இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0161



ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:161)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

மணக்குடவர் உரை: ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க.
இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க.
[இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.]

வ சுப மாணிக்கம் உரை: மனத்தில் பொறாமை இல்லாத நிலையே ஒழுக்க நெறியாம் என்று கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு ஒழுக்காறாக் கொள்க.

பதவுரை: ஒழுக்கு-ஒழுகும்; ஆறா-நெறியாக; கொள்க-கொள்க, கொள்ள வேண்டும்; ஒருவன்-ஒருவன், ஒவ்வொருவனும்; தன்-தனது, தன்னுடைய; நெஞ்சத்து-உள்ளத்தில்; அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமை, பொறாமைக் குணம்; இலாத-இல்லாத; இயல்பு-தன்மை.


ஒழுக்காறாக் கொள்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க;
பரிதி: ஒரு நியாயமாக நடத்துக என்றவாறு;
காலிங்கர்: ஒருவர் நியாயமாக நடத்துவார் என்றவாறு;
பரிமேலழகர்: தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க;

'தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்க நெறியாகக் கொள்வானாக', 'ஒவ்வொருவனும் தன்னுடைய மனம் பழக வேண்டிய நெறிமுறைகளாகக் கருத வேண்டும்', 'ஒருவன் (சிறந்த) ஒழுக்க நெறியாகக் கருதக்கடவன்', 'தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.
பரிதி: தன்மட்டில் அழுக்காறு இன்மையை.
காலிங்கர்: தன் மனத்தில் அழுக்காறின்மையை.
பரிமேலழகர்: ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை.
பரிமேலழகர் குறிப்புரை: இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.

'ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் தன் மனத்திடத்துப் பொறாமை இல்லாத பண்பை', 'பிறருடைய நல்வாழ்வைக் கண்டு தன் நெஞ்சத்தில் பொறாமைப்படாமல் இருக்கும் தன்மையை', 'தன் மனத்திற்கு பொறாமை இல்லாதிருத்தலாகிய நல் இயல்பினையே', 'ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை கொள்ளாத இயல்பினை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒருவன் தன் மனத்தில் பொறாமை இல்லாத இயல்பை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவன் தன் மனத்தில் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்காறாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'ஒழுக்காறு' என்பதன் பொருள் என்ன?

பொறாமைக் குணத்தை உள்ளத்திலிருந்து முற்றிலும் நீக்கிக் கொள்க.

ஒருவன் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினைத் தான் ஒழுக வேண்டிய நெறியாகக் கொள்வானாக.
அழுக்காறு என்பது மனமாசு. மற்றவரின் ஆக்கம் கண்டு பொறுக்காத தன்மை. அவழுக்காறு நெஞ்சத்தில் இல்லாதது ஒருவனது இயல்பாக மாறவேண்டும் என்கிறார் வள்ளுவர். இயல்பாக மாறுதல் என்பது இங்கு அழுக்காறற்ற மனநிலையை வளர்த்துக் கொள்வதைக் குறிப்பது. தனக்குக் கிடைக்காத ஒன்று மற்றொருவனுக்கு வாய்க்கப் பெற்றால், மனம் புழுங்கும் மாந்தர் அந்தப் புழுக்கத்திலேயே அவிந்து அவிந்து சாகிறார்கள். பொறாமை இல்லாத தன்மை அரிதாகவே காணப்படுகிறது என்பது பொதுவான எண்ணம். பொறாமையற்று இருப்பதே நம் இயல்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இப்பாடல். இயல்பாவது, மனிதனது தன்மையாகவே மாறி வருவது. நீர்க்குணம் குளிர்ச்சி, நெருப்பின் இயல்பு சூடு என்பது போல இவன் இயல்பு பொறாமை இல்லாத தன்மை என்று உலகம் சொல்லும்படி வாழ்தலாகும்.
மேலும் ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை இல்லாமல் வாழும் தன்மையை ஒழுக்கநெறியாகக் கொள்ள வேண்டும் எனவும் சொல்கிறார் வள்ளுவர். ஒழுக்கம்உடைமை எனத் தனி அதிகாரம் ஒன்று எழுதியிருந்தபோதிலும் அழுக்காறாமை பற்றிச் சொல்லும் போது அதனை ஒழுக்கத்தின் ஒரு கூறாகவே இருக்கவேண்டுமென உணர்த்துகின்றார் அவர். ...ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' (ஒழுக்கமுடைமை 131) என்று முன்னர் கூறப்பட்டது போல அழுக்காறு கொள்ளாமையையும் உயிரினும் மேலாகப் பேண வேண்டும் என்கிறார் வள்ளுவர். அப்பொழுதுதான் மனத்தின்கண் மாசு அதாவது தீய எண்ணங்கள் உண்டாகாமல் தடுக்க முடியும். ஆகவே, பொறாமை என்பதைக் குற்றமாகக் கருதி அதை நீக்குவதற்காக அக்குணமில்லாத மனத்தை ஒழுக்க நெறியாக மேற்கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவர். அழுக்காறு கொள்ளவேண்டாம் என்று அறிவுரை கூறுவதைவிட பொறாமையற்ற மனைநிலையைக் கொள்க என்று கூறுவது கூடுதல் பயனளிக்கும்.

