ற தெளிந்த அறிவுடையவர்கள், தாம் வறுமையுற்றுள்ளோம் என்று எண்ணி வருந்துகின்ற நிலையுலும்கூடப் பிறருடைய பொருளை விரும்பமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தேவைகளில் தெளிவாக இருப்பவர்கள் வெஃகாமை அறம் காப்பர்.

பொழிப்பு

ஆசைகளை வென்ற குற்றமற்ற அறிவினையுடையவர்கள் தாம் இல்லாதவன் என்று நியாயம் கற்பித்துப் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்.