இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0167அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:167)

பொழிப்பு (மு வரதராசன்):பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

மணக்குடவர் உரை: அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்.
இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும்.
(தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கோடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: மனம் சுருங்கிப் பொறாமைப்படுபவனைச் சீதேவி மூதேவியிடம் ஒப்படைப்பாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழுக்காறுடையானைச் செய்யவள் அவ்வித்துத் தவ்வைக்குக் காட்டிவிடும்.

பதவுரை: அவ்வித்து-வஞ்சனையோடு, சூழ்ச்சியால், பொறாமல்; அழுக்காறு உடையானை-பொறாமைக் குணம் கொண்டவனை; செய்யவள்-திருமகள்; தவ்வையை-தமக்கையை (இங்கு திருமகளின் அக்காளான மூதேவிக்கு); காட்டி-காண்பித்து; விடும்-நீங்கும்.


அவ்வித்து அழுக்காறு உடையானை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழுக்காறுடையானை, தானும் அழுக்காறு செய்து;
பரிப்பெருமாள்: அழுக்காறுடையானை, தானும் அழுக்காறு செய்து;
பரிதி: பிறர் வாழ்வுகண்டு பொறாத மனத்தானை;
காலிங்கர்: பிறர் வாழ்வுகண்டு பொறாத மனத்தானை;
பரிமேலழகர்: பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை, தானும் பொறாது;
பரிமேலழகர் குறிப்புரை: 'மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர். [மனத்தைக் கோடுவித்து-மனத்தைக் கோணுதலாகச் செய்து]

'அழுக்காறுடையானை, தானும் அழுக்காறு செய்து' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். அவ்வித்து என்பதற்கு பரிதியும் காலிங்கரும் பொருள் கூறாமல் 'பிறர் வாழ்வுகண்டு பொறாத மனத்தானை' என்று மட்டும் இப்பகுதிக்கு உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் செல்வம் கண்டு பொறாமைப்படுபவனைத் தானும் பொறாமைப்பட்டு', 'பொறாமையுள்ளவனைப் பற்றி மனம் கோணி', 'பொறாமை உடையவனைத் தான் பொறாளாய்த்', 'பிறர் செல்வம் கண்டு பொறாமை கொள்ளும் இயல்பினைத் தானும் அவன்பால் பொறாமை கொண்டு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொறாமைப்படுகிறவனை வஞ்சனை கொண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: திருமகள் தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்.
மணக்குடவர் குறிப்புரை: இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
பரிப்பெருமாள்: திருமகள் தானும் தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
அவ்வித்து என்பதனைச் செய்யவளோடும் கூட்டுக.
பரிதி: லக்ஷ்மி தனக்கு மூத்த சேஷ்டாதேவிக்கு இடம் ஆக்குவாள் என்றவாறு. [சேஷ்டாதேவி - மூதேவி.]
காலிங்கர்: லக்ஷ்மி தனக்கு மூத்த சேட்டாதேவிக்கு இடம் ஆக்குவாள் என்றவாறு.
பரிமேலழகர்: திருமகள் தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம்.

'திருமகள் தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திருமகள் தன் தமக்கைக்குக் (மூதேவிக்கு) காட்டிவிட்டு விலகுவாள்', 'சீதேவியானவள் தான் விலகிக் கொண்டு தன்னுடைய அக்காளாகிய மூதேவியைக் காட்டி விடுவாள்', 'திருமகளும் தன்னுடைய தமக்கையாகிய மூத்தவளுக்குக் காட்டிவிட்டுத் தான் நீங்கிவிடுவாள்', 'திருமகள் அவனைத் தன் அக்காள் மூதேவியிடம் காட்டிவிடுவாள். (பொறாமையுடையவனுக்குச் செல்வம் சேராது)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

திருமகள் தன் தமக்கைக்குக் (மூதேவிக்கு) காட்டி இவளுடன் செல் என விட்டுவிடுவாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அவ்வித்து பொறாமைப்படுகிறவனைத் திருமகள் தன் தமக்கைக்குக் (மூதேவிக்கு) காட்டி இவளுடன் செல் என விட்டுவிடுவாள் என்பது பாடலின் பொருள்.
'அவ்வித்து' என்ற சொல்லின் பொருள் என்ன?

பொறாமைப்படுபவனுக்கு ஏற்றவள் மூதேவிதான்.

