இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0159



துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0159)

பொழிப்பு: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

மணக்குடவர் உரை: மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார்.
இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.

பரிமேலழகர் உரை: துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்.
(தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.)

இரா சாரங்கபாணி உரை: நெறிகடந்தவர் வாயிலிருந்து வரும் வசைமொழிகளைத் தாங்கிக் கொள்பவர் துறவிகளினும் தூயவராவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இறந்தார்வாய் இன்னாச்சொல் நோக்கிற்பவர் துறந்தாரின் தூய்மை உடையார் .


துறந்தாரின் தூய்மை உடையார்:
பதவுரை: துறந்தாரின்-பற்றற்றவர் போல; தூய்மை-நன்மை; உடையார்-பெற்றுள்ளார்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.
பரிதி: இவன் இல்லறத்திலே இருந்தும் தனக்கு ஒருவர் செய்த குற்றம் பொறுப்பவன் ஆதலின் பெரியவன் என்றவாறு.
காலிங்கர்: உலகத்து வாவார் யாவரினும் மனம்வாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் தூய்மையுடையராய் மனைவாழ்க்கைப் பெருந்துயரைத் துறந்தவரன்றே; மற்று அவரினும் தூய்மையுடையர் யாவரோ எனில்;
பரிமேலழகர்: இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்;
பரிமேலழகர் குறிப்புரை: தூய்மை : மனம் மாசு இன்மை.

'துறந்தவர்களைப் போல/துறந்தவர்களைவிடத் தூய்மையுடையர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். தூய்மை என்றதற்கு 'மனம் மாசு இன்மை' என்று பரிமேலழகர் பதவுரை தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறந்தவரினும் தூயவர்', 'துறவிகளைக் காட்டிலும் சுத்தமான சகிப்புள்ளவர்கள்', 'துறவிகளைப் போலப் புனிதம் உடையவரே', 'துறந்தாரைவிடத் தூய்மையுடையவர் ஆவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

துறந்தவர்களைவிடத் தூய்மையுடையர் என்பது இப்பகுதியின் பொருள்.

இறந்தார்வாய் இன்னாச்சொல் நோக்கிற் பவர்:
பதவுரை: இறந்தார்-நெறியைக் கடந்தவர்; வாய்-வாய் என்னும் உறுப்பு; இன்னாச்சொல்-தீய சொல்; நோற்கிற்பவர்-பொறுப்பவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர்.
பரிதி: துறந்தார் பெரியோரானாலும், தவத்தின் பெருமையினாலே ஒருவரைச் சாபமிடுவர்.
காலிங்கர்: பிறர் வாயில் வெஞ்சொற்களைப் பொறுக்கிற்பவர்.
பரிமேலழகர்: நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.

'மிகையாய்ச் சொல்லப்பட்ட தீச்சொல்லை/வெஞ்சொற்களை/ நெறிகடந்தார் கூறும் இன்னாசொல்லைப் பொறுப்பவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தரங்கெட்டவரின் வசவைப் பொறுப்பவர்', 'கோபத்தால் ஒருவன் முறை தவறிப் பேசுகின்ற துன்பந்தரும் வசைகளையும் கேட்டுப் பொறுத்துக் கொள்ளுகிறவர்கள்', 'நெறிகடந்தவர் வாயில் பிறக்குங் கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ளும் இல்வாழ்க்கையர்', 'அறநெறியைக் கடந்தவர் கூறுகின்ற இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெறிகடந்தவர் வாயில் பிறக்கும் வெஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ளுகிறவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வரம்பு கடந்து சொல்வாரின் வெஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறவியரைவிட மேம்பட்டவர் ஆவர்.

நெறிகடந்தவர் வாயில் பிறக்கும் வெஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ளுகிறவர்கள் துறந்தவர்களைவிடத் தூய்மையுடையார் என்பது பாடலின் பொருள்.
'தூய்மையுடையார்' என்ற சொல் குறிப்பது என்ன?

துறந்தாரின் என்ற சொல்லுக்கு துறவுநெறி மேற்கொண்டவர்களைவிட என்பது பொருள்.
இறந்தார்வாய் என்ற தொடர் வரம்பு கடந்து பேசுபவர்களின் வாயிலிருந்து வரும் என்ற பொருள் தரும்.
இன்னாச்சொல் என்றது தீயசொற்கள் குறித்தது.
நோக்கிற்பவர் என்ற சொல்லுக்குப் பொறுத்துக்கொள்பவர் என்று பொருள் கொள்வர். 'கில்' என்பது ஆற்றலுணர்த்தும் இடைநிலை என்பர்.

