இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0164அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:164)

பொழிப்பு: பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

மணக்குடவர் உரை: அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

பரிமேலழகர் உரை: அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.
(அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)

வ சுப மாணிக்கம் உரை: பொறாமையால் தமக்குத் தீதுவரும் ஆதலின் பொறாமையால் பிறர்க்குத் தீது செய்யார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.


அழுக்காற்றின் அல்லவை செய்யார்:
பதவுரை: அழுக்காற்றின்-பொறாமையினின்றும்; அல்லவை-தீவினைகளை; செய்யார்-செய்யமாட்டார்கள்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்;
பரிப்பெருமாள்: அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்;
பரிதி: அழுக்கு மனத்தை அகற்றி நல்ல மனத்துடன் இருப்பான்; இருப்பானாகில் சீர்த்தியும் புகழும் உண்டு; [சீர்த்தி-மிகுபுகழ்]
பரிமேலழகர்: அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்;
பரிமேலழகர் குறிப்புரை: அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.

'அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லோர் அத்தீய நெறியால் பிறர்க்குத் தீங்கிழைக்க மாட்டார்', 'அறிவுடையோர் பொறாமைப்பட்டு அதர்மமான காரியங்களைச் செய்தவிடமாட்டார்கள்', 'பொறாமை காரணமாகப் பிறர்க்குத் தீங்கு இழையார்', 'பொறாமை கொண்டு தீங்குகள் செய்யார் அறிவுடையார் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொறாமையால் தீயவற்றைச் செய்யமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து:
பதவுரை: இழுக்காற்றின்-குற்றத்தின் நெறியால்; ஏதம்-துன்பம்; படுபாக்கு-உண்டாதலை; அறிந்து-தெரிந்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.
பரிப்பெருமாள்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் அழுக்காறு செய்யாமை விழுமிய பொருள் என்றார். அஃதாயினவாறு என்னை என்றார்கள். அஃது இல்லாதார் அறம் அல்லாதன் செய்யார் ஆதலின் பாவம் வாராது என்றுமாம்.
பரிதி: மனத்தில் அழுக்காறுடையான் யார் ஒருவர்க்கும் பொல்லாங்கு செய்ய விசாரிப்பான் தினமும் என்றவாறு.
பரிமேலழகர்: அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.

'அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை அறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமையினால் துன்பம் வருதலை அறிந்து', 'ஏனெனில் பொறாமையினால் உண்டாவது பாவம் என்பதை அவர்கள் அறிந்தவர்கள்', 'தவறிய வழியால் துன்பம் உறுதலை அறிந்து அறிவுடையார்', 'பொறாமை கொள்ளும் தீய வழியால் துன்பம் உண்டாதலை அறிந்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தவறிய வழியால் துன்பம் வருதலை அறிந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இழிந்த வழியில் சென்றால் துன்பம் உண்டாதலை உணர்ந்து, பொறாமை வழிப்பட்டு அறமல்லாதவற்றை ஒருவர் செய்யமாட்டார்.

இழுக்காற்றின் ஏதம் வருதலை அறிந்து பொறாமையால் தீயவற்றைச் செய்யமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு' குறித்தது என்ன?

அழுக்காற்றின் என்ற சொல்லுக்குப் பொறாமையினால் என்பது பொருள்.
அல்லவை செய்யார் என்ற தொடர் அறமல்லாதவற்றைச் செய்ய மாட்டார்கள் என்ற பொருள் தரும்.
அறிந்து என்ற சொல் உணர்ந்து எனப் பொருள்படும்.

இழிவான நெறி செல்வதால் தான் படப்போகும் துன்பங்களை அறிந்திருக்கும் ஒருவர் பொறாமைகொண்டு தீய செயல்களைச் செய்யமாட்டார்.

பொறாமை எனும் மனமாசை அகற்றாமல் இழுக்க நெறியின்கண் செல்வதால் உண்டாகும் குற்றத்தின் கடும் விளைவை அறிந்து, அறம் அல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள். நெஞ்சத்தில் பொறாமை இருந்தால் அது பிறர்க்குத் தீங்கு செய்யத் தூண்டும். அவ்வாறு தீங்கு செய்தால் அது துன்பத்தை விளைவிக்கும். இதை உணர்ந்தவர்கள் பொறாமை காரணமாகத் தீயன மேற்கொள்ளமாட்டார்கள். அழுக்காறில்லாத விழுமியர் அறம் அல்லாதன செய்யமாட்டார்கள் எனச் சொல்லப்பட்டது. அறன் அல்லவை எவை? செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம் என்பன அறனல்லவை என விளக்குவர்.

பொறாமையின்றி இருப்பதும் ஒரு ஒழுக்க நெறிதான். ஒழுக்கமுடையவர்கள் மேன்மை எய்துவர் இழுக்கமுடையவ்ர் எய்தாப் பழி எய்துவர் என்பது போன்று பொறாமை காரணமாக அறமல்லாதன செய்வோர் துன்பங்களைத்தான் அடைவர் என்கிறது இப்பாடல். பொறாமை எண்ணத்தால் பிழைகள் செய்தால், குற்றம் உண்டாகி இழிவான நிலைக்குள்ளாக நேரிடும் என்பது கருத்து.

'இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு' குறித்தது என்ன?

அறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதல், அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதல், தவறிய வழியால் துன்பம் உறுதலை பழிக்கப்படும் நெறியால் படப்போகும் கடுந்துயரங்கள் என்று 'இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு' என்ற தொடர்க்கு உரை பகன்றனர்.
இழுக்காறு என்பது அறமல்லாத குற்றமான வழி எனப் பொருள்படும். ஏதம் என்றது துன்பத்தை உணர்த்துவது. படுபாக்கு என்ற தொடர்க்கு படுதல் அதாவது உண்டாதல் என்பது பொருள். 'இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு' என்றது 'அறமல்லாதவற்றால் துன்பம் உண்டாதல்' குறித்தது.

தவறிய வழியால் துன்பம் வருதலை அறிந்து பொறாமையால் தீயவற்றைச் செய்யமாட்டார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அழுக்காறாமை அற்றவர் துன்பங்களுக்கு ஆளாவர்.

பொழிப்பு

தீயவழியால் தமக்குத் தீங்குவரும் என்பது அறிந்து பொறாமையால் தீயனவற்றைச் செய்யமாட்டார்.