இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0160உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0160)

பொழிப்பு: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

மணக்குடவர் உரை: உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின்.
இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.

பரிமேலழகர் உரை: உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின்.
(பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் உரை: உண்ணாது தவம் செய்யும் பெரியார் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுப்பார்க்குப் பின்னே வைத்து எண்ணப்படுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.


உண்ணாது நோற்பார் பெரியர்:
பதவுரை: உண்ணாது-ஊனைத் தவிர்த்து; நோற்பார்-பொறுப்பவர்; பெரியர்-பெருமையுடையவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்;
பரிதி: தம்மிடமுள்ள சீவனை ஒறுத்துச் சருகு பொசித்துத் தபசு பண்ணுவார் பெரியரானாலும்; [பொசித்து - நுகர்ந்து]
காலிங்கர்: உலகத்து உண்டு தவம் பண்ணுவோர் யாவரினும் உண்ணாமைத்தவம் பண்ணுபவரே சாலப் பெரியர்;
பரிமேலழகர்: விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்;

'உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பட்டினி கிடந்து நோன்பிருப்பவர் பெரியவர்', 'உண்ணாது நோன்பு மேற்கொள்பவர் பெரியவரே', 'உண்ணாது தவஞ் செய்வார் பெரியோர் எனப்படுதற்கு உரியர்', 'உண்ணாமல் உற்ற நோயைப் பொறுத்துக் கொள்ளுபவர் எல்லாரிலும் பெரியர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உண்ணாது நோன்பிருப்பவர் பெரியவர் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்:
பதவுரை: பிறர்-மற்றவர்; சொல்லும்-சொல்லும்; இன்னாச்சொல்-தீய மொழி; நோற்பாரின்-பொறுப்பவரைக் காட்டிலும்; பின்-பிறகு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின்.
மணக்குடவர் குறிப்புரை: இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.
பரிதி: அவர், கோபம் பிறந்து சாபம் இடுவார்; இல்லறத்தான் பிறர் செய்த குற்றம் பொறுக்கின்ற படியினாலே இவன் பெரியவன் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவரும் பிறரால் சொல்லப்பட்ட இன்னாச் சொற்களைப் பொறுக்கும் பொறையுடையாளரின் பின் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின்.
பரிமேலழகர் குறிப்புரை: பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.

'அவர் பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரினும் பெரியவர் வசவைப் பொறுப்பவர்', 'அவர் பெரியவராவது பிறர் இகழ்ந்து கூறும் வன்சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கு அடுத்த நிலையில்தான் (உண்ணாமல் நோற்பவரினும் இன்னாச்சொல் நோற்பவர் மிகப் பெரியவர்.)', 'பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பவர்களுக்கு பிற்பாடே', 'ஆனால், அவரும் பிறர் சொல்லும் கடுஞ்சொல்லைப் பொறுத்துக்கொள்பவர்க்கு அடுத்துதான் பெரியார் ஆவார். (கடுஞ்சொற்களைப் பொறுப்பவரே உண்ணா நோன்பினரை விடப் பெரியவர்)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவர் பிறர் சொல்லும் வன்சொற்களைப் பொறுத்துக்கொள்பவர்க்கு அடுத்துதான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உண்ணாநோன்பு கொள்ளும் தவம் செய்வோர் பெரியவரே. அப்பெரியரும் பிறர் சொல்லும் தீய சொல்லைப் பொறுத்துக்கொள்பவர்க்குப் பிற்பட்டவரே.

உண்ணாது நோன்பிருப்பவர் பெரியவர்; அவர் பிறர் சொல்லும் வன்சொற்களைப் பொறுத்தார்க்கு அடுத்துதான் என்பது பாடலின் பொருள்.
இன்னாச்சொல் நோற்பார்க்கு ஏன் இவ்வளவு முன்னிடம்?

உண்ணாது என்ற சொல்லுக்கு உணவை உட்கொள்ளாது என்பது பொருள்.
முதலில் உள்ள நோற்பார் என்ற சொல்லுக்கு தவம் செய்வார் என்றும் அடுத்த நோற்பார் என்றதற்கு பொறுத்துக் கொள்பவர் என்றும் பொருள்.
பெரியர் என்ற சொல் பெரியவர் என்ற பொருள் தரும்.
பிறர்சொல்லும் என்ற தொடர் மற்றவர் கூறும் எனப்பொருள்படும்.
பின் என்ற சொல் பின்னர் என்ற பொருள் தருவது.

உண்ணா நோன்பிருந்து தவம் புரிவார் பெரியாரே. ஆனாலும் மாற்றார் கடுஞ்சொல்லைத் தாங்கும் பொறுமைசாலிகளுக்கு அடுத்த நிலையில் வைத்தே அவர்கள் மதிக்கப்பபடுவர்.