நெறி கடந்து பேசுகிறவர்களுடைய வாயிலிருந்து வருகிற இழுக்கான சொற்களைப் பொறுத்துக்கொள்பவர், பற்றறுத்த துறவிகளைவிடத் தூயவர்கள் ஆவர்.

வரம்பு மீறிய கொடுஞ் சொற்கள் பொறுப்பவர், இல்வாழ்வில் இருந்தாலும் முற்றுந் துறந்தாரினும் தூய்மை உடையவர்களே. இது பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் உலகைத் துறந்தவர்களை விடப் பெரியவர்கள் என்ற கருத்தைத் தரும். தீமை செய்தவரிடத்திலும் அன்புடன் ஒழுகுவது எல்லாராலும் இயலாது. உள்ளத்தில் வலிமையும் தூய்மையும் மிக உடையாரலே முடியும். துறவிகள் எய்த நினைக்கும் தூய அருள்நிலையை பொறையுடையாரிடம் காணலாம் என்கிறார் வள்ளுவர். எனவேதான் துறந்தாரைவிடத் தூய்மையானவர் எனப் போற்றுகின்றார். துறந்தாரினும் இன்னாசொல் நோற்பார் பெரியார் என்பதற்குப் பரிதி “துறந்தார் பெரியோரானாலும் தவத்தின் பெருமையினாலே ஒருவரைச் சாபமிடுவார்; இவன் இல்லறத்திலே இருந்தும் தனக்கு ஒருவர் செய்த குற்றம் பொறுப்பவன் ஆதலின் பெரியவன்” எனத் தக்க காரணங் காட்டுவார். பொறாமை, அவா இவற்றை வென்ற முனிவர்களும் கூட சினம், இன்னாச்சொல் இவற்றைத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.
துறவுநெறி மேற்கொண்டவர்களைவிட ஓர் இல்லறத்தான் படும் துன்பங்கள், தடைகள், தோல்விகள் மிகப் பலவாகும். பொறுத்தல் நோற்றல் போல செயற்கரியசெயல். அதனைச் செய்யவல்லவர் என ஆற்றற் பொருளைத் தருவதாக நோக்கிற் பவர் என்று சொல்லப்பட்டது. எனவே இன்னாச்சொல் பொறுத்து, இல்வாழ்க்கை வாழ்பவன், துறவு மேற்கொண்டவரைவிட மேலானவன் என்கிறது இப்பாடல்.

இன்னாசொல் பொறுத்தல் (இப்பாடல்) தவிர்த்து கொல்லாமை, உழவு ஆகியவையும் துறவைவிட உயர்ந்தவை என்று குறள் கூறும்: நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை (கொல்லாமை 325 பொருள்: வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.) உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை (உழவு 1036 பொருள்: உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.)

'தூய்மையுடையார்' என்ற சொல் குறிப்பது என்ன?

தூய்மையுடையார் என்ற சொல் மனம் மொழி, செயல் என்னும் மூன்றினாலும் தூய்மையுடைமை உள்ளவரைக் குறிக்கும்.
இச்சொல்லுக்கு உரையாசிரியர்கள், பெரியவன், மனம்வாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் தூய்மையுடையர், தூய்மையுடையார், தூயவராவர், நன்மையுடையர், சுத்தமான சகிப்புள்ளவர்கள், தூய துறவியர், புனிதம் உடையவரே, தூயவர்கள், மனத் தூய்மையுடையராவர், தூய பண்புடையாளராவர், சுத்தமானவர்கள் எனப் பொருள் கூறினர்.
கா சுப்பிரமணியம் பிள்ளை தூய்மையுடையார் என்றதற்குப் புனிதம் உடையவர் என்று பொருள் கூறி உரை செய்தார். கல்லால் அடிப்பதைப் போலத் தீயவர்கள் கடுஞ்சொல் பேசினாலும் பொறையுடையார் அதைத் தாங்கிக்கொள்வதால் அவர்கள் புனித உயிர்த் தன்மை (Pure Soul) கொண்டவர் என வள்ளுவர் உயர்த்திக் கூறுகிறார். புனிதம் உடையவர் என்பது தூய்மையுடையார் என்பதற்குப் பொருத்தமான பொருள் ஆகும்.

தூய்மையுடையார் என்ற சொல்லுக்குப் புனிதம் உடையவர் என்பது பொருள்.

நெறிகடந்தவர் வாயில் பிறக்கும் வெஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ளுகிறவர்கள் துறந்தவர்களைவிடத் தூய்மையுடையர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சினத்தை வென்று பொறையுடைமை கொண்டவர் துறந்தாரினும் புனிதம் உடையவர்

பொழிப்பு

நெறிகடந்தவரின் வசைமொழிகளைப் பொறுப்பவர் துறந்தவரைவிடத் தூயவராவர்