'ஒழுக்காறு' என்பதன் பொருள் என்ன?

'ஒழுக்காறு' என்ற சொல்லுக்கு ஒழுக்க நெறி, ஒரு நியாயம், மனம் பழகவேண்டிய நெறிமுறை, வாழ்க்கை நெறிமுறை, ஒழுக வேண்டிய நெறி, ஒழுகும் நெறி, ஒழுக்கத்திற்குரிய நெறி, தனக்கு உரிய ஒழுக்கமாக, ஒழுக்கத்தின் உயர்ந்த வழி, வாழும் நெறி எனப் பொருள் கூறினர்.

உள்ளத்தில் பொறாமை அற்ற தன்மையில், பிறரின் வளர்ச்சி, வெற்றி, உடைமை இவற்றில் ஒருவரது உள்ளம் பெருமிதம் கொண்டு அவரை வாழ்த்தத் தலைப்படும்; அவரது நெஞ்சில் தீய எண்ணங்கள் எழுவதில்லை. பிறர் ஆக்கம் கண்டு மகிழ்வது ஒரு சிறந்த ஒழுகுமுறை. இத்தன்மையையே ஒருவன் ஒழுக்காறாக அதாவது ஒழுக்கநெறியாகக் கொள்ள வேண்டும் என்கிறது பாடல்.
ஒழுக்காறு அழுக்காறிலாத இயல்பு என்பதற்கு நாகை சொ தண்டபாணிப்பிள்ளை கூறும் 'ஒழுக்கமாவது செலவு; நடக்கை யெனினுமாம். ஓரிடத்தை நாடி நடந்து செல்வோர் ஆறலை கள்வரும் நஞ்சுடையரவமும் நெஞ்சுடை யுருவி னஞ்சுவர மண்டும் விலங்கினமும் திரிதரக் கல்லும் முள்ளும் செறிதரு சாரற் சிறுவழி செல்லின் ஏதமுறுத லொருதலையன்றிக் குறித்த விடஞ் சேர்தலரிதாதலால், நடக்கும் நெறி குற்றமற்ற தன்மைத்தாக வேண்டுமென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின் ஒழுக்க ஆறு அழுக்கு ஆறிலாத இயல்பிற்றாகக் கொள்க என்றார். இங்ஙனம் நிலத்து நெறியோடொத்தது உளத்து நெறியு மென்பார் ‘நெஞ்சத்து’ என்றார். எனவே அழுக்காறுடையான்‌ ஒழுக்கம் செவ்விதிற்‌ செல்லாது சீரகுலைந்து இடைகெட்டுப்‌ பயனற்றறொழியு மென்ற தாயிற்று, ஆகவே ஒழுக்கம்‌ செவ்விதாவதோடு ஒழுக்காறும்‌ அழுக்காறிலாது செவ்விதாக வேண்டுமென்பது விளங்கிக் கிடந்தது' என்ற விளக்கம் சிறப்பாக உள்ளது. 'நடந்து செல்பவன், பாம்பு, திருடர், கல், முள் செறிந்த நெறியில் செல்லாமை போல ஒழுக்கநெறியிற் செல்வோரும் அழுக்கு ஆற்றின் போதலாகாது' என்பது இதன் கருத்து.

ஒழுக்காறு என்பதற்கு வாழ்க்கை நெறிமுறை என்பது பொருள்.

ஒருவன் தன் மனத்தில் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அழுக்காறாமை ஓர் நல்லொழுக்கமாம்.

பொழிப்பு

ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.