அழுக்காறுடையவனை செல்வத் திருமகள் நீங்கி வஞ்சனை கொண்டு வறுமை என்னும் தமக்கையிடம் செல்லுமாறு செய்துவிட்டு அவனை நீங்குவாள்.
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தபோது அக்கடலினின்று மூதேவி முதலாவதாகவும், சீதேவி என்ற திருமகள் பின்னும் பிறந்தமையால் மூதேவிக்கு மூத்தவள் என்ற பெயருண்டாயிற்று என்று கூறுவர். இக்குறளில் சொல்லப்பட்டுள்ள செய்யாள் என்பது திருமகளைக் குறிக்கும். அவளது தவ்வை (தம் அவ்வை) அதாவது தமக்கை-அக்கை-அக்காள் என்பவள் மூதேவியாகும். தொன்மங்களில் கண்டபடி திருமகள் செல்வத்திற்கும் மூதேவி வறுமைக்கும் குறியீடுகளாகும்.
காட்டிவிடும் என்பதற்கு காட்டி இவன்பாற் செல்லென்று போம், காட்டிப் பிடிக்கச் சொல்லிவிடுவாள், காட்டி நீங்கும், ஒப்படைப்பாள், காட்டிவிட்டு விலகுவாள், கையைக் காட்டிவிடும், அறிமுகம் செய்து வைத்து விடுகிறாள் எனப் பொருள் கூறினர். இவற்றுள் ஒப்படைப்பாள், கையைக் காட்டிவிடும் என்பன சிறந்தன.
ஏன் திருமகள் பொறாமை உடையவனை விட்டுவிட்டு வெளியேற வேண்டும்? திருமகள் தான் பொறாது, அவனை விட்டு நீங்கித் தனக்கு மூத்தவளாகிய மூதேவிக்கு அவளைக் காட்டிப் பிடிக்கச் சொல்லிவிடுவாள் என்று பெரும்பான்மையோர் உரை கூறியுள்ளனர். திருமகள் அழுக்காறுடையானிடம் பொறாமை கொள்ள என்ன காரணம் இருக்கமுடியும்? இவ்வுரை பொருத்தமாக இல்லை.
'அழுக்காறுடையானைச் செய்யவள் அவ்வித்துத் தவ்வைக்குக் காட்டிவிடும்' எனக் கூட்டிக் காணுவது சிறக்கும். பிறரது ஆக்கம் கண்டு மனம் பொறுக்கமுடியாது வெதும்புகிறவனின் உள்ளில் இருந்த திருமகள் அவனது மனவோட்டங்களைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் அவனை விட்டு நீங்கி, வஞ்சனையோடு, அவளது தமக்கையாகிய மூதேவியைக் காட்டி அங்கு செல் என அனுப்பிவிடுகிறாளாம் என்பது இதன் பொருள்.
அழுக்காறுடையான் எப்பொழுதும் பிறர்மேல் பொறாமை கொண்டு அவர்கள் பொருள் இழப்பதையே பார்த்துக் கொண்டிருப்பதால், தான் செல்வத்தைப் பெறுதலுக்குரிய முயற்சியில் ஈடுபடமாட்டான். ஆதலால் வறுமையில் ஆழ்வான். ஏற்கனவே செல்வமுடையவனாக இருந்தாலும் அழுக்காறு என்னும் தீக்குணத்தினால் அந்த வளப்பம் அவனிடத்தில் இல்லாதபடி மூதேவி வந்து அடைவாள்.

பொறாமைக் காரனிடமிருந்து செல்வம் நீங்கி அவன் வறுமையில் தள்ளப்படுவான் என்ற பொறாமையின் விளைவு கூறுவது இது. அதைச் செல்வத்தின் கடவுளாகிய திருமகளே செய்விப்பாள் எனவும் சொல்கிறது பாடல்.

'அவ்வித்து' என்ற சொல்லின் பொருள் என்ன?

'அவ்வித்து' என்ற சொல்லுக்கு அழுக்காறு செய்து, பொறாது, மனம் சுருங்கி, நல்ல மனத்தைக் கோணச் செய்து அதாவது தீமையின் பக்கம் வளைத்து, பொறாமைப்பட்டு, மனங் கோணி, பொறாளாய், பொறாமை கொண்டு, (உள்ளத்தைக்) கோடுவித்து என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அவ்வித்து என்பது அவ்வியம் / ஔவியம் என்ற சொல்லின் அடியாய் வருகிறது. அவ்வித்து என்பதற்கு அழுக்காறு கொண்டு என்பது ஒரு பொருள். அவ்வித்து அழுக்காறுடையானை எனக் கொள்ளின் 'அழுக்காறு கொண்டு அழுக்காறுடையானை' என்பது பொருள் தாரா தொடராகிவிடுகிறது. அவ்வியம் என்பதற்கு வஞ்சனை என்ற வேறொரு பொருளும் உண்டு. அவ்வித்து’ என்பதற்கு வஞ்சனையோடு எனப் பொருள் கண்டு அதனுடன் அழுக்காறுடையானை இயைத்துப் பொருள் கூறுவார் தண்டபாணி தேசிகர். ''ஔவியம் அகற்று' 'ஔவியம் பேசேல்' முதலிய இடங்களில் வஞ்சனை என்ற பொருளிலும் வருதலின் 'வஞ்சனை கொண்டு அழுக்காறுடையவனை' என இயைப்பின் பொருள் சிறப்பதாகும். அழுக்காறு வஞ்சனையின் விளைவாதலால் என்க' என்பது அவரது விளக்கம்.
செய்யவள் தான் நீங்குவது மட்டும் அல்லாமல் மூதேவியைக் காட்டியும் செல்வாள் என்றது வஞ்சனையோடு என்று கொள்ளும் பொருளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.

'அவ்வித்து' என்ற சொல்லுக்கு வஞ்சனை கொண்டு என்பது பொருள்.

வஞ்சனை கொண்டு பொறாமைப்படுகிறவனைத் திருமகள் தன் தமக்கைக்குக் (மூதேவிக்கு) காட்டி இவளுடன் செல் என விட்டுவிடுவாள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அழுக்காறாமை வறுமையினின்று காக்கும்.

பொழிப்பு

பொறாமைப்படுபவனைத் திருமகள் வஞ்சனை கொண்டு தன் தமக்கைக்குக் (மூதேவிக்கு) காட்டிவிடுவாள்.பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னர் பதிப்பிக்கப்படும்.