இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0165



அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:165)

பொழிப்பு: பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்குசெய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத் தருவது அது.

மணக்குடவர் உரை: அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு.
இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்.
('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)

வ சுப மாணிக்கம் உரை: பொறாமையாளரைக் கெடுக்க அதுவே போதும்; பகை கெடுக்கத் தவறினும் அது தவறாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது.


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்:
பதவுரை: அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமை; உடையார்க்கு-உடையவருக்கு; அது-அஃது; சாலும்-அமையும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்;
காலிங்கர்: அவ்வழுக்காறாகின்றது எல்லா நன்மைகளையும் கெடுத்துக் கொடு நரகத்துய்க்கும் ஆகலான் மற்றிதனைத் தன் நெஞ்சத்துடையான் ஒருவனுக்கு அதுவே அமையும்;
காலிங்கர் குறிப்புரை: சாலும் என்பது அமையும் என்றது.
பரிமேலழகர்: அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.

'அழுக்காறுடையார்க்கு கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமையுடையார்க்குத் தீமைபுரியப் பகைவர் வேண்டா, அதுவே போதும்', 'பொறாமைக் குணம் உள்ளவர்களுக்குக் கேடுண்டாக்க அதுவே போதும்', 'ஆதலால், பொறாமை உடையார்க்கு, அதுவே அவரைத் துன்புறுத்தப் போதுமானது', 'ஆதலின் பொறாமை உடையவர்க்குக் கேடுபயத்தற்குப் பொறாமையே போதும். பகைவர் வேண்டாம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொறாமைக் குணம் உள்ளவர்களுக்கு அதுவே போதும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒன்னார் வழுக்கியும் கேடுஈன் பது:
பதவுரை: ஒன்னார்-பகைவர்; வழுக்கியும்-தவறினும்; கேடு-அழிவு; ஈன்பது-பயப்பது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.
பரிதி: மன அழுக்கு உள்ளபேர்க்குச் செல்வம் இல்லை; அதுபோல ஒழுக்கம் இலாதார்க்குப் பெருமை இல்லை என்றவாறு.
காலிங்கர்: பகைவர் வழுவியும் கேட்டைத் தருவதற்கு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: வழுக்கியும் என்ற உம்மையான் மறந்தும் என்றாயிற்று. பரிமேலழகர்: அழுக்காறு பகைவரை ஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்;

'பகைவரை ஒழிந்தும் கேடு பயப்பது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர் இல்லாவிட்டாலும் கேடு தருவது பொறாமையாதலின்', 'பகைவர்கள் கேடு செய்வது தவறி விட்டாலும் அது நிச்சயமாகக் கேடுண்டாக்கும்', 'பொறாமையானது, ஒருவனுக்கு அவன் பகைவர் கேடுசெய்யத் தவறினாலும் தான் கேட்டினைத் தவறாது கொடுக்கும்', 'பகைவர் கேடு செய்வதில் தவறினும், பொறாமை தவறாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைவர் செய்யத் தவறினாலும் பொறாமையானது கேட்டினைப் பயக்கத் தவறாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொறாமைக் குணம் கொண்டவருக்குப் பகைவர் கேடுண்டாக்கத் தவறினாலும் அவரது பொறாமையே தவறாமல் கெடுத்துவிடும். கெடுதி செய்ய வேறொருவர் வேண்டியதில்லை.

ஒன்னார் வழுக்கியும் பொறாமையானது கேட்டினைப் பயக்கும்; பொறாமைக் குணம் உள்ளவர்களுக்குக் கெடுதிசெய்ய அதுவே போதும் என்பது பாடலின் பொருள்.
'ஒன்னார் வழுக்கியும்' என்ற தொடர் தரும் பொருள் என்ன?

அழுக்காறு உடையர்க்கு என்ற தொடர்க்குப் பொறாமைக்குணம் கொண்டவர்க்கு என்பது பொருள்.
அதுசாலும் என்ற தொடர் அதுவே போதும் என்ற பொருள் தரும்.
கேடு ஈன்பது என்ற தொடர் கெடுதியினைப் பயப்பது என்ற பொருளது.

பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் பொறாமையே தன்னைக் கொண்டவரை அழிப்பதில் தவறாது; கேடுண்டாக்கப் பொறாமையே போதும்.

ஒருவர் கெட்டுப் போக வெளிப்பகை எதுவுமே தேவையில்லை அவர் கொண்ட பொறாமையே போதுமானது. நெஞ்சுக்குள் இருக்கும் அழுக்காறு எல்லா நன்மைகளையும் கெடுத்துக் கொடிய துன்பத்தை தரவல்லது ஆதலால் ஒருவனுக்கு அதுவே பகையாக அமையும்; பகைவர் தவறினாலும் உள்ளிருக்கும் பொறாமைக் குணம் தவறாது அவனுக்கே கெடுதி உண்டு பண்ணும்.
அழுக்காறு உடையானை அழித்தற்கு வேறு பகை வேண்டா; அதுவே போதும். பகைவர் விட்டாலும் பொறாமை அவனுக்குத் தீதைத் தவறாது, மறக்காது நல்கிவிடும். அதனால் நெஞ்சில் தோன்றும் பொறாமையைப் பொல்லாத பகையாகக் கருதிப் போக்க வேண்டும்.

'ஒன்னார் வழுக்கியும்' என்ற தொடர் தரும் பொருள் என்ன?

'ஒன்னார் வழுக்கியும்' என்ற தொடர்க்குப் பகைவர் கேடுபயத்தல் தப்பியும், பகைவர் வழுவியும், பகைவரை ஒழிந்தும், பகைவர்கள் கேடுசெய்யத் தவறினாலும், பகை கெடுக்கத் தவறினும், பகைவர் வேண்டா, பகைவர்கள் தவறிவிட்டாலும், பகைவர் கெடுக்கத் தவறினாலும், பகைவர் கேடுசெய்யத் தவறினாலும், பகைவர் கேடு செய்வதில் தவறினும், பகைவர்கள் தீங்கிழைக்கத் தவறினாலும், பகைவர் (கேடு செய்யத்) தவறியும் என உரையாளர்கள் பொருள் கூறினர். பகைவர்கள் கேடு செய்யத் தப்பினாலும், அழுக்காறு தப்பாது' என்றே அனைவரும் கூறினர்.

ஒருவனுக்கு பகையாய் உள்ளவன் காலமறிந்து பொறுத்திருந்து அவனுக்குத் துன்பம் தந்துகொண்டிருப்பான். ஆனால் பொறாமைக் குணம் அவனுடனுறையும் ஒன்றாதலால் எந்த நேரமும் எல்லாக் காலமும் கேடுண்டாக்கும். எனவேதான் பொறாமையுடையானுக்கு கெடுதி செய்ய அப்பொறாமை ஒன்றே போதும்; வேறு பகை வேண்டாம் எனக் கூறினார்.

பகைவர் கேடுசெய்யத் தவறினாலும் பொறாமையானது கேட்டினைப் பயக்கும்; பொறாமைக் குணம் உள்ளவர்களுக்குக் கெடுதிசெய்ய அதுவே போதும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒருவனது உள்ளேயே இருந்து அழிக்கும் பகை பொறாமைக் குணமாம் என்னும் அழுக்காறாமை பாடல்.

பொழிப்பு

கேடு தருவது பொறாமையாதலின் அழுக்காறு உடையாரைக் கெடுக்க அதுவே போதும்; பகை கெடுக்கத் தவறினும் அது தவறாது