உண்ணாது நோற்பவர்க்கு முன்னிடந்தந்து போற்றுகிறது உலகம். ஆனால் பொறையுடையார்க்குப் பின்னவரே அவர் என்கிறார் வள்ளுவர்.
உணவைக் குறைத்து நோன்பு மேற்கொள்ளும் தவம் செய்வோர் பெரியவர்களே என்று தவத்திற்காக உணவுகளை ஒடுக்கி, பசித் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறவர்களைப் போற்றுகிறார் அவர். உடலை வருத்தி ஒரு பயன் குறித்து மனக்கட்டுப்பாட்டுடன் தவமியற்றுபவர்கள் அவர்களது புலனடக்கத்துக்காகப் பெரியராகக் கருதப்படுவர்.
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்... (ஈகை 225 பொருள்: தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும்...) என்று பசி பொறுக்கும் தன்மையை வள்ளுவர் பிறிதோர் இடத்திலும் பேசுவார். தவ வாழ்க்கையில் இவ்வாறு நோத்தக்க இயல்பாய துன்பங்களைப் பொறுத்தல் வேண்டும். உண்ணாது நோற்பவரைப் 'பெரியர்' என ஒப்புக்கொண்டு, ஆனால் இல்லறத்திலிருந்து கடுஞ்சொற்கள் பொறுத்து வாழ்பவர்களுக்குப் பிறகுதான் அவர்களின் உயர்வு எல்லாம் என்று அடுத்துக் கூறுகிறார். பொறுமையே ஒரு தவம்தான், அதுவும் மேலான தவமாகும் என்பது கருத்து.

இன்னாச்சொல் நோற்பார்க்கு ஏன் இவ்வளவு முன்னிடம்?

இராமாநுசக் கவிராயர் 'அறிவிலார் இகழ்ந்து சொல்லும் தீய சொற்களைக் காரணமில்லாமலே பொறுப்பவராகிய இல்லறத்தார்க்குப் பின்பு உண்ணாமைக் காரணத்தினாலே தங்களை அடைந்த நோயைப் பொறுப்பவராகிய துறவறத்தார் பெருமை உடையவராவர்' என்றும் மல்லர் 'உடம்பைப் பார்க்க-மானமானது எல்லாருங் கனமாக எண்ணுகிறதினால் உடம்பை வாதிக்கிற பசியைப் பொறுக்கிறதைப் பார்க்க மானத்தைக் கெடுக்கிற பொல்லாத வார்த்தைகளைப் பொறுக்கிறது பெரியதா யிருக்கும் என்பது கருத்து' என்றும் கூறியவற்றில் ஏன் பொறையுடையார் முதலிடம் பெறுகிறார் என்பது விளக்கம்பெறும்.
'தம்மைப்பற்றிய கடுமையான வசைமொழிகளைக் கேட்டுப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய சோதனைகள் வரக்கூடிய நிலைமை துறவிகளுக்கில்லை. அப்படிப்பட்ட வாய்ப்புகள் நேர்ந்தாலும் அவர்கள் பொறுத்துக் கொள்வார்களா என்பது சந்தேகம். மேலும் இப்படிப்பட்ட நிலைமைகளைத் தவிர்க்கத்தானே அவர்கள் துறவு மேற்கொண்டார்கள். ஆதலால் அந்தப் பொறுப்பைத் தவிர்த்துவிடும் துறவியைக் காட்டிலும் அதை ஏற்றுக் கொண்ட இல்லறத்தான் சிறப்புடையவனாகிறான்' என்பார் நாமக்கல் இராமலிங்கம்.
தவம் செய்பவர்கள் வயிற்றில் பற்றி எரியும் பசித்தீயைத் தாங்க வல்லவர்கள். ஆனால் இன்னாச் சொல் நோற்பவர் மனத்தில் எரியும் தீயைத் தாங்கச் சக்தியுடையவர்கள். உடல் சகிப்புத் தன்மையிலும் மனவலியைப் பொறுப்பதே பெருமையில் முதலிடம் பெறும் தவம் என்பது இக்குறட்கருத்து. இன்பம் பெறுதற்குரிய இல்லறத்திலிருந்து கொண்டே துன்பம் பொறுத்தற்குரிய துறவியரினும் மிகுந்த பொறையை மேற்கொள்வதால் இன்னாச் சொல் பொறுத்தார் முதலாவதான பெரியவர் ஆகிறார்.

உண்ணாது நோன்பிருப்பவர் பெரியவர்; அவர் பிறர் சொல்லும் வன்சொற்களைப் பொறுத்துக்கொள்பவர்க்கு அடுத்துதான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொறையுடைமை உயர்வான தவமாகும்.

பொழிப்பு

உண்ணாமல் நோற்பவர் பெரியவர்; அவரும் மற்றவர் வன்சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கு அடுத்த நிலையில்தான்.